கலவரத்துக்கு தூண்டப்பட்டனரா மஹர சிறைக் கைதிகள்? | தினகரன் வாரமஞ்சரி

கலவரத்துக்கு தூண்டப்பட்டனரா மஹர சிறைக் கைதிகள்?

கொவிட்-19 தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறைச்சாலை கொத்தணி பரவலில் ஏற்பட்ட அதிகரிப்பானது வன்முறையாக உருவெடுத்து உயிர்ப் பலிகளுக்குக் காரணமாகியுள்ளது. மஹர சிறைச்சாலை சம்பவமானது பெரும் பரபரப்பை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஒரு சில கைதிகளுக்கு கொவிட்19 தொற்று உறுதியான நிலையில், இது தற்பொழுது கொத்தணியாக மாறி சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து விட்டது.

சிறைச்சாலை கைதிகள் மத்தியில் கொவிட்19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில், சிறு சிறு குற்றங்களைப் புரிந்த 600 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுவித்தும், புதிதாக சிறைக்குச் செல்பவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் வழங்கியும் இத்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மஹர சிறைச்சாலையிலிருந்த கைதிகள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். அங்குள்ள கைதிகளுக்கிடையில் கலவரம் ஏற்பட்டதுடன், அக்கலவரத்துக்கு மத்தியில் கைதிகள் சிலர் தப்பிச் செல்வதற்கும் முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலைமை மோசமடைந்ததையடுத்து விசேட அதிரடிப்படையில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டதுடன், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய தீயும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அங்கு ஏற்பட்ட அமைதியின்மையில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளடங்கலா 80 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 183 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், உயிரிழந்த 11 பேரில் 8 பேருக்கும், காயமடைந்தவர்களில் 26 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொவிட்-19 தொற்று பரவுவதைத் தடுத்து, தம்மை அதிலிருந்து காப்பாற்றுமாறு கோரியே கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

எனினும், இந்தக் கலவரத்துக்குப் வேறு விதமான காரணங்கள் இருப்பதாக அரசியல் அரங்குகளில் கருத்துகள் கூறப்படுகின்றன. அரசு மீது களங்கம் ஏற்படுத்த அங்கு கலவரம்  திட்டமிடப்பட்டதாக அரசு தரப்பு முக்கியஸ்தர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்ததுடன், சிறைக் கைதிகளை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்றாகும் எனவும், இரத்தத்தைப் பார்க்கத் தூண்டும் வகையிலான போதை மாத்திரை கைதிகளுக்கு வழங்கப்பட்டே கலவரம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்ட ஒருவர் இவ்வாறான மருந்தைத் தயாரித்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விநியோகிக்க இதற்கு முன்னர் முயற்சிகள் மேற்கொண்டிருந்தமை இரகசியப் பொலிஸாரினால் தடுக்கப்பட்டதாகவும், அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியிருந்தார். அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறன என்பது அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.

குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பதவியில் இருந்த காலத்திலேயே வெலிக்கடை சிறைச்சாலையில் வன்முறை ஏற்பட்டது, தற்பொழுது அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் மஹர சிறைச்சாலையில் வன்முறை ஏற்பட்டுள்ளது எனச் சித்தரிப்பதற்காக எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது அரசாங்க தரப்பின் குற்றச்சாட்டாகும்.
இவ்வாறான நிலையில் மஹர சிறைச்சாலை குறித்து விசாரிப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒருபுறம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதுடன், நீதி அமைச்சர் அலி சப்ரி ஐவர் அடங்கிய பிறிதொரு விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் கலவரம் இடம்பெற்ற சமயத்தில், சிறைச்சாலையின் மருந்துக் களஞ்சியத்தில் மனநல கோளாறுக்குப் பயன்படுத்தும் மூன்று வகையான 21,000 மருந்துகள் காணப்பட்டதாகவும், போதைக்கு அடிமையான கைதிகள் போதைப் பொருளுக்குப் பதிலாக குறித்த மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். எதுவாக இருந்தாலும் மஹர சிறைச்சாலையின் பாதுகாப்பு தற்பொழுது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே கூறியிருந்தார். இந்த நிலையில் குறித்த இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு அவரிடமிருந்து பெறப்பட்டு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையிடம் வழங்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் எந்தவொரு துப்பாக்கிச் சூடும் மேற்கொள்ளப்படவில்லையென இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்த விவகாரம் தற்பொழுது அரசியல் அரங்குகளில் பேசுபொருளாகியுள்ளது.

புதிய அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது எனக் காண்பிப்பதற்காக எதிர்க் கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது. கொவிட்-19 தொற்றுவதற்கான ஆபத்து இருக்கும் நிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மஹர சிறைச்சாலைக்குள் செல்வதற்கு முயற்சியெடுத்திருந்தது. அரசாங்கத்தின் மீது குற்றம் காணுவதே அவர்களின் விஜயத்தின் நோக்கமாக இருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.

எதுவாக இருந்தாலும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்துக்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. பொதுமக்களின் கருத்து இதுவாகவே உள்ளது. எனினும், போதைப் பொருள் பயன்பாடு புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் சிறைச்சாலைகளில் அதிகரித்துக் காணப்பட்டது என்பதையும் நாம் முற்றாக மறுத்து விட முடியாது.

புதிய அரசாங்கம் போதைக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதுடன், சிறைச்சாலைகளில் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. போதைப்பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்ல உதவும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் சட்டத்தின் பிடியில் உள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்தை கண்டுபிடிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போதைப் பொருள் குற்றவாளியான மாக்கந்தர மதூஷ், பொலிஸாருக்கும் போதைக் கடத்தல் காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார். இது போன்று போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

போதைப் பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே கைதிகளை தூண்டி விட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் வெளிவருகின்ற குற்றச்சாட்டுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. போதைப் பொருள் என்பது உலகளாவிய ரீதியில் ஒரு மாபியாவாகவே கருதப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல்காரர்களின் உலகளாவிய வலைப்பின்னல் பல்வேறு நாடுகளில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக கடந்த காலங்களில் போதைப் பொருள்களை கடத்துவதற்கு இலங்கை ஒரு கேந்திர நிலையமாகப் பயன்படுத்தப்பட்டமை வெளிப்படையான தகவல் ஆகும். வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் போதைப் பொருள்கள் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டும் உள்ளன. தொடர்ச்சியாக போதை ஒழிப்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதால் சிறைச்சாலைகளுக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு விஷமிகள் முயற்சிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே, அரசாங்கம் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் அதேசமயம், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலும் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அது மாத்திரமன்றி, நாட்டில் உள்ள அனைவருக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கொவிட்-19 தொற்று கைதிகள் மத்தியில் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடிகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

பி.ஹர்ஷன்

Comments