அணங்கு | தினகரன் வாரமஞ்சரி

அணங்கு

பெரிய நோயில் விழுந்தவர்கள் கூடச் சாவிலிருந்து சில வேளை தப்பித்தும் கொள்கிறார்கள்! அதையும் தான் மறுக்கமுடியவில்லை! என்றாலும், இன்றைய நிலையில் எனக்கென்ன போக்கிருக்கும்?

அச்சத்தின் நிழலாட்டம் வித்தியா மனத்தில் இருந்தது. பயத்தால் அதை அடக்க முயற்சி செய்தாள். அதிலே சிறிது வெற்றி கிடைத்தது போல அவளுக்கிருந்தது . இன்றைய நாள் விடிந்ததிலே அவளுக்கு ஒரு விசேஷமுண்டு .

அதை அவள் நினைத்துப் பார்த்தாள். 'இன்று கண்ணன் அவளின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். அவன் இவளுக்குச் சொந்த மச்சான் முறையானவன். அவனுக்கு இவள் தன் கதையைச் சொல்ல இருக்கிறாள்.

வெளிப்படையாகத் தன் திருமண வாழ்க்கையிலிருந்து அத்தனையும் அவனிடம் கொட்டித்தீர்த்து விடுவது போல சொல்ல வேண்டும். அந்த விஷயங்கள் எல்லாமாக அறுபது முறையல்ல, அதைப் போல பல மடங்குகள்- அவள் நினைத்துக் கவலைப் படுகிற சம்பவங்கள்! அவைகளை அவனிடம் இன்று அழுத்தமாக ஊன்றிச் சொல்லவேண்டும்.

அதற்காக வேறு எங்கேயாவது அவனையும் கூட்டிக் கொண்டு போகவேண்டுமா? தேவையில்லை. இங்கே வீட்டுக் கோடிப்புறத்தில் புஷ்ப வேலிக்கு அருகே இருக்கைகளும் இருக்கின்றன.

நல்ல அமைதியான சூழல்! மண்போட்டு உயர்த்திய இடம். நல்ல இடம்தானே அது? முன்பெல்லாம் வித்தியாவுக்கு அவளின் தாய் தகப்பனால் கடுமையான சில கட்டுப்பாடுகள் இருந்தன. சாதாரணமாக எல்லா வீடுகளிலும் ஒரு பெண்ணுக்குப் பெற்றோரால் போடப்படும் சட்ட திட்டங்கள்தான் அவை. அதற்கு நியாயமும் இருக்கிறது . அதனால் அவளும் அதற்குக் கட்டுப்பட்டு நடந்தாள். ஆனால், இந்தத் தவறு நடந்த பிறகு, அவளின் நாவு கோபங்கொண்டு கடுமையாக அவர்களைப் பேசி விட்டது.

அவர்கள் யாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டுதான் நின்றார்கள் பதில் சொல்ல அவர்களுக்குத் தைரியமில்லை. அவ்வேளைகளில் சண்டை சட்டென நின்றது. மௌனமாகிவிட்டாலும், அவள் தன் மனத்துக்குள்ளே என்ன நினைத்தாள் தெரியுமா? "பெம்பிளைப் புள்ளயளை நாய் பெறுவதைப் போல பெற்றுப் போட்டு விடுவதில்லை. அவர்களைச் செவ்வையான ஓர் இடத்திலே பார்த்து நல்லவன் ஒருவனுக்குக் கலியாணம் கட்டிக் கொடுக்கவும் தான் வேணும்" நாவடங்கிப் போனாலும் அங்ஙனம் மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் வித்தியா. என்ன தான் இந்தச் சீவியம்? உற்சாகமிழந்த ஒரு வாழ்க்கை!

நினைக்கையில் எல்லாமே கவலையோடு கவலைதான்! தூங்க முடியவில்லை எனக்கு! மனச்சமாதானமும் இல்லை. எனக்கு நடந்தது ஒரு கொடுமையானதாக இருந்தாலும், போகப் போக இனி வரும் நாட்களிலே அதொரு வெட்கக் கேடாகவும்தானே எனக்கு மாறப் போகிறது.
பார்க்கப் போனால் உண்மை வழிக்கு இதெல்லாம் ஞாயமன்று பிழை செய்தவன் அவன்.

