வாழ்க்கை | தினகரன் வாரமஞ்சரி

வாழ்க்கை

கண் நிறைய ஆவலும், இதழ் நிறைய குறுநகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண் கதவோரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

கதவைத் திறந்து விட்டு அலட்சியமாக இரண்டு கைகளாலும் நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அந்த இலயத்து அழகி. உச்சிக்கொண்டை தென்னை மரம் நட்டாற் போல் நின்றுகொண்டிருந்தது.

வயதுக்கேற்ற உயரமும் பருமனாகத் திணித்துத் திணித்த பஞ்சு அடைத்த பட்டுத்தலையணை போல் வாளிப்பான உடம்பு. திமிர் தெரியும் அழகுக் கண்களில் துடுக்குப்பார்வை.

கருங்கல்லில் செதுக்கிய சிற்பம் போல் எடுப்பான மூக்கு முழி. மலைத் தோட்டம் நடுக்கணக்கில் கொஞ்சம் அதிகமான அழகு அவளுக்குத்தான்.

என்ன ஒரு பொருத்தமான பொழுது...உள்ளே அமர்ந்திருக்கும் செபமாலையின் முகம் அளவுக்கதிகமாக உரமிடப்பட்டுக் காடாகியிருந்த மீசைக்குள்ளும், தாடிக்குள்ளும் ஒளிந்துகொண்டிருந்தது. அந்தப் படாடோபத்துக்குச் சமமாக மதிக்கும் கண்களிலே கனவுகள், இலட்சியங்கள், உருவப்படுத்த முடியாத எண்ணங்கள் ஓடி மறையும் கண்கள் வறுமையின் நிறம் சிவப்பு என்பதை வருடிக்காட்டிக் கொண்டிருந்தன.

துயரத்தின் ரேகைகள் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பதற்கிணங்க முண்டியடித்துக்கொண்டு நாடி நாளங்களில் மாறி மாறி மரதன் ஓடுவதை அவரது அசைவுகள் ஒவ்வொன்றும் பிரதிபலித்தன. இந்தத் தடுமாற்றம் அவர் ஒரு காலத்தில் மலைத்தோட்ட பெரிய கங்காணி என்பதை வெளிப்படுத்தியது.

அது தெரியுமா அந்தப் பிஞ்சு வருணிக்கு? ஆறு வயது தான் இருக்கும்.

கிறிஸ்மஸ் கொண்டாடிவிட்டுப் பள்ளி போகத் தயாராகிக் கொண்டிருப்பாள். அவ்வப்போது அம்மாவின் தாவணியால் தன்னை ஆசிரியையாக அலங்காரம் பண்ணிக் கொள்வாள். அம்மாவின் மட்டக்கம்பு அவளது பிரம்பாகியிருக்கும்.

இலயத்துக் கோடிப்பக்கச் சுவர்தான் அவளது கரும்பலகை. அந்தப் பதினாறு காம்பறாக்களிலும் ஓடித்திரியும் சின்னச்சிறுசுகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பாள். அந்தக் கோடித்திண்ணையில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறும். அப்போது அவள் ரோஸ் கலர் பார்ட்டி புரொக்கில் தேவதையாக வந்து நிற்பாள். இப்போது அவள் வீட்டு வாசலில் வந்து நிற்பது செபமாலைக்குத் தெரியவில்லை.

“தாத்தா” “என்னாச்சு ஒனக்கு ?

இவ்வளவு நேரமா வாசலில நிற்குறேன் என்னை உள்ள வாணு கூப்பிட மாட்டியா?”

“ஆயா எங்க”

அப்போதுதான் செபமாலை கவனித்தார்.

“ஆரு வருணியா, வாம்மா உள்ள!" இவ்வளவோடு நிறுத்திக் கொண்டார் செபமாலை.

“ஆயா, ஆயா” என்று அடுப்படி பக்கம் ஓடினாள் வருணி

“வாம்மா, அம்மாளு, இந்தா உட்காரு” அருகிலிருந்த பலாக்கட்டையை எடுத்துப் போட்டு அடுப்படியில் தன்னடியிலேயே அமரவைத்தாள் ஆயா... என வருணியால் அழைக்கப்படும் அவளது பாட்டி. சற்று அமைதி.

