எதிர்காலத்தில் பூதாகரமாக வெடிக்கவுள்ள சனத்தொகை முதிர்வடைதல் பிரச்சினை | தினகரன் வாரமஞ்சரி

எதிர்காலத்தில் பூதாகரமாக வெடிக்கவுள்ள சனத்தொகை முதிர்வடைதல் பிரச்சினை

2021 ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். கடந்த ஆண்டு இழப்புகள் மிகுந்த ஒரு ஆண்டாகவும் உலகத்திற்கு சவால் மிகுந்த வலிகள் நிறைந்த ஆண்டாகக் கடந்து சென்றது. பிறந்துள்ள இவ்வாண்டு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடிய அதிசயம் நிகழும் ஒரு ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை.

சிலவேளை 2020ஆம் ஆண்டைவிட மோசமாக நிலைமைகள் மாறக்கூடிய இடரபாய நிலையினையும் மறுப்பதற்கில்லை. இன்று கோரோனா நோயைப்புறந்தள்ளி எதனையும் யோசிக்க முடியாத அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ள நிலையில் இந்நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் மிகப்பெருந்தொகையினர் வயது முதிர்ந்தோராயும் தொற்றா நோய்களால் ஏலவே பீடிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.

இன்றும் கூட பல நாடுகளில் அவற்றின் சுகாதாரக் கட்டமைப்புகள் நோய்தொற்றை சமாளிக்க முடியாத நிலையில் சிகிச்சை அளிப்பதில் இளவயது நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதைக் காண முடிகிறது. இவ்வாறு உலகநாடுகள் பலவற்றிலும் முதியவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்து வரும் நிலையில் இலங்கையின் சனத்தொகையில் முதியவர்களின் சதவீதமானது ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து துரிதமாக அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையின் சனத்தொகையின் எதிர்காலப் போக்குகள் பற்றிய எதிர்வு கூறல்கள் ஏலவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

2019 ஆண்டிறுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் இலங்கை ஒரு செல்வந்த நாடாக மாறுவதற்கிடையில் அதன் சனத்தொகை முதிர்ந்து விடும் என எதிர்வு கூறுகிறது. இதனால் வறுமையிலேயே முதியவர்கள் வாடவேண்டியதுடன் அப்பிரச்சினையைக் கையாள்வதற்கு அரசாங்கத்தின் முறையான வேலைத்திட்டங்களின் அவசியம் பற்றியும் குறிப்பிடுகிறது.

இலங்கையின் தற்போதைய கருவளன் வீதம் 2.2 ஆகும் (அதாவது குழந்தைபெறும் வயதிலுள்ள 100 பெண்கள் பெற்றெடுக்கலாமென எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் சதவீதமாகும். இதில் சமூகரீதியில் வேறுபாடுகள் உள்ளன.

சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களில் இச்சதவீதம் 2.3 ஆகவும் மலையகத் தமிழர்களில் 2.9 ஆகவும் முஸ்லிம்களில் இது 3.3 ஆகவும் உள்ளன. சுருங்கக் கூறின் சிங்கள மற்றும் இலங்கைத் தமிழ் பெண்மணிகள் சராசரியாக இரண்டு குழந்தைகளைப் பெறும் இதேவேளை ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியும் ஏனைய சமூகங்களைவிட ஒரு குழந்தையை அதிகமாகப் பெற்றெடுக்கிறார் எனலாம்). தற்போதைய கருவளன் நிலை தொடருவதுடன் நாட்டுக்குள் உள்நோக்கிய குடிப்பெயர்வு கணிசமானளவு இடம்பெறாதாயின் 2018 இல் 21.2 மில்லியனாகக் காணப்பட்ட இலங்கையின் சனத்தொகை 2038 இல் அதன் உச்சமாகிய 22.2 மில்லியனை அடையும் எனவும் அதன் பின்னர் அது படிப்படியாகக் குறையுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. அதாவது இலங்கையின் சனத்தொகை 22.2 மில்லியனைவிடக் கூடுதலாக அதிகரிக்காது என்பதே நிபுணர்களின் எதிர்பார்ப்பாகும்.

