மீண்டும் ஒரு தியனமன் யுகத்தை நோக்கி நகரும் சீனா! | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் ஒரு தியனமன் யுகத்தை நோக்கி நகரும் சீனா!

ஹொங்கொங் விவகாரம் அதீதமான அரசியல் அம்சமாக மாறிவருகிறது. சீனாவுக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற்கும் இடையிலான முரண்பாடாக ஹொங்கொங் விளங்குவதுடன் சீனாவின் உள்நாட்டு அரசியலில் மேற்குலகம் தலையீடு செய்வதற்கான வாய்ப்பு தொடர்பிலும் ஹொங்கொங் விடயம் கையாளப்படுகிறது. சீனா - அமெரிக்கப் போட்டி மட்டுமன்றி மேற்கு சீனப் போட்டியானது பெருமளவில்  முதன்மை பெற்றதொன்றாகவே காணப்படுகிறது. வெளிப்படையில் அமெரிக்காவுடனான போட்டி சீனாவுக்கு முதன்மையானதாக காணப்பட்டாலும், அது ஒட்டுமொத்த மேற்குலகத்திற்கும் எதிரானதாகவே பார்க்கப்படுதல் வேண்டும். இக்கட்டுரையும் ஹொங்கொங்_ -சீன விவகாரம், அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தால் பார்க்கப்படும் விதம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளது.  

கடந்த சில மாதங்களாக ஹொங்கொங் மக்கள் தமது நாட்டின் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக போராடி வருகின்றனர். அத்தகைய தீர்மானம் ஒன்று ஹொங்கொங் ஆட்சியாளரால் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்தே போராட்டம் வெடித்தது. ஆனால் அந்தப் போராட்டத்தின் பயனாக நாடு கடத்தும் விடயம் கைவிடப்பட்டதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் பின்பு நிலமை சுமூகமாகியதுடன் இயல்பு வாழ்வுக்கு ஹொங்கொங் மக்கள் திரும்பியிருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் மீண்டும் ஆட்சியாளர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நீடித்துள்ளனர். அது மட்டுமன்றி ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துப் போகுமளவுக்கு பெரும் போராட்டமாக அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஹொங்கொங்கின் விமான சேவைகள் முற்றாக தடைப்பட்டதுடன், போராட்டக்காரர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் விமான நிலையத்துக்குள் புகுந்ததனால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஹொங்கொங்கின் பிரதான வருமானம் உல்லாசப் பயணத்துறையினால் என்பதுவும் கவனிக்கத்தக்கது. அரசு பல நெருக்கடிகளை எதிர்கொள்வதனால் வரி தொடர்பில் பின்பற்றப்பட்டு வந்த கொள்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஏறக்குறைய ஒரு அவசரகால நிலைக்கு ஹொங்கொங் தள்ளப்பட்டுள்ளது எனக் கூறலாம். 

ஹொங்கொங் ஒரு தாராள முதலாளித்துவத்தில் வளர்ந்த தேசம். சீனப் புரட்சியின் போது நெருக்கடியினதாலும் பொருளாதார சவால்களாலும் அச்சமடைந்தவர்கள் வெளியேறி அப்பகுதியில் குடியேறியதாகவும் அது பிரித்தானியாவிடம் 99வருட குத்தகையில் இருந்ததாகவும், அதனால் தான் அது ஒரு தாராள முதலாளிய மரபுக்குள் வளர்க்கப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமன்றி அத்தகைய தேசத்தின் நகர்வுகளாலேயே சீனா உந்தப்பட்டு மறுசீரமைப்புப் பற்றி சிந்திக்க தலைப்பட்டு 1978இல் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறமுடியும். ஆனால் சீனாவின் மறுசீரமைப்பு வெற்றிக்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களே காரணமாக அமைந்தனர் என்பதுவும் கவனிக்கத்தக்கது. அத்தகைய மரபையும் இயல்பையும் கொண்டிருந்த ஹொங்கொங் மக்கள் தமது நலனிலும் தமது தேசத்தின் மீதான நெருக்கடிகளையும் சாதாரணமானதாக எடுக்க மாட்டார்கள் என்று கருத முடியாது. அதற்கு அமைவாகவே அவர்களது நடத்தை காணப்பட்டது, போராட்டத்தின்போது. எல்லாத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகளை பார்க்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

