புலம்பெயர்ந்த மலையக எழுத்தாளர் மாத்தளை கருப்பையா செல்வராஜா | தினகரன் வாரமஞ்சரி

புலம்பெயர்ந்த மலையக எழுத்தாளர் மாத்தளை கருப்பையா செல்வராஜா

மலையகத்தின் வடக்குவாசல் எனப்படும் மாத்தளை நகரில் பிறந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1971 இல் கால்பதித்து எல்.எல்.பி (LLB) பட்டம் பெற்று, இலண்டன் சென்று சட்டத்துறையில் முதுமானி பட்டம் (LLM) பெற்று தொடர்ந்து லண்டனில் செழிப்பான வாழ்க்கையில் தடம்பதித்தவர் கருப்பையா செல்வராஜ்.

கடல் கடந்து சென்றாலும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் மறக்காமல் அவர்களின் துன்ப துயரங்களை, சோகங்களை சிறுகதைகளாக்கி 'காவேரி' என்ற தலைப்பில் மலையக அன்னைக்கு ஆரம்சூட்டிய பெருமகன்.

மாத்தளை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கண்டி திரித்துவ கல்லூரியில் (ட்ரிண்டி கொலேஜ்) உயர் கல்வியையும் பயின்றார். அங்கு இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளரும் சாகித்ய விருது பெற்றவருமான நவாலியூர் நா. செல்லத்துரை அவரது தமிழாசிரியராக திகழ்ந்தார். தன்னுடைய எழுத்துத் திறமைக்கு தமது ஆசிரியர் தந்த ஊக்கத்தையும் தம்மால் மறக்க முடியாது என்கிறார்.

எழுத ஆரம்பித்தபோது எனக்கு சுமார் பன்னிரெண்டு வயதிருக்கும். சிறுவயதிலிருந்தே தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறுகதைகள், தொடர்கதைகள், சஞ்சிகைகள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அத்தோடு கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன் உட்பட பல முக்கிய எழுத்தாளர்களது நூல்களையும் வாசித்தது எழுத்து துறையில் ஆர்வம் ஏற்படசெய்தது.

1967 ஆம் ஆண்டு மாத்தளை இளைஞர் மன்றம், பாக்கிய வித்தியாலயத்தில் வை. மஹ்ரூப் தலைமையில் நடாத்திய தமிழ்விழா, ரா.மு. நாகலிங்கம் தலைமையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கண்டி நகரசபை மண்டபத்தில் நடாத்திய புதுமைப்பித்தன் விழாக்களில் தமிழக முதுபெரும் எழுத்தாளர் கு. அழகிரிசாமி, மகாகவி பாரதியாரின் பேத்தி விஜயபாரதி மற்றும் பேராசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டமை பெருமைக்குரியது என்றார். இந்த இரண்டு விழாக்களிலும் மலையக பேராசான் இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், கவிஞர். கந்தவனம், கவிஞர். மலைத்தம்பி, குமரன். நாகலிங்கம், பொ. பூபாலன், மலரன்பன், என். வாமதேவன், கவிஞர். நவாலியூர் நா.சொக்கநாதன், பி.மரியதாஸ், சாரல்நாடன், மு.சிவலிங்கம், மாத்தளை வடிவேலன் ஆகியோரை ஒரே நிகழ்வில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது மறக்க முடியாத நிகழ்வுகளாகும் என்கிறார்.

மாத்தளை கார்த்திகேசு 1968 இல் ஏற்பாடு செய்திருந்த, திருவள்ளுவர் விழாவில் என்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், செ. கதிர்காமநாதன், எஸ்.எம். கார்மேகம் ஆகிய சிரேஷ்ட எழுத்தாளர்களை சந்தித்ததும் தாம் எழுத்து துறையில் பிரவேசிக்க உந்து சக்தியாக இருந்ததாகக் கூறுகிறார்.

நாடற்றவர்களாக, அடிமை கூலித்தொழிலாளர்களாக பல இடர்களுக்கும் துன்பங்களுக்குமிடையில், பெரும் விரக்தியுடன் வாழ்ந்துவந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுக்கும் விடிவுக்கும் விமோசனம் தேடவும், படித்த மலையக இளைஞர்கள் எழுத்துறையில் பிரவேசித்து கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றை எழுதி, அவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முனைந்தவர்களில் இவரும் ஒருவர்.

