சகல உலமாக்களும் ஏற்கக்கூடியதாக உலமா சபை மாறவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சகல உலமாக்களும் ஏற்கக்கூடியதாக உலமா சபை மாறவேண்டும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவு, இலங்கை முஸ்லிம்களின் சமகால வரலாற்றில், முக்கியமானதொரு விடயமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. 

சுமார் 25வருடங்களுக்கு முன்பு இல்லாத மிக முக்கியத்துவம், இவ்விடயத்துக்கு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில், குறிப்பாக சமூக நலனில் அக்கறை கொண்ட புத்திஜீவிகள் மத்தியில் கொடுக்கப்பட்டிருப்பதை தொடர்ச்சியாக வரும் கட்டுரைகள், கருத்துக்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எவர் என்ன சொன்னாலும், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல், பொருளாதார, சர்வதேச அனைத்து விடயங்களிலும் மிக முக்கியதொரு வகிபாகத்தை கொண்டிருப்பதை நாம் மறுப்பதிற்கில்லை. இவ்வாறு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அண்மைக் காலங்களில் அனைத்து துறைகளிலும் ஆழக்கால் பதித்திருப்பதற்கு பின்வருவனவற்றை சில முக்கிய காரணங்களாக கொள்ள முடியும். 

1. முஸ்லிம்களுக்கெதிராக பிற சமயத்தவர்களாலும், அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் துவேஷ கருத்துக்கள், நெடுக்குவாரங்கள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியதும் ஆறுதல் அளிக்கக்கூடியதுமான தேசிய ரீதியான செல்வாக்கும் பலமும் மிக்க முஸ்லிம் ஸ்தாபனங்கள் எதுவும் காணப்படாமை. 

2. முஸ்லிம் அரசியல்வாதிகளின் காட்டிக் கொடுப்புகளும், சமூக அக்கறையற்ற செயற்பாடுகளும், அவர்களுக்கெதிரான பொதுமக்களின் நிலைப்பாடுகளும். 

3. இலங்கை முஸ்லிம்களை சமய போதனைகள் ஊடாக மட்டுமே ஒற்றுமைப்படுத்தலாம் என்ற அதீத நம்பிக்கை. 

4. சுயநலமற்று, வேறு எதுவித நோக்கங்களுமின்றி, மிக தூய்மையாக சமூகத்திற்கு உறுதுணையாக செயற்படக்கூடிய பக்குவம் உலமாக்களிடம் மட்டுமே காணப்படலாம் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பு. 

5. பிரதேச கட்சி ரீதியாக இலங்கை முஸ்லிம்கள் கூறுபோடப்படுவதற்கு முன், தேசிய கட்சிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து சமூகத்தின் அனைத்து பிரச்சினைகள், தேவைகளுக்கும் குரல்கொடுத்த முன்னைய முஸ்லிம் தலைவர்களான டொக்டர் கலீல், சேர் ராசிக் பரீத், மாக்கான் மாக்கார், பதியுதீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ்.ஹமீத், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற தீர்க்கதரிசனமிக்க தலைவர்கள் தற்போது சமூகத்தில் காணப்படாமை என்பன போன்ற காரணங்களே இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பக்கமும், அதன் நடவடிக்கைகள், நிர்வாகத்தெரிவுகளின் பக்கமும் திசைதிருப்ப வைத்துள்ளன என்று கூறலாம். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைத்துவப் பொறுப்பு யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பதே நிர்வாகத்தெரிவு பற்றிய சமூக அக்கறை கொண்ட புத்திஜீவிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. 

தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சுமார் 16வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார். அவர் தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன் மௌலவி அப்துஸ்ஸமத் ஹஸ்ரத்தும், அதன்பின் அஷ்ஷெய்க் எம்.ஏ. முபாறக் மதனி(முன்னாள் அதிபர், கபூரிய்யா அறபுக்கல்லூரி) அவர்களும் தலைவர்களாக கடமையாற்றினார்கள். அக்காலத்தில் இலங்கையில் பல்வேறு துறைகளில் பிரபல்யம் பெற்றிருந்த பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம், மௌலவி றுகூல் ஹக் (முன்னாள் கல்விப் பணிப்பாளர், அதிபர், கல்-எலிய அறபுக்கல்லூரி) போன்றோர் உலமா சபையில் முக்கிய பங்குவகித்து அதன் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். 

