மின்சாரம் தாக்கியதில் காரைதீவு மாணவி பலி | தினகரன் வாரமஞ்சரி

மின்சாரம் தாக்கியதில் காரைதீவு மாணவி பலி

மின்சாரம் தாக்கியதால் காரைதீவைச்சேர்ந்த 17வயது மாணவியொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இச்சோக சம்பவம் நேற்று (7) சனிக்கிழமை காலை சம்பவித்துள்ளது. காரைதீவு 10ஆம் பிரிவைச் சேர்ந்த நடேஸ்வரராஜன் அக்ஷயா என்ற மாணவியே இவ்விதம் பலியானவராவார். இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் க.பொ.த. உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் முதலாம் வருடத்தில் பயின்று வருபவராவார். 

குடும்பத்தில் இருபிள்ளைகள். மூத்தவன் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். இளையவள் அக்ஷயா நேற்றுக் காலை கல்முனையிலுள்ள தனியார் கல்வியகத்திற்கு

செல்வதற்காக நீராடிவிட்டு தலையை காற்றில் உலரவைக்கும் பொருட்டு மின் விசிறியின் ஆளியை தொட்டபோது அங்கு இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமென அவரது தந்தையார் நடேசுவராராஜன் தெரிவித்தார். 

சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வெளிபல்ப் எரிந்து கொண்டிருந்தது. சம்பவத்தை கேள்வியுற்றதும் தனியார் கல்வியகம் சடுதியாக வகுப்புகளை மூடிவிட்டு அனைத்து மாணவர்களும் விரிவுரையாளர்களும் காரைதீவுக்கு வந்தனர்.

கல்முனை உவெஸ்லி கல்விச் சமூகமும் விரைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு மின்சாரத்தால் ஏற்பட்ட மரணம் இது என்பதால் ஊரே சோகமயமானது. இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

காரைதீவு குறூப் நிருபர்

Comments