மாற்று அரசியல் + மாற்றத்துக்கான அரசியல் = மக்களுக்கான அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

மாற்று அரசியல் + மாற்றத்துக்கான அரசியல் = மக்களுக்கான அரசியல்

பிரச்சினைகளாலும் நெருக்கடிகளாலும் அவதியுறும் நாட்டில் முன்னேற்றங்களை எட்டவும் முடியாது. அமைதியாக வாழவும் முடியாது என்பது பலரும் திரும்பத்திரும்பக் கூறிவரும் எளிய உண்மை. இதற்குத் தீர்வு, மாறி மாறி ஆளும் தரப்புகளை

மாற்றுவதல்ல. அப்படி ஆட்சி

மாற்றங்களை அவ்வப்போது செய்து விடுவதால் எதுவும் கிட்டாது. அப்படிப் பல தடவை செய்து பார்த்தாயிற்று. இதன் மூலம் ஆளும் தரப்பினர்தான் மாறி மாறி நன்மையடைந்தனரே தவிர, பிரச்சினைகளும் நெருக்கடிகளும் அப்படியே உள்ளன. இன்னும் சரியாகச் சொன்னால், மேலும் மேலும் நெருக்கடிகளும் பின்னடைவுமே ஏற்பட்டுள்ளது.

முன்னர் உள்நாட்டிற்குள்தான் நெருக்கடிகளிருந்தன. இனமுரண்களாகவும் வன்முறைகளாகவும். இப்பொழுது அந்த நெருக்கடி வெளிச் சூழலினாலும் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் என இந்த நெருக்கடிப் பரப்பும், அழுத்தச் சூழலும் அதிகமாகியுள்ளது. நாடு இதிலிருந்து எப்படி மீள்வது என்று ஆளாளுக்கு வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களைச் சொல்லலாம். அல்லது அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ற மாதிரி ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக் கொண்டு போக முற்படலாம்.

ஆனால், அடிப்படையான நெருக்கடிநிலையில் மாற்றம் ஏற்படாது. பதிலாக நாடு மேலும் மேலும் கடன் சுமையினாலும் அமைதியற்ற நிலையினாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டே போகும். இது நாட்டை ஒட்டு மொத்தமாகவே பலவீனப்படுத்தி விடும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் அடிப்படையான மாற்றத்தைப் பற்றி தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கவலையளிப்பது என்னவென்றால், இதைப் புரிந்து கொள்ள மறுத்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்களும் கட்சிகளும். இதை எப்படியும் மறுதலித்தே ஆக வேண்டும் என்று செயற்படுகின்றன அரசியற் கட்சிகள். இவ்வாறான அடிப்படை மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்று கருதுகிறார்கள் அரசியல்வாதிகளும் அரசியல் ஆய்வாளர்கள் என்று கருதப்படுவோரும்.

ஏன் இப்படி இவர்கள் செயற்படுகிறார்கள் என்றால், இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இனரீதியாகவே சிந்திக்கும் முறையில் பழகிய பழக்கத்தை விட்டு, அந்த மனநிலையை விட்டு நகரமுடியாத உளவியல் சிக்கல். இதன் விளைவாக ஏற்படுகின்ற பரஸ்பர நம்பிக்கையீனம். எப்போதும் மற்றவர்களைக் குறித்த சந்தேகமும் அச்சமும். இதைக் கடந்து செயற்பட்டு நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கூடிய தலைவர்கள் இல்லை என்ற நிலை. அதற்குரிய கட்சிகள் வலுவானதாக இல்லை என்பது.

இரண்டாவது, மக்களைச் சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் முரண் நிலையில் – பிளவுண்ட நிலையில் வைத்திருப்பதன் மூலம் இலகுவாகவே தமது லாபங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது. அது ஊடக வணிகமாக இருந்தாலும் சரி, அரசியல் வணிகமாக இருந்தாலும் சரி, அறிவுசார் நடத்தைகளில் எட்டப்படும் வணிகமாக இருந்தாலும் சரி. இதனால்தான் சிங்கள ஊடகங்கள் சிங்கள நியாயத்தையும் தமிழ் ஊடகங்கள் தமிழ் நியாயத்தையும் முஸ்லிம் தரப்பு முஸ்லிம் நியாயத்தையும் முன்னிறுத்திச் செயற்படுகின்றன. அரசியல் தரப்புகளும் அப்படித்தான். அந்தந்தச் சமூகத்தின் அடையாளத்துக்குள் மட்டுப்பட்டு, அதை முதலீடாக்கி அரசியல் நடத்துகின்றன. இதனால்தான் எந்தவொரு தலைவரும் குறித்த சமூகத்தைக் கடந்து தேசிய அளவில், பிற சமூகத்தினரும் மதிக்கத் தக்கதாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இன்னும் உருவாகவில்லை. இது ஏறக்குறைய அந்தந்தச் சாதிகளை அடையாளப்படுத்துவதைப்போலச் சிறுமையானது. இதற்கான நியாயங்களைச் சிலர் முன்வைத்து வாதிடலாம். அவற்றிற் சில நியாயங்களை மறுப்பதற்கில்லை. ஆனால், பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் இப்படி ஆளாளுக்குத் தனித்தனியாக பிளவுண்டு நின்றால், எப்படித் தீர்வை எட்ட முடியும்? எப்படி முறைப்படியான திட்டங்களை உருவாக்க முடியும்?