யதார்த்தபூர்வமாக மக்களின் துன்பதுயரங்களை, தோட்டக்காட்டான், வடக்கத்தியான், கள்ளத்தோணி என அவமதிக்கப்பட்டதை நினைத்து பெரிதும் வேதனையுற்றிருந்த செல்வராஜ், கண்டி திரித்துவ கல்லூரியில் படிக்கும் காலத்தில் 'கள்ளத்தோனி' என்ற சிறுகதையை எழுதி அப்போது கண்டியிலிருந்து வெளிவந்த 'மலைமுரசு' என்ற சஞ்சிகைக்கு அனுப்ப அது பிரசுரமாகியது. இதுவே இவரது முதல் சிறுகதையாகும்.

1970களில் ஆட்சிபீடமேறிய ஸ்ரீமாவோ காலத்தில் மலையக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடா்பாக 1972 ஆம் ஆண்டுகளில், டெயிலிநியூஸ் பத்திரிகையில் செல்வராஜா எழுதிய The Plantation Worker (தோட்டத் தொழிலாளி) என்னும் ஒருபக்க கட்டுரை வெளிவந்தது. இக்கட்டுரையை வாசித்த இர. சிவலிங்கம், சி.வி. வேலுப்பிள்ளை, கார்மேகம், இ.தொ.கா தலைவர் எஸ். தொண்டமான், ஏ. அசீஸ், அப்போது அமைச்சராக இருந்த கலாநிதி கொல்வின். ஆர்.டி.சில்வா போன்றவர்களை பெரிதும் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார்.

மு. திருச்செல்வம். சி. ரெங்கநாதன் கியூசி அவர்களின் கீழ் சட்டத்தரணியாக கொழும்பில் பணியாற்றிய செல்வராஜா, 1984ல் புலம்பெயர்ந்து லண்டன் சென்று ஒரு சட்டத்தரணியாக, மிகத்திறமையாகவும் கடும் முயற்சியுடன் செயற்பட்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

எந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் எங்களை கூலிகளாக்கி நாடற்றவர்களாக்கி நடுத்தெருவில் விட்டுவிட்டு சென்றதோ அதே நாட்டில் வெள்ளையர்கள் மத்தியில் அரசியல் களத்தில் இறங்கி, பழைமை கட்சியின் (கன்சர்வோ்டிங்) சார்பில் 65 உறுப்பினர்களை கொண்ட பிரேன்ட் மாநகர சபையில் 1997 இல் போட்டியிட்டு வெற்றிபெற்று, மலையக மக்களுக்காக பெருமைதேடித்தந்த பெருமகன்.

2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திரன்ஸ் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பிரித்தானியாவின் அதிசிறந்த ஆசிய குடிமகன் என்ற விருதையும், வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதையும் பெற்றவர். லண்டனில் பல நல்ல காரியங்களுக்கு துணைநின்ற இப்பெருமகன் மலையக மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவதை இலட்சியமாக கொண்டுள்ளார்.

அந்தனி ஜீவா, தமது மலையக வெளியீட்டகத்தின் சார்பில் தொகுத்து பதிப்பித்த 'காவேரி' சிறுகதை தொகுதிக்கு மலையக பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் வழங்கிய அணிந்துரையில், மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட லண்டனில் பெரும் புகழோடு பணியாற்றிவரும் செல்வராஜா தான், தன் சுகம் என்று ஒதுங்கி வாழாமல் தாம் பிறந்து, வாழ்ந்த மண்ணையும் மக்களையும் நினைந்துருகுவதை அவருடைய சிறுகதைகள் பறைசாற்றுவதாக குறிப்பிடுகிறார்.

சமூக ஆய்வாளரும், இலக்கிய விமர்சகரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான மு. நித்தியானந்தன் 'காவேரி' பற்றி, ஒரு பிச்சைக்காரன் செத்துப் போயிட்டான் போலிருக்கு பாவம் கூட்டத்தில் யாரோ பேசுவது கேட்டது. அவன் பிச்சைக்காரனல்ல. அவன் மாயாண்டி. தோட்டத்தொழிலாளி. இந்த நாட்டுக்காக உழைத்து உழைத்து தனதுயிரையே அர்ப்பணித்திருக்கும் தொழிலாளி அவன் என்று சத்தம் போட்டு சொல்லவேண்டும் என்று என்மனம் துடித்தது. நான் மெளனம் சாதித்தேன். என் உள்ளம் குமுறிக்குமுறி அழுதது.

