அக்கரை வசந்தம் | தினகரன் வாரமஞ்சரி

அக்கரை வசந்தம்

பெரும் பதவி வகிக்கும் படித்தவர்களும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்று பணம் சம்பாதித்தவர்களும் தமது தகுதியையும் வசதியையும் வெளிப்படுத்துவதற்காக கொழும்பில் அல்லது நகரப்பகுதிகளில் வீடு வாங்குவதை நாகரிகமாகக் கொள்கிறார்கள். சிலர் தமது தேவைகளைப் பொறுத்து வாடகை வீடுகளை அல்லது சொந்தமாக வீடுகளை வாங்கிக் கொள்கிறார்கள். பரம்பரையில் வசதி படைத்த ஜெஸ்மின்னிஸா நகரப் பகுதியில் வீடு வாங்குவது பற்றி நீண்ட காலமாகக் கனவு கண்டிருந்தாள். இதைக் குறித்து மகள் நுஸ்ரத், தாய்க்கு அனுசரணையாக தகப்பன் அபுல் ஹஸனிடம் கதையைத் தொடங்கினாள். “ டாடி, நாங்க கொழும்பில வீடு வாங்குவதில்லையா?” எனக் கேட்டாள். மகளின் அன்புக் கோரிக்கையை செவிமடுத்த அபுல் ஹஸன், மகளின் எண்ணத்துக்கு ஏற்றாப்போல கதையைக் கூறி முடித்ததுதான் தாமதம், ஜெஸ்மின்னிஸா வழமைபோல தன் வாயைத் திறந்தாள் "ஊரிலுள்ள புதுப் பணக்காரங்கள் கொழும்பு கொழும்பு எண்டு அங்குள்ள மூலை முடுக்கெல்லாம் சின்னச் சின்ன விலைக்கு பழைய குடிசைகள வாங்கி கொழும்பிலே குடியிருக்கோம் எண்டு ஊரெல்லாம் பறை சாத்திக் கொண்டிருக்க, அவகட தரத்துக்கு போட்டியாக நாங்களும் கொழும்பில வீடு வாங்கினா நம்மளையும் அப்படித்தான் சொல்லுவாங்க.? "பொரிந்து தள்ளினாள். “என்னம்மா சொல்லுறிங்க? ” மகள் நுஸ்ரத் தாயிடம் கேட்க. ஜெஸ்மின்னிஸா வாயைத் திறந்து தன் நீண்ட கால ஆசையை வெளிப்படுத்தலானாள்.

“மகள். நாம ஊரில பரம்பரைப் பணக்காரங்க. மற்றவங்களைப் போல நாங்களும் கொழும்பில வூடு வாங்கினா அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். அதோட கொழும்புக்கு வேலை வெட்டிக்கு வாறவங்க சொந்தம் பந்தம் என்டு நம்ம வீட்டைத் தேடிவந்து தொல்லைப் படுத்துவாங்க. அதனால கண்டிப்பக்கத்தில் தரமான வீட்டைப் பார்த்து வாங்குவம். கம்பளை, மாவனல்ல அக்குறணைப் பக்கம் படித்தவர்களும் தீன்தாரிகளும் நிறைந்த ஊர்கள் இருக்கு. “தன் மனையாளின் முடிவை மாற்ற முடியாது என்பதை மனதார ஏற்றுக் கொண்ட அபுல்ஹஸன் வீடு வாங்குவதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளலானார். தம் படித்த மகள் நுஸ்ரத்துக்கு கம்பளை பிடித்தமான ஊராக இருந்தது.

தென்கிழக்குப் பிரதேசத்து வரலாற்றுப் பெருமைமிக்க கிராமத்தில் நிலவுடைமை போடிக் குடும்பத்தில் பிறந்த பாக்கியம் அவர்கள் மக்களால் மதிக்கப்பட்டு வரலாயினர். அந்த மதிப்பைத் தக்க வைத்துக் கொள்வதுபோல அபுல் ஹஸன் - ஜெஸ்மின்னிஸா திருமண சம்பந்தங்களும் போடிக்குடும்பங்களிலும் வன்னிமைக் குடும்பங்களிலும் கலந்து கொண்டதில் வியப்பாக இருக்கவில்லை.

