காட்டுமிராண்டித்தனத்தை வென்ற தெவரப்பெருமவின் மனிதநேயம் | தினகரன் வாரமஞ்சரி

காட்டுமிராண்டித்தனத்தை வென்ற தெவரப்பெருமவின் மனிதநேயம்

உலகில் அருகிவரும் மனித நேயத்தின் உச்சக்கட்டத்தின் மேலுமொரு எடுத்துக்காட்டாக அண்மையில் களுத்துறை மாவட்டத்தில் தெபுவனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நேபட கல்கந்த அல்லது மோர்வுட் எனப்படும் தோட்டத்தில் இடம்பெற்ற ஏழு பிள்ளைகளின் தந்தையான பிச்சை ராஜு என்பவரின் மரணம் அமைந்துள்ளது.  

பிச்சை ராஜு என்பவர் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக களுத்துறை மாவட்டத்தில் நேபட கல்கந்த அல்லது மோர்வுட் எனப்படும் தனியார் தோட்ட குடியிருப்பில் வசித்து வந்ததுடன் அத் தோட்டத்தின் வளர்ச்சிக்காகவே நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து கங்காணியாக தொழில் புரிந்து தனது 77வயதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி காலமானார்.  எனினும் அவரது சடலத்தை அத் தோட்ட உரிமையாளர்கள் அதே தோட்டத்தில் தகனம் செய்வதற்காக அனுமதிக்க மறுத்து தெபுவனை பொலிஸ் நிலையத்தில் காவலாளி மற்றும் தோட்டத்தின் உரிமையாளர் மூலம் செய்த முறைப்பாட்டை அடுத்து,  தெபுவனை பொலிஸார் மரண வீட்டுக்கு சென்று சடலத்தை இத் தோட்ட எல்லைக்குள் புதைக்க வேண்டாம் எனவும் புதைப்பதற்கு வேறொரு இடத்தை தேடிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக சடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் செய்வதறியாது தவித்த உறவினர்கள், வேறு வழியின்றி இப் பிரதேச தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சினைகளின் போது தானாகவே முன் வந்து உதவிக்கரம் நீட்டும் அப்பிரதேச மக்களால் "சண்டி மல்லி" என அன்புடன் அழைக்கப்படும் ஏழை மக்களின் அரசியல்வாதியும், களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பாலித்த தேவாரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களின் துயர நிலைமையை தெளிவுபடுத்தி உள்ளனர். இதனையடுத்து வழமைபோல் உடனடியாக செயல்பட்ட பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும குறித்த இடத்துக்கு வந்து உயிரிழந்தவரின் சடலத்தை புதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதேநேரம் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை அங்கே புதைப்பதற்கு எதிராக நீதிமன்ற  தடை உத்தரவை பெற்றுள்ளதாகவும் அதனால் அங்கே புதைக்க வேண்டாம் என கூறியும் தடையுத்தரவை சமர்பித்துள்ளனர்.  

எனினும் அந்தத் தோட்டத்துக்கு 192ஆம் ஆண்டு முதல் சொந்தமாக இருந்து வரும் இம் மயானத்தில், இத் தோட்டத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்த ஒருவரின் சடலத்தை புதைக்க முடியாதா எனக் கேள்வி எழுப்பிய பிரதியமைச்சர், குழியும் வெட்டிய பின்னர் வேறு இடத்திற்கு சடலத்தைக் கொண்டு செல்லும் வாய்ப்பும் இல்லை எனவும்  இதுவே இத் தோட்டத்துக்குறிய மயானம் என்பதால் இதுவரை காலமும் இத்தோட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை இம் மயானத்திலேயே தகனம் செய்யப்படுவதாலும், அந்த அப்பாவிக் குடும்பத்தை மட்டும் பழிவாங்கும் நோக்கில் இப் பிரச்சினையைத் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பிரதியமைச்சரே முன்னின்று இறுதிக் கிரியைகளையும் நடத்திய வைத்தார் என்பது விசேடமாக இங்கு குறிப்பிடத்தக்கது.  

இச்சம்பவம் குறித்து மத்துகமை நீதிமன்றத்தில் தெபுவனை பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி மத்துகம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெருமவுக்கும் மேலும் ஐவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி மத்துகம நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் மூலம் பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட்ட உயிரிழந்தவரின் கடைசி மகனான ராஜு மோகனராஜ் மேலும் உறவினர்களான சுப்பிரமணியம் ராஜசேகர், லெட்சுமணன் ஆறுமுகம், மற்றும் திருச்செல்வம் இச்சிலா ஆகியோர் ஆஜராகினர். தெபுவனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ. அருளானந்தத்தின் பணிப்புக்கு அமைய (20660) சார்ஜன்ட் கே. ஏ. ஆரியசேனஆஜரானார்.  சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நீதிமன்றத்தின் கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலத்தினை வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அவர்கள் அதனைச் செய்யவில்லை  எனவும் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் தெரிவித்தார்.  

