கொரோனாவின் பின்னர் உலகில் உதயமாகும் புதிய அரசியல் பொருளாதார கோட்பாடு | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவின் பின்னர் உலகில் உதயமாகும் புதிய அரசியல் பொருளாதார கோட்பாடு

கொவிட் 19 போன்றதொரு உலகளாவிய நோய்த் தொற்றையும் உலகம் தன்னைத்தானே முடக்கிக் கொண்டதையும் இதற்கு முன்னர் நாம் பார்த்ததில்லை. இலட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு கொண்டுள்ள இவ் வைரஸ் தாக்கத்தின் அடுத்த பக்கம் சில நன்மைகளையும் விளைவித்துள்ளது. கொழும்பு நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னலை அதிகாலையில் திறந்து பார்த்தால் சிவனொளிபாதமலைச் சிகரம் பளிச்சென கண்களுக்குத் தெரிகிறதாம். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நீர்நிலைகள் சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. வெறிச்சோடிப்போன தெருக்களில் மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்ட புதுடில்லி வானம் நிர்மலமாகக் காட்சியளிக்கிறது. உலகெங்கும் குற்றச் செயல்கள் குறைந்து காணப்படுகின்றன. ஏராளமான குடும்பங்களில் நிலவிய பிணக்குகளும் குமுறல்களும் சரி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேகமாக ஓடிக்கொண்டிருந்த மனிதர்களை நின்று நிதானித்து தன்னைத்தானே எடைபோடவும், தான் வாழும் சூழலை ஒரு தடவை அவதானிக்கவும் கொட் 19 அவகாசம் வழங்கியிருக்கிறது. கொவிட் ஊடாக இப்பூமி தன்னைத்தானே சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது.

உலகம் கிராமமாகி விட்டது என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டோம். முன்னெப்பொழுதையும் விட சமூக ரீதியாக மக்கள் நெருங்கிப்பழகுகிறார்கள். ஆனால் இதுவே கொவிட் 19 வேகமாக உலகெங்கும் பரவுவதற்குக் காரணமானது. முன்னர் அம்மை, பிளேக், கொலரா, மலேரியா போன்ற நோய்கள் வேகமாகப் பரவி கோடிக்கணக்கானோரை காவு கொண்டதை வரலாற்றின் பக்கங்களில் பார்க்கிறோம்.  ஆனால் அவை குறுகிய காலத்தில் உலகெங்கும் பரவவில்லை.

மலேரியா ஐரோப்பாவைத் தாக்கவில்லை. பிளேக் இந்தியாவுக்கு வரவில்லை. காரணம், அப்போது விமான சேவை கிடையாது. மாலுமிகள் மூலம் நோய்கள் பரவினால்தான் உண்டு. அமெரிக்க செவ்விந்தியருக்கு பால்வினை நோய் என்றால் என்னவென்றே தெரியாத காலம் ஒன்றிருந்தது. கொலம்பசின் மாலுமிகள்தான் அதை அமெரிக்க பெருநிலத்தில் சுதேசிகளிடம் பரப்பினார்கள். ஆனால் இப்போதுதான் முதல் தடவையாக ஒரு தொற்றுநோய் மிகக் குறுகிய காலத்தில் உலகெங்கும் பரவியிருக்கிறது. காரணம் விமான பயணங்கள் உலகை கிராமமாக்கியதுதான்.

எனவே புதிய உலகச் சூழல்களுக்கு ஏற்ப புதிய உலக ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முதலாம் உலகப்போருக்கு முன்னர் உலகில் பேரரசுகளே (சக்கராதிபத்தியம் என அக்காலத்தில் அழைத்தார்கள்) காணப்பட்டன. இப்பேரரசுகள் ஏனைய நாடுகளை அடக்கி ஒடுக்கி வந்தன.