அதேவேளை மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுமிடத்து 15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட தொழில் புரியும் வயது சனத்தொகையின் சதவீதம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. தொழில் புரியும் வயது சனத்தொகை 2027 ஆண்டில் உச்சத்தை அடைந்து பின்னர் குறைந்து செல்ல ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக 15 தொடக்கம் 29 வயதுக்கு இடைப்பட்ட சனத்தொகை ஒரு வருடம் முன்னதாகவே 2026 இல் உச்ச எண்ணிக்கையை அடைந்து அதன் பின் குறைவடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியநபர்களின் எண்ணிக்கை 2015 ஆண்டுக்கும் 2040 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இருமடங்காக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த சனத்தொகையில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் சதவீதம் 2015இல் 9.4 ஆக இருந்தது. 2041 இல் இது 21 சதவீதமாகவும் 2100 ஆம் ஆண்டாகும் போது 35 வீதமாக அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதியோர் சதவீதம் அதிகரிப்பதனால் இலங்கையின் சனத்தொகைக் கட்டமைப்பு ஒரு பிரமிட்டின் வடிவத்திலிருந்து ஒரு உருளையின் வடிவத்திற்கு மாற்றமடையும். பிரமிட் பிரமிட் வடிவம் என்பது மொத்த சனத்தொகையில் இளையோர் சதவீதம் உயர்வாகவும் முதியோர் சதவீதம் குறைவாகவும் இருப்பதைக் குறிக்கும்.

பொதுவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அத்தகைய நிலைமை இருக்கும். மாறாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் உருளைவடிவம் காணப்படும் பிறப்பு வீதம் குறைவாகவும் உயர் வாழ்க்கைத்தரம் மற்றும் உயர் ஆயுள் எதிர்பார்க்கை காரணமாக அந்நாடுகளின் சனத்தொகைக் கட்டமைப்பு உருளை வடிவத்திற்கு மாறும். அதாவது அந்நாடுகளின் செல்வச் செழிப்பு காரணமாகவே இந்நிலைமை உருவாகும்.

சனத்தொகை ஆய்வாளர்களின் கருத்துப்படி இலங்கையின் வயது முதிர்ந்தோர் சனத்தொகை அதிகரித்துச் செல்லும் சதவீதமானது அபிவிருத்தி அடைந்த நாடுகளின் அதிகரிப்பு வீதத்தை விட மிகத் துரிதமாக உள்ளது. அதேவேளை இவ்வதிகரிப்பு இலங்கையின் செல்லச் செழிப்பின் காரணமாக எற்பட்ட ஒன்றல்ல. தலைக்குரிய வருமானமட்டம் இன்னமும் குறைந்த மட்ட நடுத்தர வருமான மட்டத்திலேயே உள்ளது. ஆனால் இலங்கையின் பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் குறைவாக உள்ளதுடன் ஆயுள் எதிர்பார்க்கையும் அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை செல்வச் செழிப்பை அனுபவிக்க முன்பே அதன் சனத்தொகை முதிர்ந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

இத்தகைய சனத் தொகை மாற்றம் காரணமாக நாட்டின் தங்கியிருப்போர் சனத்தொகையில் துரித அதிகரிப்பு ஏற்படும். தங்கியிருப்போர் வகைக்குள் 15 வயதுக்குட்பட்ட இளவயதினரும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் உள்ளடங்குவர். இலங்கையில் 1970களில் இருந்தே குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொழில்வாய்ப்பு மற்றும் நகரமயமாக்கம் போன்ற காரணிகளால் இளையோர் தங்கியிருத்தல் சதவீதம் குறைவடைந்து வரும் அதேவேளை முதியோர் தங்கியிருத்தல் வீதம் அதிகரித்துச் செல்கிறது. 2030 ஆண்டளவில் அவ்விரு சதவீதங்களும் ஒன்றுக்கொன்று சமப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதன் பின்னர் முதியோர் தங்கியிருத்தல் சதவீதம் இளையோர் தங்கியிருத்தல் விதத்தை விட உயர்வாக இருக்கும்.

இலங்கையின் மொத்த தங்கியிருத்தல் சதவீதம் 2010 இல் 60 சதவீதமாக இருந்து 2040 இல் 80 சதவீதமாகவும் 2100இல் 120 சதவீதமாகவும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர் தங்கியிருத்தலின் அதிகரிப்பே இவ்வதிகரிப்புக்குப் பிரதான பங்களிப்புச் செய்யும். அத்துடன் 2020 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முதியோர் தங்கியருப்போர் சதவீதம் இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தொழில் புரியும் வயதில் உள்ள ஒவ்வொருவரும் முதியோருக்கு தாம்வழங்கும் பங்களிப்பை இருமடங்காக்க வேண்டிய நிலை உருவாகும். இந்நிலை தனிநபர்கள் குடும்பங்கள் சமூகங்கள் மற்றும் நாடு ஆகிய எல்லா மட்டங்களிலும் தாக்கங்களை உருவாக்கும். எதிர்கால சமூக பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் இவ்விடயம் முக்கிய கரிசனைக்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்படவேண்டும்.

