நான் உன்னை அழைக்கவில்லை | தினகரன் வாரமஞ்சரி

நான் உன்னை அழைக்கவில்லை

உதய நிலவன் – சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தார். அவருக்கு வயது 60 இருக்கலாம். மெதுவாக யன்னலருகே சென்றார். அதை திறந்தார். அதிகாலை ஆறு மணி – யன்னலுக்கு வெளியே வானம் சிவந்துக் கிடந்தது. குளிர் காற்றுடன் பனி வந்து முகத்தை வருடியது. மலைமுகடுகளில் மேகம் பொதிப் பொதியாக தொங்கிக்கொண்டிருந்தது.

அவர்- உணர்ச்சியற்ற பதுமையாய் என்றும் பெயர்ச்சியற்ற மலைமுகடுகளைப் போல அப்படியே நின்றிருந்தார். அவர் எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தன.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆறுமாதங்களிலேயே நிலவனுக்கு தனியார் வங்கியில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அங்கே தான் அவன் கண்மணியை சந்தித்தான். அவள் ஏற்கனவே கொழும்பில் தலைமைக் காரியாலயத்தில் பணி புரிந்தாள். அவளின் திறமைக்கு உடனடியாகவே உதவி முகாமையாளராக பண்டாரவளையில் கிளைக் காரியாலயத்தில் வேலைமாற்றம் கிடைத்தது.

அதில் அவளுக்கு அளவற்ற சந்தோஷம் ஏனென்றால் அவள் பண்டாரவளையில் ஒரு தோட்டத்தில் பிறந்தவள். அவளுக்கு அப்பா இல்லை. அம்மா தேவகி தோட்டத்தில் வேலை. அவளுக்கு ஒரே தங்கை பெயர் செல்வி. கண்மணி பிறந்து இரண்டாவது வயதில் பிறந்தவள் செல்வி. எனவே அவர்கள் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பார்கள். செல்வி ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. அவள் நுவரெலியாவில் ஒரு பிரபல பாடசாலையில் பணிபுரிந்து வந்தாள்.

உதயநிலவன் – கண்மணியுடன் பணிபுரியும் போது அவனுக்கு தொழில் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் தோன்றும் போது அதை அவளிடம் கேட்டுத் தீர்த்துக்கொள்வான். அவர்களின் நட்பு வெறும் நட்பாக மட்டுமே இருந்தது. அதுவும் சில காலம் தான்.

இந்த நிலையில்தான் ஒருநாள் வெள்ளிக்கிழமை கண்மணி ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தாள். உதயநிலவன் – காலை பதினொரு மணிபோல வங்கியைவிட்டு வெளியே வந்தான். அவன் பிறந்து வளர்ந்ததெல்லாம் நுவரெலியாவுக்கும் கந்தபளைக்கும் இடையிலிருந்த ஒரு பின்தங்கிய தோட்டத்தில் தான். அவனுடன் கூடப்பிறந்தவன்தான் அவனுடைய தம்பி கலையரசன். கலையரசன் நுவரெலியா விவசாயத் திணைக்களத்தில் வெளிக்கள உத்தியோகஸ்தனாக இருந்தான். அவன் அநேகமாக சிறு தோட்ட உரிமையாளர்கள் மறக்கறி உற்பத்தியாளர்களுடனே அதிகமாக இருப்பான். அவனுக்காக ஒரு வாகனத்துடன் உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். கலைரசனும் உதயநிலவனும் பாசமானவர்கள். அப்பாவின் இறப்புக்குப்பின் உதயநிலவன் தன் தம்பிமேல் அதிகமாக அன்பு செலுத்தினான்.

அவனுடைய சகல இன்ப துன்பங்களிலும் உதயநிலவன் பிரதான பங்காளியாக இருந்தான். அதிலும் அவர்களின் தாயாரின் திடீர் மறைவானது அவர்களை மேலும் பலப்படுத்தியது.

உதயநிலவன் பண்டாரவளையில் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு இருந்தான். வெள்ளிக்கிழமை நுவரெலியா போனால் விதவிதமான சமையல் ஆட்டம், பாட்டம், திரைப்படமென்று ஒரே கொண்டாட்டம் தான், பண்டாரவளையிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம்பியுடன் பேசுவான் உதயநிலவன். அதே போலத்தான் கலையரசனும். உதயநிலவன் – வங்கியை விட்டு மெதுவாக வெளியே வந்து நடந்தவாறு கைபேசியை உயிர்ப்பித்தான் “ஹலோ... கலை... என்ன செய்யிறே... உனக்கு அவசரமாக பேசினேன். என்னன்னா இந்த வெள்ளிக்கிழமை எனக்கு அங்கே வரமுடியாது.

