இழுபறியான பிரச்சினைக்குத் தீர்வு! | தினகரன் வாரமஞ்சரி

இழுபறியான பிரச்சினைக்குத் தீர்வு!

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் நீண்ட காலமாக முகங்கொடுத்து வந்த விளையாட்டு மைதான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. கடந்த 40 வருட காலமாக பாடசாலைக்கென தனியான விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில்  தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு சொந்தமான மைதானத்தையே பயன்படுத்தி வந்தது. இதனால் பல்வேறு அசெளகரியங்களுக்கு பாடசாலை சமூகம் முகங்கொடுக்க நேர்ந்தது.  

தலவாக்கலை லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவராக இருந்த பத்மகீர்த்தி ஹேமச்சந்திரவினால் ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்காக இந்த காணி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும். அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டு பின்னர் தலவாக்கலை லிந்துலை நகர சபை மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.  

தலவாக்கலை நகரில் நீண்டகாலமாக தமிழ்ப்பாடசாலையொன்று இல்லாத நிலையில் சுமனமகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு கட்டடத்தில் பகுதிநேரமாக தமிழ்ப்பிரிவு இயங்கி வந்தது. இந்நிலையில் அப்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 1979 ஜனவரி 29 முதல் மிடில்டன் தேயிலைத் தொழிற்சாலையில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றம்பெற்று இயங்க ஆரம்பித்தது. இக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியும் இயங்கிவந்தது. கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் வரையான வகுப்புகள் நடைபெற்று வந்து பின்னர் உயர்தரத்தில் பல பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கல்வி ரீதியில் இந்த வித்தியாலயம் பல சாதனைகளை அடைந்திருக்கிறது.  

இந்நிலையில் மேல் கொத்மலை அபிவிருத்தி திட்டத்திற்காக பாடசாலை அமைந்திருந்த முழு காணியையும் கட்டடங்களையும் வழங்க வேண்டியதாயிற்று. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பயனாக புதிய வகுப்பறை கட்டட தொகுதிகள் 4 கிடைக்கப்பெற்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மேல் கொத்மலை அபிவிருத்தி திட்டத்தினூடாக பாடசாலையும் அபிவிருத்தியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.  

இருப்பினும் மேல்கொத்மலை அபிவிருத்தி திட்டத்தினால் பாடசாலைக்குரிய வளங்கல் எதுவும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதில் விளையாட்டு மைதானமும் உள்ளடங்குகிறது. பாடசாலையின் பழைய கட்டடம் அமைந்திருந்த பிரதேசத்தில் சிறுவர் பூங்கா, கரப்பந்தாட்டம், வளைப் பந்தாட்டம் போன்றன விளையாடக் கூடியவாறான மைதான கட்டமைப்பு காணப்பட்டது. ஆனால் அவற்றிற்கு மாற்றீடாக மேல் கொத்மலை அபிவிருத்தித்திட்டம் எதனையும் செய்யவில்லை. இது தொடர்பாக மேல்கொத்மலை அபிவிருத்தி திட்டப் பணிப்பாளர், பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் செயலாளர்கள் உட்பட உறுப்பினர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். ஆனால் மைதானத்தை வழங்குவதில் இழுபறி நிலையே நீடித்தது.  

அதேவேளை மேல்கொத்மலை திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் செயற்றிட்ட பணிப்பாளராக இருந்த ரவீந்திரநாத் ​ெபர்ணாண்டோ, தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு புதிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்கப் போவதாகவும் அதன் பின் பழைய மைதானம் பாடசாலைக்கு கையளிக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் அளித்த வாய்மொழி உறுதி காற்றோடு கலந்து விட்டது. உறுதியளித்தாரே தவிர எழுத்து மூலமாக எந்தவொரு ஆவணமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே மைதான விடயம் மேலும் சிக்கலுக்குள்ளானது.  

இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்காக போட்டியிட்ட அசோக சேபால மற்றும் பாலமுரளி ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் நகரசபை வசமிருக்கும் பழைய மைதானத்தை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பெற்றுத்தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.  

2018 ஆம் ஆண்டு மேற்படி இவர்களே மாவட்டத்திற்கான மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின்போது இவ் விளையாட்டு மைதானம் தொடர்பில் பேசிவந்தார்கள். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளரும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான பத்மநாதன் சிவசாமியின் வேண்டுகோளுக்கமைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தற்போது நகரசபை வசம் இருக்கும் மைதானத்தை வித்தியாலயத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி வந்தார். பாடசாலைக்கென தனியான மைதானம் தொடர்பில் சகல தரப்பினருடனும் பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்ன மற்றும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என பலரையும் நேரில் சந்தித்து மைதானம் தொடர்பிலான பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதன் விளைவாக அண்மையில் குறித்த மைதானத்தை பாடசாலைக்கு வழங்குவது எவ்விதமான தடைகளும் இல்லை என முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் பரிந்துரை செய்ததன் விளைவாக தலவாக்கலை லிந்துலை நகரசபையில் அதற்கு உரிய தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  

ஒகஸ்ட் மாதத்திற்கான மாதாந்த அமர்வின்போது தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபாலவினால் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மைதானம் தொடர்பான பிரேரணை சபையில் முன்மொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மைதானத்தை பாடசாலைக்கு வழங்குவது தொடர்பில் உள்ள நியாயமான காரணங்கள், சட்ட ரீதியான விடயங்கள் மற்றும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்ற பின்னர் சபையில் அமர்ந்திருந்த சகல உறுப்பினர்களும் குறித்த தீர்மானத்தை பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஏகமனதான ஆதரவை வழங்கினர்.  

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த அந்த கனவு தற்போது நனவாகியிருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்த பாடசாலையின் அதிபர், சில ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் குழுவினரும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் மற்றும் குழுவினரும் மைதான விடயத்தில் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.   அதன்படி நீண்டகால குத்தகை அடிப்படையில் தலவாக்கலை லிந்துலை நகரசபை வசமிருந்த விளையாட்டு மைதானம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கையளிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான சகல விதமான எழுத்து ஆவணங்களும் வெகுவிரைவில் கையளிக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.  

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தலவாக்கலை லிந்துலை நகரபிதா அசோக சேபால தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் எந்தவித இடையூறுகளையும் தலவாக்கலை லிந்துலை நகர சபையோ அல்லது வேறு தரப்பினரோ ஏற்படுத்த முடியாது. பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்த மைதானத்தை வழங்குவதில் எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார். மைதானத்தைச் சூழவுள்ள 3 ஏக்கர் விஸ்தீரமான காணியையும் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து நகரசபை தலைவர் உட்பட சகல உறுப்பினர்களும் மகிழ்ச்சியையும் தமது நன்றியையும் தெரிவித்தனர்.

தலவாக்கலை து.சுரேன்   

Comments