பெருந்தோட்ட மாணவர்களின் போஷணை குறைபாடு | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட மாணவர்களின் போஷணை குறைபாடு

அரசாங்கத்தின் புதிய போஷாக்குத் திட்டம் பெருந்தோட்ட மாணவர்களுக்கு எந்தவகையில் பயன்படப்போகிறது என்றதொரு கேள்வி எழுந்திருக்கிறது. இது நியாயமான கேள்வி. தக்கத்தருணத்தில் பேசப்படும் ஒரு சமாச்சாரம்.  ஏனெனில் பொதுவாகவே பெருந்தோட்டச் சிறார்கள் மந்தபோஷணை நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது ஒரு நீண்ட வரலாற்றின் ஒதுக்கப்பட்ட பக்கங்கள். போஷாக்கின்மை என்பது நலிவுற்ற எதிர்காலத்தை நோக்கிய நகர்வு.  

தேசிய ரீதியில் இதன் பாதிப்புகள் கிராமப்புறங்களில் குறைவு. எனினும் கல்வி அமைச்சு வறிய மாணவர் நலன்கருதி பாடசாலை மட்டத்திலான சத்தூட்டல் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் போஷணை நிகழ்ச்சித் திட்டமானது பெருந்தோட்டப் பிரதேசங்களில் எதிர்பார்ப்பினை ஈடேற்றுமா? இலக்கினை எட்டுமா? இது ஐயத்துடன் அணுகப்பட வேண்டிய சங்கதி.

பெருந்தோட்டங்களில் இவ்வாறான சுகாதார மேம்பாட்டுடன் தொடர்புடைய திட்டங்கள் கடந்த காலங்களில் எட்டிப்பார்க்கவே இல்லை. ஒன்றிரண்டு தென்பட்டிருந்தாலும் அது முறையாக இடம்பெறவில்லை. முழுமையும் பெறவில்லை. இதற்குக் காரணம் பெருந்தோட்டப் பகுதிக்கான கட்டமைப்பு முறைமையே.  

மலையகத்தில் போஷாக்கின்மை என்பது பாரிய பிரச்சினையாக விளங்குகின்றது. ஏனைய சமூகங்களை விட மலையக சமூகம் மந்தபோஷண பாதிப்பினை வெகுவாகவே அநுபவித்து வருகின்றது. அத்தியாவசிய ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுவதால் முழு சமூகமே இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுவது சர்வசாதாரணம். இதனால் உள, உடல் அபிவிருத்தி என்பது கேள்விக் குறியாகின்றது. அத்துடன் சுகாதார மேம்பாடு என்பது முற்றிலுமே தொய்வடைந்து போயுள்ளது.  

தென்கிழக்காசியவிலேயே சுகாதார மேம்பாட்டு நிலையில் இலங்கை சிறப்பான இடத்தை வகிக்கின்றது. ஆனால் இது பெருந்தோட்டத்துறையை உள்ளடக்காத கணிப்பு மட்டுமே. ஏனெனில் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வில் அடிப்படை சுகாதார வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. நாட்டில் பிற சமூகங்கள் அனுபவிக்கும் பொது சுகாதார வாய்ப்புகள் தோட்ட மக்களுக்குக் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் தடைகள் இதற்குக் காரணம். மலையக மக்கள் தமது சகல தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகங்களையே நம்பியிருக்கின்றார்கள். தோட்ட முகாமைத்துவத்தின் கீழிருந்து முற்றாக விடுபட்டு முக்கிய நீரோட்டத்தில் கலக்கும் சந்தர்ப்பம் இன்னும் வந்தபாடில்லை.  

பெருந்தோட்டத்துறையை சார்ந்த 50 மருத்துவமனைகள் காணப்படுகின்றன. இவற்றுள் 27 மருத்துவமனைகள் அரசு பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மொத்தமாக 179 பிரசவ விடுதிகள், 266 மருந்தகங்களும் இங்கு உள்ளன. ஆனால் தேவையான அளவு மருத்துவர்கள், தாதிகள் இல்லை, மருந்துகள் இல்லை, அம்பியூலன்ஸ் வசதி இல்லாத நிலையில் தோட்ட லொறிகளையே நம்ப வேண்டிய நிலை. சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில் இங்கு நிலவும் வறுமை உச்சமடைந்து செல்கின்றது. வாழ்வாதார பற்றாக்குறையால் போஷாக்கு நிறைந்த உணவு பற்றி நினைத்து பார்க்கவே முடியாதுள்ளது.  

இன்று மலையகத்திலிருந்து சோகை, மூளைக்காய்ச்சல், கர்ப்பிணி மரணம், சிசு மரணம் அதிகரித்துச் செல்லும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இத்துடன் சிறுவர் மந்தபோஷனம் பெரும் பாதிப்பினை உருவாக்கி வருகின்றது. இது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணப்பட்டாலும் கூட கூடிய பாதிப்பினை அடையும் மாவட்டங்களில் நுவரெலியா மாவட்டமே முதன்மை பெறுகின்றது. இரண்டாம் இடம் மொனராகலை மாவட்டத்துக்கு.  

