பூ மகள் | தினகரன் வாரமஞ்சரி

பூ மகள்

கலைமான் நாநா பொறுமையின் வடிவாய் சீமெந்துக் கட்டின் மேல் அமர்ந்திருந்தார்.  

பிடித்த நோன்பு அவரது உள்ளத்தை வலிமையாக்கி இருந்தது. ஆனால் வயோதிபம் அவரது உடலைத் தளர்வடையச் செய்வதில் வெற்றியடைந்திருந்தது. புறக்கோட்டையில் அவர் இருந்த இடத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு லொறியில் பல பொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.  

இன்னும் இரண்டு பேரின் பொருட்கள் ஏற்றப்பட வேண்டும். அதற்குப் பின்புதான் சுலைமான் நாநாவின் பொருட்கள், லொறியில் தமக்குரிய இடத்தில் அமர்ந்து கொள்ளும். வினாடிகள் யுகங்களாக மாறியதை அவர் மட்டுமே உணர்ந்தார். அவரது கடிகார முட்கள் முட்கள் மட்டும், வேகம் காட்டத் தயங்கின.  

ஆறு மணிக்கு முதலில் அவரது பொருட்கள் ஏற்றப்பட்டால், நோன்பை பள்ளிவாசலில் திறந்துவிடலாம்.  

இரவு ஒன்பது மணி பஸ்சைப் பிடித்தால் ஸஹருக்கு வீடு சென்றுவிடலாம்.  

லொறியின் மேல் இருந்தவர்கள், சீமெந்துக் கட்டின் மேல் இருந்த சுலைமான் நாநாவுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.  

வலையிலிருந்து விடுபட்டு மீண்டும் நீருக்குள் பாய்ந்த மீனைப் போல யூசுப் நாநாவும் சந்தோசமடைந்தார். அவரது உள்ளத்தில் சந்தோசக் குயில் கூவத் தொடங்கியது. தனது பொருட்கள் ஏற்றப்படும் விதத்தை, அவரது அனுபவக் கண்கள் கண்காணித்தன.  

பொருட்களால் லொறியின் வயிறு நிரும்பியது போல, மகிழ்ச்சியானல் சுலைமான் நாநாவின் உள்ளமும் நிறைந்தது.  

கொழும்புக்கு வந்த போது மடியில் நிறைந்திருந்த பணம் பொருட்களாக மாறியதனால் அவர் மனதில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்தன.  

அவரது உள்ளததிற்கு மனைவி மும்தாஜின் அன்பும் முகமும் மகள் ஸனப் மிசானியின் அழகு முகமும் அடிக்கடி தோன்றின.  

மகள் ஸனப் மிசானி பிறந்த பின்புதான் அதிர்ஸ்டம் அவரது வீட்டுக்கதவைத் தட்டியது.  

இருண்டிருந்த அவரது வாழ்வில் சந்தோச மின்னல்கள் தோன்ற ஆரம்பித்தன.  

வறண்டிருந்த அவரது வாழ்க்கையை சந்தோசப் பூக்கள் நிறைந்த சோலையாக்கியவள் மகள் ஸனப் மிசானி.  

“ஸனப் மிசானி தனக்கு இறைவன் தந்த ஒரு கொடை” மகளின் நினைவுகளால் துரிதமாகச் செயல்பட்ட சுலைமான் நாநா, அங்கிருந்தவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, பள்ளிவாசலை நோக்கி நடந்தார். நோன்பு திறப்பதற்கு பள்ளிவாசலை அடைந்துவிட வேண்டும் என்ற அவரது விருப்பத்தைப் புரிந்து கொண்டதைப் போல், அவரது கால்கள் வேகமாக செயல்பட்டன.  

இனினும் கால்களின் இந்த வேகம், சில நிமிடங்களே நீடித்தன.  

கால்கள் தமது வேகத்தைக் குறைத்து தமது இயலாமையைப் பிரகடனப்படுத்தின.  

தளர்ந்த அவரது கண்களும், கால்களின் பிரகடனத்திற்கு அங்கீகாரம் வழங்கின.  

தொடர்ந்து நடக்க வேண்டும் என்று அவரது அறிவு முன்மொழிந்த பிரேரணையை, அவரது உடல் ஆமோதிக்கவில்லை.  

தொடர்ந்து நடக்க முடியாத அவர், வீதியோரத்தில் இருந்த ஒரு கடைக்கு அருகில் இருந்தார்.  

“யா.... அல்லாஹ்” .... என்று அவரது வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தை காற்றில் கலந்தது.  

அது கடைக்குள் இருந்தவரை, வெளியே எட்டிப்பார்க்க வைத்தது.  

எட்டிப் பார்த்தவர் தமிழ் தெரிந்த சிங்களவர்....  

“உள்ளே வாங்க நாநா...”  

