என்னையறிந்த போது... | தினகரன் வாரமஞ்சரி

என்னையறிந்த போது...

நிலா ஒளியின் வெளிச்சத்தில் குமாரியின் குடும்பத்தினர் மிகவும் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். பௌர்ணமி முடிந்து இரண்டு தினங்களாகியும் நிலவின் வெளிச்சம் இன்னும் இருந்தது. குமாரி க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் மிகவும் திறமையாகச் சித்திப் பெற்றிருந்தாள். மறுநாள் காலை க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானத் துறையில் படிப்பதற்காக ஹற்றன் பிரதேசத்தில் இருக்கும் பிரபல பாடசாலைக்குச் செல்லவிருக்கின்றாள் என்பதாலும், பரீட்சையில் எட்டு ஏ. ஒரு பி எடுத்து மிகவும் திறமையாகப் பாஸ் பண்ணியிருப்பதையும் பற்றியுமே இந்த உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.  

பாடசாலையில் நடந்த பாராட்டு விழாவில் பலரும் பலவாறு புகழ்ந்து பேசினார்கள். இந்த நாளை குமாரிக்கு மறக்க முடியாது. இவள் பேசும் போது, 'நான் ஒரு ​ெடாக்டராக வருவேன். இதுதான் எனது இலட்சியம். என் பெற்றோர்களின் கனவை நனவாக்குவேன். செல்லும் பாடசாலையில் எனது பாடசாலையின் புகழைக் காப்பாற்றுவேன். இலங்கையிலேயே முதல் மாணவியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவேன்' என பேசியபோது, மண்டபமே கைதட்டல்களால் அதிர்ந்தது.  

மறுநாள் காலை ஹற்றன் பஸ்ஸில் ஏறி தகப்பன் சுந்தரத்தோடு ஹற்றனை நோக்கிப் புறப்பட்டார்கள். குமாரிக்கு இப்பிரதேசம் புதுசு, ஆங்காங்கே மலைச் சரிவுகள், இயற்கையான நீர் வீழ்ச்சிகள், போர்வைப் போரத்தியது போல் இருக்கும் மரங்கள். எங்கு பார்த்தாலும் பச்சை நிறம், வளைந்து நெளிந்து போகும் பாதை, மெல்லிய குளிர் காற்று இதையெல்லாம் பார்க்கும் போது குமாரிக்கு மிகவும் பிடித்து இருந்நது.  

புதிய பாடசாலை குமாரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் அனைவரும் இவளுடைய பெறுபேற்றைக் கேட்டு விட்டு பாராட்டினார்கள். இவற்றையெல்லாம் கேட்ட போது, நன்றாக படிக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டாள்.  

பாடசாலையை விட்டுச் செல்ல முற்பட்டத் தந்தையை கட்டிப்பிடித்து அழத் தொடங்கினாள். தந்தையின் பாசம் அவளை வாட்டியது. அந்த பாடசாலையே ஒரு கனம் சோகத்தில் மூழ்கியது. தந்தையின் கண்களும் கலங்கி விட்டது. 'இல்லம்மா... நீ, நல்லா படிச்சி பாஸ் பன்னனும். நா ஒன்ன அடிக்கடி வந்து பார்க்கிறேன்' என சொல்லிவிட்டு, மகளைப் பிரிய மனமில்லாமல் பாடசாலை முடியும் வரை காத்திருந்து, மகளை போடிங் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.  

காலங்கள் ஓடுகின்றன. குமாரி உயர் தரத்தில் முதலாவது வருடத்தைப் பூர்த்தி செய்கின்றாள். பாடசாலையில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டி, இலக்கிய மன்றங்கள், தமிழ் மொழித் தினம், எல்லா விடயங்களிலும் நல்ல பெயர் எடுக்கின்றாள். பாடசாலையில் மாணவத் தலைவி, உயர்தரப் பிரிவில் சிறந்த மாணவி என பல பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெறுகின்றாள்.  

தினமும் பாடசாலைகககும் மேலதிக வகுப்புக்களுக்கும் செல்கின்றாள். நன்றாகப் படிக்கின்றாள் என ஆசிரியர்களும், பெற்றோரும் நம்பினர். எப்படியாவது இம்முறை குமாரி நல்ல ரிசலட் எடுத்து பாஸ் பண்ணுவாள் என அனைவரும் நம்பினார்கள். இம்முறை மருத்துவ துறைக்கு செல்வாள் என அனைவரும் பேசிக் கொண்டனர். சுந்தரமும் தன் மகள் ​ெடாக்டராக வருவாள் நல்லா படிக்கின்றாள் என தோட்டத்தில் உள்ள சக தொழிலாளர்களிடமும் தினமும் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வான்  

குமாரியோ தன் தோழி சுந்தரியின் சகோதரனோடு எப்படியோ காதல் வசப்பட்டு விட்டாள். தினமும் செல்போனில் பேசுவதும், குறுந்தகவல் அனுப்புவதும், வெளியில போய் வருவதும், பஸ்ஸில் செல்வதும் என சுதந்திர பறவைகளாய் சுற்றி திரிந்தாள். தன் காதலனோடு யாருக்கும் தெரியாமல் பழகிக் கொண்டிருந்ததாள், தாய் தந்தை பாசம், தனக்கு மாதம் எட்டாயிறத்திற்கு மேல் செலவு செய்யும் பெற்றோர், சகோதரரர், உற்றார் உறவினர்கள் எல்லாம் இப்போது மறந்து விட்டு, காதலில் மூழ்கி விட்டாள். தன் பெற்றோரைப் பார்க்க வீட்டுக்குச் செல்வதும் குறைந்து விட்டது.  