பொதுவாக குடும்பத்தில் இளையவர்கள் துடிப்பும் பெருமிதமும் கொண்டவர்கள் என்பது மூத்தோர் வாக்கு. ஜெஸ்மின்னிஸா எப்போதும் சகோரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பாள். வாய்க்காரியாக இருந்தாலும் பள்ளிப் படிப்பிலே கைதேர்ந்தவளாக இருந்தாள். ஓ எல்., ஏ. எல் படிப்புக்களில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திலும் நுழைந்து கலைப் பட்டதாரியாகவும் தேறினாள். அப்படியான குடும்பத்தில் பிறந்து படிப்பிலும் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியையாக பரிணமித்தவள்தான் இளைய பிள்ளை ஜெஸ்மின்னிஸா. அவளின் திறமைகளைப் பாராட்டிய பெற்றாரும் சகோரதரர்களும் அவளது விருப்பத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் சம்மதித்தார்கள்.

பிறப்பிலேயே சொத்து, சுகம், காணி, பூமி போதாமல் படிப்பும் பதவியும் அவளது தரத்தைத் தூக்கிப்பிடித்தன. ஊரில் உடையார் குடும்பங்களிலும் வன்னிமைப் பரம்பரையிலும் மாப்பிள்ளைமாரின் கண்களிலும் உள்ளங்களிலும் அவளது தகைமை பளிச்சிடத் தொடங்கியது. தகப்பன் ஆதம்லெவ்வைப் போடியார் வெளிக் கணக்கில் வயற்காணிகளுக்குச் சொந்தக்காரன். மூத்த பிள்ளைகளுக்குத் திருமணங்களை முறையாக முடித்து வைத்தாலும் படித்த இளைய பிள்ளையை ஒரு தகுதியானவன் கையில் ஒப்படைத்து விட வேண்டும் என்பதில் ஆதம்லெவ்வைப் போடியார் கரிசனை கொள்ளத் தொடங்கினர். கிராமத்தில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இவர்களுடன் சம்பந்தம் கலக்க விழைந்தன. கிராமத்தில் அரச அலுவலகங்களில் பல உயர் பதவி வகித்தவர்களிடமிருந்து வந்த சம்பந்தங்கள் ஜெஸ்மின்னிஸாவின் உயர் தகைமைகளைப் பறைசாற்றின.

ஆதம்லெவ்வைப் போடியார் கிராமத்தில் உள்ள குடிகளையும், குடும்பங்களையும் தரங்களையும் நன்றாக விளங்கியவர் என்பதால், தன் மகளுக்குக் கணக்காளர் பதவி வகிக்கும் அபுல் ஹஸனைத் தெரிவுசெய்தார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். அல்லிலெவ்வை உடையாரின் மூத்த மகன். அவர்களின் மூதாதையர்கள் வன்னிமைப் பரம்பரையினர். ஊர்ப்பள்ளியிலும் தலைமை மரைக்காயராக இருந்தவர்கள். அவருடைய பேரன்தான் அபுல் ஹஸன். எல்லோருடனும் இனிமையாகப் பழுகுபவர். பள்ளிவாசல் தொடர்பு குறையாதவர். நமது குடும்பத்துக்கு ஏற்ற சம்பந்தம் என்று போடியார் குடும்பமும் ஏற்று முடிவெடுத்ததால் திருமணம் இனிதே நடைபெற்றது. பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ற மணமகனாக அபுல் ஹஸன் தாம்பத்ய வாழ்க்கையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கில் அபுல் ஹஸன் மனைவியுடன் பழகினார். காலம் செல்லச் செல்ல அவனது எளிமையான சுபாவத்தை பலவீனமாகக் கருதிய ஜெஸ்மின்னிஸா தன் பிடிவாதக் கொள்கைப்படி கணவனைத் தன்னிஷ்டப்படி நடத்துவதில் வெற்றி நடைபோடலானாள். அவளுடைய அடாவடித்தனமான நடத்தைகளை அபுல் ஹஸன் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. ஒரு வகையில் அவனது எளிமையான குணமே அவளது தான்தோன்றித்தனமான நடத்தைகளுக்குக் காரணமாக அமைந்தது.

