தவிர்க்க முடியாததாகிய தற்சார்பு பொருளாதாரம்! | தினகரன் வாரமஞ்சரி

தவிர்க்க முடியாததாகிய தற்சார்பு பொருளாதாரம்!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் விதிவிலக்கானதொன்றன்று. இலங்கையைப் பொறுத்தவரை மூடிய பொருளாதார நிலையிலிருந்து திறந்த பொருளாதாரத்தில் தோய்ந்திருந்தாலும், தற்போது தற்சார்பு பொருளாதாரத்தினை நோக்கிச் செல்லக்கூடிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக்ெகாண்டிருக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்றுதான். ஆனால், தற்சார்பு பொருளாதாரம் என்பது இலங்கைக்குப் புதியதொன்றல்ல. இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தற்சார்பு பொருளாதாரக் கொள்கை கைக்ெகாள்ளப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்சார்பு பொருளாதாரம் என்பது கொள்கையின் அடிப்படையிலும் காலத்திற்குக் காலம் ஏற்புடையதாகவுமே இருந்து வந்திருக்கிறது.

என்றாலும் உலகப் பொருளாதாரத்துடன் இயைந்து செல்லும் போக்கினைக் கடைப்பிடித்துத் திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ், வேறு வேறு நாடுகளுடனும் இரு தரப்பு, பல்தரப்பு உடன்பாடுகளைச் செய்துகொண்டு நாட்டின் தேசிய பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டு வந்தது. அதனூடாகப் பல்வேறு நாடுகளின் முதலீடுகளை உள்வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

எனினும், தற்போதைய புதிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொவிட் 19 வைரஸுடன் நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், உலக நாடுகள் சுயசார்பு (தற்சார்பு) பொருளாதாரத்தின் மீது மீண்டும் கரிசனை கொள்ளத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள வர்த்தக, பொருளாதார உடன்பாடுகளை மீளாய்வு செய்யும் நிலைக்கு நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

இதற்கு ஏற்றவகையிலேயே இலங்கையும் தற்சார்பு பொருளாதாரத்தின் மீது கவனத்தைக் குவித்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தற்சார்பு பொருளாதாரத்தினை ​நோக்காகக் கொண்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். ஒரு நாடு தனக்குத் தேவையான அனைத்தையுமே தானே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் பொருளாதார கட்டமைப்பு அமைக்கப்படவேண்டும். இதனால் மற்றொரு நாட்டைச் சார்ந்து அந்த நாட்டின் பொருளாதாரம் இயங்காது. இஃது அனைத்து நாடுகளுமே விரும்பும் விசயமே தவிர இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எல்லா நாடுகளிலும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக்ெகாள்ளக்கூடியதொன்றாகவே இந்த தற்சார்பு பொருளாதாரக் கொள்கை விளங்குகிறது.

தற்சார்பு பொருளாதாரம் என்பது ஒவ்வொரு குடும்பமும் செலவிடக் கூடிய பணம் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கோ அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்குச் செல்லாமல் வேறு ஒரு குடும்பத்தில் சுழற்சி செய்யப்படுவதாகும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். மிக எளிமையாக  சொல்ல வேண்டுமென்றால்  காய்கறிகளை உழவர் சந்தையில் வாங்கினால் அது தற்சார்பு பொருளாதாரம். அதே காய்கறிகளை  பென்னம்பெரிய அங்காடிகளில் வாங்கினால் அது தற்சார்பு பொருளாதாரம் அல்ல. தற்சார்பு பொருளாதாரம் என்பது பெரும்பாலான தேவைகளைப் பிறரை சாராமல் தானே செய்வது. அதாவது தனக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தேவைகள், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது. அதனைத்தான் அரசாங்கம் தற்போது முன்னெடுத்திருக்கிறது.

இலங்கை தற்போது சார்ந்திருப்பது எதில்? எந்ததெந்த விடயத்திற்கெல்லாம் நாம் மற்ற நாடுகளைச் சார்ந்துள்ளோம்? இதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நாடு தற்சார்பு நிலையை எட்ட உந்து சக்தியாக அமையும். மிக எளிமையாகக் கூறினால் நாம் எந்தப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம் – அவற்றை முடிந்த அளவு எங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அந்த நோக்கத்தை இலக்காகக் கொண்டுதான் சில பொருள்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் மட்டுப்படுத்தியிருக்கிறது.

அது மாத்திரமல்லாமல், கல்வி கற்ற இளைஞர், யுவதிகளைத் தொழில் புரியும் நிலையிலிருந்து மாற்றி அவர்களைத் தொழில் வழங்குநர்களாகப் பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இஃது எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்ெகாடுக்கும்.

நாம் நாமாக மீண்டு எழும் அரசாங்கத்தின் முயற்சியே இது. அரசாங்கத்திடம் தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துக்ெகாண்டிராமல், நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், எவ்வாறு கல்வியாளர்கள் தங்களைத் தகவமைத்துக்ெகாள்வது என்பதைப் புரிய வைத்துவிடும். அந்தப் புரிதல்தான் புதிய புதிய தொழில்களை உருவாக்கும் தொழில் முனைவோரைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் கொண்டு வர வழிகோலும்.

எனவே, உலகப் பொருளாதாரக் கட்டமைப்புடன் இதுவரைகாலம் ஒத்திசைந்து சென்றுகொண்டிருந்த நாம், இனிவரும் காலத்திலும் உலக நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு நம்மையும் நாம் மாற்றிக்ெகாண்டேயாக வேண்டும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற வகைப்படுத்தல் இருந்தாலும், தற்சார்பு பொருளாதாரத்தைக்ெகாண்ட நாடுகளுக்கும் ஒரு பட்டியல் இருக்கத்தான் செய்கின்றது. எனவே, இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட காலகட்டத்திற்கு முன்னைய காலகட்டத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தைப் பற்றிக்ெகாள்வதற்கான முயற்சியில், நாடு எதிர்நோக்கிய சவாலான நிலை தற்காலத்தில் இல்லை; இருக்காது. ஆகவே, தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போயுள்ள தற்சார்பு பொருளாதாரக் கொள்கை நிச்சயம் நாட்டை சுபீட்சத்தை  நோக்கி அழைத்துச் செல்வது உறுதி!

Comments