பெருந்தோட்ட சுகாதாரத்துறையை அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவோம்! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட சுகாதாரத்துறையை அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவோம்!

(கடந்தவாரத் தொடர்) 

வாரமஞ்சரியுடன் மனம் திறந்து உரையாடுகிறார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவ​ெரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் 

இந்த அரசின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் இதன் சாதனைகள் வேதனைகள் குறித்து மதிப்பீடு செய்வீர்களா?  

பங்காளிக்கட்சிகளாக  இருந்தபோதும் சாதனைகளாக நாங்கள் பார்ப்பது குறிப்பாக, கடந்த காலங்களை விட பல சாதனைகளைச் செய்திருக்கிறோம். நிர்வாகப்பிரிவாக இருக்கட்டும் பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் அதிகரிப்பு, அதிகாரசபையைக் கொண்டு வருவது, வீடமைப்புத் திட்டங்கள், புதிய கிராமங்களை உருவாக்குவது போன்ற பல விடயங்களில் மக்களை தேசியமயப் படுத்தியிருக்கிறோம். இதனையே சாதனைகளாகக் கொண்டிருக்கிறோம்.

வேதனைகள் எனும்போது இன்னும் கூட இந்த மக்களை சுதந்திரமாக செயற்படமுடியாத பெருந்தோட்டக் கட்டமைப்புக்கு கீழ் தொடர்ச்சியாக வைத்திருப்பது, இந்த மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் முயற்சிகள் பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் இளைஞர் யுவதிகளை உள்வாங்கிக் கொள்வது சமூகம் சார்ந்த சவாலாகவும் அரசியல் சார்ந்த சவாலாகவும் இருக்கிறது. அரசாங்கத்தின் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும்போது அதற்குரிய தகைமைகளோடு எமது சமூகத்தில் கல்வி கற்றோர் வெளியாகவில்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். SLAS பரீட்சைக்குத் தோற்ற இளைஞர், யுவதிகள் தயாராக வேண்டும். ஜப்பானில் வேலைவாய்ப்பு இருக்கிறது. கோட்டா முறை இல்லாவிட்டாலும் எங்களுக்கென ஒரு ஒதுக்கீட்டை வழங்குகிறார்கள். ஜப்பான் மொழியை கற்ற 20 பேரைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இந்த ஐந்து வருடங்களில் நாங்கள் அடைந்த சாதனைகளுக்கு அப்பால் எங்களது தேர்தல் கோரிக்கை என்பது இந்த மக்களை பொருளாதார ரீதியாக எவ்வாறு வலுப்படுத்துவது இளைஞர் யுவதிகளை எவ்வாறு பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது என்பதாகவே இருக்கும்.  

தனி வீட்டுத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினாலும் அதை முன்னணியின் சாதனையாகவே கருத வேண்டும். மொத்தம் எத்தனை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன? அரசின் காலம் முடிவடைவதற்குள் இன்னும் எத்தனை வீடுகள் அமைக்கப்படும்?  

எத்தனை வீடுகள் என எண்ணிக்கை அடிப்படையில் பார்க்காது இத்திட்டத்தை எண்ணக்கரு அடிப்படையில் பார்க்க வேண்டும். எம்மை பேட்டி காண வருபவர்கள்  எவரும்  முன்னெப்பொழுதும் கேட்காத ஒரு கேள்வியாக இத்திட்டத்தை பற்றி கேட்குமளவிற்கு   வீட்டுத்திட்டம் பிரபலமாகியிருக்கிறது. முன்பு எங்கெல்லாம் வீடு கட்டினார்கள் என்பதை அடையாளம் காணமுடியாத நிலையில் இன்று இங்கே இந்த புரம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்தக்கூடிய நிலை இருக்கிறது.