சிறிது சிறிதாக படிக்கின்ற ஆர்வமும், தன்மையும், நடையுடை பாவனையும் மாறிவிட்டது. விடயத்தை கேள்விப்பட்டவர்கள், எவ்வளவு புத்தி சொல்லியும் அவள் மசியவில்லை. காதலன் குமாரை மறக்க முடியாமல் தவித்தான். குமார் பாடசாலை கல்வியை இடையில் விட்டுவிட்டு கொழும்புக்கு வேலைக்குச் சென்று விட்டான். இவனுடைய சம்பளத்தை நம்பி ஒரு குடும்பமே இருக்கின்றது. என்ன செய்வது காதல் கண்ணை மறைக்கும் என்பது இவர்களுக்கு மட்டும் புரியுமா?  

குமாரிக்கு உயர்தரப் பரீட்சை நெருங்கியது. காதலனை பிரிந்து விடுவோமோ என்பதை நினைக்கும் போது வேதனையாக இருந்தது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். பரீட்சையும் எழுதுகின்றாள்.  

நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையை சிறப்பாக எழுதியதாகவும், தனக்கு கட்டாயம் நல்ல ரிசல்ட் வரும் என்றும் யுனிவர்சிட்டி கிடைக்கும் என்றும், சொல்லித் திரிந்தாள். நான் டொக்டராக வருவேன். என உறுதியாக நம்பினாள்.  

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு இணையதளத்தில் வெளிடப்பட்டது. குமாரி மிகவும் ஆவலோடு தன்னுடைய சுட்டெண்ணைக் கொடுத்து பெறுபேற்றைப் பார்த்தாள். அந்த பெறுபேற்றை அவளால் நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் பார்க்கச் சொன்னாள். தன்னுடைய சுட்டெண்ணை பல முறை சரி பார்த்தாள். அவளுடைய பெறுபேறானது அனைத்துப் பாடங்களிலும் W... (Weak pass) என காணப்பட்டது.  

குமாரியாள் நம்ப முடியவில்லை. தன் இதயமே வெடித்து விடுவதுபோல் இருந்தது. தலைச்சுற்றியது. தன்னுடைய தாய், தந்தையின் கனவுகலெல்லாம் உடைந்து சுக்கு நூறாய் போனதை உணர்ந்தாள். இரண்டு வருட காலமும் செலவு செய்த பணம், நேரம், காலம், அலைச்சல், நம்பிக்கை எல்லாம் ஒரு நொடியில் பொழுதில் வீணாகி விட்டதை உணர்கின்றாள்.  

தாய், தந்தையிடத்தில் எப்படி போய் இந்த ரிசல்டைச் சொல்லுவேன். இவர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன்? என மனதுக்குள் அழுகின்றாள். என் மேல் நம்பிக்கை வைத்திருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை, நண்பர்கள், சமூகம் இவர்கலெல்லாம் கண்முன்னே நிற்கின்றார்கள். குமாரிக்கு அவமானம் தாங்க முடியவில்லை. தன்மேலேயே ஒரு வெறுப்பு ஏற்படுகின்றது. வாழ்க்கையில் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதைப் போல் உணர்கின்றாள்.  

படிக்கப் போன இடத்தில், காதல் வசப்பட்டு இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டதை நினைக்கும் போது, இறந்துவிட வேண்டும் என, குமாரி நினைத்துக் கொண்டு மிக வேகமாக வீட்டை நோக்கி நடக்கின்றாள்.  

இதே சிந்தனையோடு வீட்டுக்குச் செல்லும் குமாரிக்கு வீட்டில் பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்கு முன் தோட்டத்து மக்கள் அனைவரும் கூடி நிற்பதை காண்கின்றாள். தன் மகள் அனைத்து பாடங்களிலும் பெயிலாகி விட்டதை கேள்விப்பட்டச் சுந்தரம் அவமானம் தாங்க முடியாமல் உரத்தைக் கலக்கி குடித்து விட்டார். தோட்டத்து மக்கள் சுந்தரத்தை உடனே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய் விட்டார்கள்.  

இதனைக் கேள்விப்பட்ட குமாரி, 'ஐயோ அப்பா...' என கத்திக் கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு ஓடுகின்றாள். அங்கு தன் தந்தையின் நிலையைப் பார்த்த குமாரி, கத்தி கதறுகின்றால். 'அப்பா நீங்க இல்லாம நா வாழ மாட்டேன். அப்பா என்ன மன்னச்சிடுங்க நா செஞ்ச தவறையெல்லாம் உணர்ந்துட்டேன். நா எப்டியாவது இரண்டாம் முறை படித்து பாஸ்பண்ணுவேன். என்ன நம்புங்க...' என தந்தையைக் கட்டிப்பிடித்து அழுகின்றாள். தாய் சோகத்தில் கணவனின் பக்கத்தில் இருக்கின்றாள்.  

ஒரு கிழமையின் பின் தந்தை உடல்தேறி வீட்டுக்கு வரும் போது, தன் மகள் ஓர் இலட்சிய வெறியோடும், வைராக்கியத்தோடும் நான் ​ெடாக்டராக வருவேன் என கதவில் எழுதிப் போட்டு படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியடைகின்றார். 

கொட்டகல
இரா. சிவலிங்கம்.

Comments