நிறைவேற்றதிகாரமில்லாத ஜனாதிபதி வேட்பாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

நிறைவேற்றதிகாரமில்லாத ஜனாதிபதி வேட்பாளர்கள்

முதலில் நடக்கப்போவது மாகாண சபைத் தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா? என்பது இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை. ஆனால், நாட்டு நடப்புகளைப் பார்த்தால், ஜனாதிபதி தேர்தலுக்குக் கட்சிகள் தயாராகிவிட்டதையே உணர முடிகிறது. எனினும், இரண்டு பெரும் கட்சிகள் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

புதிதாக உருவான பொதுஜன பெரமுன முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை இன்று (18) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நானே என்று அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தாமாகவே களத்தில் குதித்திருக்கிறார். அவரின் ஒருதலைப்பட்ச அறிவிப்புக்கு கட்சியின் தலைமைத்துவத்திடமிருந்து இன்னும் பச்சைக்கொடி காண்பிக்கப்படவில்லை. கிடைக்கும் என்று கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நம்பிக்ைக தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இருவருக்கும் வெவ்வேறு விதமான சவால்கள்.

ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர். அவரது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பமைச்சைத் திறம்பட நிர்வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். யுத்தத்திற்குப் பின்னர் படைத்தரப்பினரை நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடுத்தி வெற்றி கண்டவர். கடும் தீர்மானங்களை எடுக்கக்கூடிய திறன் மிக்கவர். சுருங்கற் சொன்னால், பயங்கரவாதத்தை நாட்டில் துடைத்தெறிந்தவர் என்று சிங்கள மக்களின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றவர்.

மறுபுறம், இலங்கையின் குடியுரிமையற்றவர். அமெரிக்காவின் பிரஜை என்று விமர்சிக்கப்படுபவர். இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துவோர் அரசியல் கட்சியினரேயன்றிச் சாமானியர்கள் அல்லர். வெள்ளை வான் கடத்தல், கொலைகளில் ஈடுபட்டவர் என்பதுவும் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு. பெரும்பாலும் இந்தக் குற்றச்செயல்கள் தமிழ் மக்களை இலக்கு வைத்தவை என்பதும் தெரியும். ஆனால், இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தும் அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மீதுள்ள அபிமானத்தைக் கொண்டிருப்பதாகக் கருதவும் முடியாது. அவர்கள், கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கிறார்களேயன்றித் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அல்ல என்பது தமிழர் தரப்பின் கருத்து.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த விடயத்தில், முன்னாள் ஜனாதிபதியைவிடவும் கோட்டாபய ராஜபக்‌ஷ மீதுதான் தமிழ் மக்களுக்கு வைராக்கியம் இருக்கிறது. ஆனால், வைராக்கியத்தில் எதனையும் சாதிக்க முடியாது என்கிறார் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ. அதேநேரம், தன்னை இன்னமும் பழைய கோணத்தில் நோக்க வேண்டாம் என்று கோட்டாபய ராஜபக்‌ஷ கேட்டுக்ெகாண்டிருக்கிறார். தமிழ் மக்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் அவ்வாறல்லாமல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனக்கு எதிராகப் பிரசாரம் செய்தால், அது சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்ைக அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள அதேநேரம், பதின் மூன்று பிளஸ் தீர்வினைத் தருவதாகச் சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ. ஏனெனில், கோட்டாபய ராஜபக்‌ஷ களத்திற்கு வருவராக இருந்தால், அவருக்கு நிழலாக இருக்கப்போகிறவர் அவருடைய சகோதரரான எதிர்க்கட்சித் தலைவரே. கோட்டாபயவின் அரசியல் பின்புலம் என்றால் மஹிந்த ராஜபக்ஷதான்.

அதனால்தான், மக்கள் விடுதலை முன்னணி அவரை ஒரு பலவீனமான வேட்பாளர் என்று விமர்சித்திருக்கிறது. அரசியல், சிவில் நிர்வாக அனுபவமற்ற, இராணுவச் சிந்தனையுள்ள பலவீனமான வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது தங்களுடைய வெற்றிக்குச் சாதகமாக அமையும் என்கிறது ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி). ஜேவிபியைப் பொறுத்தவரை கோட்டாபயவின் அமெரிக்கக் குடியுரிமை பற்றிப் பெரிதாகப் பிரஸ்தாபிக்காவிட்டாலும், அவருக்கு அரசியல் ஆளுமை இல்லை என்பதையே சுட்டிக்காட்டி வருகிறது.

