இருளே எனக்கு அருளோ? | தினகரன் வாரமஞ்சரி

இருளே எனக்கு அருளோ?

குனிந்த முகத்துடன் கூட்டம் கடந்து வந்ததெல்லாம் இதற்காகத்தானோ? கலாசாரம் எனும் கயிறு என் வாலிபத்தை இறுகப்பிடித்திருந்ததும் இதற்காகத்தானோ ? என் எழில் கண்டு எத்தனையோ வாலிபர்கள் என் மீது காதல் கொண்டும் வீட்டின் மானத்திற்கும் விருந்தினராக மாத்திரமே வரும் தற்காலிக உறவுகளுக்காய் என் உணர்வுகளை அடக்கியதும் இதற்காகத்தானோ?

இதோ! இங்கே ஓங்கிய மழையினிலும் ஓசை பெருத்த இடியினிலும் சேலை அணிந்து கொண்டு பள்ளமும் படு குழியுமாய் போன என் வாழ்வைப் போல என் வீட்டுக்குறுந்தெரு வழியே, காலில் சேறு படரப்படர அவசர அவசரமாய் ஏன் இப்படி நடக்கின்றேன்?... ஏன் எனது கண்களில் கண்ணீர்? ஒரு வேளை மழை நீராய் இருக்குமோ? இல்லை நிச்சயமாக இல்லை. இது சுடுகிறதே.. மழை நீர் சுடுமோ? இது என் மன நீர்... எனக்கே புரிகிறதே... இரு இமைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள கண்ணீர் கசிகிறதே... நான் அழுகின்றேன், பழகிப்போன விடயமாகையால் பொருட்படுத்தாது வீடடைந்தேன்.

பகல் நேரம்... பெருத்த மழை...

ஒரு மணி நேரம் முன்பாய் எனக்கு பசித்ததே.. பாடசாலை இருத்திப்பாடம் படிப்பித்துக்கொண்டிருந்த போது என் கால்களின் சக்தி இழக்குமளவிற்கு பசித்திருந்ததே....

எப்படி இப்படி வேகமாய் வந்தடைந்தேன்?... என் மூளை என்னை ஏமாற்றுகிறதோ? இல்லை, உணர்ச்சிகளை உணரும் திறனை இழந்து விட்டேனோ?... அதோ! அங்கே! என் கட்டிலில் மேல் கிடக்கும் என் கைக்குட்டை எப்படி இவ்வாறு நனைந்தது?... மழை பட்டதினாலா? இல்லை, என் கண்ணீர் துடைத்த களைப்பினில் கட்டிலில் கிடக்கின்றது...

என் கைக்குட்டை பாவம் அதுவும் தன்னால் இயன்றளவு நீரை உறிஞ்சி, வற்புறுத்தி வழங்கிய நீரை வெளியே கொட்டி விட்டு கோபத்தில் கிடக்கின்றது. ஏன் நான் இப்படி பேய் பிடித்தது போல இந்தப் புழுதி படிந்த ஜன்னல் அருகே புழுவாய்த் துடித்துத் துடித்து வற்றிய கண்ணீரை வரவேற்றுக்கொண்டிருக்கிறேன்...

ஏறெடுத்தும் பார்த்ததில்லை எந்தவோர் ஆணையும்... அப்படி இருந்தும் ஏன் இந்தச் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?... அப்படி என்னில் என்ன குறை கண்டார்கள்?.... என்னில் எனக்கு எப்பொழுதும் திருப்தி உண்டு.. அரை மணி நேர முன்பாய் அங்காடித்தெரு வழியே நான் ஏன் வந்தேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?

அவர்கள் என் இதயத்தின் உள்ளே இருக்கும் இளகும் தன்மையினை இழக்க வைக்கின்றார்கள்...

நான் அவ்வழியே வேகமாக வீடு செல்லலாம் என்று தான் வந்தேன்... ஆனால், வரும் பொழுது வீணான கதை சுமந்து வந்தேன்... பழகிய விடயம் என்றாலும் பாழாகிப்போகிறது இந்த மனம்.

“இருபத்து ஒன்பது வயசாப்பெய்த்து என இதுக்கு பொறகு மாப்ள கெடைக்கிற கஷ்டம் தான் , அழகா கேக்குரத குடுத்தா என்ன பிரச்சின இன்னரம் கல்யாணமும் பண்ணி பிள்ள குட்டி எண்டு சந்தோஷமா இருந்திரிக்கலாம். ”

நான் பல்கலைக்கழகம் சென்றிருந்த போது என்னை விரும்பும் படி கேட்ட அவனிடம் எனது விருப்பத்தை ஒப்பு வைத்திருந்தால் இன்று எனது கழுத்தில் தாலி ஏறி இருந்திருக்குமோ ? முட்டாள் தனம்.. இப்படி ஒரு விடயம் இருக்கின்றது என்று எனது தாயிடம் சொன்ன போது சம்பந்தமே இல்லாமல் எனது மூத்த மாமா மும்முரமாக அதை தடுத்து நிறுத்தினாரே.... அது இதற்குத்தானோ? அவர் இப்போது எங்கே?... இந்த அவமானத்தின் அரைப்பங்கினளவாவது அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமோ? எப்படி முடியும், அவர் தான் கடந்த வருடம் இறந்து விட்டாரே! எதை நினைத்து தடுத்து நிறுத்தினார்.. என்ன பயன் நேர்ந்தது அவருக்கு? என் வாழ்க்கை எதுவெனத் தீர்மானிக்க என்னாலேயே முடியாதோ?
சரி...பொறுத்திருந்தேன்... ஒரு விடியல் விடியுமென்று.