குழந்தையின் வளர்ச்சி மட்டத்தின் கணிப்பின் பேரிலேயே மந்தபோஷண நிலை மதிப்பிடப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையொன்றின்படி நுவரெலியா மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளில் 40 வீதமானவை வளர்ச்சியின்மை பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. 25.3 வீத குழந்தைகள் எடை குறைவுடனும் 10.5 வீத குழந்தைகள் உயரத்திற்கேற்ப நிறையின்றியும் காணப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2000 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்ந்த 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 34 சத வீதமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்பட்டார்கள். நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமின்றி முழு மலையகத்தையுமே போஷண குறைபாடு ஆக்கிரமித்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு பக்கம் வறுமை, இன்னொரு பக்கம் அபிவிருத்திக்கான அத்திவாரம் இன்மை. போதிய சுகாதார நடைமுறைகளுக்கான வசதிகள் இல்லாமையால் சுகாதார பழக்கவழக்கங்கள் முற்றாக கடைப்பிடிக்க முடியாத அவல நிலை.  
மது பாவனை, புகைத்தல், வெற்றிலைப்பாவனை இங்கு மிகை. சத்தான உணவுக்கான அவசியம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. தோட்ட மக்களுக்கான சுகாதார சேவை வழங்கல் நிகழ்ச்சி நிரல் தேசிய சுகாதார நெறிமுறைகளோடு இணைந்ததாக இன்னும் மாற்றம் பெறவில்லை. பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், சுத்தமான குடிநீர், தனித்தனி வீட்டு வசதிகள் இங்கு அவசரத்தேவையாக உள்ளது. தேர்ச்சி பெற்ற மருத்துவர் சேவை வழங்கப்படுவது முக்கியம்.

பெருந்தோட்டத் துறையின் சுகாதார மேம்பாடு மற்றும் மந்தபோஷண நிலையிலிருந்து மீட்சி சம்பந்தமான தனியான செயல் திட்டம் உருவாக்கப்படுவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க இயலும். இதில் வறுமைக்கான வடிகால் தேடும் வழி முறைகளும் உள்ளடக்கப்படுவதே உகந்தது. இத்துடன் கடின உழைப்பின் காரணமாக தடிமன், இருமல், தோற்பட்டை வலி, முதுகெலும்பு பாதிப்பு, இரத்த அழுத்தம், இரும்பு சத்து குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகளுக்கு தாய்மார் ஆளாகின்றனர். இதனால் தாய்ப்பாலூட்டல் இங்கு முழுமையாக நடைபெறுவதில்லை.  

கடும் உழைப்பாளர்களாக இம்மக்கள் இருக்கின்றார்கள். எனினும் அதற்கேற்ற வருமானம் இல்லை. இதனால் கர்ப்பக்காலத்திலும் பிரசவத்தின் பின்னரும் இவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. எனவே பிறக்கும் குழந்தைகள் மாதாந்த சராசரி வளர்ச்சி வீத தரவுகளில் பின்தங்கிய நிலையை அடைகின்றது. இன்றும்கூட தோட்ட மக்களில் அதிகமானோர் கழிவறை வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றார்கள். வீட்டு முற்றத்திலிருக்கும் வடிகான்கள் உடைந்துபட்டு காணப்படுகின்றன.

போதாக்குறைக்கு லயன்களைச் சுற்றி தேயிலை மலைகள் காடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதனால் சுகாதார மேம்பாட்டுக்கான ஏதுக்கல் குறைவடைந்து போயுள்ளன. சுத்தமான காற்றோ, குடிநீரோ கிடைப்பது அரிது.  

பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவை தேசிய சுகாதார சேவையோடு இணைக்கப்படாமையே இதற்கு அடிப்படை காரணமென்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மக்களின் சுகாதார நலனைக் கவனிக்க தகுதிவாய்ந்த சுகாதார அதிகாரிகள் இல்லை.  

2012இலான ஒரு கணிப்பீட்டின்படி சுமார் 4 மில்லியன் சிறுவர்கள் இலவசக் கல்வித் திட்டத்தினை அனுபவிக்கின்றார்கள். இதில் மலையக மாணவர்களும் அடக்கம். ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையிலும் 25,0000இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாதிருப்பது ஓர் அதிர்ச்சித் தகவல். இதேவேளை பாடசாலை இடைவிலகல் (2011) 1,26,000ஆகக் காணப்படுகிறது. இதில் பாடசாலைச் செல்லாதோர் தொகையிலும் இடை விலகுவோர் தொகையிலும் 60 சதவீதமானோர் மலையகம் மற்றும் வடக்கு கிழக்கைச் சார்ந்த சிறுவர்கள் ஆவர்.  

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பிள்ளைகளில் எட்டு வீதமானோர் வலது குறைந்த சிறுவர்கள் என ஆய்வொன்று கூறுகின்றது. மலையகத்தைப் பொறுத்தவரை வலது குறைந்த சிறுவர்களில் 20வீதமானோர் மட்டுமே கல்வியைப் பெறுகின்றனர். 80 வீதமானோர் அந்த வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். சிறுவர் உரிமை மீறல்களுக்கான அடிப்படைக் காரணங்கள் பொருளாதார அமைப்பு முறையிலிருந்தே தோன்றுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். மலையகத்தைப் பொறுத்தவரை இந்நிலைமை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது.  இதன் பின் புலத்தில் பாடசாலைக்கூடான அரசின் போஷணைத் திட்டங்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் எத்தகையை விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது? அது எவ்வளவு தூரம் பயன்பாடுடையதாக அமையப் போகின்றது? 

இவ்வாறான கேள்விகள் அறிவு ஜீவிகள் மத்தியிலிருந்து எழுவது சரியானதே! இதன் தாக்கங்களைப் பொறுத்து அவதானிப்பதே பொருத்தமானது.

பன். பாலா

Comments