முக்கியமான செமினாரொன்று இருக்கு. உனக்குத் தான் சனி, ஞாயிறு லீவே அதுனால நீ புறப்பட்டு இங்கே வந்திடு, திங்கட்கிழமை காலையில போகலாம்... என்ன சரிதானே...? ஒண்ணும் பிரச்சினையில்லையே? “ஓகே அண்ணா... என்னாலயும் இங்கே தனியா இருக்கமுடியாது... நான் வெள்ளிக்கிழமையே வந்திடுறேன்... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு அதை நேர்ல சொல்லுறேன்...”

கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட உதயநிலவன் மனதில் பட்டாம்பூச்சிகள் படப்படத்தன. அவன் – பண்டாரவளை வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த ஆறுமாதத்தில் உதயநிலவனும் கண்மணியும் ஒன்றாக உணவருந்துவது, ஒன்றாக ஷொப்பிங்செய்வது என சகஜமாக பழகத் தொடங்கினார்கள். கண்மணி அவனை விட நான்கு வயது குறைந்தவள். படிப்படிலும் பண்பிலும் உயர்ந்தவள். மிக மிக கடுமையான உழைப்பாளி. அழகிலும் அப்படித்தான். இரக்கக்குணம் மிகுந்தவள். பல்கலைக்கழகத்தில் கல்விக்கற்கும் மிக வறுமையான இரண்டு பெண்களுக்கு கல்விக்கான உதவிகளை செய்கிறாள் மேலும் செய்வாள்.

அவளை பார்த்த முதல் நாளே அவன் இதயத்தில் மின்னல் தோன்றியது. ஆனால் அது காதலா என்று தெரியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அவன் மனதில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. காதலின் தாக்கம் கண்களில் தோன்றியது. ஆனால் அதை எப்படி அவளிடம் சொல்வது? அவளும் அவளை நேசிக்கிறாளா அல்லது வெறும் நட்பு மட்டும் தானா? அவன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை அவன் சொல்லும் ஒரு வார்த்தையால் முறிந்து போய் விடுமா? அவளுடைய நட்பை அவன் எந்த நிலையிலும் இழக்க விரும்ப மாட்டான். அதைவிட அவன் உயிரை விட்டு விடுவான். ஆகவே அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இந்த விஷயத்தைப் பற்றி தன் தம்பியுடன் பேசுவது. அதற்கு முன் எப்படியாவது தம்பியிடம் கண்மணியை அறிமுகப்படுத்தி விடுவது அதற்கான ஒரு திட்டம் தான் தம்பியை பண்டாரவளைக்கு அழைத்தது. அது மட்டுமல்ல தம்பியின் விருப்பம் மற்றும் திருப்தி மிக முக்கியமானதாகும்.

கலையரசன் மேல் உதயநிலவன் உயிரையே வைத்திருந்தான். அவனுக்கு ஒன்றென்றால் அவனால் தாங்கவே முடியாது. ஆனாலும் கண்மணியை அவனுக்கு நிச்சயமாக பிடிக்குமென்று உறுதியாக நம்பினான். ஒருமுறை உதயநிலவன் சாலை விபத்தொன்றில் சிக்கி அதிக இரத்தம் வெளியேறியமையினால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். உடனடியாக அவனுக்கு இரத்தம் தேவைப்பட்டது. அவனுடைய ரத்தம் குறிப்பிட்ட வகையினைச் சேர்ந்தது. எல்லோரிடமும் அது இருக்காது வைத்தியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போதுதான் கலையரசன் பைத்தியக்காரனைப் போல அங்கே வந்தான். தலை கலைந்து கண்ணீர் பெருக கைகூப்பியவண்ணம் வைத்தியரைப் பார்த்தான்.

“டொக்டர் இவர் என் அண்ணன்தான் விஷயம் கேள்விப்பட்டு நிலை தடுமாறி தலை தெறிக்க ஓடிவந்தேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை அண்ணாவை மட்டும் எப்படியாவது காப்பாத்திடுங்க...?”
கலையரசன் சொன்ன அந்த வார்த்தைகள் யாவும் மயக்கத்திலிருந்த உதயநிலவனின் காதுகளில் விழுந்த போது அவன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது...