என் இருபதுகளில் அரைப்பங்கு கழிந்தும், கல்வி என்ற கலையிலும் குறைவு வராதவளாயிருந்தும், இன்னும் ஏன் இப்படி இருக்கின்றேன்?

“அந்தப் பிள்ள அந்தப் பொடியனோட கதத்சாமே ... யுனிவேர்சிட்டில ரெண்டு பெரும் ஒண்டா உலாத்தினாம்.. அதாலான் அவிர மாமா அத கொளச்சாம்”

இப்படி ஒரு விடயம் நடந்ததாய் எனக்கே இன்று தான் தெரியும்.. என்ன ஒரு மனிதம் அற்ற சமூகம்... எனது எதிர் காலம் எனும் கற்பனை உலகில் கருப்பள்ளிக் கொட்டி விட்ட இந்த சமூகமா நாளை வாழ்வு தரப்போகிறது? என்ன எதிர் பார்க்கின்றது இந்தச் சமூகம்?... இரு மனம் ஒருங்கே இணைந்து இல்லறம் அனுபவிக்க, சந்தோஷ வாழ்வுதனை சுகமாகக் கழிக்க, கேவலம் கற்களைக் காசாகக் கேட்கின்றனர்.. அப்படி ஒரு ஈனச்செயல் புரிந்தே இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று உழைத்த ஊதியமெல்லாம் உரமாய் போட்டு இந்த கல் வீட்டினைக் கட்டி இயலாமையின் உச்சத்தால் இறந்து போனாரே! இதைத் தாண்டி எல்லாமா ஒரு திருமணம் நடக்க வேண்டும்? இதோ! அந்த வீட்டின் ஒரு மூலையில் கதவை அடைத்து, இருட்டினுள்ளே இருட்டைத் தேடி, ஏன் இப்படி விம்மி விம்மி அழுகின்றேன்? ... எனது தந்தை கட்டிய இந்த வீட்டிற்கே ஐந்து வயதாயிற்று. இன்னும் இந்த வீடு அவர் இறந்ததிலிருந்து இருட்டாகவே இருக்கின்றது!

“அந்த பிள்ள வடிவேன்டாலும் அந்தாள் அவளுக்கு ஊடு கட்டிரிக்கி தெருவுக்குள்ளயாம்.... அது மட்டும் இல்லாம ரோட்டும் மோசமாம் ”

சிரிப்பதா.. நான் சிரித்து எத்தனை காலம் ஆயிற்று ... ஏன் எல்லோரும் இந்தப் பொய்யான உலகில் பூரித்துக் கிடக்கிறார்கள்? என்னைப்போல் இப்படி எத்தனை இளமைகள் இறந்து கொண்டிருக்கின்றன... என் தலையே வெடிக்கும் போலிருக்கிறதே.. என் விதியே வில்லாகி என் வாழ்க்கை எனும் வசந்தத்தில் அம்புகளாய் எறிகிறதே... யதார்த்தம் அறியாமல் ஏன் இந்தச் சமூகம் இப்படி ஒரு முட்டாள் தனமான கொள்கையினைய மும்முரமாகக் கடைப் பிடிக்கின்றது ..... வாழ்க்கைத் துணை என்பது கற்களுக்கும் காசுகளுக்கும் வேண்டுவதா ? இரு மனம் ஒன்றிணைந்து புரிந்துணர்வு வந்தாலே வாழ்கை ஒரு பூந்தோட்டம் தானே!... என்ன இது? என் காதிற்குள்ளே மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருப்பது என்ன இது?....

“இருபத்தி ஒம்பது வயசா பெய்த்து எண்டா இனி மாப்ள கஷ்டம் தான்"

ச்சிக் கேவலம்... இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இறக்கத்தான் வேணுமோ.. என் இறைவனே எனக்கு எப்பொழுதும்... அழுகாதே போதும் என் மனமே அழாதே... ஏன் மீண்டும் எனது தொண்டை அடைக்கின்றது? ஐயோ! வலிக்கின்றதே!.... இதோ இந்த நீர் எனது தொண்டைக்குழிக்கு இறங்க மறுக்கின்றதே!.. மனமே! பொறு மனமே! என்னால் முடியவில்லை... எங்கே எனது கைக்குட்டை? அது என்னைக் கண்டு ஒளிந்து கொண்டதோ? அதோ அந்தத் தலையணை... பற்களைக் கடித்தது போதும்.. மனமே பதறாதே.. பொறுமாயாயிரு...
கண்களை மூடுகின்றேன்...

நாளை விடியல் வருமோ? என் வானின் சூரியனைக் காணவில்லையே!
இருளே எனக்கு அருளோ?...

வதாவதன்

Comments