பண்டாரவளைக்குச் சென்றால் 150 வீடுகளைக் கொண்ட இளஞ்செழியன் புரம் இருக்கும். பூண்டுலோயா சென்றால் 400 வீடுகளைக் கொண்ட மகாத்மா காந்திபுரம் இருக்கும். டயகம பகுதிக்கு சென்றால் 150 வீடுகளைக் கொண்ட ஆப்ரஹாம்சிங்கோ புரம் இருக்கும். மாத்தளைக்குச் சென்றால் 20 வீடுகளைக் கொண்ட இராமானுஜம் புரம் இருக்கும். புசல்லாவைக்குப் போனால் 20 வீடுகளைக் கொண்ட ராஜலிங்கம் புரம் இருக்கும் பொகவந்தலாவைக்குச் சென்றால் 100 வீடுகளைக் கொண்ட வெள்ளையன்புரம் இருக்கும். அதுபோல காலி, களுத்துறை மாவட்டங்களில் வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். பெயர் சொல்லக்கூடிய அடையாளப்படுத்தக்கூடிய திட்டத்திற்குள் வீடமைப்புத்திட்டம் வந்துவிட்டது. அதில் எண்ணிக்கை குறைவாக இருப்பது இந்நாட்டின் நிதிநியோடு சம்பந்தப்பட்ட விடயம். ஒரு லட்சத்து 63 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தினால் அமைச்சரவையால் எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்திலும் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் 2000 வீடுகளுக்கான நிதியே வழங்கப்படுகிறது. மேலதிகமாக நிதியை கேட்டால் நாட்டில் அந்தளவு நிதி இல்லை. இந்த அனுமதியை நிரப்புவதற்கு இந்திய வீடமைப்புத்திட்டம் போன்ற நன்கொடைத்திட்டங்களை நாங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். எனவே காணிகளைப் பெற்றுக்கொள்வது, வீடமைப்பை உருவாக்குவது, கிராமங்களை உருவாக்குவதில் உள்ள தடைகள் எல்லாவற்றையும் சட்ட ரீதியாக நீக்கிக்கொண்டு இத்திட்டத்தை முறைமைப்படுத்தும் திட்டமாக மாற்றியிருக்கிறோம்.  

எனவே எண்ணிக்கையை இங்கு பார்க்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். எண்ணிக்கை நிதிசார்ந்த பிரச்சினை. அனுபவமுள்ள பத்திரிகையாளர் என்ற வகையில் 10 வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்ட மக்களிடம் போய் கேட்டால் கோயில் பிரச்சினையைத்தான் பிரதான பிரச்சினையாக சொல்வார்கள். ஆனால் இன்று கேட்கும் பத்துப்பேரில் எட்டுப்பேர் எனக்கு சொந்தக்காணியும் சொந்த வீடும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்குமளவிற்கு மக்களிடம் மாற்றம் வந்திருக்கிறது என்றால் இலக்குதான் முக்கியமே தவிர எண்ணிக்கையல்ல. திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் என்ற உடன்பாடு எனக்கிருக்கிறது. அதற்கான பலமான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.  

அமைச்சின் பெயர் புதிய கிராமங்கள் என்றிருந்தாலும் இதுவரை இதுதான் நாங்கள் அமைத்திருக்கும் புதிய மலையக கிராமம் என்று சொல்லும் வகையில் ஒரு முழுமையான கிராமம்கூட உருவாக்கப்படவில்லையே! பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் என்றுதானே அழைக்க வேண்டியிருக்கிறது? சிங்களக் கிராமங்கள் தோட்டத்தில் இருந்து ஒரு பகுதி காணி பிரித்தெடுக்கப்பட்டே கிராமம் உருவாக்கப்படுகிறது. அதை ஏன் நீங்கள் பின்பற்றவில்லை?  

