தாயக அரசியலையும் ஆக்கிரமிப்பு அரசியலையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்த கெப்பட்டிபொல | தினகரன் வாரமஞ்சரி

தாயக அரசியலையும் ஆக்கிரமிப்பு அரசியலையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்த கெப்பட்டிபொல

பிரித்தானிய படையணியுடன் பதுளைக்குச் சென்ற மொல்லிகொடை பதுளையிலிருந்து ஊசன்வெல்லையை நோக்கி நகர்ந்தான். அங்கு நிலை கொண்டிருந்த மேஜர் மெக்டொனல் விளக்கமான கடிதமொன்றை ஆளுநர் பிரவுன்றிக் பார்வைக்கு அனுப்பிவைத்தான். 

1817நவம்பர் மாதம் 02ம் திகதி, ஈத்தவைத்தை ஊசன் வெல்ல முகாமிலிருந்து இக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. 

‘முப்பதாம் திகதி இரவு இங்கு குறிப்பிடத்தக்க சம்பவம் ஏதும் நிகழவில்லை. எனினும் அதிகாலையில் எமது முகாமுக்கு 250யார் தொலைவில் உள்ள குன்றின் மீதிருந்து முகாமை நோக்கி இரண்டு தடவைகள் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன. உடனடியாக எமது குழுவினர் ஈர்த்தனவத்தையை நோக்கிச் சென்றனர். எவ்வித இடையூறுமின்றி இரண்டு மைல்தூரத்தை எமது படை கடந்துவிட்டது. எதிரே இடைவிடாது அம்புகள் ஏவப்பட்டு வந்தன. அங்கும் தொடர்ச்சியாக எமது அணியினர் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று, பகல் 12.30க்கு நாம் ஈத்தவைத்தையை வந்தடைந்தோம். 

மேஜர் வில்சன் மரணமடைவதற்கு இப்பிரதேச வாசிகளே காரணமாகும். இவர்களின் மூர்க்கத்தனமான செயல்களுக்குக் கடுந்தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது எனது கடமையென கருதுகின்றேன். அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களை தீயிட்டு கொளுத்துமாறு நான் கட்டளை பிறப்பித்துள்ளேன். எமது மேஜர் வில்சனை படுகொலை புரிந்தவர்களுக்கெதிராக நான் மேற்கொள்ளும் இந்நடவடிக்கையை எவரும் குறை கூற மாட்டார்களென நம்புகிறேன்.  

தீ வைப்பதற்கான காரணம் பற்றி தெளிவுபடுத்தும் அறிவித்தல்களை இப்பிரதேசம் முழுதும் விநியோகித்தும் உள்ளேன். பிரதேசவாசிகள் அமைதியாகவும், எமது நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டால் அவர்களுக்கு எவ்வித இடையூறும் நிகழாதெனவும் மேலும் அறிவித்துள்ளேன். 

நண்பகல் நாம் மேற்கொண்ட தீ வைப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த பிரதிபலன் கிட்டியது. முன்னர் இரவு வேளைகளில் நாம் கேட்க கூடியதாகவிருந்த கூக்குரல்களும், குன்றின் மீதிருந்து ஊளையிடும் சப்தமும் இன்றிரவு நிகழவில்லை. தீவைத்து துரத்தியடிக்கப்பட்ட கிராமவாசிகள் மலைகளை நோக்கி தவழ்ந்து தவழ்ந்து சென்று எவ்வித கூச்சலுமின்றி மௌனமாக ஒளிந்து கொண்டனர். 

நேற்று காலை பதினொருமணியளவில் லெப்டினண்ட் கெண்டோல் தனது படையணியுடன் பிந்தென்னையை நோக்கி பயணமானார். பி.ப 1.30மணியளவில் அவர் திரும்பி வந்தார். முதலமைச்சர் தமது குழுவுடன் எமது முகாமை நோக்கி வந்து கொண்டிருப்பதாக லெப்டிணண்ட் மூலம் அறியக்கிடைத்தது. இப்போது எமது வீரர்கள் தேக சுகத்துடன் இருக்கின்றார்கள். அதிகாரிகளும் சிப்பாய்களும் தமது கடமைகளைச் சீராக நிறைவேற்றி வருகின்றனர். 

