உதிக்கட்டும் புத்தாண்டு! | தினகரன் வாரமஞ்சரி

உதிக்கட்டும் புத்தாண்டு!

உலகெலாம் சூழ்ந்த இடர்தனைக் களையும் 
    உயரிய மந்திரம் யாதென வினவும்
    உளவியல் இன்று உடைமையாய் ஆனது!
    நிலவெலாம் அளந்து நீண்டிடும் அறவியல்
    நியதிகள் யாவும் நித்திரையிழந்தன!
    உலவிடும் நுண்ணிய கிருமியின் ஆற்றலை
    உட்புகுந்தாய்ந்திடும் நிபுணர்கள் கூட்டமும்
    பலவித வழிகளிற் பணிகளை ஆற்றினர்!
    பற்பல மருத்துவப் பாதைகள் காட்டினர்!
    செலவுகள் ஆயிரம் ஆயிரம் கோடியாயச்
    செலவிட்டும் மானிடம் சிறைப்படலாயிற்று

குலவிடத் துடிக்கும் குடும்பங்கள் ஒருபுறம்!
    குதித்தோடத் துடிக்கும் குழந்தைகள் ஒருபுறம்!
    நலமிழந் தொடுங்கும்  உறவுகள் ஒருபுறம்!
    நகர்வுகள் தடுக்கும் பகர்வுகள் ஒருபுறம்!
    தலநிழல் நாடத் தடங்கல்கள் ஒருபுறம்!
    தனிமையிற் தவிக்கும் உணர்வுகள் ஒருபுறம்!
    விலகிடுமோ துயர்? விடியுமோ இரவென
   
விழிகளில் நீருடன் விம்முவோர் கோடியே!
    நிலையிதுவாகி நிற்கையில் எமது முன்
    நிகழ்வுகள் தொடராய் வந்து நகர்ந்தன!
    மலையது தகர்ந்து மார்பினில் வீழினும்
    மாகடல் அலையது மண்மடி கொள்ளினும்
    உலையென எரிமலை ஓங்கிப் பரவினும்
    உடையாமல் மானிடம் எழும் எழுமெழு மெனும்
    தொலையொளி யொன்று தரிசன மாயிற்று!
    தோற்காது வாழ்வெனும் தெளிநிலை விரவிற்று!
   
இருளும் ஒளியும் கலந்த வாழ்விலே
    இருளே வாழ்வாய்ச் சென்றது இவ்வாண்டு!
    பொருளும் புகழும் நிலையிலை யென்னும்
    போதனை தந்த புத்தகமாயிற்று!
    அருளும் அன்பும் அயலும் உறவும்
    ஆதரவென்ற உண்மை விளங்கிற்று!
    கருணை கொண்ட கடவுள்கள் பலரைக்
    கண்களின் முன்னே கொரோனா காட்டிற்று!
    பரிவும் பகிர்வும் பொறுமையும் நட்பும்
   
பண்பாடு என்னும் பாடம் ஊட்டிற்று!
    இறையொளி தன்னை யேற்றிப்பாடும்
    இனிய மார்கழித் திங்களும் வந்தது!
    பிறையொடு கங்கை சூடிய பேரருள்
    பெற்றியைப்பாடும் அனுபவம் தந்தது!
    திரைகடல் அரவம் தனில் அயர் திருமால்
    நற்திரு போற்றும் நலன்களை ஈந்தது!
    இறைமகன் யேசுதான் இப்புவி யுதித்த
    இன்திருநாளும் இன்றெம்முன் சேர்ந்தது!
    குறைவிலாதுயிர்கள் வாழக் குவலயம்
    கூடியே பாடும் கொண்டாட்டம் தோன்றிற்று!
  