கிராமம் நகரமாக மாறிக்கொண்டு வருவதும் ஏழை விவசாயிகள் மாடிவீடுகள் கட்டுவதும் ஏழைகளின் பிள்ளைகள் டாக்டர்களாகவும் பொறியியலாளராகவும் படித்து முன்னேறிச் செல்வதும் ஜெஸ்மின்னிஸாவின் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்தது. வசதி வாய்ப்புக்கள் கிடைத்தவர்களெல்லாம் கொழும்பில் தமக்கென வீடு வாங்குவதும் அதனால் பெருமை கொள்வதும் வழமையாகியது. இந்த நடைமுறையால் கவரப்பட்ட ஜெஸ்மின்னிஸாவும் இந்தச் சிந்தனையை உள்வாங்கியவராகத் தன் திட்டத்தைச் சாதிப்பதற்குத் தன் மகள் நுஸ்ரத் மூலமாக அபுல் ஹஸனின் உள்ளத்தில் தன் எண்ணத்தை விதைப்பதில் வெற்றி கண்டாள்.

கம்பளையில் அவர்களின் புதிய குடித்தனம் அமைந்தபோது ஆங்கில ஆசிரியையான நுஸ்ரத்தும் கம்பளை முஸ்லிம் கல்லூரியில் இடமாற்றம் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதேவேளை, பெற்றார் இருவரும் அரச பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் மகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கினார்கள்.

கம்பளைக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய நுஃமான், நுஸ்ரத்துடன் கொண்டிருந்த அன்புத் தொடர்பு காரணமாக தம் மகளின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. கம்பளையைச் சேர்ந்த நுஃமான் ஆங்கில ஆசிரியராக இருந்தமையால் தம்பதியர் இருவருக்கும் சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கான விசா கிடைத்தது. ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறையில் கல்வித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டனர். திருமணம் முடித்து மூன்று மாதங்களுக்குள் புதுத்தம்பதிகள் சிங்கப்பூர் சென்றனர். நுஸ்ரத்தின் சிங்கப்பூர் வாழ்க்கையில் வசந்தம் கொழித்தது ....

மகளின் சிங்கப்பூர் வாழ்க்கை அபுல் ஹஸன் ஜெஸ்மின்னிஸா பெற்றோர் வாழ்க்கையிலும் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியது. ஊரறிய அவர்கள் தம்பதிகளாக இருந்தாலும் அவர்களிடையே குடும்ப உறவுகள் நலிவடையத் தொடங்கின. இருவரும் தம் பதவிகளில் ஓய்வு பெற்றுவிட்டமையால், மகள் நுஸ்ரத்தின் இல்லற வாழ்க்கையில் அவர்கள் இருவரும் திருப்தி கண்டார்கள். ஜெஸ்மின்னிஸா, நுஸ்ரத்தின் தாய் என்ற வகையில் மகளின் தலைப்பிரசத்துக்காக சிங்கப்பூரில் மகளுடன் சில காலம் வாழ சந்தர்ப்பம் கிடைத்தது. அபுல் ஹஸனுக்கு மனைவியுடன் தொடர்புகள் படிப்படியாகக் குறைந்து மகளின் பிரசவத்துக்குப் பின் முற்றாகவே தொடர்புகள் அறுந்து போயின.
இருவடையே எந்தத் தொடர்புகளும் இல்லை. ஜெஸ்மின்னிஸா நாட்டுக்கு வருகை தந்து தன் சொந்த கிராமத்து வீட்டில் குடியிருக்கும் காலம், அபுல் ஹஸன் கம்பளை வீட்டில் குடியிருப்பார். அச்சந்தர்ப்பத்தில் சிங்கப்பூருக்குப் பயணமாகி மகளையும் பேரப்பிள்ளையையும் பார்த்துக் கொள்ளுவார். சில காலம் அங்கிருந்து திரும்பி வந்தபின் கம்பளையில் குடியமர்வார். கணவனும் மனைவியும் இலங்கையில் இரு வேறிடங்களில் குடித்தனம். இவர்களின் வாழ்க்கைப் பயணம் பற்றி ஊரார் உறவினர் எவரும் கருத்திற் கொள்வதில்லை. அபுல் ஹஸன் சில காலங்களில் மகளின் குடும்பத்தைத் தரிசிக்க சிங்கப்பூர் பயணமாகுவார். அங்கு சில காலம் பேரப்பிள்ளையைக் கண்டு உறவாடியபின் நாட்டுக்குத் திரும்புவார். அவர் நாட்டுக்குத் திரும்பியதும் ஜெஸ்மின்னிஸா சிங்கப்பூர் பயணமாவார். இவ்வாறே அவர்களின் தாம்பத்திய உறவு அமைந்தது.