துரைசாமி நாயக்கனை கைது செய்வதே எமது முக்கிய நோக்கமாகும். அதனால் ‘இங்கு மேலும் எத்தனை தினங்கள் நாங்கள் தரித்திருக்க நேரிடுமென கூறமுடியாது. கெட்டபோவ என்னுமிடத்தில் நிகழும் கலவரங்களை அடக்குவதற்காக அங்கு செல்ல தீர்மானித்துள்ளேன். மட்டக்களப்பிலிருந்து கெட்டபோல களஞ்சியசாலைக்கு உணவு பண்டங்கள் வந்து சேருமென எதிர்பார்க்கின்றேன். எமக்கு சார்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகின்றேன்.” 

நவம்பர் மாதம் 14ம் திகதி வெள்ளையருக்கு எதிரான சுதந்திரபோராட்டத்தை முறியடிக்கும் திடசங்கற்பத்துடன் மொல்லிகொடை பதுளையை நோக்கி பயணமானான். கைப்பெட்டிபொலையை நேரடியாக சந்திப்பதெனவும் அவனுடன் மனம் விட்டு பேசி கிளர்ச்சியை கைவிடக் கோருவதெனவும் திட்டமிட்டான் மொல்லிகொடை. 16ம் திகதி பதுளையை வந்தடைந்த முதலமைச்சரை கிராமவாசிகள் சந்தித்து தமது மரியாதையைச் செலுத்தினர், கிளர்ச்சியில் ஈடுபடாது முதலமைச்சருடன் இணைவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.  

ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களுக்கு மத்தியில் தமது இனத்தவனாகிய முதலமைச்சரின் வருகை சற்று ஆறுதலை அம்மக்களுக்கு அளித்தது போன்ற நிலை அப்பிரதேசத்தில் உருவாகியது.  

பிரபுக்களும், சிங்கள பிரதானிகளும் இவ்வாறு மொல்லிகொடையுடன் இணைவது கண்டு ஆங்கிலேயர் தரப்பில் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனினும் கெப்பெட்டிபொல தரப்பிலிருந்து ‘துரோகி’ என்னும் முத்திரை மொல்லிகொடை மீது குத்தப்பட்டது. தனது புரட்சி நடவடிக்கைகளிலிருந்து கெப்பெட்டிபொலையும் இதர போராளிகளும் சற்றும் மனம் தளராதிருந்தனர். 

சுதந்திர வேட்கையுடன் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் மனம் மாறாதிருக்கவும், தளராதிருக்கவும் ஆட்சி பொறுப்புமிக்க ஓர் அரசன் இருக்கவேண்டுமென கருதினான் கெப்பெட்டிபொல. எனவே துரைசாமி நாயக்கனை மன்னனாக முடிசூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டான். அரச மாளிகையொன்றையும் இதர பிரதானிகள் அமைச்சர்களுக்கான வதிவிடங்களையும் தயார்ப்படுத்தும் பொறுப்பு கெப்பெட்டிபொலையிடம் கையளிக்கப்பட்டது. பதுளை பிரதேசத்தில் தியபெத்மே என்னுமிடத்தில் அலுத்வெல என்னும் கிராமத்தில் மன்னனுக்கான மாளிகை தயாரானது. முடி சூட்டு விழாவுக்கான அறிவித்தலை சிங்ஹலே (மத்திய மலைநாடு) முழுவதும் விடுக்கப்பட்டது. ஒவ்வொரு திசாவையும் தமது பிரதேச கொடியையும் தாங்கியவாறு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தான் கெப்பெட்டிபொல. 

மத்திய மலைநாட்டையும் ஆங்கிலேயர் தம்வசம் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு துரைசாமியை மன்னனாக்கும் பட்டாபிஷேக பெருவிழாவை ஏற்பாடு செய்யுமளவுக்கு துணிச்சல் மிக்க போராளியாக காணப்பட்டான் கெப்பெட்டிபொல. இங்கே நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றினாலும் பரவாயில்லை, நாயக்கன் நாட்டை ஆளக் கூடாது என்று எண்ணியவன் எஹலபொல. நாயக்கன் ஆட்சி செய்வது வெள்ளையன் நம்மை அடிமைப்படுத்துவதைவிட எவ்வளவோ மேல் என்பது கெப்பட்டிபொலவின் கொள்கையாக இருந்தது.  