அதேவேளை 25வருட காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளராக, இலங்கையின் மிகப்பிரபலமான ஆலிமான மௌலவி எம்.ஜே.எம்.றியால் (கபூரி) தொடர்ந்து கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். ஜம்இய்யாவின் அப்போதைய தலைவர்களை விட, ஜம்இய்யாவை வெற்றிகரமாக செயற்படுத்துவதில், ஜம்இய்யாவில் ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள், நிதிப்பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மௌலவி றியால் அவர்களின் 25வருட பங்களிப்பு இன்றும் மூத்த உலமாக்களால் இலங்கை பூராகவும் நினைவுகூரப்படுகின்றது.“தான் சுமந்து செல்லும் தனது கைப்பையிலேயே ஜம்இய்யாவின் அனைத்து வேலைத்திட்டங்களும் தயாராக இருக்கும்” என மௌலவி றியால் பற்றி தெரிந்தவர்கள் கூறுவார்கள். 

றிஸ்வி முப்தி  தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன், இலங்கை முஸ்லிம்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய எந்த நிகழ்வுகளும் ஏனைய மதத்தவர்களால் பெரியளவில் இடம்பெறவில்லை. இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய எந்த சந்தேக உணர்வுகளும், கசப்பும் ஏனைய இனத்தவர்கள், மதத்தவர்கள் மத்தியில் இடம்பெற்றிருக்கவில்லை. றிஸ்வி முப்தி அந்நிய மதத்தவர்களிடமிருந்து முதலாவதாக எதிர்ப்பை எதிர்கொண்ட “ஹலால் சான்றிதழ்” வழங்கும் நடைமுறை அவர் பதவியேற்பதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னதாகவே ஜம்இய்யாவினால் மூத்த உலமாக்களின் வழிகாட்டலின் கீழ், மௌலவி றியாலால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது எவ்வித பிரச்சினைகளையும் அப்போது தோற்றுவித்திருக்கவில்லை. ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடக்கின்ற நிர்வாகத்தெரிவுக்கு இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் பிரதேச கிளைகளினூடாக - அழைப்பிதழ் மூலம் - உலமாக்கள் அழைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கில் கலந்துகொள்ளும் நடைமுறையும், அவர்களின் முழுமையான ஆதரவுடனேயே ஜம்இய்யாவின் தலைவர் உட்பட, அனைத்து நிர்வாகத்தினரும் தெரிவுசெய்யும் நடைமுறையும் இருந்து வந்தது. ஆனால் தலைவராக வருபவர் ஒரு மத்ரஸாவின் அதிபராக இருக்க வேண்டும் என்று கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே மத்ரஸாவின் அதிபர்களாக இருந்த அப்துஸ்ஸமது ஹஸ்ரத், மௌலவி முபாறக் மதனி என்போர் தலைவர்களாக தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்டார்கள்.றிஸ்வி முப்தி முதலாவதாக தெரிவுசெய்யப்பட்ட போதும், அவர் ஒரு மத்ரஸாவின் அதிபர் என்றவகையிலேயே தெரிவுசெய்யப்பட்டார். றிஸ்வி முப்தி தலைவராக தெரிவுசெய்யப்பட்டதன் பின் தலைவரையும் நிர்வாகத்தினரையும் தெரிவுசெய்யும் இந்த நடைமுறையை முழுமையாக மாற்றினார். 

1924ம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஒரு முழுமையான சபையாக இயங்கிவரும் ஜம்இய்யாவில், 2000ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 51/2000இலக்க கட்டளைச் சட்டத்தினூடாக ஓர் அங்கீகாரம் பெற்ற சபையாக இயங்கி வந்தது. இதில் இலங்கையின் அனைத்து மாகாணங்கள், மாவட்டங்களிலிருந்தும் 134கிளைகளினூடாக 5000உலமாக்கள் அங்கத்துவத்தைக் கொண்ட ஒரு மாபெரும் சபையாக இயங்கிவருகின்றது. றிஸ்வி முப்தி, மிகத் திட்டமிட்ட முறையில், 25மாவட்டங்களுக்குமான மாவட்டக்கிளைகளை முதலாவதாக ஏற்படுத்தி அதிலும் ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பதவிகளையும் ஏற்படுத்தினார். இவ்வாறு 25மாவட்டங்களிலும் இருந்து மாவட்டத்தலைவர், செயலாளர், பொருளாளர் என 25x3=75பேர் மட்டுமே ஜம்இய்யாவின் அகில இலங்கை ரீதியான நிர்வாகத் தெரிவுக்கு அழைக்கப்படுவதன் மூலம், மிக இலகுவாக றிஸ்வி முப்தியால் தொடர்ந்து 16வருடங்கள் ஜம்இய்யாவின் தலைவராக கடமையாற்ற முடிந்தது. அதேபோல் பிரதித் தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற ஏனைய பதவிகளுக்கும் தனக்கு கீழ் எவ்வித பிரச்சினைகள், குறுக்கீடுகள் இன்றி கடமையாற்றக் கூடியவர்களையும் மிக இலகுவாக, தெரிவுசெய்து கொள்ள முடிந்தது. இலங்கையில் 5000உலமாக்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு தேசிய சபைக்கு இவ்வாறான குறைந்த உறுப்பினர்களின் ஆதரவோடு நிர்வாகத்தெரிவை நடாத்துவது, ஜனநாயக அடிப்படைகளுக்கு முற்றிலும் விரோதமானது என்பது வெளிப்படையானது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாவட்டக் கிளைகளின் தெரிவுகள் நடக்கும்போது றிஸ்வி முப்தி நேரடியாக செல்வாக்குச்செலுத்தி நிர்வாகத் தெரிவை நடத்திய விடயத்தை என்னால் நிரூபிக்க முடியும். 

