நுவரெலியா திரித்துவக் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படும் | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியா திரித்துவக் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படும்

அருநலு ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண ஆளுனரின் பிரத்யேக செயலாளரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான மருத்துவர்  கிரிஷாந்த்  மலையகத்தின் பிரச்சினைகளை அலசுகிறார்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான கிரிஷாந்த்,  1998ம் ஆண்டு முதல்  அரசியலில் ஈடுபட ஆரம்பித்தவர். அருநலு ஐக்கிய முன்னணியை உருவாக்கி பெரும்பான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். மலையக மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட தமது முன்னணி தோட்டப்புறங்களை மையப்படுத்தி அம் மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறார். 

மத்திய மாகாண ஆளுநரின் அதிகாரங்கள் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன?  

ஆளுனர் பதவி என்பது ஜனாதிபதியின் நேரடி நியமனமாகும். ஒரு ஜனாதிபதிக்கு அந்நாட்டில் எவ்வளவு அதிகாரம் இருக்கின்றதோ அந்த அதிகாரம் ஒரு மாகாணத்திற்குள் ஓர் ஆளுநருக்கு இருக்கின்றது. ஒரு மாகாணத்தில் செயலாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை இடமாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. தற்போது மாகாண அமைச்சர்கள் இல்லாத காரணத்தால் அனைத்து அமைச்சுகளும் ஆளுநரின் கீழ் இயங்குகின்றது.  உடனடி நியமனங்களை வழங்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கின்றது. 

மத்திய மாகாணத்தில் ஆளுநர் ஊடாக எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்? 

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலை ஒன்று இல்லை. எனவே நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியை சகல வசதிகளும் நிறைந்த தேசிய பாடசாலையாக மாற்றி அமைக்கவுள்ளோம். இப்பாடசாலைக்கு 10 மில்லியன் நிதியொதுக்கீடு செய்துள்ளோம். அந்தவகையில் பொகவந்தலாவ, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை அமைப்பதற்கு ஒரு பாடசாலைக்கு 10 மில்லியன் வீதம் நிதியொதுக்கீடு செய்துள்ளோம். 

மத்திய மாகாணத்தில் ஏராளமான படித்த இளைஞர், யுவதிகள்  உள்ளனர்.  அவர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க ஏதேனும் உங்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா? 

மத்திய  மாகாணத்தில் மாத்திரம் க.பொ.த உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்திபெற்றோர்   24824 பேர் இருக்கின்றார்கள். நான் அரச சேவை ஆணைக்குழுவில் உறுப்பினராக இருப்பதால்  எனக்கு அது தெரியும்.  மலையகத்தில் தொழில் வாய்ப்பு இன்மைக்கு  இங்கு தொழில் பேட்டைகள் கிடையாது என்பதே காரணம்.   இன்று பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை தொழில் பேட்டைகளாக மாற்றியிருந்தால் இன்று எத்தனையோ இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும். அரச தொழில் வாய்ப்புகள் 80 வீதமானவை பெரும்பான்மையினருக்கு செல்கின்றன. எஞ்சிய 20 வீதமானவை மாத்திரமே சிறுபான்மையினருக்கு கிடைக்கின்றன. இங்கு எம்மிடத்தில் பேரம் பேசும் சக்தி இல்லாமையே இதற்கு காரணம். கடந்த 20 வருடங்களுக்கு மேல் நம்மிடத்தே பிரதி பொருளாதார அமைச்சு, பிரதி சுகாதார அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வி இராஜாங்க அமைச்சு மற்றும் மத்திய மாகாணத்தில் விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, கல்வி அமைச்சு இன்னும் பலவும் இருந்தன.  

இதனூடாக எத்தனை சிறுபான்மையினருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தார்கள்?  ஒரு அமைச்சினூடாக 100 பேருக்கு வேலை வழங்கியிருந்தாலே இன்று மலையகத்தில் எத்தனையோ படித்த இளைஞர், யுவதிகள் அரச தொழில்களை பெற்றிருப்பார்கள்.  அந்த வாய்ப்புகள் கடந்துபோய் விட்டன.   மனிதவள அபிவிருத்தி நிதியத்தினூடாக இன்று எத்தனை மலையக இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள்  பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது  என்பதே ஒரு கேள்விக்குறிதான்!  