ஆங்கிலேயரின் ஆட்சியை சகித்துக்கொள்ளாத அனைத்து பிரதானிகளுக்கும் கெப்பெட்டிபொலையின் முயற்சி பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட தினத்திற்கு முன்னரே அவர்கள் தியபெத்மே மாளிகையை வந்தடைந்திருந்தனர். மறுநாள் நிகழவிருக்கும் பட்டாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை அவர்களும் சிறப்பாக மேற்கொள்வதில் ஒத்தாசையாகவும் இருந்தனர்.  

வெவ்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பிரதானிகள், தலைவர்கள், பிரபுக்களுக்காக விசேட தரிப்பிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தத்தமது தரிப்பிடங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களின் திசாவைக்குரிய கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. முடிசூட்டிவிழாவுக்கான விசேட மேடை மாளிகை முன்றலில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 

அரசருக்கான பல்லக்கு மற்றும் சாமரம் முதலியன அலங்காரங்களுடன் மேடையில் காட்சி தந்தன. மண்டபத்தின் இருபுறமும் வரிசையாக ஒவ்வொரு திசாவைக்குமான கொடிகள் பறக்கவிடப்பட்டு விழாக்கோலம் வெகு நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. பதுளை பிராந்திய வரலாற்றில் முதல்தடவையாக இவ்வாறு பட்டாபிஷேக பெருவிழா அரச விழாபோல பிரகாசித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் இந்நாடு சிக்கியிருந்த காலக்கட்டத்தில் இப்படியும் துணிச்சல் மிக்கதோர் மகுடம் சூட்டுவிழா கெப்பெட்டிபொலையைத் தவிர வேறு எவராலும் ஏற்பாடு செய்திருக்க முடியாததுதான். 

துரைசாமி நாயக்கரின் பட்டாபிஷேக பெருவிழா பற்றிய சகல விபரங்களையும் மேஜர் மெக்டொனல்ட் அறிந்து கொண்டான். விழாவுக்கு சமூகமளித்து விட்டு திரும்பிச் செல்கையில் கைது செய்யப்பட்ட டொன் பஸ்டியன் கொமசாரு அப்புஹாமி என்பவன். இவ் விபரங்கள் அனைத்தையும் வெள்ளைக்காரர்களிடம் புட்டு வைத்தான். அத்தோடு முடிசூட்டுவிழா தொடர்பான மிக முக்கியவிடயங்கள் பலவற்றையும் அவன் திருவாய் மலர்ந்திருந்தான். 

ஊவா, வெல்லஸ்ஸ, வலப்பனை, பிந்தென்னை ஆகிய பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந்த தலைவர்களின் வாசஸ்தலங்கள் திபேபெத்தே மாளிகையின் இருமருங்கிலும் அமைந்திருந்தன. மிக அழகான அலங்கார வேலைப்பாடுகளுடன் பிரதான மேடை பிரகாசித்தது. மாளிகைக்கும் விழா மேடைக்குமான பாதையின் இருமருங்கிலும் நூற்று ஐம்பதுபேர் கொண்ட பாதுகாப்பு அணி வில் அம்புகளுடன் ஆயுத பாணிகளாக அணிவகுத்து நின்றது. 

இப் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பின் மத்தியில் துரைசாமி நாயக்கரின் வருகை நிகழ்ந்தது. நாயக்கர் தலையிலிருந்து பாதம் வரையிலும் வெள்ளை ஆடையுடன் காணப்பட்டார். மாளிகைக்குள் மன்னர் பிரவேசித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அணியினர் மாளிகையைச் சூழ்ந்து கொண்டனர்.  

அப்போது அரச அதிகாரியொருவரின் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சூரிய அஸ்தமனம் நிகழ்ந்து 18விநாடிகளின் அமையும் சுப முகூர்த்த வேளையில் மன்னரின் தரிசனத்துக்காக சகல பிரதானிகளும் மாளிகையின் பிரதானவாயிலுக்கு சமூகமளிக்கவேண்டுமென அப்பிரகடனம் தெரிவித்தது. 

குறிப்பிட்ட சுப வேளையில் மாளிகையின் பிரதான வாயிலுக்கு மன்னர் பிரசன்னமாகும் நிகழ்வு இடம்பெற்றது. கூடியிருந்தோர் ஆரவார கோஷம் எழுப்பியும் வாழ்த்தொலியும் கிளப்பினர். விழா ஆரம்பமாகியது. விழா மேடைக்கான வழியின் இருமருங்கிலும் யானைப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். 

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(சிங்ஹலே ஜாத்திக சட்டன்)
சி.கே. முருகேசு

 

 

Comments