புதிய கிராமங்களின் பெயரைச் சொல்லி அழைக்காமல் இருப்பது பொதுமக்களினதும் ஊடகங்களினதும் பிரச்சினை என்றே நினைக்கிறேன். அதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் வீடுகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு டன்சினன் தோட்டத்தில் இப்போது மகாத்மாகாந்தி புரம் என பெயரை வைத்து திட்டத்தை வைத்திருக்கிறோம். இனி தபால் போக்குவரத்திலும் மக்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான பொறுப்பை ஊடகங்களும் சிவில் சமூகங்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். புதிய வீட்டுத்திட்டத்தைக் கொண்டுவந்து புதிதாக பெயர் வைத்த பின்னரும் பழைய பெயரில் அழைப்பதையே வழக்கமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் மாற்றம் வேண்டும். சமூகம் சில பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும். இளஞ்செழியன் புரம் என பெயரிட்டு அவர் யார் என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறோம். அதனை எல்லா ஊடகங்களும் பிரசுரிக்கின்றன. ஏபிரஹாம் சிங்கோவைப் பற்றி எழுதிய பின்னர் அவரது மருமகன் ஒருவர் வந்து எம்மிடம் ஏபிரஹாம் சிங்கோ எனது மாமாதான். ஆனால் இந்தளவுக்கு பிரபலமானவர் என்று இப்போதுதான் தெரிகிறது என்கிறார். எங்கோயோ இருக்கும் விஜயையும் அஜித்தையும் பற்றிக்கொள்பவர்கள் நமது சமூகத்திலிருந்தவர்களைப் பற்றி இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். இளைஞர் அமைப்புகளை, விளையாட்டுக் கழகங்களை, ஆலயத்தின் பெயர்களை புதிதாக உருவாக்கப்பட்ட கிராமத்தின் பெயருடன் இணைத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாக பெயரில் மாற்றம் ஏற்படலாம். தோட்டப் பாடசாலைகள் மட்டத்திலிருந்தே இதனை ஆரம்பிக்கலாம். ஊடகங்களுக்கு இதில் பாரிய பங்களிப்பு இருக்கிறது. சிங்களக் கிராமங்களைப் பாருங்கள் புதிதாக ஒரு கிராமம் உருவானால் அதன் பின்னர் அதன் பெயர்கொண்டே அழைப்பது வழக்கமாகிவிட்டது. அதுபோல நாமும் மாற வேண்டும்.  

அமைக்கப்படும் வீடுகள் தரமற்றவை, கூரைகள் காற்றில் பறக்கின்றன, விரிசல்கள் காணப்படுகின்றன எனப்பல குற்றச்சாட்டுகள். 7 பேர்ச் காணி போதாது, 12 பேர்ச்சாவது இருக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுகின்றனவே! உங்கள் பார்வையில்...  

காற்றில் பறந்த அக்கூரை வீடு எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வீடுகளைக் கட்டும்போது திகாம்பரம் வீடுகளைக் கட்டவில்லை என்பவர்கள் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தால் திகாம்பரம் கட்டிய வீடுகளில் கூரைகள் காற்றில் பறந்ததாக கூறுகின்றனர். இது அரசியல் ரீதியான பார்வை. அமைச்சு வேலை செய்வது மலைப்பாங்கானதும் மழையுடன் கூடிய காலநிலையும் கொண்ட ஒரு பிரதேசத்தில். இந்த கூரை பறந்ததாக குற்றஞ்சாட்டப்படும் இடம் பீதுறுதாலகாலை மலையடிவாரம். இன்னொன்று சிவனொளிபாதமலையை அடுத்துள்ள ஏழு கன்னியர் மலைப்பகுதி. இவ்விரு இடங்களுமே பலமாக காற்று வீசும் பகுதி. அந்த இடத்தில்தான் அந்த மக்கள் குடியிருக்கிறார்கள். வெலிஓயாவில் காற்றில் பறந்த வீடு அமைந்திருப்பது கடுமையான காற்று வீசிய பகுதியில். 50 வீடுகளில் இரண்டு வீடுகளுக்கு இந்த ஆபத்து நேர்ந்துள்ளது. இதனைக் கட்டியவர்கள் பெருந்தோட்ட மக்கள். நாங்கள் அரசாங்கத்திடம் காணியைப் பெற்றுக்கொடுக்கிறோம். அரசாங்கம் நிதியை வழங்குகிறது. மக்கள்தான் அதனைக் கட்ட வேண்டும். அதற்கான கட்டுமான பொறியியல் உதவிகளை வழங்குவது செஞ்சிலுவைச் சங்கம். அதனை எவரும் சொல்லவில்லை. செஞ்சிலுவைச்சங்கத்தினரிடம் இது தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்.  