என்னை இப்படி அடித்து இடித்துத் தள்ளிப் பாழாக்கி முழுவதையும் நசிப்பிக்கப்டச் செய்துவிட்டு, அவன் எங்கோ போய் பிறகு இறந்தும் தொலைந்து விட்டான். இன்று நான் அவன் எனக்குத் தந்து விட்டுப் போன எச்.ஐ.வி. வைரஸ்ஸை காவிக் கொண்டு திரிகிறேன். அந்தக் கிருமி என் உடலில் குதித்து வளருகிறது. என் உடல் இன்று எச் ஐ.வி கிருமிக்கு உணவு பரிமாறுகிறது. இனிவரும் நாட்களில் எயிட்ஸ்சை உண்டாக்க வேண்டியது அந்த எச்.ஐ.வி வைரஸ்சின் வேலை.

அந்த நிலை வரும் போது நான் எயிட்ஸுடன் தான் உறங்க வேண்டும். அந்த உறக்கம் எனக்கு நிரந்தரமாகும் போது, நான் அடங்குகின்ற குழிக்கு மண் போட்டு உயர்த்துவார்கள்.

இந்தச் சாவு எனக்கு வருவதிலும் பார்க்க ஒரு வெடி குண்டு அடிபட்டு நான் கொல்லப்பட்டிருக்கலாம்... நாலுபக்கமுமாக காக்கைக் காட்டில் கல்லெறிந்தாற் போலிதறிப் போன சிந்தனைகளுடன்.. அவள் முன்னும் பின்னும் முன்னும் பின்னுமாக, வீட்டின் முன் உள்ள முற்றத்தண்டையில் நடந்த கொண்டிருக்கிறாள்..கண்பார்வை ஓர் எதிர்பார்ப்புடன் மதில் பக்க கேற்றில் விழுவதும் விலகுவதுமாக இருந்தது.

புடுபுடு வென்ற இயந்திரத்தின் இரைச்சல்... மோட்டார் சயிக்கிள்தான்! அவள் கண்ணன் வந்து விட்டானென்று அதனால் அறிந்தாள். கதவு தட்டும் ஒலியாக அவளின் காதில் பட்டது. உடனே சென்று உள்தாள்ப்பாளை விலக்கி கேற்றைத் திறந்தாள். கண்ணன் ஹெல் மட்டைக் கழற்றிக் கொண்டு கனிவு நிறைந்த சிரிப்பு சிரித்தான். அந்தச் சிரிப்பினின்று இவன் வஞ்சகமில்லாத சிறுவனைப்போலவென்று வித்தியா கண்ணனை எண்ணினாள். 'வா கண்ணா, உன்னைத்தான் எதிர்பார்த்து இவ்வளவு நேரமாக நான் இதில் நிண்டு கொண்டிருக்கிறன். அவ்வளவு ஒரு மதிப்பானவனா உன்ர மனதில் நான் இருக்கிறனா வித்தியா? “பின்ன இருக்காதே. நீ எனக்கு சொந்த மச்சானெல்லே... என்ர தாய் மாமன்ரை மகனெல்லே நீ "எண்டாலும் இந்த மச்சானை மறந்து போட்டுத்தானே நீ வேற ஒருவருக்கு கழுத்தை நீட்டினாய் அவன் குறும்பாக அதைச் சொல்லிவிட்டானென்றாலும், அந்தச் சொல் அவளின் மனத்தில் ஒரு வேதனை வித்தைப் புதைத்தது. “உண்மைதான் கண்ணா நீ சொல்லுறது! ஆனாலும், என்ரை தலைவிதி இப்படியாய்ப் போட்டுது .

இப்ப சேற்றிலும், கிடந்து முழுகியும் எழும்பியும் கஸ்டப்படுற மாதிரியெல்லாம் ஆகீட்டுது..." சொல்லும்போது கண் கலங்கியது அவளுக்கு. அவள் கண் கலங்குவதைப் பார்த்துவிட்டு அவன் சி என்ன வித்தியா நீ இப்பிடி....? - என்றான். அவள் அவனின் முகத்தைப் பார்க்க முடியாத கவலையில் கீழே தரையில் தன் பார்வையை ஊன்றினாள்.