கூரைத்தகரத்தில் பெய்யும் மழையின் இரைச்சல் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டிருந்தது.

மழை பெய்து ஓய்ந்த பின்னரான மறுமலர்ச்சி. பஞ்சு போன்ற வெண்பனிக்கூட்டம், அந்த இலயத்துக் காம்பறாக்களின் புகைப் போக்கிகளினூடாக வெளியேறிய புகை மூட்டங்களோடு  இரண்டறக் கலந்து விட்டிருந்தன.

குசினிக்கூரையில் சொட்டுச் சொட்டாய் ஒவ்வொரு துளியும் சம அளவு நிசப்தமான இடைவெளியில் தாளம் போட்டன. “ஆயா! சித்தி எங்க?”
“சித்தி வரும். மிளார் பொறுக்க போயிருக்கிறா"

“மழையிலையா?" மழலையின் சந்தேகம்.

“ஆமா, மழையப் பார்த்தா அடுப்பெரியுமா? சொல்லு. வெயில் காலத்துல கொண்ணாந்த மிளாரு தான் இது. ஊதி ஊதி வேணாமுணு போச்சு. அம்மாளு கடைசியா கொண்டு

வந்த மிளாரு, சவுக்க அவ்வளவும் பச்சை.

அதவிட்டா எரிக்கிறத்துக்கு எதுவும் இல்ல.

அட்டலில சேத்து வச்ச வெறகை கொரோனா காலத்துல குளிச்சே முடிச்சாச்சு”

“ம் இந்த கொரோனா தா ஒட்டு மொத்தமா எல்லாத்துட்டு வாழ்க்கையையே மாத்திடுச்சே.”

வருணிக்கு விளங்கியதோ இல்லையோ, ஆயாவின் வயிற்றெரிச்சலோடு போட்டி போடும் மிளாரின் அனலில் பார்வையைப் பதித்து ஏதோ ஆராய்ந்துகொண்டிருந்தாள், நிலவிய அமைதியைத் தகர்த்தியவாறு,

“ஆயா, நான் வந்து எவ்வளவு நேரமாச்சு? புதுச்சட்டை போட்டிருக்கேன்.

அழகாயிருக்கேனா? தாத்தாவும் ஒண்ணும் சொல்லல. நீயும் ஒண்ணும் சொல்லல. போ ஆயா, நான் கோவோம்”
என்று படபடவெனக் கொட்டிவிட்டுப் பலாக்கட்டையை விட்டு எழுந்தாள் வருணி.

அந்த இலயத்தில் தன் வீட்டிலிருந்து ஐந்தாவது வீட்டுக்குப் போய் வந்தவளின் துலங்கல் தான் இது.

“அம்மாளு உட்காரு! போகாத” கைகளை இறுகப்பிடித்துப் பலாக்கட்டையில் அமர்த்தினாள் ஆயா.

“அழகாயிருக்குணு சொன்னா உடனே ஓடிடுவ. உன்ன கொஞ்சம் இங்கேயே உட்கார வைக்கத்தான் பேசாம இருந்தேன்.” என்று பாராட்டை எதிர்பார்த்த பிஞ்சு மனத்தைத் தேற்றினாள் ஆயா.

ஆனால், உண்மை அதுவல்ல. வருணி பச்சைக் குழந்தை. கள்ளம் கபடமற்ற உள்ளம். தன்னை ஈன்ற அம்மாவைத்தான்,  தான் சித்தி என்றழைப்பதாக எண்ணிக்கொண்டிருந்தாள். ஊரவர்களும் அவ்வாறே நம்பவைத்தனர்.

வருணியின் தந்தை அந்தோனி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாத மார்கழிப்பனியில் ஒரு திங்களன்று சிந்தாங்கட்டி மலைப்பகுதிக்குக் கவ்வாத்துக் களத்துக்குப் போகத் தயாரானார். அது நெடுந்தூரப் பயணம்.