ஒஸ்ட்ரியா பேரரசின் பட்டத்து இளவரசர் பிரான்ஸ் பேர் தன் மனைவி சோப்பியுடன் பொஸ்னியா சரஜேவொவுக்கு விஜயம் செய்தார். ஒரு சேர்பிய துப்பாக்கிதாரியால் இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வளவுதான். ஆத்திரமடைந்த ஒஸ்ட்ரியா சேர்பியா மீது படையெடுக்க, உலக யுத்தம் ஆரம்பமாகி, கோடிக்கணக்கானோரை பலி கொண்டது. 1918ம் ஆண்டு போர் முடிவடைந்து ஜெர்மன் நவம்பரில் சரணடைந்து விடுகிறது. போர் முடிவடைந்த பின்னர் பல பேரரசுகள் கலைந்து விடுகின்றன. புதிய நாடுகள் தோன்றுகின்றன. புதிய பொருளாதார கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதை புதிய வேர்ள்ட் ஓர்டர் அல்லது புதிய உலக ஏற்பாடாக நாம் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போரை முதலாம் உலகப்போரின் தொடர்ச்சியாகத்தான் கொள்ள வேண்டும். ஜேர்மனி அடக்கி ஒடுக்கப்படுவதை விரும்பாத ஹிட்லர், தாம் ஆளப்பிறந்த இனம் எனக் கர்ஜிக்கிறார். 1939ம் ஆண்டு மார்ச் மாதம் செக்கோஸ்லாவாக்கியாவை ஜேர்மனி ஆக்கிரமிக்கிறது. செப்டம்பரில் போலந்தை ஜேர்மனி ஆக்கிரமிக்கிறது.

பிரிட்டனும் பிரான்சும் இதை எதிர்த்து ஜேர்மனிக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்ய, இரண்டாவது உலகப்போர் வெடிக்கிறது. மீண்டும் கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். 1944ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி பிலிப்பைன்ஸில் ஜப்பான் சரணடைந்ததோடு போர் முடிவுக்கு வருகிறது. இப்போர் முடிவுக்கு வந்ததும் அரசுகள் சரிகின்றன. புதிய நாடுகள் உருவாகின.

முதலாம் யுத்தம் முடிவடைந்த பின்னரேயே உலகப் பேரரசாக விளங்கிய பிரிட்டன் நலிவுற ஆரம்பிக்கிறது. இந்தியா சுதந்திரமடைகிறது. பாகிஸ்தான் என்ற நாடும், இஸ்ரேல் என்ற நாடும் தோற்றம் பெறுகின்றன. பிரிட்டன் நலிவுற்று அமெரிக்கா பெரு வல்லரசாக மாறுகிறது. உலக நாடுகள் அமெரிக்க ஆதரவு, ரஷ்ய ஆதரவு நாடுகளாக பிரிகின்றன.

அமெரிக்கா தலைமையில் நேட்டா இராணுவ ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்படவே, வார்சோ ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் ரஷ்யா சீட்டோ என்றழைக்கப்பட்ட அந்த இராணுவ ஒத்துழைப்பு அமைப்பில் தன் ஆதரவு நாடுகளை உறுப்பினர்களாக்குகிறது. முதலாவது உலகப் போரின் பின்னர் உலக மகா சபை என்ற உலக நாடுகளின் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  அதையும் மீறி இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்தது. இப்போர் முடிவடைந்ததும் மூன்றாம் உலகப் போரைத் தவிர்க்கும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது. முதலாளித்துவ நாடுகளின் செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில் உலக வங்கி, சர்வதேச நாணய சபை என்பன உருவாக்கப்பட்டன. அமெரிக்கா, ரஷ்யா என இரு பெரும் வல்லரசுகளைத் தவிர ஏனைய பேரரசுகள் காணாமல் போயின.

முதலாளித்துவமா கம்யூனிசமா எது வெல்லும் என்ற போட்டா போட்டியே உலகின் பிரதான போட்டியாக மாறியது. கொரிய யுத்தம், வியட்நாம் யுத்தம், கியூப நெருக்கடி, லுமும்பா படுகொலை, அலண்டே படுகொலை, சைப்பிரஸ் நெருக்கடி என்பனவற்றில் அமெரிக்காவும் ரஷ்யாவுமே பின்னணியில் இருந்தன. இஸ்ரேலின் தோற்றத்தோடு மத்திய கிழக்கு எண்ணெய் வள பிராந்தியத்தில் ஒரு நிரந்தர பிரச்சினை உருவாக்கப்பட்டது.