"நீ எவ்வளவு நம்பிக்கையோடயும் நோத்தோட்டம் என்னோட சிவனைனில் இருந்து பழகினாய். நானும் உன்னில் அதே மாதிரியாத்தான் அன்பா இருந்தன். ஆனா, என் வீட்டாக்கள் தான் நாத்துப்பிடுங்கி நட்டது மாதிரி என்ர கலியாண விசயத்தில் நடந்திட்டினம், நான் ஏதோ பெரிய இடத்தில் வான் முகட்டுக்கு வளர வேணுமெண்டு அவயளுக்குப் பெரிய ஆசை. அந்த எல்லா ஆசைக் கோட்டயளும் இப்பவும் தகர்ந்து போச்சு அவயளுக்கு, இண்டைக்கு என்ரை வாழ்க்கையும்... பாலவனமாயிட்டுது.

வித்தியாவின் அம்மொழிகள் அவன் செவிக்குள் எதிரொலி செய்தது. இருந்த அவனது ஊக்கம் சட்டென குளிர்ந்து உறைந்து அவனுக்குச் சோர்வுண்டாக்கத் தொடங்கியது. அவநம்பிக்கையோடு அவன் கீழ் வானத்தை நிமிர்ந்து பார்த்தான், - ஒரு நிமிடநேரம் கழிந்தது. -
கண்ணன் மோட்ட சயிக்கிள உள்ளவிடப் போறியா... கேற்முழுசா திறக்கவா... ' அவள் கேட்டாள். கண்ணன் அவளைத் திரும்பிப் பார்த்தான். முகம் அவளுக்கு தெளிவுற்றிருப்பதைக் கண்டான். இப்போது நிம்மதியாக அவனுக்கும் இருந்தது. "இதில் பைக் நிக்கட்டும் வித்யா . " அப்ப உள்ள வா .. ' அவன் ஹெல்மட்டை பைய்க்கான்டிலில் கொளுவி விட்டு அவளருகில் வந்தான். "உள்ள வா கண்ணா." - என்று கேற்வாசலுக்கு உள்ளாக போனவாறு சொன்னாள் அவள் . அவன் அவளைப் பின் தொடர்ந்தவாறு நடந்தான். . " வீட்டுக்குப் பின்னாலே உள்ள இடத்துக்குப் போனால் பூமரங்களுமிருக்கு, அங்க காற்றுச் சௌகரியமும் இருக்கும் எந்த இடம் உனக்கு விருப்பம்... 'நடந்தவள் நின்று சிரித்தப்படி கண்ணனிடம் இதைக் கேட்டாள் .

கண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவனின் அகமகிழ்ச்சி அப்போது சிறிது மங்கினாற் போல தெரிந்தது. அவனது பெருமூச்சுக்கு அர்த்தம் அவளுக்கு தெரிந்து தான் இருந்தது. ஆனாலும் அந்த நினைவுகளை தன் நெஞ்சத்துக்குள்ளால் அறுத்துவிட்டு அவன் அங்ஙனம் துயரப்படுவதை தான் அறியாதவள் போல வெளிக்காட்டிக் கொண்டு. என்ன யோசனையோட வாறாய் என்ன உனக்கு?'- என்று கேட்டாள். "ஒண்டுமில்ல..

உன்ரை இஷ்டத்துக்குதானே நீ எல்லாமே செய்வாய். குணமெல்லாமே உனக்கு ஆம்பிளைக் குணம்தான்! உன்ரை நடையும் உடுப்பும் கூட அப்பிடியாகத்தான்! ஆனாலும், உன்ர கண் பேசுற கதையள் மாத்திரம் மாறேல்ல.

அது உனக்கெண்டே எப்போதும் இருக்கிற ஒரு பெண்பேசுகிற மொழிதான் என்ன. உனக்கெண்டால் எப்பவும் உந்தக் கவிதைப் பிடித்துதான். அதை நீ எப்பவும் கணக்கா வைச்சிரு.