மலையகத்திற்கு வழங்கப்பட்ட அமைச்சுகளை சரியாக பயன்படுத்தியிருந்தாலே எத்தனையோ இளைஞர், யுவதிகளுக்கு  நல்ல தொழில் வாய்ப்புகளை  வழங்கி இருக்கலாம்.  இன்று மலையகத்தில் 163 தோட்ட வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்தாலே ஒரு வைத்தியசாலைக்கு 20 பேர் வீதம் நியமனம் செய்திருக்கலாம்.  தற்போது ஜனாதிபதியின் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் ஊடாகவும் 6 மாத கால விவசாய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கும்,  மேலும் பாடசாலை உதவியாளர், காவற்காரர் போன்ற அரச வேலை வாய்ப்புகளையும்  நாங்கள் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.  

தேயிலைக் காணிகளை சில பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அதன்மூலம் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டம் பற்றிய உங்களது  கருத்து..?  

வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் வீதம் தேயிலை மலைகளை பிரித்து கொடுப்பதனால் தொழிலாளர்கள் அதனை பராமரித்து வருமானத்தை ஈட்டிக்கொள்வது என்பது சாத்தியமற்ற விடயமாகும். பெருந்தோட்டங்களை கம்பனிகள்   நிர்வகிப்பதே சிறந்தது. 2000 மரங்களை முதல் மூன்று மாதங்களுக்கு வேண்டுமானால் தொழிலாளர்களுக்கு பாதுகாக்க முடியும். பின்னர் தேயிலை மரங்களுக்கு உரமிடுதல், கிருமி நாசினி தெளித்தல், கவ்வாத்து வெட்டுதல் போன்றன தொழிலாளர்களால் மேற்கொள்ளும் அளவிற்கு பொருளாதார வளம் அவர்களிடம் இல்லை. சிலர் காலப்போக்கில் பெரும்பான்மையினரிடம் அத்தேயிலை மரங்களை கொடுத்து விட்டு அவர்களிடத்தே வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பும் உள்ளது.   எனவே தேயிலை தோட்டங்கள் கம்பனிகளிடம் இருப்பதே சிறந்தது. 

தோட்ட வைத்தியசாலைகள் பற்றிய உங்களுடைய கருத்தென்ன? 

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை உடனடியாக அபிவிருத்தி செய்வதால் தோட்டத்  தொழிலாளர்கள் தரமான சுகாதார சேவையை பெற்றுக்கொள்ள முடியும். அண்மையில் பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தில் பெண் தொழிலாளி குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.   காப்பாற்ற வேண்டிய ஒரு உயிரை அநியாயமாக பறிகொடுத்துள்ளோம். தோட்ட வைத்தியசாலையில் நிலவிய மருந்து தட்டுப்பாடே இதற்குக் காரணம்.  

விஷப்பாம்பு கடிக்குள்ளானவர்களையே காப்பாற்றும் அளவிற்கு மருத்துவத்துறை தற்போது வளர்ச்சியடைந்துள்ளது. இருந்தும் பெருந்தோட்டப்பகுதிகளில் குளவி கொட்டுக்கு இலக்காகியும் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியும் பல தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவங்கள் பெருந்தோட்ட பகுதிகளிலே அதிகமாக பதிவாகி இருக்கின்றன. விபத்துக்குள்ளாகி குடல் வெளியில் வந்தவர்களை கூட வைத்தியர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். குளவி கொட்டுக்கு மருத்துவம் செய்வது என்பது ஒரு பெரிய விடயமல்ல. அத்தொழிலாளியின் உயிரிழப்புக்குக் காரணம் தோட்ட வைத்தியசாலை இயங்காமையே.  குளவி கொட்டுக்கு இலக்காகிய ஒருவருக்கு தோட்ட வைத்தியசாலையில் கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள் இல்லாமையால் மருந்து வாங்குவதற்கு அத்தோட்ட வைத்திய உதவியாளர் துண்டு ஒன்றை எழுதி கொடுத்திருக்கின்றார்.  அதனை பாமசியில் வாங்குவதற்காக   ஹற்றனுக்கு சென்று வருவதற்கு ஒரு மணித்தியாலம் தேவை. அதற்குள் குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளியின் உடம்பில் விஷம் ஏறி அவர் உயிரிழந்திருக்கிறார்.  

