அரசியலுக்கு வந்தது வருமானத்துக்கு அல்ல; மாற்றத்தைக் கொண்டுவரத்தான்! | தினகரன் வாரமஞ்சரி

அரசியலுக்கு வந்தது வருமானத்துக்கு அல்ல; மாற்றத்தைக் கொண்டுவரத்தான்!

'பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி என்பதால் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைய வேண்டும் அல்லது பிரதேச சபைத் தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியம். அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்'

கே : பொதுத் தேர்தலில் தோல்வியடைவோம் எனத் தெரிந்திருந்தும் ஒருகை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் களத்தில் இறங்கினீர்களா? அல்லது பிரதமரின் வேண்டுகோளை தட்ட முடியாமல் அண்ணனுக்குப் பதிலாக தேர்தலில் இறங்கினீர்களா?

ப: அப்படியொன்றும் இல்லை. நமக்கு அதிகாரம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். எம்மால் முடிந்த சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும் அதிகாரத்தை பெற பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதற்காகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன்.

கே : நுவரெலியாவில் முதல் தடவையாக நின்று இத்தனை வாக்குகளைப் பெற்றதை எப்படி கருதுகிறீர்கள்? புதியவரான, தமிழ்க்கட்சி ஒன்றை சாராத உங்களுக்கு ஏன் வாக்காளர்கள் வாக்களித்திருக்க வேண்டும்? உங்கள் வருகை இ.தொ.காவின் வெற்றி வாய்ப்புகளுக்கு பாதகமாக அமைந்ததாகக் கருதுகிறீர்களா?

ப: தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் எண்ணத்தில் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த நோக்கமும் என்னிடம் இல்லை. இந்நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கின்றது. இ.தொ.கா.வின் வாக்குகளை சிதறடிக்கும் எண்ணமும் என்னிடம் கிடையாது. எனக்கும் இ.தொ.கா.வுக்கும் எந்தவொரு முரண்பாடும் கிடையாது. ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. ஒரு கம்பனியில் வேலைவாய்ப்பொன்றை பெறுவதற்கு பலர் நேர்முகப் பரீட்சைக்கு செல்லலாம். அங்கு நானும் நேர்முகப் பரீட்சைக்கு சென்றமையால்தான் மற்றவர்களுக்கும் வேலை கிடைக்கவில்லை என்பது பிழையான கருத்து. இன்னொருவருடைய வாய்ப்பை தட்டிப் பறித்தோம் என்பது முற்றிலும் தவறான கருத்து.

கே : நீங்கள் அரசியலுக்கு வந்தது வர்த்தக ரீதியான ஆதாயங்களுக்குத்தான் என்று சொல்லப்படுவது பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ப: வர்த்தக ரீதியான இலாபங்களை பெறுவதற்கு நான் நுவரெலியாவிற்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. எங்களிடம் இருக்கின்ற தொடர்புகளை வைத்துக்கொண்டே வர்த்தக ரீதியிலான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். எங்களுடைய வர்த்தகத்திற்கும் அரசியலுக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது. இலாபம் பெறுவதற்காக நான் அரசியலுக்கு வரவேண்டியதில்லை. நுவரெலியாவுக்கு வந்து வாக்குகள் கேட்டுத்தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற அவசியமும் எனக்கில்லை. மாற்றமொன்று தேவை என்று எண்ணியே தேர்தலில் போட்டியிட்டேன்.

கே : மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா?

ப: நிச்சயமாக இல்லை. பாராளுமன்ற தேர்தல் தோல்வி என்றால் மாகாணசபை தேர்தல் மாகாணசபை தேர்தலில் தோல்வி என்றால் பிரதேசசபை தேர்தல் போன்ற எண்ணங்கள் என்னிடம் இல்லை. பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு 50 ஆயிரம் வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால் எனக்கு 27,400 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தார்கள். மக்கள் என்னை தேர்தெடுக்கத் தவறிவிட்டனர். ஆனால் 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் நானும் வெற்றி பெற்றிருப்பேன். தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றால் மாத்திரமே மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டுவர முடியும். இன்று 27 ஆயிரம் வாக்குகள் பெற்ற முத்தையா பிரபாகரனை காணவில்லை என கூறுகிறார்கள். நான் காணாமல் போகவில்லை. இங்கேதான் இருக்கின்றேன். மக்கள் பணியில் ஈடுபடுகின்றேன்.

