அனைவரையும் இலங்கையர்களாக எண்ணவைக்கும் அரசியலமைப்பொன்றின் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

அனைவரையும் இலங்கையர்களாக எண்ணவைக்கும் அரசியலமைப்பொன்றின் அவசியம்

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை அரசாங்கம் கோரியுள்ளது. இதன்படி கட்சிகள், அமைப்புகள், தனி நபர்கள் எனப் பல தரப்பினரும் தமது யோசனைகளை முன்வைக்கலாம். பல்வேறு தரப்பினருடைய அபிப்பிராயங்களையும் வெளிப்படையாகக் கோரி, பன்முகத் தன்மையுடன், ஜனநாயக அடிப்படையில் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் சிந்தனை வரவேற்கக் கூடியதே. இது நல்ல விசயம்தான்.

ஆனால், இவ்வாறு கோரிப் பெறப்படும் விடயங்களில் எவையெவை அல்லது எவ்வாறானவை அல்லது எத்தனை வீதமானவை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும்? என்ற கேள்வி பலரிடமும் உண்டு. சிலர் இதற்கும் மேலே போய், அப்படிப் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் அல்லது சொல்கின்ற ஆதாரம், அரசாங்கத்துக்குள்ளேயே இது தொடர்பாக எதிர்ப்பும் மறுப்புமான போக்கே காணப்படுகிறது. குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் வெளியேறும் மனதோடு வாசற்கட்டிலேயே நின்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எப்படிப் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பற்றி அரசாங்கம் நிதானமாகச் சிந்திக்க முடியும்? என்பதாகும்.

இவற்றையும் நிராகரிக்க முடியாதே.  சரி, இதைக் கடந்து அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது எப்படியானதாக அமையும்? அதிலே வெளிப்பரப்பில் கோரிப் பெறப்படும் விடயங்களை எப்படி, எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்போகி றார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏனென்றால், இலங்கையின் இன்றைய இனமுரண் நிலைக்கு அரசியலைமைப்பும் ஒரு காரணம். கூடவே ஆட்சி அதிகாரக் குழப்பங்கள், அதிகாரப் பரவலாக்கம் சம்பந்தப்பட்ட மாகாணசபை விவகாரங்கள், ஜனநாயக நெருக்கடி, நீதி மற்றும் ஆட்சித் தன்மை பற்றிய தெளிவின்மைகள் எனப் பலவற்றுக்கும் அரசியலமைப்பு ஏதோ வகையில் காரணமாக உள்ளது. இவ்வாறுள்ள அரசியலமைப்பின் குறைபாடுகளும் பாதகமான அம்சங்களும் ஆட்சி அதிகாரத்தையும் இன ஒற்றுமை அல்லது ஒருமைப்பாடு ஆகியவற்றையும் குழப்ப நிலைக்கே கொண்டு சென்று விட்டிருக்கின்றன. அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் என்ற இரு அதிகார மையங்களுக்கிடையிலான  பிணக்குகள், மத்திய அரசு – மாகாணசபைகள் என்பவற்றுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுச் சிக்கல்கள் போன்றவையும் அரசியலமைப்பின்பாற்பட்டவையே.

இதனால்தான் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியலமைப்பில் இனமுரண்பாட்டைத் தணிப்பதற்கான ஏற்பாடுகள் தேவை என்று சர்வதேச சமூகத்தினால் உணர்த்தப்பட்டது.

அத்துடன் அதிகாரக்கட்டமைப்பு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாகவும் சிந்திக்கப்பட்டது. அதற்கேற்ப சில திருத்தங்களைச் செய்வதற்கான முயற்சிகளும் அப்போது மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அதுவோ ஏற்கனவே இருந்ததையும் விட பெரிய இடைவெளிகளையும் குழப்பங்களையும் உண்டாக்கும் விதமாகஅமைய முற்பட்டது. குறிப்பாக அதிலே செய்ய உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களும் அதற்கான இடைக்கால அறிக்கையும் கூட பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்ததைப் பலரும் மறந்திருக்க முடியாது. முக்கியமாக பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதால் ஏற்பட்ட சர்ச்சையும் ஒற்றை ஆட்சியா ஒருமித்த ஆட்சியா என்ற தெளிவற்ற நிலைகளும்.

