கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

அடக்கம் செய்வதா, அக்கினி அரக்கனுக்கு இரையாக்குவதா என்பது 2020ஆம் ஆண்டு இறுதிப் பொழுதிலும் முடிவு பெறாமல்_
அச்சொட்டாக ‘குமுதம்’ சஞ்சிகையில் வரலாற்று எழுத்தாளர் ‘சாண்டில்யன்’ வழங்கி வந்த சரித்திர நாவல்களைப் போல லேசில் ‘முற்றும்’ போடப்படாமல் 2021ஆம் ஆண்டை நோக்கியும் போகத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு நிலையில், 

ஓரிரு வாரங்களுக்கு முன் இந்தியாவின் வடக்குப் பக்க மராட்டிய மாநிலத்தில் நடந்திருக்கிற விசித்திர சம்பவத்தை அறிந்து, இப்பொழுது அந்த அசாதாரணக் ‘கசப்பை’ வழங்கலாம். என்று காத்திருக்க_

இந்த 06ஆம் திகதி ‘சுபநேரம்’ கிடைத்து வழங்குகிறேன்.

அங்கே 65 அகவை அன்னை ஒருத்தி. ஆண் மக்கள் இருவர். அவள் மரணித்தாள். இறுதிச் சடங்கை எப்படி நடத்த வேண்டும் என்பதில் சகோதர்கள் சண்டை!

எரிப்பதா, புதைப்பதா?

ஒருவன் அடம் பிடிக்கிறான் எரிக்க வேண்டுமென்று, மற்றவன் அடக்கம் தான் சரி என்கிறான்.

மரணித்தவர் முஸ்லிமன்று! இந்துவாக இருந்து கிறிஸ்தவ நம்பிக்கையை மேற்கொண்டவர். அப்பொழுதே ஒரு பிரிவினை ஏற்பட்டுப் போயிற்று.
சுபாஷ் என்கிற மூத்த மகன், ‘கடைசிவரை நான் இந்துவாகவே இருப்பேன்’ என்று அந்த மதத்தைத் தொடர்ந்தான்.

இளையவன் சுதான், தந்தையோடு, தாயோடு ‘சண்டே மாஸ்’ போக ஆரம்பித்தான்.

கால மகள் சும்மாவா நிற்பாள்? அவள் கடமையில் சுறுசுறுப்பல்லவா. சரியான நேரம் வந்ததும் காலனை அனுப்பி 65ஐ அபகரித்துக் கொண்டாள்.

இப்பொழுது எதிர்பார்த்தது ஏற்பட்டு விட்டது.

இறுதிச் சடங்கை எந்த முறையில் நடத்துவது என்பதில் சகோதரர்களிடையே சர்ச்சை.

ஊரார் திரண்டு நிற்கிறார்கள் ஊமையர்களாக! உடன் பிறப்புகள் வாக்குவாதப் பட்டுக் கொள்கின்றனர்.

யாரும் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கத் தயாரில்லை. தந்தை இருதலைக் கொள்ளி எறும்பானார்.

பொலிஸ் வந்தது. பேசிப்பார்த்தது. ஒரு முடிவுக்கு வர வற்புறுத்தியது. கடைசியாக முன்னொரு கால இந்துப் பெண்ணை கிறிஸ்தவப் பாரம்பரியப்படி அடக்கம் செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு நடந்து முடிந்தன.

மூத்தவன் சுபாஷ், தாயின் இறுதிச் சடங்குக்கு நடந்த ‘அநீதி’யைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனாக ஒரு காரியம் செய்தான்.
அது “அடையாள தகனம்”!

அதென்ன, அப்படியொரு தகனம்?

நானே இப்பொழுதுதான் அறிந்தேன். அபிமானிகளுடன் பகிர்கிறேன்.

தாயாரைப் போன்று ஓர் உருவப் பொம்மையை பைபரில் செய்தான்.

இந்துச் சடங்குகளை முறைப்படிச் செய்தான். ஒரு தலைமகன் செய்யவேண்டிய அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றினான். அந்தப் ‘பைபர் தாய்’ திகு திகுவென்று தீயில் எரிந்தாள்!

எங்கேயோ இன்னோர் இடத்தில் அவள் பிணம் எதுவும் அறியாமல் மண்ணுக்குள் மக்கிக் கொண்டிருந்தது.

உலக ஜீவராசிகள் அத்தனைக்கும் (மனிதர் ஈறாக) உயிர் கொடுக்கும் படைப்புகளின் ஏக சக்கரவர்த்தி, அந்த உயிர்களை மீட்டெடுத்துக் கொள்ளும் விதம் நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. கடுகளவும் சந்தேகம் வேண்டாம்.

இனிப்புகள்

சங்க காலம் என்றொரு பொற்காலம். அச் சமயம் தென் தமிழகத்தில் சிறப்புற்று சோழப் பேரரசு விளங்கியது. அவர்கள் தங்கள் ஆட்சியின் வல்லமையை அலை கடலுக்கப்பாலும், மலாயா தீபகற்பம், இலங்கை (பொலன்னறுவைத் தலைநகர்) எனக் கொடி நாட்டி நிரூபித்தார்கள்.  
அன்றைய சோழ அரசர்களுள் முதன்மை பெற்றவன் கரிகாலன். சங்க நூல் ‘பட்டினப் பாலையில் அவன் வீழ்ச்சியும் எழுச்சியும் பாடப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்திலும், 11ஆம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கரிகாலன் பளிச்சிடுகிறான். கலைகள் பலவற்றிக்கும் கவிதைத் துறைக்கும், கைகொடுத்தான். ‘பட்டினப் பாலை’ இயற்றிய புலவனுக்குப் பல லட்சம் பொற்காசுகள் வழங்கியவன் என்றும் சொல்லப்படுகிறான். அந்தப் பொற்கிழி போன்று மற்றுமொரு கவிமணிக்கு யானை ஒன்றையே பரிசாக அளித்தான் என்றும் வரலாற்றுக்கதை.  

