கொரோனாவுக்கு மத்தியில் தென் கொரியாவில் நடந்தேறிய பொதுத்தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவுக்கு மத்தியில் தென் கொரியாவில் நடந்தேறிய பொதுத்தேர்தல்

முழு உலகமும் கொவிட் 19-வைரஸால் விழுங்கப்பட்டு கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தென் கொரியா மட்டும் அண்மையில் பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்கையை மீளவும் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது பொதுத்தேர்தலையும் மிகசிறப்பாக திட்டமிட்டு நடத்தி வெற்றிக்கண்டுள்ள சம்பவம் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து கொரோனா தொற்றின் வீதம் மிக சடுதியாக குறைந்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையிலும் தென் கொரியா பொதுத் தேர்தலை மிகவெற்றிகரமாக முன்னெடுத்தது எவ்வாறு? கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தது எவ்வாறு? என்பது  கட்டாயமாக தேடிப்பார்க்க  வேண்டியதொன்றாகும்.

சீனாவின் அயல் நாடான தென்கொரியா அமெரிக்காவுக்கும் மிக்கநெருக்கமுடைய நேசநாடாகும். அத்தோடு பாரிய சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து ஏனைய நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் நாடாகும்.

முதலாளித்துவ பொருளாதார முறையை முதன்மையாக கொண்டு இயங்கும் கட்சிமுறைகளை தன்னகத்தே கொண்டும்,தனது நாட்டுமொழிக்கும், கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும் தனித்துவமான இடத்தினை கொடுத்து இயங்கும் நாடாகையால் இந்நாடு பலவெற்றிகளை கண்டிருக்கிறது.

அதேபோல மிக சக்திவாய்ந்த பலம் பொருந்திய சமூககட்டமைப்பும், சமூகநலன்சார்ந்த அரசியல் நிர்வாகஅமைப்பும், அதனோடு பின்னிப்பிணைந்த பாதுகாப்பான சுகாதார கட்டமைப்பும், பொதுஜன ஊடகம் உட்பட்ட பொருளாதார அபிவிருத்தியிலும் பலவிடயங்களில் முன்னோக்கிச் செல்கின்ற நாடாகும்.

தென்கொரியாவானது முக்கியமான இருகட்சிகளையும், பல சிறுகட்சிகளையும் தன்னகத்தே கொண்ட அரசியல் விடயங்களை முன்னெடுத்து செல்லும் நாடாகும். அத்தோடு அரசியல் யாப்பிற்கு முரணாகாத வகையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல்களை வைத்து ஜனநாயக தன்மையைபேணும் நாடுகளின் வரிசையில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது தென்கொரியா.

இந்த ஆண்டு தென்கொரியாவின் 21வது பொதுத்தேர்தல் அண்மையில் நடந்தேறியது. குறிப்பாக உலகநாடுகளில் இன்றைய சூழ்நிலையில் இந்தபொதுத்தேர்தல் மிகசிறப்பாக நடந்தேறியது   அனைவராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.

கொவிட்-19 வைரஸ் தொற்று உலகளவில் பரவிவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாது மிகசிறப்பான முறையில்  திட்டமிட்டு பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டமை வரலாற்று சிறப்பம்சமாகும்.

கொவிட்-19 வைரஸ் சீனாவில் ஆரம்பமாகி பரவியதைத் தொடர்ந்து முதற்கட்டமாக் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவைக் குறிப்பிடலாம்.

தென்கொரியாவில் தேகுன் எனும் நகரமே மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட நகரமாகும். அத்தோடு இந்த நகரப்பகுதியிலேயே வைரஸ் மிகவும் வேகமாகவும் பரவியதோடு அதிக உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தென்கொரியாவில் கொவிட் தொற்று அதிகரித்ததும், பரவல் மிகவேகமாக இடம்பெற்றதும், மரணவீதம் அதிகரித்ததும்  சீனா நிவாரணம் கொடுத்ததோடு மட்டுமல்லாது வைத்திய குழுவொன்றையும் தென்கொரியாவுக்கு அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அப்போதும் தென் கொரியாவுக்கு தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது என்று சொல்லிட முடியாது.

எவ்வாறு இருப்பினும் கடந்த மார்ச்மாத இறுதியில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இதற்கு காரணம் அந்நாட்டின் தலைவர்களின்  சிறந்த திட்டமிடல்கள், பொது சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்பு. முப்படைகளின் ஒத்துழைப்பு மற்றும் அந்நாட்டு பொதுமக்களின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் தன்மையும் ஒழுக்கமுமே ஆகும்.

தென்கொரியாவின் அரசியல சட்டத்திற்கு அமைவாக கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி 21வது பொதுத்தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டது. இவ்வாறு முன்மொழியப்பட்டது முழு உலகத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு அதிர்ச்சியையும் உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் கொவிட்-19 மத்தியில் பொதுத்தேர்தல் நடந்தேறியதே.

தென்கொரியாவின் பிரபல ஊடகங்கள் உள்ளிட்ட பல சமூகவலைத் தளங்கள் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு பல ஆலோசனைகளை பெற்றுக் கொடுத்திருந்த போதும் அதனை தென்கொரியா முழுமையாக ஏற்று சிறந்த சுகாதார பாதுகாப்பினை திட்டமிட்டு மிகச் சிறப்பாக பொதுத்தேர்தலை நடத்திவெற்றி கண்டதோடு அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியான நாடாகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தகக்து.