கே : தேர்தலின் பின்னர் இப்போது முழுநேர வர்த்தகராகி விட்டீர்களா? அல்லது தொடர்ந்தும் அரசியல் மற்றும் மக்கள் பணியில் இருக்கிறீர்களா?

ப: இன்று எனக்கு அரசியலில் அனுபவம் இருக்கிறது. மக்கள் தேவைகளை நிறைவேற்ற ஒரு அதிகாரம் தேவை. மக்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதனை நான் ஒரு சாதாரண மனிதனாக நிறைவேற்ற முடியாது. மக்கள் அந்த ஆணையை எனக்கு வழங்கியிருந்தால் அதனை என்னால் நிறைவேற்றியிருக்க முடியும். என்னால் கட்டளையிட முடியாது. கட்டளை இட அதிகாரம் தேவை. அதைத்தான் நான் மக்களிடம் கேட்டேன்.

கே : இத் தேர்தலின் மூலம் நீங்கள் பெற்ற அனுபவங்கள் குறித்து பேசுவோமா?

ப: எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது. ஆனால் அரசியலில் ஆர்வம் இருக்கின்றது. திடீர் என்று எடுத்த தீர்மானமே எனது அரசியல் பயணம். நினைக்கின்ற அளவுக்கு அரசியல் இலகுவானதல்ல. மக்களிடம் வாக்குகள் பெறுவதும் இலகுவான காரியம் கிடையாது. நான் 27 ஆயிரம் வாக்குகள் பெற்றமை மிகப்பெரிய வெற்றியே. எனக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வாறேனும் சேவைகளைச் செய்ய வேண்டும் என்பது எனது ஆவல்.

கே : மலையக பல்கலைக்கழகம் பற்றி பேசப்படுகிறது. அது உருவாகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் முத்தையா குடும்பம் என்ற வகையில் எவ்வாறான பங்களிப்பை வழங்குவீர்கள்?

ப: நுவரெலியா மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் ஒன்று வருவது மிகமிக நல்லதொரு விடயம். அதனை நான் வரவேற்கின்றேன். அதற்கு முன்பு நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பெரும்பாலான பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேசிய ரீதியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் உருவாகுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. எமது இளைஞர்களிடம் பல்வேறு திறமைகள் காணப்பட்டாலும் அவற்றை வெளிக்கொணர்வதற்கான வளங்கள் எம்மிடம் இல்லை. அதற்கான வசதி வாய்ப்புகளும் அரிதாகவே உள்ளன. மலையகத்தில் மிக அதிகமான பாடசாலைகளில் உயர் தரத்தில் கலைப்பிரிவுகளே காணப்படுகின்றன. விஞ்ஞானப் பிரிவுகள் மிகவும் அரிது.

இதற்குக் காரணங்களாக கட்டிடங்கள் இல்லாமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானகூட வசதி என்பனவற்றைக் கூறலாம். இக்குறைபாடுகள் தமிழ் பாடசாலைகளில் மட்டுமல்ல, சிங்களப் பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.

இவையனைத்தும் மாறவேண்டும். 10 வருடங்களுக்கு முன்னரை விட இன்று அதிகமானோர் பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர். நாம் கல்வியில் வளர்ச்சி பெற்று வருகிறோம். எனவே எமது அடிப்படைத் தேவைகள் முதலில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கே : உங்களுடைய அண்ணன் உலக புகழ் கிரிக்கெட் வீரர். அதுமட்டுமல்லாது அவர் மலையகத்தை சார்ந்த ஒருவர். ஆனால் அவர் இதுவரை மலையகத்திற்கும் மலையக பாடசாலைகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் எந்தவிதமான ஒரு அபிவிருத்தியையும் செய்தது கிடையாது. அவரைப்போன்று இன்னொருவரையும் உருவாக்க தவறிவிட்டார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறதே அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.?