இது மாத்தளை செல்வராஜாவின் காவேரி சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 'அவன் பிச்சைக்காரன் அல்ல' என்ற சிறுகதையின் இறுதி வரிகள். மாயாண்டிக்காக, கண்டி சைட்ரோட்டில் செத்துக்கிடக்கும் ஒருவருக்காக குமுறிக் குமுறி அழும் செல்வராஜாவின் குரல் அவரது சிறுகதைகள் எங்கும் கேட்கிறது. லயத்து வாழ்வின் சகல அவலங்களும், ஏக்கங்களும், ஆசைகளும், நிராசைகளும், விரத்திகளும், ஆத்திரங்களும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவரது கதைகளில் அசலாக வந்து விழுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு இலக்காகி, காலாகாலமாக தாங்கள் வாழ்ந்த தோட்ட அவலங்களை இவரின் கதைகள் நம் இதயத்தில்தொடும் வகையில் மிக எளிமையாக விபரிக்கின்றன. இன்னும் ஐந்து நிமிடங்களில் பஸ் அல்லது திரீவீலர் புதிதாக ஒரு வாழ்க்கையையே சுமந்து செல்லப்போகிறது என்றெல்லாம் எதிர்கால உத்தரவாதங்களை ஈஸியாக வழங்கிச்செல்லும் கதைகள் அல்ல இவை. இந்த நிமிடம் வரை மலையகத் தமிழர்களின் வாழ்வு ஏக்கங்களின், ஏமாற்றங்களின், நிராசைகளின் உறைவிடமாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மாத்தளை செல்வராஜா LLB முடித்து, இலங்கையில் சட்டத்தரணியாக தொழிலாளர்கள் சாா்பாக ஆயிரத்துக்கு மேலான வழக்குகளில் ஆஜராகி வாதாடி இருப்பதை பெரும் பாக்கியமாக கருதுபவர். சிறுகதை வடிவுக்கு சவாலாக உள்ள விஷயங்களை வார்த்திருக்கிறேன் என்றெல்லாம் மாத்தளை செல்வராஜா டமாரம் அடிப்பதில்லை.

மலையக மக்களின் பேச்சுவழக்கினை கையாண்டு அவர் எழுதியுள்ள கதைகளை வாசிக்கும் போது, அந்த எழுத்தின் வாசமே அலாதியானது. அடங்கொப்புரானே என்ற மலையக பிரயோகங்கள் இவருடைய கதைகளிலேயே அதிகம் வருகிறது. மலையக மக்களின் வாழ்வோடு இணைந்த இந்த மனிதரின் கதைகளில் மலையக மனிதர்களின் அவலத்தின் வாடை வீசுகிறது. அவர்கள் படும் தாங்கொணாத்துயரின் வலி தெரிகிறது. தாங்கள் உழைத்து வாழ்ந்த மண்ணில் இருந்தே தாங்கள் தூக்கி எறியப்படும் கொடூரம் தெறிக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் மலையக மக்களின் துயரை தன் நெஞ்சிலே சுமந்து வரும் மலையகப்புதல்வன் என்று குறிப்பிடுகிறார்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப் வழங்கிய அணிந்துரையில், தோட்டச் சுவீகரிப்பின் மூலமாக தொழிலை இழந்த மாயாண்டி பட்டினியால் செத்துக் கிடக்கின்றான். அவன் பிச்சைக்காரனல்ல, உங்களின் மனிதாபமற்ற குரூரச் செயல்களினால் இப்படிப் பரிதாபமாக ஒரு பிச்சைக்காரனைப் போல் ரோட்டில் செத்துக் கிடக்கின்றான் என்று குமுறுகிறது செல்வராஜாவின் மனம். மலையகத்தின் அந்த அந்தக் காலகட்டத்துப் பிரச்சனைகள் பற்றியே ஒவ்வொரு கதையும் பேசுகின்ற தொனியினை வாசகர்கள் இத்தொகுதியின் கதைகள் மூலம் கேட்கலாம். செல்வராஜா இவ்வாறான ஆக்கபூர்வமான சிந்திக்க வைக்கக்கூடிய சிறந்த கதைகளை தொடர்ந்து எழுதி மலையக இலக்கியத்திற்கு மேலும் சாதனைகளைப் புரிய வேண்டும் என வாழ்த்துகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அந்தனி ஜீவா குறிப்பிடுகையில், நமது சமூகத்தில் வந்த ஒருவா் கடல் கடந்து வாழ்ந்தாலும் மண்ணையும் மக்களையும் மறக்காமல் நம்மைப்பற்றி சிந்திக்கிறார். அவரது எண்ணங்கள் சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. அந்த படைப்புக்கள் இப்பொழுது 'காவேரி' என்ற மகுடத்தில் மலையக வெளியீட்டகத்தின் மூலம் தொகுப்பாக வருகின்றது என்றார்.

எச்.எச். விக்கிரமசிங்க

Comments