சிலவேள தலையிலையும் உனக்குத் தட்டிப்போடும் கண்ணன் கவனம். - அவள் வீட்டுவாசல் நெருங்க அதிலே நின்றபடி கண்ணனுக்கு இதைச் சொன்னாள். - ஆனால், அவள் சொன்னதை அவன் ரசிக்கவில்லை “மாமி எங்க?" - என்று அக்கறையோடு அவளைக் கேட்டான். அம்மா கோயிலுக்குப் போயிற்றா. "அப்ப மாமா எங்க? அவர் இப்ப பின்னேரம் எண்டதால ஏதாவது ஒரு பாரில இருந்து குடிச்சுக் கொண்டிருப்பார். “ மாமா ஒண்டும் முந்தி குடியே வாயில வைக்காம இருந்தாரே.

"அதெல்லாம் முடிஞ்சு போன காலம். இப்ப குடிக்க வேணும் போல அவருக்கு இருக்கு குடிக்கிறார்."நீ அல்லாட்டி மாமி ஏதும் சொல்லுறேல்லயா அவருக்கு குடிக்க வேணாமெண்டு சொல்லி! அந்தப் பழக்கத்தை அவரிட்ட இருந்து நிப்பாட்டலாம் தானே நீங்கள் -" குடிச்சால் தன்ரை கவலையை மறக்கலாமெண்டு நினைச்சு அவர் குடிக்கத் துவங்கிட்டார். இண்டைக்கு எங்கட வீட்டில் இருக்கிற பிரச்சினையளை கவலையளை அவர் குடிச்செண்டாலும் கொஞ்சநேரம் மறக்கிறார். ஆனா, எனக்கொண்டா அதையும் செய்யேலாமக் கிடக்கு. எப்பிடித்தான் அந்த நஞ்சு மாதிரியுள்ள கசப்பை தொண்டைக்குள்ளால் விழுங்கிறது கண்ணன்.?

'அவள் சொன்னவைகளுக்குக் கண்ணனுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லாததாய் இருந்தது. ஆனாலும் அவன் யாதோ சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய சிந்தனை முகத்தை மங்கச் செய்தது. "எப்பவும் கப்பல் கவிழ்ந்த மாதிரி ஒரு யோசனையிலயே நீ இரு.. வா உந்த யோசனையளை விட்டுட்டு என்னோட பின்வளவுக்கு, ' - என்றாள் அவள் அந்த வளவின் மூலையிலே உள்ள ஒரு விளக்குக் கம்பத்துக்கு அருகில் இரும்புக் கம்பிகளில் சங்கிலிகள் பொருந்தத் தொங்கிய ஊஞ்சலும் இருந்தது. அதன் அருகே உள்ள வேலியிலெல்லாம் முள் செடிகளில் தொங்கும் வண்ணவண்ணப் பூக்களுக்குப் பஞ்சமில்லை. என்ரை மனத்தை அடைக்கிற துக்கம் வரேக்க இந்தப் புஷ்ப வேலியடிக்கு நான் வந்திடுவேன். நீயும் எத்தினை நாள் என்னோட இதில் இருந்து கதைச்சிருப்பாய். ஆனாலும் அந்த நேரமெல்லாம் என்ரை அம்மாவும் என்னோடயே இருந்திருக்கிறார்.

அப்ப எல்லாம் குமர் எண்டு எனக்குப் பெரிய காவல்! இப்ப அந்த காவல் எண்டதே எனக்கு இல்ல. நான் இப்ப சுதந்திரமா எங்க எண்டாலும் போகலாம் . எவரும் இங்க வீட்டில் என்னை நீ எங்க போறாய், வாறாய் எண்டு கேக்கிறதேயில்லை. இந்தச் சுதந்திரம் முதலே எனக்குக் கிடைச்சிருந்தா, ஒரு வழிக்கு நானும் சந்தோஷப்பட்டிருப்பன்... உன்னோடயாவது சேர்ந்து கொண்டு விருப்பமான இடமெல்லாம் நான் சுத்தித் திரிஞ்சிருக்கலாம்தானே? ஒரு புன்னகையுடன் சொன்னாள் அவள். நீ கள்ளமில்லாம எல்லா விஷயங்களையும் வெளிப்படையா கதைச்சுப் போடுவாய் வித்தியா.