எனவேதான் இவ்வளவு வரலாற்றுப் படிப்பினைகளுக்குப் பிறகும், மிகப் பெரிய இழப்புகள், அழிவுகளைச் சந்தித்த பிறகும் எதையும் கற்றுக் கொள்ளாத சூழலைக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதை கடந்தே தீர வேண்டும். எவ்வளவு கடிமான நிலையிருந்தாலும் கடந்துதான் ஆக வேண்டும். அப்படிக் கடப்பதற்கான மனத்திடமில்லை என்றால், நமக்கு வேறு வழியே இல்லை. பிறரிடம் மண்டியிட வேண்டியதுதான். புதிய பயணத்தை நோக்கிய சிரத்தை இல்லையென்றால் ஒரு போதுமே எந்தச் சமூகத்தினருக்கும் பாதுகாப்பில்லை. சுருக்கமாகச் சொன்னால், நமக்குள் அதிகாரங்களைப் பகிரவும் நேசம் கொள்ளவும் தயாரில்லை என்றால், பிற சக்திகளின் (வெளியாரின்) அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கவே வேண்டியிருக்கும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இதற்கு ஆளையாள் குற்றம் சாட்டுவதில் பயனேதும் விளையாது.

ஏனென்றால், வெளிச் சக்திகளுக்கு இங்கே உள்ள எவரும் வேறு வேறு என்ற எண்ணமில்லை. அவர்களுடைய நலனுக்கு நாமெல்லாம் ஒன்றே. எம் எல்லோரையும் ஒன்றாக வைத்தே அவர்கள் லாபமடைய முற்படுகிறார்கள். அது அவர்களுடைய சந்தையாக இருந்தாலென்ன, பாதுகாப்பு நடவடிக்கைகளாக இருந்தால் என்ன? ஒட்டுமொத்த இலங்கையே அவர்களுடைய இலக்கு.

இதைப் புரிந்து கொண்டு செயற்படக் கூடிய தீர்க்கதரிசனமுடைய அரசியல் தரப்போ, தலைமையோ இல்லை. முக்கியமாக அரசியலை அறிவுபூர்வமாக விளங்கிக் கொண்டு செயற்படும் தலைமைகள். உணர்ச்சி அரசியலை முன்னெடுத்துப் பழகிய பாரம்பரியத்தைக் கொண்டோர் ஒரு போதுமே அதை விட்டு வெளியே வர மாட்டார்கள். அவர்களுக்குப் புதிய பார்வை கண்களைக் கூசச் செய்யும்.

இதற்கு கடந்த வாரங்களில் வரவு செலவுத்திட்ட விவாதங்களின்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரைகள் சொல்கின்ற சேதியும் அதையொட்டி வெளிப்பரப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடல்களும் உதாரணம். திரும்பத்திரும்ப உணர்ச்சி அரசியலையே ஒவ்வொரு தரப்பும் முன்னெடுக்கின்றன. பதிலாக மக்களுக்கான, நாட்டுக்கான தேசியப் பொருளாதாரக் கொள்கையை எவரும் சரியாக வகுப்பதாகத் தெரியவில்லை. யுத்தத்துக்குப் பிறகு சமூகங்களுக்கிடையில் நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பவே இல்லை. அதைக் கட்டியெழுப்பும்போதே தேசியப் பொருளாதாரக் கொள்கையைச் சரியாகத் திட்டமிடவும் கட்டியெழுப்பவும் முடியும். சமூகப் பிளவுகளைப் பராமரித்துக்கொண்டு ஒருபோதுமே அபிவிருத்தியை எட்ட முடியாது. அபிவிருத்திக்கு எதிரானது பிளவு நிலை என்பது ஆரம்பப் பாடமாகும்.