ஏறத்தாழ இரண்டரை மைல் தூரம் இருக்கும். தெப்பக்கோயிலுக்குப் போகும் பாதையில் சென்று, தெப்பக்குளத்துக்கு மேலாக உள்ள குதிரைப்பாலம் வழியே நடந்து, ரயில்வே 'ட்ரெக்கில்' நெடுகிலும் எட்டி அடிவைத்து கடந்து, கீக்காச்சான் வழியாகப் போய் இடையில் ஆலவிருட்ச நிழலில் அமர்ந்து அந்தப்பகுதியையே ஆளும் முனியாண்டியைக் கையெடுத்துவிட்டு ஒரு நூறு பாகை சரிவில் அரை மைல் தூரம் ஏறினால், அந்தக் கவ்வாத்துக் களம் நெருங்கிவிடும். அங்கிருந்து பார்த்தால் எல்லா மதங்களும் சங்கமிக்கும் சிவனொளிபாத மலையும் தெரியும்.

“ரகுபதி ராஜவ ராஜா ராம் பதித்த பாவன சீத்தா ராம்” என்ற ஆரம்பத்தோடு எடுத்துக்கட்டப்பட்ட வரிகளையும் இதே இசைவடிவில் பாடிக் கொண்டு கம்பத்தை ஒருவரும், சீத்தாராமன் படத்தை ஒருவரும் பக்திப் பரவசத்தோடு கையிலேந்தி முன்னால் செல்ல இசையமைப்பாளர்களும், இசைக்கருவி வாசிப்பாளர்களும் பக்தியோடு பலரும், தனக்குப் பிடித்தவர் வீட்டு வாசலில் தடம் பதிக்கும் ஆவலில் வெகு சிலரும், எதற்குப் போகிறோம் என்பதை அறியாதவர்களாய் ஒரு சிலரும் கூட்டமாகி, வீடு வீடாய் முற்றங்களில் ஒவ்வொரு வாசலிலும் நின்று நின்று சென்றுகொண்டிருந்தார்கள்.

உஷாக்கால வேளையில் ஸ்ரீ ராமர் வீடு வீடாய்ச் சென்று தரிசனம் வழங்குவதாகவும், குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அவரைப் பாத பூஜை செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்வதாகவும் இருக்கும். இஃது உயிரோட்டமான காலைப் பொழுதாய் அமைந்திருக்கும்.
வாசலில் சாணம் தெளிக்க, கோலம் போட, பீலிக்கரையில் தண்ணீர் பிடிக்க, சிலர் குளிக்க எனச் சூரியன் உதயமாகும் முன்னே அந்த இலயம் விடியலைக் கண்டிருந்தது.

இந்த பஜனைக் கோஷ்டி தன் வீட்டு முற்றத்தைக் கடந்த வேகத்தில் அந்தோனி கவ்வாத்து மலைக்குச் செல்ல விடைபெற்றார். “சிந்தாங்கட்டி மலையில கவ்வாத்துல இருந்த ஒருத்தர சிறுத்தப்புலி அடிச்சதுல மோசம் போய்ட்டாராம்” என்று சாடை மாடையாகக் கதை வந்தது மேரியின் கொழுந்து மலையில்.

உண்மையோ, புரளியோ தெரியவில்லை. மேரியின் நிரைப் பக்கமாக வந்த கங்காணி, “மேரி! ஒன் புருசன் அந்தோனி, சிந்தாக்கட்டி மலைக்குத் தானே வேலைக்குப் போனான்!”

“ஆமாங்கையா, என்னங்க ஆச்சு?”

“அங்க யாரோ சிறுத்தப் புலி அடிச்சு எறந்திட்டாங்களாம். யாருணு சரியா தெரியல. போய்ப் பாரு” “என் புருசன் அங்கத்தான் கவ்வாத்துக்குப் போனாரு! போய்ப் பார்த்துட்டு வந்திடுறேன்.