ஜம்இய்யா தனது இலட்சியத்தில் வெற்றி கண்டுள்ளதா? 

றிஸ்வி முப்தி தலைமைப் பதவியை ஏற்றதன் பின் ஒருசில முன்னேற்றகரமான செயற்பாடுகள் ஜம்இய்யாவினால் இடம்பெற்றுள்ளதை நிதர்சனமாக ஏற்றுக்கொள்கின்றோம். ஜம்இய்யாவுக்கென மருதானை கலீல் வார்ட்டுக்கு அண்மையில் முன்னர் கட்டப்பட்டிருந்த கட்டடம் அதன் ஒப்பந்தக்காரர்களால் கபளீகரம் செய்யப்பட்ட போது அரசாங்க, தனிநபர்களின் உதவியோடு கொழும்பு 10இல் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் மூன்று மாடிக்கட்டடம் ஒன்றை நிறுவியமை, ஜம்இய்யாவின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 15செயற்பாட்டு பிரிவுகளை (committees) ஏற்படுத்தியமை என்பவற்றை இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடலாம். நானறிந்த வகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஜம்இய்யாவினால் வேதனம் வழங்கப்பட்டு ஜம்இய்யாவில் பல பிரிவுகளிலும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறான பல்வேறு முன்னேற்றங்கள் ஜம்இய்யாவினால் ஏற்பட்ட போதும், அது தனது இலட்சியத்தை அடைவதில் தோல்வி கண்டுள்ளது மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்களை பல்வேறு இன்னல்களுக்கும், நெருக்குவாரங்களுக்கும் ஆளாக்கியுள்ளமையை ஜம்இய்யாவின் நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக பௌத்த பேரினவாதிகள் (ஞானசார தேரர் போன்றோர்) இலங்கை முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டி மிகவும் கேவலமான முறையில் சாட்டிய குற்றங்கள் அனைத்தும், எனது பார்வையில் றிஸ்வி முப்தி தலைமையிலான ஜம்இய்யாவினாலேயே உருவாக்கப்பட்டன என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அவற்றில் சிலவற்றை நாம் பின்வருமாறு நோக்கலாம். 

1. ஹலால் பிரச்சினை: றிஸ்வி முப்தி தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் றிஸ்வி முப்தி தலைமைப் பதவியை ஏற்ற பின் இச்செயற்பாடு,அதிக இலாபம்,வருவாய் பெறும் நோக்கத்தோடு, அதிக விளம்பரத்தோடு நடாத்தப்பட்டதால் இதற்கு எதிராக பௌத்த பேரினவாதிகளின் குற்றச்சாட்டுக்கள் பல்வேறு மட்டங்களில் எழுப்பப்பட்டதுடன், அவ்வருமானம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. ஹலால் பிரச்சினையால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை தனியொரு கட்டுரையாக தர முடியும். அதேநேரத்தில் ஹலால் பிரச்சினை சம்பந்தமான எந்த தெளிவுகளும் பௌத்த மக்களுக்கு ஜம்இய்யாவினால் இன்றுவரை வழங்கப்படவில்லை. ஏப்ரல் 21தாக்குதலுக்கு பின்னரும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகளில் முதன்மையானது ஹலால் பிரச்சினையாகும். 