இப்பொழுது இதெல்லாவற்றுக்கும் அப்பால், எதிர்கால இலங்கையைக் குறித்த ஒரு அரசியலமைப்பைப் பற்றிச் சிந்திக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், முதலில் இனமுரண்பாடுகளையும் குழப்பங்களையும் தணிக்கக் கூடிய – தீர்த்து வைக்கக் கூடிய உள்ளடக்கத்தை இந்த அரசியலமைப்புக் கொண்டிருக்க வேண்டும்.  அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தக் கூடிய தன்மை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஏனென்றால், ஒரு தேசத்துக்கு எது தேவையானதோ அதுவே வேண்டும். இலங்கையின் தீராப்பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருப்பது இனப்பகைமையே. இதில் யாருக்குமே வேறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது. இனப்பிரச்சினையே வெளியாரின் அதிகரித்த தலையீடுகளுக்கும் உள்நாட்டில் அழிவுகளுக்கும் காரணமாக உள்ளது. இப்படி அது உண்டாக்கும் எதிர்விளைவுகள் பல.  போர் முடிந்த பிறகும் தீர்வு கிட்டாமல் சமூகங்கள் பிளவுண்ட நிலையிலேயே உள்ளன. ஒன்றை ஒன்று சந்தேகத்தோடும் அச்சத்தோடுமே பார்க்கின்றன. அணுகுகின்றன. இந்த நிலையில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி கேள்விக்குரியதாகவே இருக்கும். நிலையான அபிவிருத்தியோ விரைவான அபிவிருத்தியோ முழுமையான அபிவிருத்தியோ வேண்டுமாக இருந்தால், நாட்டில் அமைதியும் ஒருங்கிணைவும் அவசியம். அதை உருவாக்கக் கூடிய அரசியலமைப்புத் தேவை.

அதாவது அரசியலமைப்பானது மக்களிடையே குழப்பம், சந்தேகம், அச்சம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். பதிலாக நம்பிக்கை, உறுதிப்பாடு, மகிழ்ச்சி போன்றவற்றைத் தரவேண்டும். அதுவும் இன முரண்பாட்டினால் அச்சமும் பாதிப்பும் அடைந்திருக்கும் சிறுபான்மையினரிடத்திலே அது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இப்பொழுது சிறுபான்மையினச் சமூகங்களின் பொதுப்பரப்பில் நடக்கின்ற உரையாடல்களில் இந்தப் புதிய அரசியலமைப்பு தொடர்பாக நம்பிக்கையின்மையும் கவலையுமே காணப்படுகிறது.

இதைப் போக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்குண்டு. கூடவே அரசியலமைப்பை உருவாக்கவுள்ள தரப்பினருக்கும் (நிபுணர்களுக்கும்) உண்டு.

ஆகவே பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில்  அரசியலமைப்பில் பன்மைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடமளிக்கப்படுதல் அவசியம். அவ்வாறான இடமளிப்பானது, அனைவரையும் “நாம் இலங்கையர்கள்” என்ற உணர்வையும் அவ்வாறான எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதுவே அமைதிக்கும் சமாதானத்துக்கும் அபிவிருத்திக்குமான முதலாவது வெற்றியாக அமையும். ஐக்கியத்தை வலுப்படுத்தும். ஏனென்றால் பன்மைத்துவமும் ஜனநாயகமும் சமத்துவமுமே எல்லாவற்றுக்குமான கதவுகளாகும். இவை மறுக்கப்படுமானால் கதவு மூடப்படுவதாகவே அமையும்.

எனவேதான் திரும்பத்திரும்ப நாம் இலங்கையர் என்ற எண்ணத்தை உண்டாக்கும் அவ்வாறு உணர வைக்கும் விதமாக அரசியலமைப்பு வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாம் இலங்கையர்கள் என்று அனைவரையும் எண்ணவும் நம்பவும் வைக்க முடியவில்லை என்றால் நிச்சயமாக அந்த அரசியலமைப்பினால் பயனில்லை. அது தோற்றுப்போன ஒன்றாகவே அமையும். இதைத் துணிந்து நாம் கூறலாம். வரலாறும் இதை நிரூபிக்கும்.

நாம் இலங்கையர்கள் என ஒவ்வொருவரும் எண்ண வேண்டுமானால், அப்படி நம்பிக்கைக் கொள்ள வேண்டுமென்றால், இலங்கை பல்லினங்கள் வாழும் ஓர் பன்மைத்துவ ஜனநாயக நாடு.  இந்த ஜனநாயக கட்டமைப்பிற்குள் வாழும் இனக் குழுமங்கள் அவற்றிற்கே உரித்தான அடையாளங்களைப் பேணவும் வளர்க்கவும் உள்ள உரித்துக்களுடன் பேதங்களற்ற இலங்கையர்கள் என்ற பரந்த அடையாளத்திற்குரிய ஜனநாயகம் சமூக நீதி சமத்துவம் ஆகியவற்றைப் பேணும் வகையிலும் ஆட்சித் தன்மை பேணப்படுதல் வேண்டும்.

