தோட்டங்களில் நூலகங்களை அமைக்க முன்வந்துள்ள மலையக மறுமலர்ச்சி ஒன்றியம் | தினகரன் வாரமஞ்சரி

தோட்டங்களில் நூலகங்களை அமைக்க முன்வந்துள்ள மலையக மறுமலர்ச்சி ஒன்றியம்

பல்வேறு அமைப்புகள் வலைத்தளத்தில் இருந்தபோதும் அண்மைக்காலமாக 'மலையக மறுமலர்ச்சி ஒன்றியம்' அமைப்பினர் முகநூல் மூலம் மலையக மாற்றத்திற்கு வழிவகுத்திருப்பது தெரிகிறது. இலாப நோக்கமின்றி சமூக கடமையை உணர்ந்த ஒரு இளைஞர் அணியினர் செயற்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து சாதனை புரிகின்றனர்.

ஒரு படித்த இளைஞர் கூட்டம், சிலர் பட்டதாரிகள், சிலர் ஆசிரியர்கள் இளம் இலக்கிய படைப்பாளிகள்.  சிறந்த நோக்குடன் ஒரு கட்டுக்கோப்புடன் ஒன்றினைந்துள்ளனர். இது மலையகத்தில் நிச்சயம் ஒரு மாற்றத்தினையும், விழிப்பையும் ஏற்படுத்தும். ரூபா. 1000 சம்பள பிரச்சினையில் முகநூல் மூலம் கொழும்பில் கூடிய இளைஞர் கூட்டம் ஒரு சாதனை புரிந்ததை அறிந்திருக்கிறோம். அதற்கும் அப்பால், இந்த ஒன்றியத்தின் சேவை அமையப்போகிறது.

இவர்கள் மலையகத்தில் பத்து நூலகங்களை இரு வாரத்திற்கு ஒரு நூலகம் என திறந்து  வைப்பதில்   ஈடுபட்டுள்ளனர்.  இக்கட்டுரை எழுதும்போது இரண்டு நூலகங்கள் திறக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது ஆயத்தமாகிவிட்டது. மலையக உறவுகள் மட்டுமன்றி ஆர்வமுள்ள வெளிநாட்டவர், வட மாகாணத்தினர் பலரும் இம்முயற்சியில்  உதவி வருகின்றனர்.  

இவர்கள் தனியே நூலகங்கள் திறப்பது மட்டுமன்றி அந்நூலகத்தின் வாசகர்களது ஆக்கங்களைச் சேர்த்து மண்வாசனை என்ற பருவ இதழையும் வெளியிடவுள்ளனர். இவை கேள்விபட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் இவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. 

இந்த மலையக மறுமலர்ச்சி ஓன்றியம் தமது முகநூலில் நல்ல கவிதைகளை அரங்கேற்றுகின்றனர்.

வயோதிபர்கள் பற்றி, வயோதிபர் பராமரிப்பு பற்றி, வயோதிப காலத்தில் தந்தையின் மனநிலைபற்றி, தாயின் மனநிலை பற்றி, கவிதை வரிகளில் சிறப்பாக தெளிவூட்டுகின்றனர். பேசும் படம், படம் கூறும் பொருள், படம் கூறும் கதை படத்தின் மூலம் விளக்கம் போன்றவற்றை பிரசுரிக்கின்றனர். படிப்பினை ஊட்டும் கதைகளாக சிந்திக்க தூண்டுவதாக அவை அமைந்துள்ளன. நல்ல செய்திகளையும் பரப்புகின்றனர். 

நூலகத்தினை திறப்பதோடு அந்த நூலகங்களுக்கு ஒரு கணிணி வழங்கவும் தீர்மானித்துள்ளனர். இவர்கள் 200 முதல்  300 நூல்களைக் கொண்ட நூலகம் திறக்கப்பட்டு பிரதேசவாசி ஒருவரிடம் கையளிப்பதுடன் இவை ஒன்றியத்தின் நேரடிப் பார்வையில் இயங்கும் என முகநூலில் கூறி வருகின்றனர். 