2. முஸ்லிம்களின் குறிப்பாக பெண்களின் உடை பற்றிய பிரச்சினை: உலமாவின் தலைமைத்துவத்தை ஏற்றவர்களாலேயே முகக்கவசம் (நிகாப்) அணிவது வற்புறுத்தப்பட்டதுடன், அது இலங்கையிலுள்ள ஜம்இய்யாவின் கிளைகளினூடாக கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்விடயத்தில் காணப்படும் இஸ்லாமிய வழிகாட்டல்களை ஜம்இய்யா மக்களுக்கு விளங்கப்படுத்த முனையவில்லை. மட்டுமன்றி பெண்களின் உடைகள் முழுமையாக கறுப்பு நிற அபாயாவாக மாற்றம் பெற்றதும் ஜம்இய்யாவின் மறைமுக செயற்பாடுகளின் விளைவாகும். இன்று குர்ஆன் மத்ரஸாவுக்கு செல்லும் ஐந்து வயது குழந்தை முதல் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட அனைவரும் இந்த கறுப்பு நிற அபாயாவுக்குள் சிக்குண்டுள்ளனர். ‘அவ்ரத்’ஐ மறைப்பது சம்பந்தமான இஸ்லாத்தின் தெளிவான பாதைகள் மறைக்கப்பட்டு, ஒரு குறுகிய வட்டத்திற்குள் முஸ்லிம் பெண்களை இச்செயற்பாடு கொண்டுவந்து, அந்நிய பெண்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அவர்களின் அருவருப்புக்கும் ஆளாக்க வைத்தது. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக அந்நிய சக்திகளின் குற்றச்சாட்டுக்களில் இவ்விடயம் முதன்மை பெற்றுள்ளது.அதேபோல் முஸ்லிம் ஆண்களில் சிலர், முழுமையான “ஜுப்பா”,“தோப்” போன்ற உடைகளை அணிவதற்கும் ஜம்இய்யாவின் செயற்பாடுகளே காரணமாகும். சமூகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கூட இவ்வாறான உடைகளை அணிவதன் மூலம் இவ்வுடைகளுக்குரிய சமூகப் பெறுமானங்கள் மிக கீழ் மட்டத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எமது முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பொது இடங்களிலும், பொது வாகனங்களிலும் செல்லும் போது கூட இவ்வாறான உடைகள் அந்நியர்களின் வெறுப்பையும், கண்காணிப்பையும் சம்பாதித்து வந்துள்ளதுடன், இப்போது அவ்வெறுப்பை பகிரங்கமாக வெளிக்காட்டவும் தொடங்கியுள்ளனர். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவ்ரத் மறைப்பது சம்பந்தமான தெளிவுகள் இதனால் சமூகத்திற்கு மறைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை முஸ்லிம்கள், வரலாற்றில் என்றும் காணாத மிகவும் பயங்கரமான சூழ்நிலையில், அரசியல் பின்புலத்தில் வாழும் இக்கால கட்டத்தில் ஜம்இய்யா ஆற்றவேண்டிய வகிபாகம் மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்கள் போலன்றி, எதிர்வரும் ஆண்டுகள் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை,மிகவும் கூரிய வீச்சுக் கொண்டதாக, ஒரு யுத்தமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வகையில், இலங்கை முஸ்லிம்கள் தமக்குள் எவ்வித கருத்துமோதலுமின்றி ஒன்றுபடக்கூடிய -ஒன்றுபடுத்தக்கூடிய- வலிமைகொண்ட ஒரு பேரியக்கமாக ஜம்இய்யா மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். ஜம்இய்யாவை தமது வியாபார சந்தையாக, லாபம் பெறும் இடமாக மாற்றாமல் மிகவும் உளத்தூய்மையோடு புனிதமாக, இஹ்லாஸ், தக்வாவோடு ஜம்இய்யாவை வழிநடத்தக்கூடிய தலைமையும், நிர்வாகமும் இப்போது தேவைப்படுகின்றன. இந்த நிலையில் தற்போதைய தலைவரை பற்றிய எனது சில அனுபவங்களை சமூகத்திற்கு முன்வைப்பது எனது கடமை என உணர்கின்றேன். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவைகள் இன்னொருவரை பற்றிய வசையாக, யதார்த்தத்துக்கு மாற்றமான குற்றச்சாட்டாக,அவதூறு சொல்வதாக அமையக்கூடாது என்பதில் நான் மிகவும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அல்குர்ஆனும், பெருமானாரின் பொன்மொழிகளும் இவ்வாறாக மற்றவரைப் பற்றி பழிசொல்வதை கடுமையாக கண்டிக்கின்றது. எனினும், தலைவர்களை தெரிவுசெய்யும் போது சில விடயங்கள் சமூகத்துக்கு தெளிவுறுத்தப்பட வேண்டும் என்பதில் இப்னு கல்தூன் போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். 

குறைபாடுகளை விவாதித்துக் கொண்டிருப்பதைவிட உடனடியாக ஜம்இய்யா மேற்கொள்ளவேண்டிய சில ஆலோசனைகளை முன்வைக்கின்றேன். 

ஜம்இய்யாவின் யாப்பில் ஏகோபித்து, மாற்றங்களை ஏற்படுத்தி, இலங்கையின் சகல உலமாக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு புதிய நிர்வாகம் இரண்டு மாதத்திற்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதன் பதவியில் உள்ளவர்கள், பணம், அரசியல், இவ்வுலக விமோசனங்களுக்கு உள்வாங்கப்படாமல், தக்வா (இறையச்சம்), வரஉ (பேணுதல்), இஹ்லாஸ் (உளத்தூய்மை) போன்ற இஸ்லாமிய தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாக தெரிவுசெய்யப்பட வேண்டும்.

பேராசிரியர் அஷ்ஷெய்க்.
எம்.எஸ்.எம். ஜலால்தீன் (கபூரி)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 

Comments