பெருந்தோட்ட பகுதிகளில் குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் என்பன புதுவிடயமல்ல. எனவே பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் (ட்ரஸ்ட் நிறுவனம்) இதற்கான மருந்துகளை தோட்ட வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். மருந்துகளை பெற்றுக்கொடுக்காத பொறுப்பை பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியமே ஏற்க வேண்டும். இவர்களின் கவனயீனத்தால் ஓர் அப்பாவி தொழிலாளியின் உயிர் பிரிந்துள்ளது.  

வெளிநாடுகளிலிருந்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வருகின்றது. அதனூடாக எத்தனையோ தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கலாம். ஒன்றுமே நடைபெறுவதாகத் தெரியவில்லை. தோட்ட வைத்தியசாலைகள் சரியான முறையில் இயங்குவதில்லை. இதற்கு அரசியல் பிரமுகர்களும் அழுத்தங்களை கொடுப்பதுமில்லை. தோட்ட வைத்தியத்துறை தொடர்பில் தோட்டக்  கம்பனிகளை விட பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியமே பொறுப்புக்கூற வேண்டும்.

தோட்ட வைத்தியசாலைகள் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வருகின்றன.    அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றார்கள் தோட்ட வைத்தியசாலைகள் மூடப்பட வேண்டும் என்று. அவ்வாறு மூடப்படும் பட்சத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு  முறையான வைத்திய சேவை கிடைக்காமல் போகும். அரச வைத்திய அதிகாரி ஒருவர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மாத்திரமே தனது சேவையை வழங்குவார். ஆனால் ஒரு தோட்ட வைத்திய உதவியாளர் 24 மணித்தியாலமும் அங்கேயே இருந்து தனது சேவையை வழங்குவார். அரச வைத்தியசாலை என்பது பிரியாணி உணவை போன்றது.

ஆனால் தோட்ட வைத்தியசாலை என்பது கஞ்சி போன்றது. ஒருவர் பசியோடு இருக்கும்போது பிரியாணி தேவையில்லை. அவருக்கு கஞ்சி கிடைத்தால் போதும் பசியாறிவிடும். கஞ்சி போன்றதுதான் தோட்ட வைத்தியசாலைகள்.

எனவே இதனை அபிவிருத்தி செய்து தேவையான மருந்துகளை அரசாங்கமோ பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியமோ வழங்கும் பட்சத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தரமான வைத்திய சேவையை இதனூடாக வழங்க முடியும். 

லிந்துலை வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமா? 

லிந்துலை வைத்தியசாலையின் குறைபாடுகள் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படும். கடந்த மாதம் நானும் மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரட்ணவும் அங்கு நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டோம். அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை  காணப்படுகிறது.  மேலும் நோயாளி கட்டில்கள் மூட்டைப் பூச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. அனைத்து பிரச்சினைகளுக்கும் மிக விரைவில் தீர்வு எட்டப்படும். 

ஜெனீவா சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் உரையாற்ற உள்ளீர்கள். அங்கு மலையக மக்கள் குறித்து முன்வைக்கப்படவுள்ள உங்களின் கோரிக்கைகள் எவ்வாறானவை? 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கவேண்டும் எனவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜெனீவா மனித உரிமைக் குழுவிடம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளேன்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீர்க்கப்படாத பிரச்சினைகளாக சம்பளம், சுகாதாரம், காணி போன்றன அதிகளவில் காணப்படுகின்றன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் நாம் விசேட வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதன் அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் ஒரு இலட்சம் கையொப்பம் பெறப்பட்டு அந்த படிவத்தை ஜெனீவா மனித உரிமைக் குழுவிடம் கையளிக்கவுள்ளோம்.  

இதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் குறைபாடுகள் மிகவிரைவில் நிவர்த்தி செய்யப்படும். பெருந்தோட்டக் கம்பனிகள் அதிக இலாபத்தில் இயங்கி வருகின்றன. அவ்வாறு இலாபத்தில் இயங்கும் பெருந்தோட்ட கம்பனிகளால் ஏன் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கமுடியாது? அதற்கான காரணங்களை தோட்ட கம்பனிகள் முன்வைக்க வேண்டும். மேலும் ஒருவருக்கு அடிப்படைச்  சம்பளம் வழங்காமல் சேமலாப நிதி அறவிட முடியாது. ஆனால் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமின்றி சேமலாப நிதி அறவிடப்படுகின்றது. இது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இது சட்டப்படி குற்றமாகும். இதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் விளக்கமளிக்க வேண்டும்.  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேயிலை தோட்டங்களில் தேயிலை பறித்து எமது நாட்டிற்கு அந்நிய செலவாணியை பெற்றுக்கொடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கினால் கம்பனிகள் ஒருபோதும் நஷ்டமடையப்போவதில்லை.  ஒருவருக்கு அடிப்படை சம்பளம் வழங்காமல் அவருடைய நாள் சம்பளத்தில் சேம இலாப நிதி (ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப்) போன்றன அறவிடுவது சட்டத்தின்படி குற்றமாகும். அடிப்படைச்  சம்பளம் என்பதை தொழிலாளர் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.  

வீதி போக்குவரத்து அதிகார சபையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் மாதச் சம்பளமும் அதற்கு அடிப்படைச் சம்பளமும் வழங்கப்படுகின்றன. அவ்வாறானதொன்று ஏனைய தொழிலாளர்களுக்கு இருக்கும்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமும் அதற்கான அடிப்படை சம்பளமும் ஏன் இருக்கக்கூடாது?

அகில உலக தொழிலாளர் சம்மேளனத்தின்படி ஒரு தொழிலாளிக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் 8 மணித்தியாலத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மிகை நேர கொடுப்பனவு வழங்க வேண்டும்.  ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்கின்றார். அத்தேயிலை கொழுந்தை அரைத்தால் 5 கிலோ தேயிலை தூள் கிடைக்கும். உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ தேயிலைத் தூளின் விலை 1000 ரூபாயிற்கு அதிகமாகும். எனவே ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 5000 ரூபாவுக்கு அதிகமாக பணத்தை கம்பனிகளுக்கு உழைத்து கொடுக்கின்றார். அதேநேரம் சர்வதேச சந்தையில் தேயிலை தூளின் விலை ஒரு கிலோ 75 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கை காசுக்கு ஒரு கிலோ 10 ஆயிரம் ரூபா எனின் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை கம்பனிகளுக்கு உழைத்து கொடுக்கின்றார். இவ்வளவு பணம் உழைத்து கொடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏன் மாதச் சம்பளம் கொடுக்க இயலாது?

அவர்கள் உழைத்து கொடுக்கும் ஒரு நாள் பணத்தில் அரைவாசியை வழங்கினாலே அவர்களுக்கு மாதச் சம்பளமாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபா வழங்க முடியும். தேயிலை உற்பத்தியில் அரசாங்கத்திற்கு 51 வீதமும் கம்பனிகளுக்கு 49 வீதமும் இலாபம் கிடைக்கின்றது. வறட்சியில் ஒரு வயல் காய்ந்து போனால் அதற்கு மானியம் வழங்கும் அரசாங்கம் தேயிலை தோட்டத்தில் விளைச்சல் குறையும் போது ஏன் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதில்லை?

நேர்கண்டவர் : தலவாக்கலை பி.கேதீஸ்

Comments