மார்ச் மாதத்தில் இலங்கை சந்திக்க போகும் பரபரப்பு! | தினகரன் வாரமஞ்சரி

மார்ச் மாதத்தில் இலங்கை சந்திக்க போகும் பரபரப்பு!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைப்பதற்கான தீர்மானமொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவது குறித்து இப்போது மீண்டும் பேசப்படுகிறது.

ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் நெருங்குகின்ற வேளையிலும் இலங்கை விவகாரமானது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுவதென்பது இன்னமும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இப்போது மற்றொரு மார்ச் மாதத்துக்கு இலங்கை முகம் கொடுக்கப் போகின்றது. சர்வதேச ரீதியில் இலங்கை மீது சர்வதேசம் இனிமேல் கூடிய கவனம் செலுத்தப் போகின்றது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை அழைத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஜெனீவா செயன்முறைகளில் இருந்து வெளியேறிய நிலையில், புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதே பொருத்தமானது என்றும், வேண்டுமானால் பழைய தீர்மானத்தில் உள்ளடங்கியிருக்கும் ஏற்பாடுகளையும் புதிய தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ள முடியும் என்றும் சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அமெரிக்காவில் முன்னர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிருவாகம் வேறு பல சர்வதேச அமைப்புக்களில் இருந்து வெளியேறியதைப் போன்று, மனித உரிமைகள் பேவையில் இருந்தும் வெளியேறியிருந்தது. அதனால், இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தை பிரிட்டனே முன்னின்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இலங்கையின் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை இது விடயத்தில் முன்வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் அண்மிக்கும் போது இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்கலாம்.
முன்னைய அரசாங்கம் 2015 ஒக்டோபரில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது. அதற்குப் பிறகு அரசாங்கத்துக்கு இரு தடவைகள் இரு வருட அவகாசங்களை வழங்கி அந்தத் தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக ஜெனீவாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களுக்கும் அன்றைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

அன்றைய வேளையில் காலஅவகாசத்தை இலங்கைக்கு வழங்கிய இரண்டாவது தீர்மானம் 2021 மார்ச் மாதத்துடன் காலாவதியாகிறது. அத்தகைய சூழ்நிலையியேயே புதிய தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இப்போது முடுக்கி விடப்படுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம் பதவியேற்ற ஆரம்பத்திலேயே ஜெனீவா தீர்மானத்தில் இருந்து வெளியேறி விட்டது. உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படுகின்ற எந்தவொரு உரிமை மீறலுக்கும் இலங்கைப் படையினரையோ அல்லது அரசியல் தலைவர்களையோ பொறுப்புக் கூற வைப்பதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சர்வதேச அல்லது உள்நாட்டு செயன்முறைையையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், 2021 மார்ச் ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படக் கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும் என்பது வெளிப்படையான உண்மை. எந்த விதமான ஒத்துழைப்பையும் சர்வதேச சமூகம் இது விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவும் முடியாது.

ஒரு புறத்தில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகள் ஜெனீவா செயன்முறைகள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கையில், மறுபுறத்தில் 'ஜெனீவா தீர்மானம்' என்ற பெயரில் இலங்கையில் சர்வதேச தலையீட்டுக்கு வியூகம் வகுக்கப்படுகிறது என்று குற்றஞ் சாட்டி தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு ஆதரவான சக்திகள் குறிப்பாக சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் மக்களை அணிதிரட்டும் பிரசாரங்களை முன்னெடுக்கும் என்பது நிச்சயமாகும். இந்த இரு முனைகளிலுமான பிரசாரங்கள் இயல்பாகவே இனங்களுக்கு இடையிலான பதற்றங்களை அதிகரிக்கச் செய்யும் ஆபத்தும் இருக்கின்றது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் 2012 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புக் கூறல் விடயத்தில் அந்தத் தீர்மானம் தொடங்கி 2015 ஒக்டோபர் தீர்மானம் வரை முன்வைக்கப்பட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் கொழும்பு இதுவரை அக்கறை காட்டியதே இல்லை. முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதால் சில ஏற்பாடுகளை அரைகுறை மனதுடன் நடைமுறைப்படுத்தியது என்பது மாத்திரமே உண்மை.தென்னிலங்கை பெரும்பான்மை சக்திகளை பகைத்துக் கொள்வதை முன்னைய அரசாங்கம் பெருமளவு தவிர்த்து வந்தது. அதேசமயம் தமிழ் அரசியல் தரப்புடன் முறுகல் ஏற்படாத வகையிலும் முன்னைய அரசு அவதானமாக காய்களை நகர்த்தி வந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்றதல்ல. இன்றைய அரசு சிங்கள தேசியவாத சக்திகளின் பேராதரவைக் கொண்டதாகும். ஜெனீவா செயன்முறைகள் போன்ற சர்வதேச தலையீட்டை சிங்கள தேசியவாத சக்திகள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

சர்வதேச நெருக்குதல்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிகரிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலும் கூட, அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கம் தேசியவாத சக்திகளை தனக்கு ஆதரவாக மேலும் அணிதிரட்டக் கூடிய வாய்ப்பே காணப்படுகின்றது. இதன் விளைவாக, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இணக்கப்பாடான தீர்வு காண்பதற்கு விரோதமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையே மேலும் வலுப்பெறும் ஆபத்து தோன்றும் என்பது புரிகின்றது.

ஒரு புறத்தில் தமிழர் தரப்பு போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு வருகின்ற உரிமை மீறல்களுக்காக அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளின் ஆதரவுடன் முயற்சித்துக் கொண்டு வருகின்றது. அதேவேளை தமிழர் தரப்பு மறுபுறத்தில் அதே அரசாங்கத்திடம் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வையும் நாடி நிற்கிறது.இந்த இரு அணுகுமுறைகளிலும் உள்ள முரண்பாட்டைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

Comments