உலகப்போருக்கு பின்னரான world order  இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது சோவியத் ரஷ்யாவின் அதிபராக மிகைல் கோர்பச்சேவ் பதவியேற்றார். ரஷ்ய கூட்டமைப்பு துண்டு துண்டாக சிதறியது.

கிழக்கு, மேற்கு எனப் பிரிந்திருந்த ஜேர்மன் ஒன்றிணைந்தது. வார்சோ ஒப்பந்தம் காலாவதியானது. செக்கோஸ்லாவாக்கியா என்ற நாடு காணாமல் போனது. கம்யூனிச நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோக உலகெங்கும் முதலாளித்துவ சிந்தனை வலுப்பெற, அமெரிக்காவின் கைகளில் வந்து சிக்குகிறது. குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு முதலாளித்துவ சக்திகளை ஒன்று திரட்டவும் அவற்றின் போர்த் திறமையை வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமெரிக்காவுக்கு அமைந்தது. வளைகுடா போரின் பின்னரேயே புதிய உலகப் பொருளாதார ஏற்பாடு பற்றி ஜோர்ஜ்புஷ் பேச ஆரம்பித்தார். உலகப் பெரு முதலாளிகளின் பெரு நிறுவனங்கள் உலகெங்கும் கிளை பரப்பின. இதன் வழியே அமெரிக்காவுக்கே சவால்விடும் வகையில் சீனா தலைதூக்கிய அதே சமயம் புதிய மதவாத முதலாளித்துவத்தில் மோடியின் இந்தியா ஈடுபாடு காட்டி வருவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தற்போதைய சூழலில் மூன்றாவது உலக யுத்தம் மூள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. பல நாடுகளிடம் பேரழிவு ஆயுதங்கள் குவிந்து கிடப்பதும், உலக பயங்கரவாத அமைப்புகள் தொழில்நுட்ப மற்றும் ஆயுத ரீதியாக பலம் பெற்றிருப்பதும் யுத்தமொன்றுக்கான வாய்ப்புகளை அடியோடு இல்லாமல் செய்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் கொவிட் தொற்று உலகளாவிய ரீதியாக பரவி, உலகையே முடக்கிப் போட்டிருக்கிறது. முன்னர் இரண்டு மகா யுத்தங்களும் உலகையும், பொருளாதார வளர்ச்சியையும் முடக்கியிருந்தன. அவை ஏராளமான ஆக்கபூர்வமான மாற்றங்களை உலக நாடுகளில் ஏற்படுத்தியும் இருந்தன. தற்போது யுத்தமற்ற ஒரு உலகளாவிய யுத்தத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த கொரோனா யுத்தம் முடிவுக்கு வந்ததும் மற்றொரு உலகப் பொருளாதார மற்றும் அரசியல் ஏற்பாடு உருவாகும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஏனெனில் உலகம் இந்த விநாசத்தில் இருந்து எழுந்துவர வேண்டியிருக்கிறது. அப்படி எழுந்துவர சில வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே உலகத் தலைவர்களும் பொருளாதார வல்லரசுகளும் இதுவரை தாம் மேற்கொண்டு வந்துள்ள குறுகிய நோக்கங்களைக் கொண்ட அரசியல், பொருளாதார முடிவுகளை மாற்றிக் கொள்ளவும், சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு இதுகாலவரையும் அளித்து வந்த மூர்க்கமான ஆதரவை நிறுத்திக் கொள்ளவும், சூழலுக்கு எதிரான திட்டங்களை நிறுத்திக் கொள்ளவும் முன்வர வேண்டியிருக்கும். ஏனெனில் கொரோனா வளர்ந்த நாடுகளைத்தான் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பானியா, இத்தாலி என்பன நொண்டிக்குதிரைகளாகி உள்ளன. உலகப் பொருளாதார ஏற்பாட்டை ஜோர்ஜ் புஷ் அறிவித்தார் என்றால் அவர் மகன் ஜுனியர் புஷ் பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடக்கி உலகப் பொருளாதார ஏற்பாட்டுடன் அதை ஒரு அங்கமாக்கினார். எனினும் உலகளாவிய பிரச்சினைகளை இவை தீர்க்கத் தவறிவிட்டதோடு ஐஎஸ்சின் எழுச்சிக்கும் இது வழிவகுத்தது.