எதிர்காலத்தில் சொந்தக்காணியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தினரைப்போல வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த முடியுமா?  

மீண்டும் மீண்டும் சொல்கிறோம் நாங்கள் சொந்தக்காணி வழங்கத் தொடங்கிவிட்டோம். அதனை உடகங்கள் வெளியிட வேண்டும். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழங்கப்பட்ட காணி உறுதியை எடுத்து தகவலறியும் உரிமையின் கீழ் விசாரித்து பாருங்கள். டன்சினன், டயகம பகுதி மக்களிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பத்திரிகையொன்றில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் சாப்பாட்டு செலவுகளின் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கம் வீடு கட்டுவதற்கு நிதி வழங்குகிறது. இலங்கை அரசாங்கம் காணி வழங்குகிறது. அதன் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நேரலையில் பேசுகிறார். இந்தியத்தூதவர், அமைச்சர்கள், அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் வருகிறார்கள். இவர்களுக்கான அந்த உபசரிப்பு செலவை யார் செய்வது? அதை ஒரு அமைச்சு செய்யக்கூடாதா?  

எல்.ஆர்.சி. காணியை வழங்குகிறது. அதற்காக அதற்கு பொறுப்பான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவை அழைத்து காணியுறுதி வழங்குகிறோம். அமைச்சர் ரவூப் ஹக்கீமை அழைத்து தோட்டங்களுக்கு நீர் விநியோகத்தை வழங்கத் தொடங்கிவிட்டோம். அதற்கொரு அடையாளமாகத்தான் அவரை அழைத்தோம். ஏன் கபீர் ஹசீமை அழைக்கிறோம்? அவருக்கு வாக்கு சேகரித்துக் கொடுக்கவா? அவர் வீதி அபிவிருத்தி அமைச்சர். நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை தோட்டப்பகுதிகளில் வீதி அபிவிருத்தியை ஆரம்பித்திருக்கின்றது. அதனை அடையாளப்படுத்து முகமாகவே அவர்களை அழைத்தோம். அதைப்போலவே இந்த விடயங்களையும் பார்க்க வேண்டும். இத் திட்டம் நடைமுறையில் இருக்கும்போதே சிலர் புதிய திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதனை முறியடித்து அமைச்சரவையில் வாபஸ் வாங்கச் சொன்னோம். அவற்றையும் பார்க்க வேண்டும்.

அத்திட்டத்தை முன்மொழிந்த செய்திகள் வந்தன. ஆனால் அதனை அமைச்சர் வாபஸ் வாங்குமாறு கோரியது தொடர்பான எந்தவொரு செய்தியும் வெளிவரவில்லையே! எமது வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். சிலர் தமது அரசியல் லாபத்திற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.  

மாதவன் ராஜகுமாரன் சீனா செல்ல நீங்கள் உதவியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! அங்கு நடைபெற்ற ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்று திரும்பி வந்ததும் விளையாட்டுத்துறை அமைச்சு கண்டுகொள்ளவில்லை. அதுபோல நமது மலையகத் தலைவர்களும் இது எதுவும் தெரியாதமாதிரி இருந்தார்கள். ஏதேனும் விபத்தோ, மரணமோ, சாதனைகளோ எதுவானாலும் இவர்கள் கண்டுகொள்வதில்லை என பரவலாக பேசப்படுகிறது.. இதற்கான காரணம் என்ன?  