ப : இது ஒரு பிழையான கருத்து. அரசாங்க பாடசாலைகளில் ஒரு தனிநபரால் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க முடியாது. இதை அவர் மட்டுமல்ல, வேறு யாராலும் செய்ய இயலாது. அதற்கு விளையாட்டு மைதானங்கள் தேவை, பயிற்சியாளர்கள் தேவை அது சாதாரண விடயம் கிடையாது. ஒரு பாடசாலையின் அதிபர் நினைத்தால் மட்டுமே விளையாட்டுதுறையை ஊக்குவிக்க முடியும். ஒரு தனிநபரால் முடியாது. நான் அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை மடுல்ல பாடசாலைக்கு விஜயம் செய்தேன். இலங்கையில் தரமான 50 பாடசாலைகளில் இதுவும் ஒன்று என என்னிடம் பலர் கூறினார்கள். இங்கு ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பல்கலைகழத்திற்கும் உயர் தரத்திற்கும் புலமைப்பரிசில் பரீட்சையிலும் தெரிவாகி வருவதாக சொல்லப்பட்டது.

இதற்கு காரணம் அதிபரின் முயற்சி என்றே நான் கூறுவேன். இங்கு பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டுக்கு சென்று மீண்டும் பாடசாலைக்கு வந்து மாலை வரை கல்வி கற்கின்றார்கள். இங்குள்ள ஆசிரியர்கள் இலவசமாக இவர்களுக்கு கல்வி புகட்டுகின்றார்கள். நல்லதொரு கற்றல் சூழல் இங்கு நிலவுகிறது.

முத்தையா முரளிதரன் ஒரு அதிபர் கிடையாது. அவர் ஒரு தனிநபர். அவர் ஒருவரால் மலையக பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்கு விக்க முடியாது. உதாரணத்திற்கு முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வீரர் அல்லாமல் உலக புகழ் பெற்ற ஒரு வைத்தியராக இருந்திருந்தால். முரளிதரனால் இலங்கையில் அதிகமான வைத்தியர்களை உருவாக்க முடியுமா? என்பதே எனது கேள்வி. இதனை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்து கொடுத்தாலும் பாடசாலையின் அதிபர் அங்கு மாணவர்களை விளையாட அனுமதித்தால் மட்டுமே மாணவர்களால் கிரிக்கெட் விளையாட முடியும். மக்களிடம் பிழையாக கருத்துக்களை சிலர் கொண்டு செல்ல முனைவது தவறாகும்.

கே : வர்த்தகத் துறையில் கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் பற்றி?

ப: கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய முடியாது. சுனாமி ஏற்பட்டது ஒரு சில நிமிடங்களில் ஏற்பட்ட பாதிப்பு. இதனால் கரையோர பகுதிகளையே உள்ளடக்கி இருந்தது. ஆனால் இன்று கொரோனாவால் உலகமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பொருளாதார இழப்புகள், இலட்ச கணக்கில் உயிர்ச்சேதங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கும் அரசாங்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நேரடி கண்காணிப்பினால் எமது நாட்டில் ஓரளவுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் உல்லாச துறை முற்றாக பாதிப்பு அடைந்துள்ளது. ஏற்றுமதியில் கடும் பின்னடைவு. இவை அனைத்திலிருந்தும் நாம் மீள்வதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

கே : இந்த அரசாங்கம் உடனடியாக அக்கறை செலுத்த வேண்டிய விஷயங்கள் எவை என்பது பற்றி சொல்வீர்களா?

ப: எமது நாடு இப்போது கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

உதாரணத்திற்கு கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்தால் அவர் அடுத்தடுத்து சிக்சர் அடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதேபோல புதியதொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படித்தான் இருக்கும். உலக நாடுகள் வழமைக்கு திரும்பும்போது எமது நாட்டிலும் நல்ல பல திட்டங்கள் விரைவில் உருவாகும்.

தலவாக்கலை
பி. கேதீஸ்

 

Comments