வருணிய புள்ளக்காம்பிறாவுல இருந்து கூட்டிட்டுப் போய்டுறியா? ஆயா வீட்டுல தான் இருக்கு” மேரியின் குரல் பதற்றமாக ஒலித்தது.

"ஆ.. சரி, சரி நீ போ " அண்ணாமலை ஆறுதல் சொன்னார்.

"அப்ப போறேன்" என்றவள் தன் கொழுந்து கூடைக்குள் பெயருக்குரிய நிரை பதியும் கார்டையும் போட்டுவிட்டு, மட்டக் கம்பையும் அதே நிரையில் எறிந்து விட்டு ஓட்டமெடுத்தாள்.  சிந்தாங்கட்டிமலைக்கு மேரி வேலை செய்த நிரையிலிருந்து சுமார் மூன்றரை மைல். அங்கே மலைத்தோட்ட நடுக்கணக்கைத் தாண்டித்தான் போக வேண்டும். நீண்ட தூரம் எனினும் அந்த மக்களுக்கு அதெல்லாம் பெரிய தூரமாகவே தெரியவில்லை. குறுக்கும், நெடுக்கும் மேடும் பள்ளமுமாய் இந்தத் தூரங்களைக் கடக்கப் பழகியிருந்தனர். பள்ளிச் சிறார்களும் கூடக்
களைப்பதில்லை. கால தாமதமாகியேணும் நடந்தே செல்வார்கள்.

ஓட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே குளவிகள் குதூகளிக்கத் தொடங்கின. இந்தக் குதூகலம் தொழிலாளர்களின் படுகளம். சுற்றுப் பாதையை விடுத்து தேயிலைச் செடிக்குள் மண்ணரிப்பைத் தடுக்க அமைக்கப்பட்டிருந் நெத்திக்கானின் வழியே ஓடலானாள். அவர்களது
கைப்பக்குவம் எதிலில்லையோ அடர்ந்து வளர்ந்த தேயிலைகளில் மட்டும் பிரகாசித்தது.

அதுவும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த, கண்கள் சொருகி, கட்டை இடறிப் பாதை இடுக்கிற்குள் குளவி கொட்டிச் சரிந்தாள் மேரி.சிறுத்தைப்புலி அடித்தது தன் புருசனை என்று தெரியாமலேயே அவள் உயிர் அந்தக் கட்டையை விட்டு விடைபெற்றுக்கொண்டது.

தோட்டத்துச் சுடுகாட்டில் சவங்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது அந்த கிறிஸ்மஸ் தினத்தில் தான். யேசுவின் பிறப்பு என்றதுமே அந்தோனி, மேரியின் இறப்பு தான் அன்று முதல் அவ்வீட்டில்.வீட்டில் மட்டுமல்ல அந்த இலயத்திலேயே பஜனைகூட அந்தோனிக்கும், மேரிக்கும் விடைக்கொடுத்து விட்டிருந்தது. அந்த நினைவில் தான் ஆயாவும் தாத்தாவும் பார்ட்டி புரொக்கில் இருந்து ரசிக்க மறந்திருந்தனர்.

கிறிஸ்மஸ் நாளில் வீட்டில் உள்ளோர் குளிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் கவ்வாத்து மலையிலிருந்து மிளாரு பொறுக்கி வரச் சென்றாள் சித்தி பிரமிளா.

ஏற்கனவே நிகழ்ந்த இழப்புக்குப் பிறகு இவ்வாறு செல்லும்போது தனியாகச் செல்வதில்லை.  அதே பதினாறு காம்பிறாவிலுள்ள யோகராணி, பூங்காவனம், கமலா ஆகியோரையும் இணைத்துக் கொள்வாள்.

அன்றும் அவ்வாறே!

