நத்தார் தாத்தாவுக்கு கடிதம் எழுதும் சிறுவர்கள் | தினகரன் வாரமஞ்சரி

நத்தார் தாத்தாவுக்கு கடிதம் எழுதும் சிறுவர்கள்

இயேசுபிரானின் ஜயந்தியை உலகம் மகிழ்ச்சியோடு கொண்டாடும் நாள் அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

இறைமகன் இயேசுவின் பிறப்பாகிய நத்தார் நெருங்கி வரும்வேளை சிறுவர்களின் மனம் கவர்ந்த ஒரு நபர் இருக்கின்றார். அவர் நாம் அனைவருமே அறிந்த நத்தார் தாத்தாவாகும்.  

சிவப்புநிற நீண்ட அங்கியும், கூரான தொப்பியுமாக காட்சிதரும் நத்தார் தாத்தாவுக்கு முகமெல்லாம் வெண்தாடி.

பரிசுப் பொருட்களடங்கிய உறையை தோளில் தொங்கவிட்டபடி துருவ மான்கள் இழுத்து வரும் வண்டியிலேறி வெள்ளி மனியோசையுடன் நத்தார் தாத்தா வருவதாக சின்னஞ்சிறுவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நத்தார் தாத்தா கோட்பாடு துருக்கியில் புனித நிக்கலஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். தங்களுக்குத் தேவையான பரிசுப்பொருட்கள் பற்றி உலகின் பல நாடுகளில் சிறுவர்கள் நத்தார் தாத்தாவுக்கு கடிதங்கள் எழுதுவது வழக்கம்.  

"கடந்த வருடம் தாங்கள் எனக்கு அன்பளிப்புச் செய்த பொம்மை இப்போது பெரிதாக வளர்ந்துவிட்டது.

தயவுசெய்து அது படுத்து உறங்குவதற்கு ஒரு தொட்டிலைக் கொண்டுவந்து தரவும்". நத்தார் தாத்தாவின் பெயருக்கு அஞ்சல்மூலம் வந்த ஆயிரக்கணக்கான கடிதங்களில் ஒன்று இவ்வாறு தெரிவித்தது.

உலகம் முழுதும் உள்ள அஞ்சலகங்கள் வாயிலாக நத்தார் தாத்தாவின் பெயருக்கு ஏராளமான கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.  

சிறுவர்கள் இக்கடிதங்கள் மூலமாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இவர்களின் கடிதங்களை 'ஐசிக்லே மாளிகை, சுவர்க்கத்தீவு, துருவமான் இல்லம், விளையாட்டுப் பொருள் தீவு முதலிய கற்பனை முகவரிகளுக்குச் சிறுவர்கள் எழுதுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் இவ்விடங்கள் வடதுருவம், கிரீன்லாந்து, எஸ்கிமோலாந்து ஆகிய நாடுகளில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.  

அஞ்சல் சேவையின் லண்டன் தலைமை அஞ்சலகத்திற்கு ஒவ்வொரு நத்தார் சமயமும் சுமார் பத்தாயிரம் வரையிலான மடல்கள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கடிதங்களை அஞ்சல் ஊழியர்கள் திறந்து வாசிக்கின்றனர். மிகவும் வறுமையில் வாழும் சிறுவர்கள் என அஞ்சலக ஊழியர்கள் கருதும் கடிதங்களை பல்வேறு நலன்புரி நிலையங்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் வழங்குகின்றனர். இச்சிறார்களின் எதிர்பார்ப்புகளை உதாசீனம் செய்யாது நத்தார் தாத்தாவைப் போன்று பதில் கடிதங்களை எழுதியும், பிள்ளைகள் எதிர்பார்த்த பொருட்கள் அவர்களுக்குக் கிடைப்பதற்கு அவ்வறக்கட்டணை நிறுவனங்களும், கொடை வள்ளல்களும் வழிவகுப்பதாக அறிய முடிகிறது.  

அமெரிக்காவில் சகல அஞ்சலகங்களிலும் நத்தார் தாத்தா பெயரில் வரும் கடிதங்களுக்காக பிறிதொரு கிளை திறக்கப்படுகின்றது. இக்கடிதங்களை வாசிப்பதற்காக விசேடமான அதிகாரியொருவரை அரசு நியமிக்கின்றது.

இக்கடிதங்களை வாசித்து ஏழ்மையானவர்களென கருதப்படும் சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் அன்பளிப்பு அனுப்பப்படுகிறது. இப் பரிசுப் பொருட்களுக்கான செலவுத்தொகை அஞ்சல் ஊழியர்கள் அனைவரிடமிருந்தும் சேகரிக்கப்படும் நிதியின் மூலம் நிரப்பப்படுகிறது.  

வசதியான குடும்பத்துப் பிள்ளைகளென கருதப்படும் சிறார்களின் கடிதங்கள் அவர்களின் பெற்றோருக்கு திருப்பியனுப்புகிறதாம். பெற்றோர் தமது பிள்ளைகளுக்குத் தெரியாமல் அவர்கள் ஆசைப்படும் பொருட்களை வாங்கி நத்தார் தினத்தில் கொண்டுவந்து அவர்களது படுக்கை அறையிலோ அல்லது நத்தார் மரத்தின் கீழோ வைத்து விடுவார்கள்.  

நத்தார் தாத்தாவுக்கு கடிதம் எழுதும் வறிய சிறார்களுக்கு உதவுவதற்காக பிரித்தானியாவில் ஒரு நிறுவனம் முப்பது வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்திற்கு டென்மார்க் நாட்டில் இயங்கிவரும் தேசிய சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் அனுசரணையும் கிடைத்து வருகின்றது.

இந்நிறுவனம் நத்தார் தாத்தாவின் பதில் கடிதத்துடன் ஹேன்ஸ் எண்டர்சனின் சிறுவர் கதைப் புத்தகமொன்றையும் அனுப்பி வைக்கின்றது. அத்தோடு, கிறிஸ்மஸ் பண்டிகை நிறைவுற்ற பின்னர், கிடைக்கப்பெற்ற கடிதங்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட நூற்றியிருபது சிறுவர்களுக்கு டென்மார்க் நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  

லெப்லாந்து (பின்லாந்தின் வடபகுதி) நாட்டில் கிருண நகரில் நத்தார் தாத்தாவுக்காக விசேடமான அஞ்சலகமொன்று திறக்கப்படுகின்றன. நத்தார் தாத்தாவுக்கு கடிதம் எழுதுவதற்காக நத்தார் தாத்தாவின் பெயரில் மூன்று தீவுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.  

இத்தீவுகளில் ஒன்று ஜாவா தீவிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்துள்ளது. மற்றொரு தீவு 1777ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி கெப்டன் குக் கண்டுபிடித்த பசுபிக் சமுத்திரத்தில் உள்ள தீவாகும். மேலும் ஒரு நத்தார் தாத்தா தீவு நோவா ஸ்கொட்யானி பிரிட்டிஷ் முனையில் அமைந்துள்ளது.  

நமது நாட்டிலும் வறிய சிறார்களுக்காக நத்தார் தாத்தாவின் அன்பளிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆங்காங்கே உருவாக வேண்டுமென்பது இவ்வருட நத்தார் சிந்தனையாக இருக்கட்டும்.

சி.கே. முருகேசு

Comments