சில வருடங்கள் சிங்கப்பூரில் பதவி வகித்த நுஃமான் தம்பதிகளின் ஐந்து வருட ஒப்பந்தக்காலம் முடிந்தபோது குடும்ப வாழ்க்கையில் திருப்பம் சம்பவித்தது. நுஃமான் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் நாடு திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நாடு திரும்பிய நுஃமானும் நுஸ்ரத்தும் தம் கம்பளை வீட்டில் குடியிருப்பதையே விரும்பினார்கள்.

இந்த முடிவு அபுல் ஹஸன் ஜெஸ்மின்னிஸா தம்பதிகளுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நாடு திரும்பியதும் தன் மாமாவையும் மாமியையும் ஒற்றுமையாக வாழ்வதற்கு ஏற்ற ஏற்பாடுகள் பற்றி நுஃமானும் நுஸ்ரத்தும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்தனர். ஒரு நாள் கம்பளை வீட்டில் பகலுணவு பரிமாறப்பட்ட பின்னர் அபல் ஹஸன் ஜெஸ்மின்னிஸா ஒருமிக்க அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில் நுஃமான் தன் மாமாவுடனும் மாமியுடனும் சாவகாசமான முறையில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தலானார்.

“மாமா, மாமி நீங்கள் இருவரும் எங்கள் அன்புக்குரியவர்கள். இந்த வயதில் நீங்கள் இருவரும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். தாய் தகப்பனை இழந்த என் நிலையைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தகப்பனுக்குத் தகப்பனாகவும் தாய்க்குத் தாயாகவும் நீங்கள் எங்களுக்கு உதவி ஒத்தாசையாக இந்த வீட்டில் குடியிருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். இந்த முதுமையான காலத்தில் தனித்தனியாக இருப்பது நல்லதல்ல. நம்ம குடும்பத்தைப் பற்றி மற்ற சனங்கள் கேவலமாக எண்ணுவதை நீங்கள் வீரும்புகிறீர்களா?' என்று நுஃமான் தன் எண்ணத்தை முன்வைக்க நுஸ்ரத்தும் தன் குழந்தையை மடிமீது வைத்தவளாக, "வாப்பா இந்தப் பிள்ளையின் முகத்துக்காக நீங்கள் இருவரும் ஒற்றுமையாக எங்களுடனேயே இருந்து கொள்ளுங்கள்.” என்று அழாக் குறையாக கெஞ்சினாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட அபுல் ஹஸன் ஜெஸ்மின்னிஸா இருவர் கண்களும் கலங்கியவராக ஒருவர் முகத்தை மற்றவர் நோக்க ஜெஸ்மின்னிஸா தன் பிள்ளை நுஸ்ரத்தின் கையைப் பிடிக்க அபுல்ஹஸன் தன் மருமகன் நுஃமானைக் கட்டித்தழுவ வீட்டில் சுமூக நிலை தோன்ற குடும்ப வாழ்வு வசந்தமாக மாறியது

கலாபூஷணம் 
யூ.எல். அலியார்

Comments