(யானையை வைத்து புலவரேறு என்ன பயனடைந்திருப்பான் என்று கேட்கக் கூடாது!)  

சரி இப்பொழுது வருகிறேன். வழங்கவேண்டிய முக்கிய இனிப்புக்கு.  

அந்தக் கரிகாலன் பெயரை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பளிச்சிடச் செய்ய −---சரியாகச் சொன்னால் 13 ஆண்டுகளுக்கு முன் (2007) முனைந்தார். ஒரு ‘முத்துப் பேட்டை முஸ்தஃபா! இவ் ஆரும் கரிகாலன் ஆண்ட தஞ்சாவூர் தரணியில் தான். அவன் பெயரை நினைவூட்டி தன் இலக்கிய வேட்கையைத் தீர்த்துக் கொள்ள கனவொன்றைக் கண்டார். நனவே ஆனது!  

“கரிகால சோழன் இலக்கிய விருதுகள்” என்றதொரு கருவுக்கு உருக் கொடுத்து செயல்பட விழைய−  முதன் முதல் அத்திட்டத்தை அவர் வெளிச்சமிட்டது என் ஆய்வில் அவர் வெளியிட்ட நூலொன்றில் தான்! (“முத்தான முத்துப் பேட்டை” 162- -−165 ஆம் பக்கங்கள்) பின்னர், தமிழக ஏடுகளை முந்திக் கொண்டு ‘தினகரன்’ வாரமஞ்சரியும் மணம் பரப்பியது.  

இப்பொழுது ஆண்டுகள் பதின் மூன்று பறந்தோடி விட்டன. முத்துப் பேட்டை முஸ்தஃபா நாநாவின் இலக்கியத் தாகத்தை “சிங்கப்பூர் முஸ்தஃபா அறக்கட்டளை” தீர்த்துக் கொண்டிருக்கிறது.  

முத்துப் பேட்டை பெயர்வராமல் சிங்கப்பூர் இடம் பிடித்திருப்பதற்குக் காரணம் அவர் அந்நாட்டு நிரந்தரப் பிரஜை. அங்கே ஒரு பிரபலத் தொழிலதிபர். தமிழும் அங்கே ஆட்சி மொழி. அமைக்கப்பட்ட ஆய்வு இருக்கைகளும் சிங்கப்பூர் ‘தமிழவேள் கோ. சாரங்கபாணி அய்யா’ பெயரில் − அவர், சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்க அல்லும் பகலும் பாடுபட்டவர்.  

எவ்வாறாயினும், தனது பிறந்த மண்ணான தஞ்சாவூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் அனுசரணையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அங்கே தேசிய வங்கி ஒன்றில் இருபது லட்சத்திற்கு பங்குகள் வாங்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஆண்டு தோறும் அனைத்துச் செலவுகளும் செய்யப்படுகின்றன.  

ஆய்வு இருக்கைகள் மட்டுமன்றி தென் கிழக்காசிய வட்டத்தில் வாழும் படைப்பிலக்கியவாதிகளின் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “கரிகால் சோழன் விருது”டன் பொற்கிழிகளும் வழங்கப்பெற்று வருகின்றன. தமிழிலக்கிய மேம்பாடு தொடர்பான கருத்தரங்களுக்கும் ஒரு தொகை செலவிடப்படுகின்றது.  

அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்ட முதலாம் ஆண்டில் கரிகால், சோழன் விருது பெற்றவர் மலேசியப் பிரபல படைப்பிலக்கிய ஜாம்பவானும், ‘தமிழ் நேசன்’ இதழின் ஞாயிறு வெளியீட்டின் பொறுப்பாசிரியருமான ப. சந்திரகாந்தம்.

சிங்கப்பூர் எழுத்தாளருக்கான விருது முருகதாஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.  

இலங்கையைப் பொறுத்தளவில் ஏற்கெனவே, தெளிவத்தை ஜோசப், மு. சிவலிங்கம், ஜுனைதா ஷெரீப் ஆகியோர் கௌரவம் அடைந்துள்ளனர். இப்பொழுது “ஞானம்’ தி. ஞானசேகரன் பெற்றுள்ளார். மொத்தமாக படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் அவரது ‘எரிமலை’க்கு முதலிடம்!  

ஒரு சாமான்ய இலக்கிய ஆர்வலரும் இலக்கியத் தாகம் உடையவருமான முத்துப் பேட்டை முஸ்தஃபா நாநா முயற்சிக்கு நாமனைவரும் வழங்கக் கூடிய ஒரு பெறுமதியான பரிசு இலங்கை முத்துக்கள்! ஆம்! இலங்கை முத்துக்கள்! கொடுப்போமா முத்துக்குளிக்க வாரீகளா!  

Comments