ஆகவேதான் அபிவிருத்தி பற்றிய வண்ணப்பேச்சுகள் எல்லாம் விரைவிலேயே நிறம் மாறிப்போகின்றன. இந்தச் சூழலில்தான் மாற்று அரசியலாளர்களின் மாற்றத்துக்கான பணி தேவைப்படுகிறது. அது மக்கள் அரசியலிலேயே நிகழும். அந்த மக்கள் அரசியல் என்பது கட்சிகள், தலைவர்களின் வெற்றி என்பதாக இல்லாமல், மக்களின் வெற்றி, நாட்டின் வெற்றி என்பதாக இருக்கும். ஆனால், இதற்கு வெளிச் சக்திகளே பெரிதும் தடையாக இருக்கும். காரணம், அவற்றுக்கு இலங்கை எப்போதும் கொந்தளிக்கும் தன்மையோடிருக்க வேண்டும். அமைதியற்ற நிலையில், அபிருத்தி சாத்தியமில்லை என்றால், எப்போதும் தங்களின் தயவில் வாழ வேண்டிய – இயங்க வேண்டிய நிலை ஏற்படும். அதைத் தம க்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இந்தச் சக்திகளின் நோக்கம்.

ஆகவே, இதையெல்லாம் முறியடித்து, மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியது மக்கள் அரசியலாளர்களின் பணியாகும். அதை அவர்கள் செய்ய வேண்டும். வரலாறு இதையே அவர்களிடம் கோரி நிற்கிறது. இதைக்குறித்து புரிதல்களோடிருப்போர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்கான காலம் இதுவாகும்.

அவர்கள் இந்தக் கனிந்த காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அது அவர்களுடைய அறிவுக்கும் அவர்கள் நேசிக்கும் இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் இழைக்கின்ற அநீதியாகும். எப்படி மக்கள் விரோதச் சக்திகள், மக்களை வைத்து வணிக அரசியலைச் செய்வது அநீதியோ அதற்கு நிகரானது அதை முறியடித்து மாற்று அரசியலைச் செய்யாதிருப்பதும் தவறாகும்.

தமிழ்த் தரப்பில் மாற்று அரசியலுக்குரிய சக்திகள் உண்டு. வரலாற்று அனுபவம், மக்கள் அரசியல் அனுபவம், செயற்பாட்டு அனுபவம், சமூக நேசிப்பு, உலக அரசியல் ஞானம் ஆகியவற்றோடு இவர்கள் உள்ளனர். ஆனால், அவை சிதறுண்ட நிலையிலேயே உள்ளன. இந்தச் சிதறுண்ட நிலையை முதலில் இவை மாற்றிக் கொள்ள வேண்டும். தமக்கிடையில் ஒரு பொதுவான இலக்கின் அடிப்படையில், நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக எதிர்கால அரசியலுக்கான வழிமுறைகள் குறித்த வரைபடங்களைக் குறித்து முதலில் உரையாடலை நடத்த வேண்டும். அதன் வழியாக அடுத்த கட்டத்துக்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அந்தத் திட்டமிடலின் வழியாக செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும். அந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அந்தக் கட்டமைப்புகளை இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அந்தக் கட்டமைப்புகளை இயக்கி, அவற்றின் சாத்தியங்களை மேம்படுத்த வேண்டும். இப்படி ஒரு தொடர் செயலாக்க முறை இது.

அதாவது, மாற்றத்துக்கான அரசியல் என்பது மிகக் கடினமான வழியில் மேற்கொள்ளப்படவேண்டியது என்பதால், அது முற்று முழுதாகவே செயற்பாட்டு அரசியலாகவும் அறிவரசியலாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் இந்தத் தரப்பை மெல்ல மெல்லப் புரிந்து கொள்ள முற்படுவர். இது பரந்து பட்ட வெகுஜன அரசியலாகப் பரிணமிக்கவும் செல்வாக்கைப் பெறவும் நீண்ட காலம் செல்லும். தேர்தல் அரசியலைப்போல ஒன்றிரண்டு மாதப் பரப்புரைத் தீவிரத்தினால் இதை எட்டிவிட முடியாது. ஆகவே அதற்கான பொறுமையும் சவால்களை ஏற்றுக் கொள்ளும் திராணியும் உறுதிப்பாடும் அவசியம். மக்கள் அரசியல் என்பது ஒரு அரசியல் தொண்டு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால் இதற்கு உச்சமான அர்ப்பணிப்புணர்வு தேவை. அர்ப்பணிப்பு வாழ்க்கையும் அவசியம். அது இந்தக் காலத்தில் எவ்வளவுக்குச் சாத்தியமானது? என்பது கேள்வியே. ஆனால், தேவை ஒன்று இருக்குமானால் அதை நிறைவேற்றுவதற்கான உழைப்புச் சாத்தியமும் சிந்தனைத் தேவையும் அவசியமல்லவா!

கருணாகரன்

Comments