கூடவே  இவற்றின் ஜனநாயக பரிமாணம் அரசியல் யாப்பின் உள்ளடக்கத்திலும்  அதன் செயற்பாட்டிலும் வெளிப்படும் வகையில் ஆட்சியின் செயற்பாடுகள் பிரதிபலிக்க வேண்டும்.
உலகின் பெரும்பாலான நாடுகள் இத்தகைய விரிந்த சிந்தனையோடும் உயர்ந்த நாகரிகத்தோடும் தமது அரசியலமைப்பை உருவாக்கி, அனைத்துத் தரப்பினரின் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளன. அவை சிறந்த முன்மாதிரிகளாகவும் உள்ளன.

இலங்கை ஒரு மூத்த பாராம்பரியச் செழுமை மிக்க நாடு. ஆகவே இலங்கையின் அரசியலமைப்பானது, அந்தப் பாராம்பரியச் செழுமைக்கு ஏற்ற வகையிலும் கடந்தகாலப் படிப்பினைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்படுதல் அவசியம். அதுதான் இலங்கையின் கீர்த்தியையும் மகிமையையும் கொள்ளும்.

இதை விடுத்துச் செயற்பட்டுக் கொண்டு, இரண்டாயிரப் பாரம்பரியம் நமக்குண்டு. வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. பெருமைகளும் புகழுமுண்டு என்று சொல்வதெல்லாம் பயனற்றவையாகவே முடியும். நம்மை விடவும் குறைந்த வரலாற்றைக் கொண்ட நாடுகள் இன்று செல்வத்தினாலும் ஆட்சிச் சிறப்பினாலும் மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையினாலும் உயர்ந்து நிற்கின்றன. நாமோ இவ்வளவு பாராம்பரியப் புகழையும் வரலாற்றுச் சிறப்பையும் கொண்டிருந்தும் உலகெங்கும் இரந்து கடன் கேட்பவராக இருக்கிறோம். இந்த நிலை ஏன்? இதற்குப் பின்னரும் நாம் நமக்குப் பொருத்தமான – பன்முகப்படுத்தப்பட்ட – ஜனநாயகச் சிறப்புடைய சிந்தனை முறையைப் பற்றிச் சிந்திக்கத் தயங்குகின்றவர்களாகவே உள்ளோம். இது ஏன்?

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கு நாம் விடை கண்டே தீர வேண்டும். அப்படி விடையைக் கண்டு கொண்டே அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அல்லது அவ்வாறு விடைகாண்பதாக அரசியலமைப்பிருக்க வேண்டும்.

எனவேதான் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அல்லாமல் அது திருப்தியின்மைகளையும் குறைபாடுகளையும் கொண்டிருக்குமானால் அது பயனற்றுப் போகும்.  மட்டுமல்ல, அது மேலும் நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் காலம் முழுவதற்கும் கொள்வதாகவுமே போய் முடியும். முக்கியமாகக் குருதி சிந்துவதாக அமைந்து விடும்.

எனவே, புதிய அரசியலமைப்பில் இனம், மதம், மொழி, பால், பிரதேசம், வர்க்கம் போன்றவற்றின் வேறுபாடுகளுக்கும் முதன்மைப்பாடுகளுக்கும் இடமளித்தலாகாது. அத்துடன் பெண்களின் பிரதிநிதித்துவக்கான பால்நிலைச் சமத்துவத்துக்கும் பங்கேற்புக்கும் இடமளிக்கும் வகையில் அவர்களுக்கான ஒதுக்கீடுகள் அமைய வேண்டும்.

மேலும் சுயாதீனத்தன்மை மிக்க ஆணைக்குழுக்களும் மாகாண சபைகளுக்கான அதிகார வரம்புகளும் தெளிவான பொருள்கோடலுடன் உறுதிப்படுத்தப்படுவது அவசியம். இதெல்லாவற்றுக்குமாக திறந்த மனதோடு உரையாடல்களை நடத்துவது நல்லது.

இந்த அரசாங்கமானது பெரும்பான்மை பலத்தின் உறுதிப் பாட்டைக் கொண்டது. ஆகவே எதையும் நிறைவேற்றக் கூடிய வாய்ப்பை உடையது. அப்படி நிறைவேற்றப்படுகின்ற விடயங்கள் நாட்டின் எதிர்காலத்துக்கும் வரலாற்றுக்கும் சிறப்பானவையாக இருக்க வேண்டும். அப்பொழுதே  நீண்டு கொண்டிருந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு உரிமை கோருவதைப்போல மெய்யாகவே நல்லாட்சியை உருவாக்கியதற்கும் உரிமை கோர முடியும். அதற்கான சூழலை எதிர்வரும் நாட்கள் வழங்குமா? 
கருணாகரன்

Comments