உதயநிலவன் – மறுபடியும் வங்கிக்குசென்ற போது கண்மணி அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

இவ தான் என்னோட ஒரே தங்கச்சி பேரு செல்வி நுவரெலியா பாடசாலையில ஆசிரியையா இருக்கச் சரியான குறும்புக்காரி... மூணுநாள் என்னோடத்தானிருப்பா...” செல்வி குறும்புடன் அவனைப் பார்த்தாள்.

“ம்.... பார்க்க அம்சமா மாப்பிள்ளை மாதிரிதான் இருக்கீங்க... பேர் என்ன கால் கட்டுப்போட்டு கல்யாண கடலில் விழுந்திட்டிங்களா?
“என் பேரு உதயநிலவன்... ரெண்டாவது கேள்வி எதற்காம்?

“இன்னமும் கால் கட்டு போடாட்டி கல்யாணம் பண்ணிக்கத்தான்...”

அவள் அது வங்கியென்றும் பாராமல் கலகலவெனச் சிரித்தாள்....

அடுத்த நாள் – மாலை பூங்காவில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்த கண்மணி மற்றும் செல்வியை நோக்கி நடந்துவந்தான் உதயநிலவன். அவனுடன் அவன் தம்பி கலையரசனும் வந்து கொண்டிருந்தான். கலையரசனை கண்டு கண்மணி புருவத்தை உயர்த்தினாள். அவனை எங்கேயோ பார்த்ததைப் போலிருந்தது.

அடுத்துவந்த மூன்று நாட்களும் மிகமுக்கியமானவையாகும். அவர்கள் நால்வரும் ஒன்றாக நிறைய இடங்களுக்கு சென்றார்கள். கலையரசனுக்கு கண்மணியை நிரம்பப் பிடித்து விட்டதைக் கண்டு உதயநிலவன் சந்தோஷப்பட்டான். அவன் நினைத்தது நினைத்த படி நடக்கப்போவதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அதே சமயம் உதயநிலவனை செல்வி சுற்றிச் சுற்றி வந்தாள். அவனுக்கு தேவையானதை ஓடி ஓடி செய்ததுடன் அவனைக் கேலி, கிண்டல் செய்து கலாய்த்தாள். விடுமுறை முடிந்து அவரவர் இடங்களுக்கு சென்றார்கள்.

உதயநிலவனுக்கு நாள் தவறாமல் செல்வி கைபேசியில் பேசினாள். அதைப் போல கலையரசன் கண்மணியுடன் பேசினான். இதை உதயநிலவனும், கண்மணியும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள். நாட்கள் ஓடின. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை கண்மணிக்கு சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தமையினால் டவுனுக்கு வந்திருந்தாள். அந்தசமயத்தில் அவள் உதயநிலவனைக் கண்டாள்.
“அட நீங்களா... எப்போ பதுளையில இருந்து வந்தீங்க...? “நான் நேற்று இரவே வந்துட்டேன். உங்களை இங்கே பார்த்ததும் நல்லதா போயிடுச்சி... உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... வாங்களேன் அந்த ஹோட்டல்ல தேநீர் அருந்திக்கிட்டே பேசலாம்.
அவர்கள் அந்த ஹோட்டலை அடைந்தார்கள்.

இன்று எப்படியாவது தன் காதலை அவளிடம். சொல்லி விடுவதென்று அவன் முடிவு செய்துவிட்டான். இனியும் தாமதிக்காமல் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்திவிட வேண்டும். இது அருமையான சந்தர்ப்பம்...”

உதயநிலவன் – தேநீரை சுவைத்தவாறு அவளை நிமிர்ந்துப் பார்த்தான். மனதில் தைரியத்தை வரவழைத்தவாறு மெதுவாக வாய் திறந்தான்.
“கண்மணி உங்கக் கிட்ட நான் முக்கியமான ஒரு விஷயம் பேசணும். ரொம்ப நாளா மனசுல பூட்டி வச்ச அந்த விஷயத்தை சொல்ல இப்பத்தான் எனக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு...”

“நானும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...”

“அட அப்படியா... அப்படின்னா நீங்களே சொல்லுங்க...”

“வ.... வந்து அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியலை... நானும் பெண்தானே...?”

“நீங்க என் கிட்ட தாராளமா சொல்லலாம்...”

“இவ்வளவு காலமும் இறுகிப் போயிருந்த என் மனசு உங்களோட நட்புக்கு அப்புறம் இளகிடுச்சி. வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்திருச்சி. அதுக்காக முதல்ல உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்...”

உதயநிலவன் மனம் குதூகலத்தால் துள்ளி குதித்தது. மகிழ்ச்சியினால் மனம் குளிர்ந்து போனது.