அவளுக்காகத்தான் ஆயா தண்ணீர் காயவைத்தாள். அவளுக்கு மாதாந்தம் கிடைக்கும் மூவாயிரம் ரூபாயிலும், தாத்தா செபமாலை அவ்வப்போது நாட்டுக்கு வேலைக்குப் போய்த் தேடும் அஞ்சையும் பத்தையும் கொண்டு வாழ்க்கை ஓடியது. பிரமிளா, உளமாறத் தன்னை தாயென்று கருதி உதடுகளால் மட்டும் சித்தி என்று அழைக்கும் வருணிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தாள். வருணியைப் பொறுத்தமட்டில் பிறந்தது முதல் பிரமிளாவுடனேயே இருந்தமையால் மறைந்தது பெரியம்மாவும், அப்பாவும் தான்.

“அடியே பிரமிளா, நேத்து மிளாருக்குப் போனவங்களையெல்லாம் பொலீசுல தேடுறாங்களாண்டி” அலமேலு அலறுகிறாள்.

“என்ன, பொலீசுலயா?!”

ஒரு கணம் ஆயாவும், தாத்தாவும் ஆடிப்போயினர். “கமலா புருசன் கொழும்பில இருந்து வந்து ஒரு கெழமத்தானாம்" இது பூங்காவனம்.

“அய்யோ, அதான் அப்படியெல்லாம் வர வேணாம்ணு இருக்கே” பிரமிளா
அதிர்ச்சியடைந்தாள்.

“ஆமா, நேத்து நாங்க எல்லாரும் ஒண்ணாத்தானேடீ மிளாருக்குப் போனோம். அவ இந்த விஷயத்த சும்மா சரி சொல்லலையே” இது பூங்காவனம்.

“ஆமா சித்தி, முத்து மாமா எனக்கு ஒரு சட்டையும் கொடுத்தாரு. கிறிஸ்மஸ்க்காக எனக்குக் கொழும்பில இருந்து வாங்கி வந்தாராம்.”
குறுக்கே வந்த வருணியின் மழலையின் ஒலி.
அவள் நான்கு வயதிலேயே பெற்றோரை இழந்தவள் என்பதால் அனைவருக்குமே
செல்வப்பிள்ளையாகியிருந்தாள்.

“நீ ஏன் இதப் பத்தி ஏங்கிட்ட சொல்லல” பிரமிளா கோபமாக. ஆயாவும் தாத்தாவும் வேற நெனவுல என்னைக் கண்டுக்கேவ இல்ல.

பிரமிளா தரம் பத்து சித்தியடைந்தவள் என்பதால், கொரோனா தொடர்பில் கொஞ்சம்
அச்சப்பட்டாள்.

பூங்காவனம் தொடர்ந்தாள்.

“அந்தாளுக்குக் கொழும்பிலேயே 'பீசிஆர்' செக்குப் பண்ணினதில கொரோனா உறுதியாம்!
இப்ப அந்த ஆளோட சேந்தவங்களத் தேடி பொலீசு வந்திருக்கு"

"முத்துவ பிடிச்சுட்டாங்களாம்"

"அவன் கொழும்புல இருந்து வந்து ஒளிஞ்சு இருந்தானாம்”

“அவனோட சேந்தவங்களையும் தேடுறாங்களாம்; கமலா, பசங்க எல்லாத்தையும் கொண்டு போகப் போறாங்களாம்”

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பாட்டுக்கு உளறிக்ெகாட்டினார்கள்.

இலயத்து வாழ்க்கையில் உள்ள விஷேடம் நல்லதோ, கெட்டதோ ஒன்றென்றால் எல்லோரும்
வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டும், நின்றுகொண்டும், பலாக்கட்டை, தேங்காய்த்துருவி, நாற்காலி, சாணியால் வாசல் மெழுகப்பட்டிருப்பதால் பாயையும் விரித்துக்
கொள்வர்: இவற்றில் அமர்ந்துகொண்டும் தலை பார்த்துக் கொண்டும் பேச்சு கொடுப்பர்.

அதற்குள் ஓர் ஆசிரியை, “அப்படியெல்லாம் பிடிக்க மாட்டாங்க. அது ஒண்ணும் குத்தம் செய்ரதால வாறது கெடையாது. அஃது ஒரு நோய். தொற்று. வைரஸ். ஒரு காய்ச்சல். அது பரவுனா சிலருக்கு ஆபத்தாகி விடும். எல்லோருக்கும் கிடையாது.

