வாரமஞ்சரி வெளிச்சமிட்டு காட்டிய அரைகுறை வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்! | தினகரன் வாரமஞ்சரி

வாரமஞ்சரி வெளிச்சமிட்டு காட்டிய அரைகுறை வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

தொழிலாளர்களுக்காக தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வந்த வீட்டுத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்படுகின்றன. இது தொடர்பாக நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். இதன் பயனாக இடைநடுவில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்பங்களின் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இது எமக்கு மகிழ்ச்சி தரும் விடயமாகவும் உள்ளது.  

புப்புரஸ்ச ஸ்டெலன்பேர்க் கந்தலா தோட்டத்தில் கடந்த 5 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த 40 வீடுகள் அமைக்கப்படுவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 5 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஏனைய வீடுகளின் கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறும் தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.  

கலஹா தெல்தோட்ட குறூப் தோட்டத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த 16 வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கு முகமாக தேவையான விபரங்களை தோட்ட நிர்வாகத்தின் மூலமாக திரட்டப்படுவதாகவும் அறிய முடிகிறது.  
இதுவரை கண்டி மாவட்ட தோட்டங்களில் இடைநடுவில் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்ட பத்துக்கும் அதிகமான வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளோம்.  

மேலும் சில கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்களின் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சிகரமான முன்னேற்றம்.  

அடுத்த வருடத்தின் ஆரம்ப பகுதிகளில் இது முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.  

புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் அதேசமயம் குறைபாடுகளாக உள்ள வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்வதிலும் கரிசனை காட்டப்பட வேண்டும். இது தொடர்பான முழு விபரங்களையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திரட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..  
பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த இந்த வீட்டுத்திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட வேண்டியது அவசியம். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரனமாக ஏற்படும் தாமதங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டும் உண்மை.  

தெல்தோட்டை
ஆர். நவராஜா

 

Comments