ஆசைப்பட்டவள் எந்தவிதமான பிரச்சினையுமில்லாமல் மிக இலகுவாக கிடைப்பதென்பது எல்லோருக்கும் கிடைக்குக்கூடிய பாக்கியமா? அவள் அவனுடைய உயிர்ப் பொக்கிஷம்...

“நான் யாரை நேசிக்கிறேனோ அவரை என் இதய கோயிலில் வைத்து பூசிக்கிறேன். நேசிக்கிறேன்... சுவாசிக்கிறேன்...”

“சரி கண்மணி புதிர் போடுறதை விட்டுட்டு உங்களோட கண்ணாளனை கண்ணுல காட்டுங்களேன்... யார் அந்த அதிர்ஷ்டசாலி...?”
“வ. வந்து... வந்து...”

அவள் அவனை நேருக்கு நேர் பார்த்தவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்..”

“என்ன கண்மணி இது எதையும் சொல்லாம இப்படி வெட்கப்பட்டா என்னவாம்? சொல்லுங்க யார் அது...?

“அது... அது... வேற யாருமில்லை...உ... உங்க தம்பிதான்...”

“எ... என்ன சொல்லுறீங்க... என் தம்பி கலையரசனா... உண்மையாகவா சொல்லுறீங்க....?

“ஆமா.... அவரோட கலகலப்பான பேச்சு... கள்ளங் கடபமில்லாத குணம்.... முக்கியமா அவரு உங்கமேல வச்சிருக்க ஆழமான தூய்மையான அன்பு எல்லாமே என்னை அவருக்கு அடிமையாக்கிடுச்சி.... அவரும் மனசார என்னை நேசிக்கிறாரு... உங்கக்கிட்ட சொல்ல கூச்சப்படுறாரு....?
உதயநிலவன் தலையில் இடி இறங்கியதை போல இருந்தது. அவன் உயிர் உடலை விட்டு பிரிந்ததைப் போல உணர்ந்தான். இதயம் வேகமாக துடித்தது. மயக்கம் வருவதை போலிருந்தது. கண்கள் கலங்கி கண்ணீர் கொட்ட போவதைப் போலிருக்கவே தலைகுனிந்தவன் மிக கஷ்டப்பட்டு தன்னை சுதாகரித்துக் கொண்டான்.

“என் தம்பி ரொம்ப குடுத்து வச்சவன். முதல்ல என் தம்பிக்கு நல்ல ஒரு பெண்ணா பார்த்து மணம் முடிச்சிட்டுத்தான் நான் மணம் முடிக்க நினைச்சேன். உங்களை விட ஒரு பெண் நிச்சயமா அவனுக்கு கிடைக்க மாட்டாங்க ஜோடிப் பொருத்தம் கூட நல்லாவே இருக்கு...”
“எல்லாத்துக்குமே நீங்கத்தான் காரணம். ஆமா நீங்க என்னமோ முக்கிய விஷயம் பேசணும்னீங்களே...?

“அ... அது வந்து...கொழும்புல வேறொரு தனியார் வங்கியில பணிபுறிய கூப்பிடுறாங்க... இதை விட அதிக சம்பளம்... எல்லாத்துக்கும் மேலா அந்த வங்கியோட கிளைகள் நிறைய வெளிநாடுகள்ல இருக்கு... மூணு மாசம் மட்டும் கொழும்பில் வேலை செஞ்சிட்டு அப்புறம் வெளிநாடு போயிட வேண்டியதுதான்...”

“உண்மையாகவா சொல்லுறீங்க... அப்ப உங்களோட கல்யாணம்...?”

“அதெல்லாம் பார்ப்போம். அநேகமா இரண்டொரு நாள்ல நான் கொழும்புக்கு போகலாமுன்னு நினைக்கிறேன். எப்படியோ என்னோட எட்வான்ஸ் வாழ்த்துகள்... நீங்க நல்லா இருக்கணும்..”

உதயநிலவன் – சட்டென நாற்காலியை விட்டு எழுந்தவன், மெதுவாக நிதானமாக நடந்து வெளியேவந்தான். முச்சக்கரவண்டியொன்றை நிறுத்தி அதில் ஏறி அமர்ந்தான். கை குட்டையினால் முகத்தை அழுத்தமாக துடைத்தவன் வாயை மூடியவாறு சத்தமில்லாமல் அழத் தொடங்கினான். கொழும்பு வேலை விஷயம் உண்மைதான். கண்மணி கண் அசைத்த அந்த நொடியே அந்த வேலையை கை விட எண்ணியிருந்தான். எல்லாமே தலைகீழாக மாறி விட்டது.