அவர் அன்புடன் சுலைமான் நாநாவை அழைத்தார்.  

“இல்ல நோன்பு திறக்க... பள்ளிக்குப் போகணும்...”  

சுலைமான் நாநாவின் குரல், கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.  

எனினும் அவரது உடல் அசைவதற்கு, தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்தது...  

ஐந்து நிமிடங்கள் கழிந்து  

மீண்டும் சிங்கள மனிதர் வெளியே வந்தார்.  

“நாநா... உள்ளே... வாங்க ....”  

கனிவுடன் கலந்து வந்த அந்த அழைப்பை, சுலைமான் நாநாவினால் இப்போது நிராகரிக்க முடியவில்லை. முஸ்லிம் ஒருவர் எழுந்திருப்பதற்கு சிங்களவரது இரு கைகளும் பயன்பட்டன.  

சுலைமான் நாநா கடைக்குள் நுழைவதற்கும், நோன்பு திறப்பதற்கான பாங்கின் ஒலி கேட்பதற்கும் சரியாக இருந்தது. பாங்கு முடிவடைவதற்குள் பழவகைகளும், பல உணவுப் பொருட்களும் சுலைமான் நாநாவுக்கு முன்னால் வைக்கப்பட்டன.  

நோன்பு திறந்து ஓதும் துஆவில் அந்தச் சிங்களவர் சுரநிமலவையும் சுலைமான் நாநா சேர்த்துக் கொண்டார்.  

ஏப்ரல் மாதம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சிங்கள – முஸ்லிம் உறவில் வெடிப்பை ஏற்படுத்திவிடும் என்ற சுலைமான் நாநாவின் சந்தேகம், சுரநிமலவின் செயல்களால் காணாமல் போனது. காய்ந்த நம்பிக்கைக் கோபுரம், மீண்டும் நிமிர்ந்து கொண்டது. சுலைமான் நாநாவின் உணர்வுளை உணர்ந்து கொண்ட சுரநிமல் கதைக்கத் தொடங்கினார்.  

“எல்லா இனங்களிலும் முட்டாள்கள் இருக்கின்றனர். சிலர் செய்யும் செயல்களுக்கான பழிசை, முழு இனத்தவர் மீதும் சுமத்த முடியாது....”  

அதைக் கேட்ட சுலைமான் நாநாவின் சந்தோசக் கதவுகள் அகலத் திறந்துகொண்டன.  

கோடையில் வாடிய பயிருக்கு வான்மழை கிடைத்தது போல அவரது உள்ளம்   மகிழ்வடைந்தது... இதயத்தைக் காயப்படுத்திய முட்கள், மலர்களாக மாறி அவரது இதயத்தைத் தடவிக் கொடுத்தன.  

வற்றிப் போய்விடும் என்று பயந்த பண்புநதி இனி ஒரு போதும் வற்றப்போவதில்லை. சுரநிமல போன்ற ஆத்மாக்களை இந்த மண் தாங்கும் வரை இந்த மண்ணில் பண்பு நதி இன்னும் வீறுகொண்டு பாயும்.  

அவரது விழிகள் கண்ணீர் முத்துக்களை உதிர்த்தன. அவை நிறைந்த உள்ளத்திலிருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர்.  

சுரநிமலவின் குரல் மீண்டும் ஒலித்தது.  

“நீங்க நம்பமாட்டீங்க... எனக்கு சிங்கள நண்பர்களைவிட முஸ்லிம் நண்பர்கள் தான் அதிகம். நான் களுத்துறை ஜலப்பெரும ஹந்தியிலதான் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நோன்புக் கஞ்சி, எங்கட வீட்டுக்கு வரும். நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் நான் முஸ்லிம்களின் வீட்டில்தான் சாப்பிடுவேன்...”  

இதைக் கேட்ட சுலைமான் நாநா உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார்.  

“என் கால்களை சோர்வடைய வைத்து இந்த இடத்தில் நோன்பு திறக்க வைத்து சிங்களவரின் விரிந்த உள்ளத்தை எனக்கு அறியச் செய்த அந்த அல்லாஹ்வுக்கே, எல்லாப் புகழும்...”  

சுலைமான் நாநாவின் இதயம் நன்றியுரை மொழிந்தது. அங்கிருந்தவர்களிடம் விடைபெற்ற சுலைமான் நாநாவின் கால்கள், புதுத் தெம்புடன் செயல்பட்டன.  

நிறைந்த உள்ளத்துடன் அவர் பள்ளிவாசலை அடைந்தார். பூமகள் ஸனப் மிசானி அவரது மனக்கண்ணில் தோன்றினாள். இன உறவு என்ற சுவர் குண்டுகளால் தகர்ந்து போகாது என்பதை உணர்ந்த அவரது நெஞ்சம் மகிழ்ச்சியினால் விம்மியது.

கே.எம்.எம். இக்பால்

Comments