ஏனைய ஆசிய நாடுகளின் சமூகங்களைப் போலவே இலங்கையின் சமூகங்களும் கூட்டுக்குடும்பப் பின்னணியைக் கொண்டிருப்பதால் பெரும்பாலும் முதியவர்கள் அவர்களது குடும்ப அங்கத்தவர்களாலேயே பராமரிக்கப்படுகின்றனர். சிறிய எண்ணிக்கையிலானோரே தனித்தனியாக சொந்தப் பராமரிப்பில் வாழ்கின்றனர். ஆயினும் இவ்வெண்ணிக்கை படிப்படியாக அதிகரித்த வருகிறது. நகரமயமாக்கம் தொழில் காரணமான இடப்பெயர்வு பெண்கள் தொழில் புரிதல் போன்ற பல்வேறு காரணங்களால் கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது. ஆரம்பத்தில் தனது வாழ்க்கைத் துணையுடன் அல்லது வாழ்க்கைத் துணையுடனும் பிள்ளைகளடனும் வாழும் பெற்றோர் தனது வாழ்க்கைத் துணையின் மறைவின் பின்னர் தனியாக தமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பிள்ளைகள் மற்றும் உறவினர்களில் தங்கிவாழ நேர்கிறது. இவ்வகையில் தமது வாழ்க்கைத் துணையின் மறைவின் பின்னர் அதிகளவு வயது முதிர்ந்த பெண்கள் தமது பிள்ளைகளுடன் வாழ்கின்றனர். தமது பேரப்பிள்ளைகளைப் பராமரிப்பதில் அவர்களது பங்கு அளப்பரியது.

ஆயினும் தனிமையில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 40 வருடங்களுக்கு யப்பான் எதிர்நோக்கிய நிலையை இலங்கை தற்போது இது தொடர்பில் எதிர் நோக்குகிறது. தனியாக வாழும் முதியோரின் சமூக பொருளாதார தேவைகளை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். மூப்பின் காரணமாக தமது தேவைகளை தாமே செய்து கொள்ள முடியாத நிலையில் படுக்கையில் விழநேர்ந்தால் ஒரு குடும்பம் என்றவகையில் அவர்களைக் கவனித்துப் பராமரிப்பதற்கான ஆற்றல் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும். சமூகத்திலும் இத்தகைய பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்கான முறைசார்ந்த கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப்படவில்லை. குறிப்பாக கிராமப்புறங்களிலே இத்தகைய வசதிகள் இல்லை. நகர்ப்புறங்களிலே இவ்வசதிகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை செலவு கூடியதாக உள்ளதால் சாதாரண ஒரு குடும்பத்திற்கு அவற்றைப் பெற்றுக் கொள்வது இலகுவானதல்ல. எனவே முறையான வேலைத்திட்டங்களுடன் இப்போதிருந்தே இப்பிரச்சினையை எதிர்காள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பொருளாதார ரீதியில் முதியசனத் தொகையினர் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளனர் அரச தொழில் புரிவோராயின் ஓய்வூதியம் அவர்களுக்கு நிதி மூலாதாரமாக அமையும் முறைசார்ந்த தனியார்துறையினர் ஓய்வின் போது பெறும் சேமலாப நிதி போன்றவை ஓய்வின் பின் வாழ்நாள் பூராகவும் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யப் போதுமானவையல்ல. மறுபுறம் சுயதொழில் புரிவோர் விவசாயிகள் போன்றோரின் நிலைமை இதைவிட மோசமானதாகும். முதியவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தமது பிள்ளைகளின் நிதியுதவி மற்றும் பொருளுதவியிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.

அரசாங்கம் வழங்கும் சமுர்திக் கொடுப்பனவு 70 வயதுக்கு மேற்பட்ட சிரேட்டப் பிரசைகளுக்கான 2000ரூபா கொடுப்பனவு மற்றும் பின்படி என அழைக்கப்படும் கொடுப்பனவு என்பன உண்மையில் முதியவர்கள் தமது அந்திமகாலத்தை நிம்மதியாகக் கழித்து மகிழ்ச்சியாக இறந்து போவதற்கான உறுதிப்பாட்டை வழங்க எவ்வகையிலும் போதுமானதல்ல. எதிர்காலத்தில் பூதாகரமாக வெடிக்கவுள்ள சனத்தொகை முதிர்வடைதல் பிரச்சினையை எதிர்கொள்ள நாடு என்ற வகையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த ஒரு அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதைவிட வருமுன் காப்பதே நல்லது. கொரோனா பிரச்சினையுடன் இதனையும் சேர்த்துக் கவனிப்பது அவசியம்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்.

Comments