தன்னலம் கடந்த தர்மத்தைத் தனது
    தனிப்பலமாகக்கொண்டு தரணியில்
    வந்து உதித்தான் இறைமகன் எமக்காய்!
    வையகம் உயர்ந்திட வாக்குகள் பதித்தான்!
    பொன்னையும் பொருளையும் புகழையும் போற்றி
    மன்னுயிர் காப்பதை மறந்திடும் அரசுகள்
    விண்ணையும் அளந்திடும் வெறியுடன் அறிவியல்
    வீரியம் பேசிடும் விஞ்ஞானச் சிரசுகள்
    மண்ணையும் கடலையும் மண்டல வெளியையும்
    மாசுபடுத்திடும் அஞ்ஞானப் ‘பெரிசுகள்’
    பண்ணிடும் கொடுமைகள் அனைத்தையும் மாற்றிடும்
    எண்ணத்தின் ஒளியை ஏற்றிட உலகில்
    முன்னமே உதித்து முள்முடி தரித்து
    மூன்று நாட்களில் மீண்டும் உயிர்த்த ஓர்
    மின்னலை மேதினி போற்றும் நாளே
    இன்னரும் நத்தாராய் நம்முன் எழுந்தது!
  
புதியதோர் ஆண்டு பூக்கும் வேளையிற்
    புன்னகையோடதிற் புகுந்திட நிற்கிறோம்!
    விதியை வென்றிடும் வீரிய நெஞ்சுடன்
    விழிகளில் ஒளியுடன் எதிர்கொள்ள நிற்கிறோம்!
    பதிந்த துயரங்கள் பருகிய சோகங்கள்
    படிகள் என்று எம் பாதையைக் காண்கின்றோம்!
    இழந்த இழப்புகள் இன்னல்கள் அனைத்தையும்
    இலக்கின் வடிவமாய் இணைத்துப் பார்க்கின்றோம்!
   
உலகோர் குலமென உணரந்திடும் ஒரு நிலை
    உருவாகிடவே ஒருபே ராற்றல் தான்
    மறைவாய் நின்று மாயைகள் புரிவதாய்
    உரைப்போருண்டு உண்மையை
    அறியோம்!
    பகைவாளேந்திப் பல்லுயிர் குடிக்கும்
    படைசேர் அரசுகள் பகிர்ந்துண்டு வாழும்
    வகைதம் கொள்கைகள் வகுத்திடத் தானோ
    வந்ததிவ் வுயிர் கொல் கொரோனா வென்றும்
    தகையோர் தங்கள் தத்துவம் இயற்றினர்!
    தர்மம் ஒருநாட் தழைக்கும் என்றனர்!
    மறையோர் ஓதிய மாண்புகள் நிகழ்த்தும்
    மனிதம் மீண்டும் மலர்ந்திடும் என்றனர்!
   
மறைகளும் மதங்களும் கடந்த மானிட
    மாண்பினை மனித்த்தின் புனிதமாய்க் காண்போம்!
    இறைமை என்னும் உயரிய பதத்தை
    ஈன்ற தமிழின் ஆற்றலைப் பூணுவோம்!
    நிறைவும் நிதானமும் நிதியெனக் கொண்டு
    நிம்மதியாக நித்திரை கொள்வோம்!
   
    மதமும் மொழியும் மனிதத்தை இணைத்திட!
    மானமும் உரிமையும் மக்களாய் உயர்த்திட!
    விதவிதக் கொள்கைகள் விருப்புடன் செயற்பட!
    வேதமும் போதமும் புனிதத்தை விதைத்திட!
    அதனால் யாவரும் ஒரு குலமாகியே
    அன்பு நெறியிலே அவனியைக் காத்திடும்
    விதம் நல் லறத்தினில் நீதியை நாட்டுவோம்!
    பதவியும் பட்டமும்  பல்லக்கும் எமது
    பாடைவரையில் வாராது என்று
    கதையாய்ப் புராணமாய்க் காவியப் பொருளாய்க்
    காட்டிய மேலோர் ஊட்டிய செந்நெறிப்
    பாட்டின் பொருளைப் பாருடன் பகிர்வோம்!
   
    உதவிவாழ்வதும் உணர்ந்து மகிழ்வதும்
    உலகநன்மைக்காய் இணைந்து வாழ்வதும்
    புதுமையாவும் கடந்த பழமையாம்!
    புவனம் மேம்படப் புனைந்த வழமையாம்!
    இதுவே எங்கள் எதிர்காலச் சந்ததி
    இனிதே வாழ்ந்திட இயற்றிடும் எம்தவம்!
    இதுவே கனவு! எண்ணமும் இதுவே!
    இறைவனைக் காணும் வண்ணமும் இதுவே!

புலவர் நல்லதம்பி சிவநாதன்

Comments