மேலும் சந்தேக நபர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளான காமினி நல்லபெரும மற்றும் சுனேத் ஹப்புஹெட்டி நிபந்தனைகளின் அடிப்படையில் தனது தரப்பினரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்ட நீதிவான் அடுத்த வழக்கு தவணையில் வாக்கு மூலங்களை முன்வைக்குமாறு குறிப்பிட்டதுடன் சந்தேக நபர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மத்துகம நீதிமன்ற பிரதான நீதிவான் ஹேமமாலின ஹால்பன்தெனிய உத்தரவிட்டார்.  

மரணமடைந்த பிச்சை ராஜு

கருத்துத் தெரிவித்த உயிரிழந்தவரின் இரண்டாவது மகளான ராஜு சாந்தி (56) எனது கணவர் பெருமாள் செல்வராஜ் (54) கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனது தந்தைதான் பிச்சை ராஜு (77). எங்கள் குடும்பத்தில்  ஏழு பிள்ளைகள் பெரிய அக்காவும் இதே தோட்டத்தில் தான் வாழ்ந்து இறந்தது போனார். அவரையும் இந்த தோட்டத்தில் புதைக்க தோட்ட உரிமையாளர்கள் விடவில்லை. வேறோரு இடத்தில் புதைக்குமாறும் அதற்கு 50000ரூபாய் பணம் தருவதாகவும் கூறினார். ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இன்று வரை அப் பணம் கிடைக்கவில்லை. அவரையும் வேறு தோட்டத்தில் தான் தகனம் செய்தோம். இப்போது எனது கடைசி தம்பியையும் சிறையில் அடைத்தது விட்டார்கள். மேலும் இன்னுமொருவரும் தேடப்பட்டு வருகிறாராம். அவர் யார் என தெரியவில்லை. இந்த நிலையில் நாங்கள் அனைவரும் பரம்பரை பரம்பரையாக இந்த தோட்டத்தை நம்பித் தான் தொழில் புரிந்து வருகிறோம் இந்த தோட்டத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.  வீட்டு வசதி, போக்குவரத்து வசதி என எதுவும் இல்லை.பிள்ளைகள் பல மைல் தூரம் பாடசாலைகளுக்கு நடந்து செல்ல வேண்டும். பொருட்கள் வாங்கிக் கொள்ள கடை வசதி எதுவுமே இல்லை. இந்த தோட்டம் தனியாருக்கு சொந்தமானது. 75ஏக்கர்களைக் கொண்ட இந்த தோட்டம் தற்போது நட்டத்தில் இயங்கி வருகிறது. இறப்பர் மரங்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு தொழில் ஏதும் இல்லாத நிலையில் கிராமப்புறங்களுக்கு சென்று ஏதாவது கூலித் தொழில் செய்து வருகிறோம்.

அவ்வாறு கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே பெரும் பொருளாதார சவாலுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எங்களை இவ்வாறு கொடுமைப்படுத்தி பழிவாங்கும் நோக்கில் உரிமையாளர் செயல்படுகின்றனர். அன்று தெய்வமாக பாலித்த தெவாரப்பெரும ஐயா மட்டும் முன் நிற்காவிட்டால் எங்களின் நிலையை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. அன்று இருந்த நிலையில் ஏற்பட்ட பயத்தால் எங்களால் பூதவுடலை புதைப்பதற்கும், முன் செய்ய வேண்டிய இந்துச் சமயச் சடங்குகளை கூட சரியான முறையில் செய்யமுடியாது போய்விட்டதும் பெரும் கவலையாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.  

இத்தோட்டத்தில்  10குடும்பங்களைச் சேர்ந்த 50பேர் வரை வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் உறவினர்களே நாங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கல் குவாரிக்கு இடைஞ்சலாக இருப்போம் என் நினைத்து எங்களை தோட்டத்தை விட்டு விரட்டியடிக்கும் நோக்கிலும் எங்கள் குடும்பத்தார்களுடன் விசேடமாக தம்பியுடன் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பகை காரணமாகவும் இப் பழிவாங்கல் நடைபெறுவதாகவும், கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன் உயிரிழந்த வேலாயுதம் மாரியாய் என்பவரினதும் அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் இறந்த அவரின் மகளினதும் இறுதிக் கிரியைகள் மேற்குறிப்பிட்ட மயானத்திலேயே நடந்ததாகவும் எங்கள் குடும்பத்தினருக்கு எதிராக மட்டுமே இந்த புதிய நீதி எனவும் மேலும் தெரிவித்தார்.  

பிறந்தநாள் முதல்  வாழ்வதற்கு ஓர் அங்குல நிலம் கூட சொந்தமென்றில்லாது வாழ்நாள் முழுவதும் தோட்டம் தோட்டம் என தோட்டத்திற்காக 10 ×12அடி அறைகளில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மக்கள் இவர்கள். இறுதியில் அந்த அப்பாவிகளின் சடலத்தை புதைக்க கூட ஓர் இடம் கொடுக்காத காட்டு மிராண்டிகளுக்கு எதிராக அப்பாவிகளின் தோழனாக தோள் கொடுத்த அந்த மா மனிதன் இன்று சிறையில் வாடுகிறான் என்ற ஆதங்கத்தை இம்மக்களிடையே காணமுடிகிறது.

நரேன் ஜெயரட்னம்

Comments