இதே சமயம், கொவிட் 19 மீதான உலகளாவிய யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தபின்னர் உலக சுகாதார பழக்க வழக்கங்களிலும், சுகாதார கட்டமைப்புகளிலும் உலக நாடுகள் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் கொவிட் 19 போன்ற கொடிய வைரசுகளின் திடீர் வெளிப்பாடுகளும் உலகளாவிய பரவுதலும் குறுகிய கால இடைவெளிக்குள் மீள்டும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அவ்வாறான தருணங்களில் உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு மீண்டும் வழிவகுக்கும் 'லொக்டௌ'னுக்கு நாம் மீண்டும் செல்வதா அல்லது குறைந்த அளவிலான பொருளாதார சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வேறு வழிமுறைகளைக் கைகொள்வதா என்பதை உலக நாடுகள் தீர்மானிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை நாம் மற்றொரு உலக பொருளாதார ஏற்பாடாக ஏன் கொள்ளக்கூடாது?

வெளிக்கிரக வாசிகள் எம்மீது போர் தொடுத்தால் அல்லது ஒரு பெரிய விண்பாறை ஒன்று பூமி மீது மோத வருமானால் எப்படி அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணையுமோ அவ்வாறே இக் கொரோனா மீதான போரிலும் நாடுகள் ஒன்றிணைந்துள்ளனவா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இதை ஒரு புதிய உலக ஏற்பாடாகக் கருதி நாடுகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும்போது அதை விற்பதற்கான உள்நாட்டு சந்தை அவசியம் என்பதைப் போலவே வெளிநாட்டு சந்தையும் இருக்க வேண்டும். மக்களிடம் வாங்கும் சக்தி இருக்க வேண்டும். நாடுகள் பொருளாதார ரீதியாக நொடிந்துவிழும்போது  அவை தற்சார்பு பொருளாதாரத்தை அதாவது உள்ளுர் உற்பத்தி பொருட்களை உள்ளுர் சந்தையிலேயே விற்கும் பொருளாதாரத்தை தேர்ந்தெடுக்கலாம். இது நீண்டகாலத்துக்கு உதவப் போவதில்லை. கொவிட் 19 பரவலையடுத்து உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் தமது தொழில்களை இழக்கப்போவதோடு தொழில் மற்றும் சேவைகள் விருத்தி குன்றுவதால் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கப் போகிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வறிய நாடுகளில் பல மில்லியன் மக்கள் தொழில் இன்றி வீதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் பின்னர் தொழிலாளர்களின் உரிமைகள் மீது கை வைக்கப்படுமா, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களின் உதவியோடு பல்வேறு தொழில்களை நடத்திச் செல்ல முடிந்தால் அதையே பழக்கத்துக்கு கொண்டுவர உள்ளன. எதிர்காலத்தில் பொருட்கள் தயாரிப்பில் தொழிலாளர்களின் நேரடிப் பங்களிப்பு கணிசமாகக் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அதேசமயம் முதலாளித்துவத்தின் பிடிக்குள் உலகம் சென்றுவிடவும் கூடும். அதேசமயம் கொரோனா பாதிப்புக்கு இலக்கான வளர்ந்த நாடுகள் தம்மை மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் வளரும் நாடுகளின் மூளைசாலிகளையும் பயிற்றப்பட்ட தொழிலாளர்களையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் உலக சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர்வள பாதிப்பு, புவி வெப்பமடைதல், கழிவகற்றல், சமுத்திரப் பாதுகாப்பு போன்ற மனித நல்வாழ்வுக்கு அத்தியாவசியமான அம்சங்களில் அக்கறை செலுத்துவது குறைவு. அவ்வாறு அக்கறை காட்டினால் அது உற்பத்தி வேகத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் எனக் கருதுவதே காரணம். கொரோனாவுக்கு பிற்பட்ட காலத்தில் இந்த மனப்பான்மையில் மாற்றம் வரலாம்.