உங்களது இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறேன். இது ராஜ்குமாருக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. இதுபோல இலங்கையில் பிரபலமில்லாத அல்லது வருமானத்தை ஈட்டித்தராத எல்லா விளையாட்டுகள் மீதும் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் நிகழ்கின்ற ஒரு விடயமாகும். லூஷியன் புஸ்பராஜ் என்ற ஆணழகனை இதற்கு முன்னர் பார்த்தோம். ஆனால் அதற்கு முன்னர் புஸ்பராஜை அறிந்திருந்தோமா? லூஷியன் புஸ்பராஜை இங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இன்னொரு நாடு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். ராஜ்குமாரனைப் பொறுத்தவரையில் ஒரு தேநீர் கோப்பையை வழங்கியதும் அதனை ஒரு போராட்ட வடிவமாக மாற்றியிருக்கிறார். அதற்கு பலம் சேர்க்க வேண்டும். அவர் சீனா செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் போவதற்கான வசதிகள் இல்லாமல் இருக்கிறார் என எமது பிரதேச சபை உறுப்பினரொருவர் சொன்னதும் உடனேயே அவரது வீட்டிற்குச் சென்று என்னிடமிருந்த பணத்தை கொடுத்து முகநூல் வழியாக எனது பிரச்சாரத்தை ஆரம்பித்து வைக்கிறேன். உங்களது மகன் நிச்சயமாக சீனா செல்கிறார் என கூறிவிட்டு லபுக்கலையிலிருந்து கொழும்பு வருவதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் எனது நெருங்கிய நண்பரொருவர் இரண்டரை இலட்ச ரூபா தொகையை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் காலை ராஜகுமாரன் தொடர்பு கொண்டபோது பயப்படாமல் இருங்கள் எல்லாம் நிச்சயம் நடக்கும் எனக்கூறினேன். அந்த உளவியல் ஆதரவை நாம் வழங்கி வருகிறோம். அதன் பின்னர் அவர் வெற்றிபெற்று திரும்பியதும் விளையாட்டுத்துறை அமைச்சு நடந்துகொண்ட விதத்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன்பதாகவே வெலிஓயாவில் சண்முகேஸ்வரன், தினேஸ்வரன் போன்றோர் தனிப்பட்ட ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்கள். இவ்வாறானவர்களை கவனிக்க வேண்டியதன் அவசியத்தை அமைசர் ஹரீன் பெர்னாண்டோவிடம் எடுத்துரைத்திருக்கிறேன்.  

எனது பள்ளிக்காலத்தில் சுகத் திலகரத்ன என்ற வீரருக்கும் இவ்வாறு நேர்ந்திருக்கிறது. அவர் விதுலிபுரத்தில் வாழ்ந்த ஒரு ஏழ்மையான இளைஞன். அவர் கஷ்டப்பட்டு முன்னேறி பல தடைகளைத்தாண்டி வந்து பிரபல விளையாட்டு வீரரானார். இப்படி ஒவ்வொரு துறைகளிலும் நாம் நுழையும்போது இவ்வாறான தடைகள், பிரச்சினைகள் ஏற்படும். இதனை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. ஒரேயொரு உதாரணத்தை சொல்லியாக வேண்டும். இந்த ராஜகுமாரனை பயிற்றுவித்த பீரிஸ் பிரசன்ன ஒரு சிங்களவர். அவரது முயற்சி இல்லாமல் அவர் போயிருக்கவே முடியாது.

தேநீர் கோப்பையை பரிசாகப் பெற்றதும் ராஜகுமாரன் என்னுடன் தொடர்புகொண்டு இவ்விடயத்தை தெரிவித்தார். அப்போது நான் அந்தப்போனை பயிற்றுவிப்பாளரிடம் கொடுக்குமாறு கூறி அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவரும் ராஜ்குமாரனை விட ஆத்திரப்பட்டார். கோப்பையை கொடுத்தாலும் பரவாயில்லை. இவர் யார்? ஏன்ன போட்டிக்குப் போனார், என்ன பரிசை கொண்டுவந்தார் போன்ற விபரங்களைக்கூட அந்த அதிகாரி பெற்றுக்கொள்ளவில்லை. அதனை வாங்கி அமைச்சரிடம் கொடுத்திருக்கலாம் என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது. விளையாட்டு வீரர்களான இராஜகுமாரன் மற்றும் சண்முகேஸ்வரன் இருவரும் தோட்டத்தொழிலாளியின் பிள்ளைகள்.