கொவிட்19 என்ற வைரஸ் சமூகதொற்றில் முற்றாக ஒழிக்கும் ஒருநோய்த்தொற்று அல்ல  அதனை  கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே கொண்டுவரமுடியும். ஆகவே அதனை கட்டுப்படுத்தி மீண்டும் வழமைக்கு திரும்பலாமே தவிர வேறு எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

இன்றைய கணக்கெடுப்பின் பிரகாரம் தென் கொரியாவில் மொத்த நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கையானது 10338 ஆகும். இதனடிப்படையில் உலக தரவரிசையில் தென்கொரியா மிகவும் கீழ் மட்டநிலையிலே உள்ளது. இது மார்ச் மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட நோய்தொற்றே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தென்கொரியாவின் நாளாந்த நோய்த்தொற்றின் பதிவானது பத்திற்கும் குறைவாக வேகாணப்படுகின்றது என தரவுகள் குறிப்பிடுகின்றன. தென்கொரியாவில் கொவிட் மரணங்கள்  243 ஆகப் பதிவாகியுள்ளபோதும்  தற்போதைய சூழ்நிலையில் நாளாந்த மரணவீதம் மிகவும் குறைந்தளவேயாகும் என்பது நினைவு கூரத்தக்கது. இன்றைய களநிலவரலத்தின் பிரகாரம் 8764 தொற்றாளர்கள் பூரணசுகமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,1731 தொற்றாளர்கள் மாத்திரமே தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நோய்த்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் இன்று வரையிலும் அடிக்கடி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுதான் வருகின்றார்கள். இது ஏனைய நாடுகளுக்கும் முன்மாதிரியான செயற்பாடாகும்.

எவ்வாறு இருப்பினும் ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியல் அமைப்புக்கு ஏற்றவிதத்தில் பொதுத்தேர்தல் நடந்தேறியது. இந்த பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு முன்னரே பலபாதுகாப்பு திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அதாவது விசேடமாக தேர்தல் நடைபெறும் மத்திய நிலையங்களில் சமூக இடைவெளியை பேண முன்கூட்டிய திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.அவ்வாறே வருகைதரும் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்ட போதும், கைகளுக்கும் கை பாதுகாப்பு உறைகள் அணிந்துவரவும் உத்தரவு இடப்பட்டிருந்தது. அதேபோல சகல நிலையங்களிலும் தொற்று நீக்கிகளும் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

தேர்தல் நிலையங்களில் கடமையில் ஈடுபட்டிருந்த சகல உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்தரத்திலான பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட உடைகள் வழங்கப்பட்டிருந்ததோடு வாக்காளர்களின் உடல்வெப்பநிலையை அளவிடுவதற்கும் விசேட துறைசார்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறான பரிசோதனைகளின் போது அதிக உடல் வெப்பநிலை உள்ளிட்ட வேறு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்ட மாத்திரத்திலே உடனே மத்தியநிலையங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட பரிசோதனை அறையில் அனுமதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள  ஏற்பாடு  செய்திருந்தனர். அத்தோடு அவர்களுக்கும் விசேடமாக வாக்களிக்கும் செயற்பாடும் செய்யப்படடிருந்தது.

அதற்கும் மேலாக வைத்தியசாலைகளில் தங்களது வாக்குகளை இடவும் வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டு விசேடமாக வைத்தியர்கள், தாதியர்களுக்கு வசதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தென்கொரியாவில் மொத்த சனத்தொகை  51 மில்லியனாகும் இதில் 44 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். கடந்த காலப்பகுதியில் வாக்களிக்கத் தகுதிடைய வயதாக 19 வயது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் இவ்வாண்டு அது18 வயதாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து வாக்காளர்களின் எண்ணிக்கையில் மேலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

தென்கொரியாவின் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரேல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது இதற்காக நாடளாவிய ரீதியில் 14,000 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தோடு இந்தநிலையங்கள் யாவற்றிலும் அதி பாதுகாப்பு சுகாதார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

வாக்குநிலையங்களுக்கு வருகை தந்த மக்கள் தாம் மீளசெல்லும் போது அணிந்து வந்த முகக்கவசம் உள்ளிட்ட கையுறைகள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அதீத சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தேறிய பொதுத்தேர்தல் தொடர்பாக அந்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மிகவும் நன்றி தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் கடந்த ஆண்டைவிட 0.9 வீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சவால்களுக்கு முகம் கொடுத்த தென்கொரியா தனது பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டியதொன்றாகும். உலக நாடுகள் முடங்கி கிடந்தபோதும் தென்கொரிய தனது ஜனநாயகத்தில் வெற்றிசூடியமை பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எமது நாட்டிலும் இவ்வாறான செயற்பாடுகளை முறையாக திட்டமிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் முன்வந்துசெயற்பட்டால் வெற்றி உண்டு எனலாம்.

ஜயகுமார் ஷான் -  மொனறாகலை

Comments