ஆனாலும், இப்போராட்டத்தை கையாளும் திறன் ஹொங்கொங் ஆட்சியாளருக்கு இல்லாது விட்டாலும் அதன் ஆளுகைக்குரிய அரசான சீனாவுக்கு உண்டு எனக் கூற முடியும். அமெரிக்காவின் உளவுப் பிரிவின் தகவலின் படி சீனா ஹொங்கொங் எல்லையில் படைகளை குவிப்பதாக தெரியவருகிறது. சீனாவின் நகர்வுகளில் காத்திருப்பும் பொறுமையும் தாராளமாக இருக்கும். அவ்வாறே அதற்கு எதிரான நடவடிக்கையும் அபாயகரமானதாக அமையும். அதனை 1989இல் தியனமென் சதுக்கத்தில் காணமுடிந்தது. அதனால் சீனா அனைத்து நகர்வுகளையும் தயாரான நிலையிலேயே வைத்துக் கொள்ளப் பார்க்கிறது. சந்தர்ப்பம் கைமீறிப் போகுமாயின் அதற்கு பதிலான தீவிரமான நகர்வுக்கு தயாராக இருக்கும், என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. 

மேற்கைப் பொறுத்தவரை சீனாவின் பொருளாதாரத்தில் அமெரிக்காவுடனான நெருக்கடியை அதிகரிப்பது மற்றும் சீனாவின் அரசியலில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்துவது என்பனவே முக்கிய நோகக்மாகும். சீனாவின் ஏனைய பிராந்தியங்களுக்கான தலையீடுகளையோ அல்லது செல்வாக்கையோ இல்லாது செய்வதற்கான சூழலை உருவாக்குவதே அமெரிக்கா உட்பட மேற்குலகத்தின் அவதானிப்பாகும். அதன் மூலம் சீனாவின் இருப்பையும் செல்வாக்கையும் உலகளாவிய தளத்திலிருந்து அகற்றுதலாகும். இதற்கான ஒரு நகர்வாக தாய்வானையும் மறுபக்கத்தில் ஹொங்கொங்கையும்   பலப்படுத்தி விட்டால் சீனாவி-ன் அமைதியான வளர்ச்சி காணாமல் போகும் என அமெரிக்கா எதிர்பார்கிறது. 

ஆனால் சீனாவைப் பொறுத்த வரை உலகத்திற்கான அணி திரட்டலில் ஒரு மாதிரியான கொள்கையும் உள்நாட்டில் இன்னோர் கொள்கையும் நிலவுவதனைக் காணலாம். தனது உள்நாட்டுக் களம் பலவீனப்படும்போது  அதிகாரம் தான் தனது கொள்கை என்று உரையாடிக் கொண்டிருக்காது. முடிந்த வரை முயன்று பார்க்கும். சுமுகமாக கையாளத் தவறும் பட்சத்தில் தியனமன் போன்ற ஒரு சூழல் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கான தயாரிப்புகளையே எல்லையில் பலப்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடைமுறையை ஹொங்கெங் மக்கள் விளங்காதவர்கள் இல்லை. அதனால் போராட்டம் ஒன்று கைவிடப்பட வேண்டும் அல்லது தியனமன் போன்று அதி தீவிரமான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையை நோக்கி ஹொங்கொங் நகர்கிறது. மேற்கு பார்வையாளராக மட்டுமே இருக்க முடியுமே அன்றி அதன் மீதான எதிர் நடவடிக்கையை சாத்தியப்படுத்த முடியாது. அந்தளவுக்கு சீனாவின் பலமும் சர்வதேச மட்டத்தில் அதன் நிலையும் காணப்படுகிறது. உலக நாடுகளில் சீனாவுக்கு இப்படியான நெருக்கடி ஏற்பட்டால் அதனை கைவிடும் நிலைக்கு சீனா போயிருகிறது. ஆனால் தனது எல்லைக்குள் ஒருபோதும் இலகுவில் கைவிட்டு விடாத போக்கினையே சீனா கடந்த காலக் கொள்கையாக கொண்டிருந்தது.  

எனவே, சீனாவின் நகர்வுகள் ஒரு ஆபத்தான விளைவை ஹொங்கொங் விடயத்தில் ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதற்கான தயாரிப்புகளையே தற்போது எல்லையில் ஏற்படுத்தி வருகிறது. இந்தியா காஷ்மீரில் எடுத்த நடவடிக்கையை தாண்டிய நகர்வுகளை செய்யும் வலிமையுடன் சீனா உள்ளது.

தியனமெனில் இருவர் மட்டும் கொல்லப்பட்டதாக இன்று சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Comments