ஆங்கிலம் பேச உதவுவோம் என்ற ஒரு விடயத்தினையும் காணமுடிகிறது. இதுவும் வரவேற்கப்பட வேண்டியது. இந்த முகநூலின் நிர்வாகிகள் யார் என தேடி பாராட்ட வேண்டும் என்பதற்காக யார் முகநூல் நிர்வாகி என தேடினேன். நான்கு பேர் நிர்வாகிகளாக காணப்பட்டனர். அமிர் சத்தியமூர்த்தி ஆசிரியர் (தலவாக்கலை) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றவர், ஆர் ஜி கிருஷ்னா, சதீஸ் இரத்தினபுரி தமிழ் வித்தியாலயம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்றவர், திவ்யராஜ் நானுஓயாவைச் சேர்ந்தவர். டெல்போட் தமிழ் வித்தியாலயம் தலவாக்கெல சென். கூம்ஸ் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர். 

சிறந்த கவிநயம் கொண்ட குனா லக்மல் (ஹற்றன்), சென்.மேரிஸ் பொகவந்தலாவயில் கற்றவர். மண்வாசனை மாத இதழ் வெளிவரப்போவது பற்றி இவரே அறிவித்துள்ளார்.  

வடபுலத்து யாழ்ப்பாண மக்களது கல்வி வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் காரணம் என்ன? 1920களில் அங்கு ஏற்பட்ட வாசிப்பு, அறிவுதேடல், ஊருக்கொரு நூலகம் அல்லது வாசிகசாலையே இதற்கு காரணமானது.  இந்த வாசிப்பு அறிவு வளர்ச்சி கல்வி காரணமாக 1930களில் யாழ்ப்பாணத்தார் பலர் சிங்கப்பூர், மலேசியாவுக்கு தொழிலுக்காக சென்றனர். இவர்களே பிற்காலத்தில் சிங்கப்பூர் பென்சனியர் ஆனார்கள். சிங்கப்பூர், மலேசியா வாழ், யாழ்ப்பாண குடும்பங்களின் உழைப்பு இங்கு அவர்களது குடும்பத்தினர் உயர்கல்வி கற்கவும், அரச தொழில் பெறவும் காரணமானது.  எனவே குடும்பங்களும் போட்டிபோட்டு கல்வியின் முன்னேற்றம் கண்டது. இதில் ஒரு பிரிவினரே மலையக தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக கம்பனி காலத்தில்     தொழில்புரிந்தார்கள்.. அக்காலத்தில் இவர்களாலேயே பெருந்தோட்டத்துறையில் கல்வி வளர்ச்சி பெற்றது.  இதன் தொடர்ச்சியே 1970-/80களில் பெருந்தோட்ட ஆசிரியர்களின் வருகையும், வளர்ச்சியுமே மலையக கல்வி வளர்ச்சிக்கு காரணமாயின. மலையகத்தில் பல பட்டதாரிகள் தோன்றியுள்ளனர். கற்றோர் இவ்வாறு வளர்ச்சிபெற இடையில் கல்வியை கைவிடுவோர் நிலை என்ன?  கடைகளில் சிப்பந்திகளாகவும், ஹோட்டல்களில் கொத்து ரொட்டி செய்பவர்களாகவும், மூட்டைகள் தூக்கும் நாட்டாமைகளாகவும், தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். சாதாரண தரம் வரை கற்றவர்கள் சித்தி பெறமால் போனால் ஏதோ ஒரு வழியில் முச்சக்கரவண்டி ஓடுவதில் ஆர்வம் செலுத்துவதோடு மேல் கூறிய தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.

சாதாரண தரம் சித்தியடைந்தவுடன் ஆசிரியர் தொழிலையே நாடுகின்றனர். உயர்தரம் கற்றவர்களும் அப்படியே ஒரு சிலர் பல்கலைக்கழகம் செல்ல மற்றவர்கள் ஏனைய துறைகளுக்கு செல்ல முயற்சிப்பதில்லை. தோட்ட கிராம சேவகர், தோட்ட தபால்காரர் இதுவே எம்மவரின்    அரச தொழில்களாகின. 

இன்றைய இளைஞர்கள் ஆர்வமுள்ள சரியான சமூக ஊடகம் எது என அடையாளம் கண்டு அதனை திறம்பட செயல்படுத்துகின்றனர். இவர்களை பாராட்ட வேண்டும். இவர்களது முயற்சிகளுக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும். இதன் வளர்ச்சியுடன் பார்வையாளராக இல்லாது பங்குதாரர்களாக வேண்டும். அப்போது தான் நாமும் மலையகத்திற்கு ஏதாவது செய்துள்ளோம் என திருப்திப்பட முடியும். இது எமது சமூக கடமையும் கூட.  

இது போன்ற மேலும் பல இளைஞர்களின் அமைப்புகளின் முயற்சிகள் மலையகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுகின்றன.   

ஆர். மகேஸ்வரன்

Comments