இருவருக்கும் இரண்டு வீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் திகாம்பரத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து 7 பேர்ச் காணியில் 10 லட்ச ரூபா பெறுமதியான வீட்டை நிர்மானிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் கடந்த 6ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  

வீடமைப்பு தவிர்ந்த சுகாதாரத்துறை, மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்களில் அமைச்சின் கவனம் எந்தளவில் இருக்கிறது?  

உட்கட்டமைப்பு விடயங்களில் வீதி அபிவிருத்தி பரவலாக தோட்டப்புறங்களிலும் காபட் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இல்லாத பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அரச நிர்வாகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இந்த மக்கள் அதற்குள் உள்வாங்ககாததன் காரணமாக உட்கட்டமைப்பை செய்வதற்கான பிரதான அமைச்சுக்களுடன் நேரடியாகத் தொடர்புகள் இல்லாத நிலை இருந்தது. உதாரணமாக வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை இருந்தாலும் கூட இந்த வீதிகள் அவற்றுக்குக் கீழ் இல்லை. தோட்ட வீதிகள் எனக்கூறி கம்பனிகள் பராமரித்த காலம் மாறிவிட்டது. இந்த தோட்ட வீதிகளை அரச நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதன் மூலமே மாற்றங்களைச் செய்யலாம். ஒரு சிஸ்டத்திற்கு கீழ் கொண்டுவர வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் யோசனைகளை பிரேரனைகளை முன்வைத்து. ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறோம்.  

அதேபோல சுகாதாரத்துறையையும் மந்தபோஷாக்கு, சிசு மரணம், கர்ப்பிணித்தாய்மாரின் மரணம் அதிகரிக்க காரணங்கள் இருக்கின்றன. பெருந்தோட்ட மக்களில் எவரும் தேசிய சுகாதாரத்துறையுடன் நேரடித் தொடர்புகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அந்த முறைமையை மாற்ற வேண்டுமேயொழிய நாம் மருத்துவம் வழங்க முடியாது. அதற்கான கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்றத்தில் மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எமது இந்தப் பதவிக்காலம் முடிவடைவதற்குள் அதனைச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளோம். இன்னும் ஒருமாத காலத்திற்குள் நல்ல செய்தியை கேட்பீர்கள். பெருந்தோட்ட சுகாதாரத்துறையை அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தே தீருவோம். என்னைப் பொறுத்த வரையில் மிகவும் திருப்தியுடன் இந்த ஐந்துவருட காலத்தை கடக்கிறேன் என்று சொல்லலாம். அடுத்து தேர்தல் வரப்போகிறது. எதிர்காலத்தில் நாம் தெரிவாவோம் என்று கூறுவதற்கில்லை. கிடைக்கப்பெற்ற ஐந்து வருடகாலத்தில் என்னால் என்னென்ன விதத்தில் இந்த மக்களுக்கு முறைமை மாற்று வேலைகளைச் செய்ய முடியுமோ அதை ஒரு பெசுபொருளாகப் பேசியதும் பாராளுமன்றத்தில் முன்வைத்து அதற்கான வேலைகளை திட்டமிட்டும் செய்திருக்கிறேன். அடுத்தமுறை அதிர்ஷ்டவசமாக நான் தெரிவாகாமல் விட்டால் அடுத்து வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கான பாதை மிகத் தெளிவாக இருக்கிறது என்பது உறுதி. 

பி. வீரசிங்கம்

Comments