ஆனால், வேறு சில அரசியல் கட்சிகள், அவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையைத் துறக்கவில்லை; துறந்தால் ஏற்றுக்ெகாள்ளலாம் என்ற சாரப்பட கருத்து தெரிவித்துள்ளன.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்‌ஷ அவசரமாக அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

சிலவேளை, அவர் அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் துறந்து வந்தாலும், அரசியல் ரீதியாக அவருக்கு எதிரான விமர்சனங்கள் வேறு கோணத்தில் முன்வைக்கவும்கூடும். எனினும், சாமானிய மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு எந்தளவிற்கு இருக்கப்போகிறது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் மத்திக்குச் செல்லாமல், இராணுவச் சிந்தனையில் செயலாற்றிக் கடும் தீர்மானங்களை மேற்கொண்டு வந்தவரின் பொதுமக்கள் தொடர்பினை ஏற்படுத்திக்ெகாடுப்பதுகூட எதிர்க்கட்சித் தலைவரின் (மஹிந்த ராஜபக்‌ஷவின்) பொறுப்பாகவே இருக்கும்.

மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்‌ஷ மீதுள்ள அபிப்பிராயத்தைப் புரிந்துகொண்டுள்ள சிலர், குறிப்பாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார முதலானோர், ஆரம்பத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் நியமனத்தை ஆதரிக்கவில்லை. என்றாலும், தற்போது அவர்களும் அவருக்குச் சாதகமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கோட்டாபய ராஜபக்‌ஷ தன்னை மாற்றிக்ெகாள்வதற்குத் தயார் என்று உறுதியளித்திருப்பதாக வாசுதேவ நாணாயக்கார தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்‌ஷவைக் களமிறக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இந்த யதார்த்தத்தை உணராவிட்டால், ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தத்தையும் அவர் புரிய வைத்திருக்கிறார். அதாவது, கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் போட்டியிடக் கூடிய வேட்பாளர் தாமே என்றும் ஐக்கிய தேசிய கட்சி நியமித்தால், போட்டியிடத் தயாரென்றும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இஃது எந்தளவிற்குச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியை உருவாக்கிய பின்னரே வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படும் என்று கட்சியின் தலைமைப்பீடம் தெரிவித்திருந்தாலும், போட்டியிடப்போவது தாமே என்று அமைச்சர் சஜித் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில், கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் வேட்பாளர் நியமனம் பற்றிச் செவ்வாய்க்கிழமை தெரிய வரும் என்றும் சிறிகொத்தா வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. அமைச்சர் சஜித் பிரேமதாசவையே வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தலைமைப்பீடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

அமைச்சருக்குச் சார்பாக பதுளையில் மாபெரும் கூட்டமொன்றையும் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் சகல மக்களுக்கும் பொதுவான; சமமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப்போவதாகவும் மக்களுக்காகத் தந்தையாரைப்போல் வீதியில் உயிரைவிடவும் தயார் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். அத்துடன், அமைச்சர் சஜித் பிரேமதாச தந்தையைப்போல் 24 மணித்தியாலமும் செயற்படக்கூடிய கடும் உழைப்பாளர் என்று பிரதமரும் சான்று வழங்கியிருக்கிறார். இருந்தாலும், அமைச்சர் நியமிக்கப்படுவாரா, இல்லையா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எஃது எவ்வாறாயினும், அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குச் சகல தரப்பினரும் இணங்கிச் செயற்பட்டுக்ெகாண்டிருக்கும் வேளையில், இந்த இரண்டு தற்காலிக வேட்பாளர்களும் தாம் ஜனாதிபதியானால், தற்போது உறுதி வழங்குவதைப்போன்று எவ்வாறு அவற்றை நிறைவேற்றுவார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. மறுபுறம், நிறைவேற்றதிகாரம் இல்லாமல் வரப்போகும் ஜனாதிபதிகளுக்கு ஏன் அச்சப்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடியாமல்தான் உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏன் கடந்த 2015 தேர்தலிலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மீண்டும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்தல் நடத்துவது அரசியல் கபடத்தனம் என்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஆக, இந்தத் தேர்தலானது சாதனையும் சோதனையும் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது.

விசு கருணாநிதி

Comments