நாங்க கிட்டக் - கிட்ட, ஒரசி – ஒரசி நிற்காம மாஸ்க் போட்டுகிட்டு, அடிக்கடி கைகளைக் கழுவிக்கிட்டு மொத்தத்தில சுத்தமா இருக்கணும்.
யார் வீட்டுக்கும் போறத தவிர்த்தா யாரும் வாரதும் கொறையும். அடிக்கடி கை கழுவுர வாய்ப்பில்லனா செனிடைசர்னு ஒரு மருந்கு இருக்கு, பெரிய வெல கெடையாது வாங்கலாம்.

கொழும்பில இந்த நோய் கூடிப்போய் இருக்கிறதுனால அங்க இருந்து வர வேணாமுணு சொல்லுறாங்க. அத மீறி வந்தா இங்கேயும் பரவுமாம்”

என்று பிரசாரம் பண்ணி முடிப்பதற்குள் பொலீசும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் அவ்விடத்துக்கே வந்து விட்டனர். பாவம், அவர்களுக்கும் கொரோனாவால் வேலைப் பளு கூடி இருந்தது.

“ஓகொல்லாங் கவுரு ஹரி கொழம்ப இந்தங் ஆவத?”

மொழி புரிந்த அமைதி, மொழி புரியாத அமைதி இரண்டும் சங்கமித்த மயான அமைதி.
“யாராவது கொழும்பில இருந்து வந்திருக்காங்களா?”

மொழி புலமையைக் காட்டினார் விருந்தினர் கூட்டத்துக்குள் நின்ற ஒருவர்.  எதிர்த் தரப்பினரிடம் இருந்து பதில் எதுவும் பிறக்கவில்லை. அறிந்தும் அறியாமலும் இதர வாயில்கள் அடைபட்டன.

“முத்து கியன எக்கெனாட்ட கொரோனா பொசிட்டிவ்லு. ஏ நிசா மே லெயிமே கவுருத் தவஸ் தஹ ஹத்தரகட்ட கொஹேவத் யன்ன எப்பா, மெஹேம எக்கத்துவென்னத் எப்பா” மீண்டும் மொழிபெயர்ப்பு.

“அப்பி ஹெமதாம எனவா ஒயாலா ச்செக் கரன்ன”
மொழிபெயர்ப்பு. அனைத்து வாயில் கதவுகளிலும் தனிமைப்படுத்தல் குறிகாட்டி ஒட்டப்பட்டது.

பிரமிளா தலையில் கையை வைத்தாள். விரக்தியின் விளிம்புக்கே ஏறினாள். புதைந்து கிடந்த சோகத்தின் மூலங்கள் தட்டி எழுப்பப்பட்டன. வளைந்து கொடுத்த நாட்கள் முறிந்து சிதையும் கணங்களாகின. “பதினான்கு நாள், அம்மாடி! வேலையுமில்லாம, எப்படி சாமாளிப்பது? ஒவ்வொரு நாளும் பேர் போட்டாத் தான் சம்பளம். வருணிய ஸ்கூலுக்கு அனுப்பணும். பேக்கு,

பொஸ்தகம், சப்பாத்து எல்லாம் வாங்கணும். வெள்ளச் சட்டை தைக்கணும்.

பிரமிளாவின் புலம்பல்கள் தூரத்தே தெரிகின்ற சிவனொளிபாத மலையையும் தாண்டி சென்றுகொண்டிருந்ததன.

(யாவும் கற்பனை -) குறிப்பு -...பலாக்கட்டை -− அமர பயன்படும் சிறு வாங்கு, மிளார் −  காய்ந்த தேயிலைச் செடிகள், மட்டக்கம்பு − தேயிலைத் தளிர் பறிக்கும் அளவுக்ேகால்,

பூராஜ் வசந்தாரஞ்சனி அருள்ராஜ்

Comments