கொரோனா தொற்று பல பாரம்பரிய நம்பிக்கைகளை கேள்விக்குறியாக்கி உள்ளது. நாத்திகர்களின் பல நூற்றாண்டு காலம் போராட்டங்கள் விளைவிக்காத மாற்றங்களையும் கேள்விகளையும் மதங்கள் தொடர்பான மனிதர்களின் பொதுப் புத்தியில் இக் கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. மிக மிகப் புனிதமான வழிபாட்டுத் தலங்கள் முதல் தடவையாக வெறிச்சோடிப் போயுள்ளன. இது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.

எனவே கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கும், இதுபோன்ற மற்றொரு பாதிப்பை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் உலக நாடுகள் தயாராக வேண்டும். சுகாதார மற்றும் மருத்துவ ரீதியான பின்னடைவுகளை உலக நாடுகள் தற்போது எடைபோட்டு வருகின்றன. இப்புதிய பொருளாதார மற்றும் சுகாதார ஏற்பாடுகளும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உலக நிகழ்வுகளும் காலமும் தீர்மானிக்கும்.

நாம் இன்னொன்றையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். உலகத் தமிழர்கள் என அறியப்படும் இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் அந்தந்த நாடுகளில் வசதியாக வாழ்ந்து வருகிறது. இலங்கையில் முதலீடு செய்யும்படி இலங்கை அரசுகள் விடுத்த அழைப்புகளுக்கு அச்சமூகம் சாதகமாக பதில் அளிக்கவில்லை.

கொரோனாவுக்குப் பின்னரும் இப்புலம் பெயர்ந்த சமூகம் இந்நாட்டை பகையுணர்வுடனும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்ப்பதா அல்லது அந்நாட்டின் நொடிந்து போயுள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குக் கைகொடுப்பதா? என்பது பற்றி உலகத் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும். கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னர் புதிய அரசியல், பார்வை, புதிய பொருளாதார கோட்பாடு, புதிய சமூக நோக்கு, உலகளாவிய சமூகப் பார்வை என்பன தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் நடைமுறையில் உள்ள கோட்பாடுகளை எல்லாம் கொரோனா அடித்து நொருக்கிவிட்டது. பனிப்போர் காலத்து சிந்தனைகள் எவ்வாறு காலாவதியானதோ அவ்வாறே இன்றை உலகளாவிய அரசியல், பொருளாதார தத்துவங்களும் வலுவிழந்து போகலாம்.

எனவே தமிழர்கள் தொடர்பான சிங்களவர்களின் பார்வையும் நம்பிக்கைகளும் வலுவிழந்துபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதைப் போலவே இலங்கை தொடர்பான உலகத் தமிழர்களின் சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

முதல்கட்டமாக, இலங்கையின் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீளத்தூக்கி நிறுத்தும் பணிகளில் உலகத் தமிழர்கள் இலங்கை அரசுக்கு உதவலாம். புதிய உறவுப் பாலத்துக்கு இது உதவ முடியும். சிங்களவர்களின் தமிழர்கள் தொடர்பான பாரம்பரிய சிந்தனைகளில் இது மாற்றத்தையும் புரிதலையும் ஏற்படுத்தும். ஏனெனில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கான காரணங்கள் பெரும்பாலும் கற்பனையும், புனைவும், அரசியலும், நம்பிக்கை அடிப்படையிலானவையாகவுமே காணப்படுகின்றன. உலகத் தமிழர்கள் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு கைகொடுத்து தமிழர் பிரதேசங்களை தொழில் ரீதியாக வளப்படுத்த முன்வர வேண்டும். நலிந்த தருணத்தில் கைகொடுப்பதை எவரும் மறக்கமாட்டார்கள்.

கொரோனா அழிவின் பின்னர் ஆக்கபூர்வமானதும் புரட்சிகரமானதுமான சிந்தனைகள் கிளர்ந்தெழ வேண்டியது காலத்தின் கட்டாயம். எரிமலைகள் காடுகளை அழிக்கின்றன. பின்னர் புது விசையுடன் காடுகள் மீண்டும் தலைநிமிர்கின்றன. நம் சிந்தனையில் புத்தெழுச்சி கிளம்பிப் பெருகட்டும்.

அருள் சத்தியநாதன்

Comments