தமிழ் கூட்டமைப்பினர் தவற விட்ட தருணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் கூட்டமைப்பினர் தவற விட்ட தருணங்கள்

ஆட்சி மாற்றங்கள் ஒவ்வொரு முறை ஏற்படும் போதும் தமது பிரச்சினை தீர்க்கப்படும் என்று எதிர்பார்த்து ஏமாந்து செல்லும் தரப்பினராக நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.

தேர்தல் காலங்களில் அதுவும் குறிப்பாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமான பிரசார மேடைகளில் பேசப்படும் விடயங்களில் முக்கியமானதாகக் காணப்படும் இந்த கைதிகள் விடுதலை விவகாரம் தேர்தலின் பின்னர் மறக்கப்பட்டு விடுவதே இதுவரை கால வரலாறாக உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களின் விடுதலை தொடர்பில் அவ்வப்போது ஒரு சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை இடைநடுவில் கைவிடப்பட்டு பின்னர் மறக்கப்பட்டு விடும் ஒன்றாக மாறி விட்டது.

இதனால் எதிர்பார்த்து எதிர்பார்த்து சலிப்படைந்து தமது விடுதலையில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 97 பேர் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதுடன், 55 பேர் தடுப்புக் காவலிலும், 11 பேர் மேன்முறையீடு செய்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இதுவரை வழக்குகள் கூட பதிவு செய்யப்படாது பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் இவர்களில் உள்ளடங்குகின்றனர்.

பெரும்பாலானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிரட்டப்பட்டே குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக பல தடவைகள் நீதிமன்றங்களிலிலும், பாராளுமன்றத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தரப்பினரில் ஒரு பிரிவினர் அவ்வப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்வது வழமையாகிப் போயுள்ள போதும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லையென்பதே உண்மையாகும்.

குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வரும் என்ற பரவலான எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதற்கு வலுவான அரசியல் ரீதியான காரணம் காணப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கு முயற்சித்தார் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து சாதகமானதொரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார். இது அரசியல் கைதிகள் மத்தியில் ஒரு நம்பிக்கையை விதைத்திருந்தது.

இதற்கும் அப்பால்,வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அதிகமான ஆதரவைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கியிருந்தமையால் அவர்களின் ஊடாக உரிய அழுத்தம் அரசுக்குக் கொடுக்கப்படும் என்ற நம்பிக்ைகயும் ஆரம்பத்தில் தோன்றியிருந்தது. மக்கள் மத்தியில் சிறியதொரு நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளும் காணப்பட்டன.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்கள் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு, ஒரு சிலரின் வழக்குகளை துரிதப்படுத்தப்படுவது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. அது மாத்திரமன்றி சிலருக்குப் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்படும் என்ற அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டன. இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமான நடவடிக்கைகளைக் காண முடியவில்லை.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு கரங் கொடுக்கும் அரசியல் சக்தியாக அன்று திகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலமான நிலையில் இருந்தும் இதனை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதாகும். இது குறித்த வேதனையும் வெறுப்பும் தமிழ் மக்களுக்கு இல்லாமலுமில்லை.

குறிப்பிட்டுக் கூறுவதாயின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவது, 19வது அரசியலமைப்புத் திருத்தம், ஆட்சி மாற்றக் குழப்பத்திலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றுவது என பல சந்தர்ப்பங்களில் தமிழ்க் கூட்டமைப்பினர் தமது ஆதரவை நல்லாட்சி அரசுக்கு வழங்கியிருந்தனர். அவ்வாறு ஆதரவு வழங்கிய ஒவ்வொரு தடவையும் தமிழ்க் கைதிகள் விடுதலைக்கான நிபந்தனையை தமிழ்க் கூட்டமைப்பினர் முன்வைத்திருந்தால் கைதிகளில் பலரை விடுவித்திருக்க முடியும். எனினும் அவர்கள் இதனைச் செய்யவில்லை.

மறுபக்கத்தில் நல்லாட்சி அரசாங்கம் தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருந்தது. தமிழ்க் கைதிகளை விடுவிப்பது போல தமிழர் தரப்புக்குக் காண்பித்துக் கொண்டு, தென்னிலங்கை சக்திகளை திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது நல்லாட்சி அரசு. கொள்கை ரீதியாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு அவர்கள் தயங்கியிருந்தார்கள் என்றால் அது பிழையற்றதாகும்.

இது போன்று சிறைக் கைதிகளுக்குத் தொடர்ந்தும் ஏமாற்றங்களே எஞ்சின. இவ்வாறான நிலையியல் தற்பொழுது ஆட்சிபீடம் ஏறியிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட பொதுஜன பெரமுன அரசாங்கத்திலாவது இவ்விவகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை தற்பொழுது அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்றே கூற வேண்டும்.

பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கைதிகள் விடுதலை குறித்து கலந்துரையாடியிருந்ததுடன், மனுவொன்றையும் கையளித்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தி அதில் கலந்துரையாடுவது என இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களை அழைக்க முடியும் என்றும் கொள்கையளவில் ஜனதிபதி தீர்மானமொன்றை எடுப்பாராயின் கைதிகள் விவகாரத்தில் முடிவொன்றை எடுக்க முடியும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார். இவ்விடயத்தை தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாட ஆளும் கட்சியில் உள்ள தமிழ் பேசும் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இருந்த போதும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் தமிழ் அரசியல் கைதிகள் என்ற ஒரு தரப்பினர் உள்ளனர் என்பதை ஏற்பதற்கு மறுக்கின்றனர். இலங்கையில் அரசியல் கைதிகள் என்ற எவரும் இல்லை. நாட்டின் சட்டத்துக்கு எதிராக செயற்பட்ட நபர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர்கள் கூறியுள்ளனர். இது அவர்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்றே கொள்ள வேண்டும்.

ஏனெனில், அரசாங்கம் கைதிகள் விடுதலையை முற்றாக மறுக்கும் வகையில் எந்த விதமான நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை. தென்னிலங்கை மக்களை உருவேற்றி விட்டு அதன் ஊடாக தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சிலர் இதுபோன்ற கருத்துக்களைக் கூறினாலும், இதுவிடயத்தில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூட கைதிகள் விடுதலை குறித்து தனது தந்தையும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதாக யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். பிரதமரும் இது விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனிக்க வேண்டியதொரு விடயம் என்னவெனில், யார் எதனைக் கூறி அரசியல் செய்ய முற்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகளின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் பல தசாப்தங்களாக சிறைக்குள் இருப்பதுடன் இளமைக் காலத்தில் சிறைக்குச் சென்ற பலர் தற்பொழுது முதியவர்களாகவும், உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் மாறியுள்ளனர்.

இவர்கள் விடுவிக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் வன்முறைகள் ஏற்படும் என எவராவது கூறுவார்களாயின் அது நகைப்புக்குரியதாகவே அமையும். ஏனெனில் அவர்கள் அவ்வாறான எந்தவொரு மனோநிலையிலும் இல்லை. விடுதலை பெறாது சிறைக்குள்ளேயே உயிர்களை விட்ட தமிழ் அரசியல் கைதிகள் பலரும் இருக்கின்றனர். வயது முதிர்வின் காரணமாக பலர் நோய்வாய்ப்பட்டும் இருக்கின்றனர். பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு தண்டனை வழங்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், பல தசாப்தங்களாக தண்டனைகளை அனுபவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அராங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

பி.ஹர்ஷன்

Comments