அவன் – வீட்டையடைந்தான். உள்ளே கலையரசன் இருந்தான்.

“அண்ணா எங்கே போனீங்க.... ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு...? மழையில நனைஞ்சீங்களா?

“தம்பீ..... இன்னைக்கிதான் அந்த விஷயம் கேள்விப்பட்டேன்... உண்மையா... உனக்கு பூரண சம்மதமா?

“ஆமாண்ணே... உங்க கிட்ட சொல்லிடுச்சா? நான் அப்புறம் ஆறுதலா சொல்லாம்னு நெனைச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நாம ரெண்டு பேரோட அன்பு, பாசம் பிரியாம ஒற்றுமையா ஒண்ணா இருக்கணும்னா அதுக்கு அவங்கத்தான் பொருத்தமா இருப்பாங்க. ஆனா உங்களோட திருமணத்துக்குப்புறம் தான் நான் மணம் முடிப்பேன்...”

“தம்பி... நீ சொன்னது சரிதான். அவங்க உனக்கு ஏத்தவங்கத்தான். எனக்கு பூரண சம்மதம் தான். ஆனா நீ எனக்கு ஒரு உறுதிமொழி தரணும்...”
“சொல்லுங்கண்ணா உங்களுக்காக நான் எதுவும் செய்வேன்...”

“நான் உன் கிட்ட ஏற்கனவே சொன்னது ஞாபகம் இருக்கா.... எனக்கு வேறொரு பேங்கல இன்னமும் அதிகம் சம்பளம்ன்னுறதை விட என்னோட லட்சிய கனவான வெளிநாட்டுக்குப் போற சந்தர்ப்பமும் கிடைச்சிருக்கு. இதை நான் தவற விடமுடியாது. அதுனால நீ இன்னும் ஒரு வாரத்துல பதிவு திருமணமும் அப்புறம் ஆறுதலா மண்டபத்திலும் திருமண செய்யிறதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிடு. நான் நாளைக்கு காலையிலயே கொழும்பு போயிட்டு ஆக வேண்டிய வேலைகளை செஞ்சிட்டு பதிவுத்திருமணத்திற்கு முதல் நாள் வந்து சேர்ந்திடுறேன்..”

“என்னண்ணா திடீர்ன்னு இப்படி பேசுறீங்க... எங்களை விட்டுட்டு வெளிநாடு போறேன்னு வேற சொல்லுறீங்க...?

அப்புறம் வெகுநேரம் அண்ணன் தம்பி பேசினார்கள். கடைசியாக அண்ணனின் அன்புக்கட்டளைக்கு தம்பி பணிந்தான். உதயநிலவன் – அடுத்த நாள் அதிகாலையில் கொழும்புக்குப் புறப்பட்டான். சரியாக தன் தம்பியின் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் தன்னால் வரமுடியாமல் போய் விட்டதாகவும் அடுத்தநாள் விடியற்காலையில் கட்டாயம் வந்து விடுவதாகவும் வைபவத்தை எந்தப் பிரச்சினையுமில்லாமல் செய்துவிடுமாறும் சொல்ல கலையரசன் அழுது அடம்பிடிக்க ஒருவாறு அரைமனதுடன் அண்ணனின் கட்டளைக்கு அடிபணிந்தான்.

உதயநிலவன் – தன்னுடைய கைபேசியிலிருந்த ‘சிம்’ கார்டை தீயிலிட்டு கொளுத்தினான்.

கைபேசியிலிருந்த எல்லா எண்களையும் அழித்தான். தங்கியிருந்த அறையின் கதவை மூடி விட்டு கட்டிலில் அமர்ந்து ‘ஓ’ வென அழுதான் வெகுநேரம் அழுதான். அப்படியே உறங்கி விட்டான். அடுத்த இரண்டு மாதங்களில் ‘கனடா’வுக்கு பயணமானான். அங்கிருந்த கிளைகாரியாலயத்தில் பணி புரிய தொடங்கினான். வருடாந்த விடுமுறையை அங்கேயே கழித்தான். யாருடனும் எந்த தொடர்பும் இல்லை. வேலையில் அதிக கவனம் செலுத்தினான். அவன் மனம் ஆன்மிகத்தை நாடியது. அதில் அமைதி கிடைப்பதைப் போலிருந்தது. 

பாலா சங்குப்பிள்ளை

Comments