ஆனா, எனக்கெண்டா உன்னை மாதிரி அப்பிடியா ஒண்டுமே ஏலாது. உன்ரை குணத்திலை எனக்குப் பிடிச்சதெண்டா அதுதான். அங்குள்ள இருக்கைகளின் பக்கத்திலே வந்தபோது கண்ணன் இதை வித்தியாவுக்குச் சொன்னான். இங்க தான் என்னை நீ பிழையா நினைச்சிட்டாய். முதலில் நீ இப்பிடி இதில் இரு - என்று அவன் சொன்னதற்குப் பதில் சொன்னாள் வித்தியா.

கண்ணன் அவள் சொன்னது போல சிமெண்டால் கட்டி விட்டிருந்த இருக்கையில் இருந்தான். வித்தியா ஊஞ்சலில் இருந்து கொண்டாள். நீ இப்ப சொன்னியே ஒரு கதை, அது என்ரை நெஞ்சை எரிக்குது கண்ணன். நான் வெளிப்படையா எல்லாத்தையும் கதைக்கிறனான் எண்டு நீ சொல்லுறாய். ஆனால், நான் மனத்துக்க மறைச்சு வைச்சிருந்ததாய் ஒரு பெரிய விஷயமும் இருக்கு.

அது உன்னில எனக்கிருந்த காதல்! அதையெல்லாம் நான் வீம்பு புடிச்சுக்கொண்டு அப்ப மறைச்சன்! இப்ப இந்தத் தண்டனையை அனுபவிக்கிறன்! அந்தக் கவலையள் எல்லாம் என்ரை நெஞ்சுக்க கிடந்து இப்ப வாய் விட்டு அழுகுது . இனி அதெல்லாம் எனக்கு மலரவே முடியாத சூழ்நிலையிலதான் எல்லாப் பூட்டுக்களையும் திறந்து இதை நான் உனக்கு வெளிப்படையாச் சொல்லுறன்|

வித்தியா எதையும் நீ சிரிச்சு மழுப்பாத. சொல் வித்தியா உனக்கு என்ன நடந்தது.? நீ ஏன் விவாகரத்து பண்ணினாய்? உன்ரை கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டவர். அவன் அதை அறிய கவலையுடன் கேட்டான். அவன் கேட்டதற்குப் பதிலை அவள் தொடர்தாள். நடந்தவற்றையெல்லாம் அக்கு வேறு ஆணி வேறாகச் சொன்னாள். அவளுக்கு நடத்த கொடுமைகளை நினைத்து அவன் அதிர்ந்தான். இப்போது அவளுக்கு நடந்தவைகள் எல்லாம் அவனுக்கு விளங்கிவிட்டது.

வித்தியா கண்ணனுக்கு இவைகளைச் சொன்ன பிறகு, அவளின் பெருமூச்சுகள் இரங்கத்தக்க அழுகையாகிவிட்டன. பல நாசிகை அது நீடித்தது . கண்ணன் அமைதியற்று எழுந்து நின்றான் வித்தியாவுக்கு எப்படி ஆறுதல் சொல்லலாமென்று அவனுக்குத் தெரியவில்லை.

என்றாலும் அவன் இப்போது தனக்கு அவள் மேல் உள்ள அன்பையும், அதனால் தான் அவளுக்காக இந்த உலகில் எதையுமே செய்யத் தயாராக இருப்பதையும் மனம் திறந்து வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தான். வித்தியா சாவை எதிர்பார்த்துச் சாகிறதை விட, இருக்கின்ற காலத்துக்கு நிம்மதியா இருப்போம் எண்டுறது தான் அறிவான செயல் வித்தியா! எப்படி நீ ஆனாலும் எனக்கு என்ரை வித்தியா எப்பவும் தங்கச் சிலைதான். நீ ஓம் எண்டு சொன்னால் உன்னோட கூட நான் உனக்குத் துணையா இருக்கிறன் வித்தியா. கண்ணன் இப்படிச் சொல்ல அழுதமுகமாய் இருந்த வித்தியா வாய்விட்டுச் சிரித்தாள்.

நீ.பி. அருளானந்தம்
 

Comments