'எச்சில் கோப்பையில் ஶ்ரீமாவோவுக்கு தேநீர் வழங்கி மாட்டிக் கொண்டோம்' | தினகரன் வாரமஞ்சரி

'எச்சில் கோப்பையில் ஶ்ரீமாவோவுக்கு தேநீர் வழங்கி மாட்டிக் கொண்டோம்'

‘தேங்காய் சம்பலும் கருவாட்டு குழம்பும் இருந்தால் மஹிந்த ராஜபக்சவுக்கு போதும்’

‘தேநீர் அருந்தவே வரும் டட்லி, சாண்விச்சை விரும்பி உண்பார்’

தன் பாராளுமன்ற சமையல் கூட நினைவுகளை மீட்டிப்பார்க்கும் அபேசேகர

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணவின் மீது அதிக அக்கறை கொள்வதில்லை. அவர் விசேட நாட்களில் மாத்திரமே உணவருந்த வருவார். அவ்வாறு வந்தாலும் சிறிய அளவே உணவருந்துவார். பப்பாளி துண்டென்றால் விரும்பி உண்பார். தற்போதைய ஜனாதிபதியின் உணவில் விசேடமாக எதுவுமில்லை. இருப்பதை சாப்பிடவே அவர் விரும்புவார்

ன்றுபோல் அன்றும் பாராளுமன்ற சமைலறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் தலைவர்மார்களும் தலைவிகளுக்காகவுமே சமைக்கப்படுகின்றது. அன்றைய ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவும் உணவருந்த பாராளுமன்றம் வந்துள்ளார். அவர் உணவு கூடத்துக்கு அபூர்வமாகவே உணவருந்த வருவார். அது மாத்திரமல் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரமே வருவார். அவர் வருகின்றார் என்பதற்காக விசேடமாக உணவு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை. அவர் உணவருந்த வருகின்றார் என அவரது மெய்பாதுகாவலர்கள் முன்கூட்டியே அறிவிக்காவிட்டாலும் கூட அவர் வந்தவுடன் உடனடியாக விசேட உணவுகளை சுவையாக தயாரித்து அவருக்கு பரிமாற உணவு கூட பணியாளர்கள் தயாராகவே இருந்தர்கள். 

பண்டாரநாயக்க அம்மையார் ரொஸ்மிட் பிளேசில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உணவருந்தவே விரும்புவார். அவ்வாறு செல்ல முடியாத வேளையில்தான் பாராளுமன்ற உணவு கூடத்துக்கு வருவார். அவ்வாறு வரும்பொழுது என்ன சமைத்திருக்கின்றது என்று பார்க்கமாட்டார். இருப்பதில் அவருக்கு பொருத்தமானதை பரிமாறிக் கொள்வார். சிறிதளவு சோற்றுடன் மரக்கறி, சூப் இவற்றை எடுத்துக் கொள்வார். பப்பாளிப்பழம், அன்னாசி போன்ற இயற்கை பழவகைகளையே அவர் உண்ண விரும்புவார். ஒருமுறை உணவுகூட சேவகர்களுக்கு எதிர்பாராத சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிட்டது.  

தேநீர் மேசையில் விபரீதம் 

அன்று மாலை 4.30மணிக்கு பாராளுமன்ற உணவுகூடம் தேநீர் உபசாரத்துக்கு தயாராக இருந்தது. ஒவ்வொரு மேசையிலும் ஆறு தேநீர் கோப்பைகளும் ஆறு சிறிய பீங்கான்களும் வைக்கப்பட்டிருந்தன. பல உணவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தன. சாதாரணமாக தேநீர் மேசையில் சீனியுள்ள பாத்திரம் ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும். விருந்தினர் உணவுகளை அருந்திய பின்னரேயே தேனீர் கோப்பையில் பால் ஊற்றப்படுவது வழக்கம். 

எங்களில் ஒருவர் அலுமிச்சை பழசாற்றை தயாரித்து அருந்தியுள்ளார். அக் கோப்பை எவ்வாறோ சுத்தம் செய்யப்படாமல் சரியாக பிரதமரின் தேநீர் அருந்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக அவர் அருந்தும் தேநீருக்கு சக்கரின் குளிசை போடப்படும். நாம் மிகவும் கௌரவத்துடன் பாலை அவரது தேநீர் கோப்பையில் ஊற்றினோம். கடவுளே அவர் பார்க்கும் போதே பால் உறையத் தொடங்கியது.  

அவர் அதனை அருந்துவதை உடனே நிறுத்தி விட்டார். அது எமக்கும் அவருக்கும் அவரது மெய்பாதுகாவலர்களுக்கும் பெரும் பிரச்சினையாகியது.  

நாம் வேறு தேநீரை அவருக்கு வழங்க முயற்சிக்கவில்லை. ஏனென்றால் நாம் மிகவும் பயந்து போயிருந்தோம். அவ்வேளையில் வாசு தேவநாணயக்கார, ரத்ன தேசப்பிரிய ஆகியோர் எமக்கருகில் வந்து நாம் குற்றவாளிகள் அல்ல என கூறிய பின்னர்தான் எமது பயம் போனது. எமக்கு பின்னர் தான் அதன் பாரதூரம் விளங்கியது என்று அபேசேகர ஒரு பரபரப்பான சம்பவத்தை கூறுகிறார்.  

பிரதமர் டட்லி சேனாநாயக்க மிகவும் கௌரவமாக பாராளுமன்ற உறுப்பினர். அவர் வந்த பின்னர் அவருக்கு அருகில் யாரும் அமர மாட்டார்கள். அவர் பகலுணவு அருந்த வருவது மிகவும் அபூர்வம். சாதாரணமாக தேநீர் அருந்தவே வருவார் சில வேளைகளில் அவர் தேநீர் அருந்தியே தமது பகல் உணவையும் முடித்துக் கொள்வார். அவ்வாறு வரும்போது நாம் அவருக்காக ஏதேனும் மேலதிக உணவை தயாரித்து வழங்குவோம். சான்ட்விச் போன்ற உணவுகளை அவர் விரும்பி உண்பார். அவர் உணவருந்திவிட்டு செல்லும் போது சைகையில் எமக்கு நன்றி தெரிவிப்பார். 

சிகப்பு அரிசி தவிடு சாப்பிடும் தஹநாயக்க 

பாராளுமன்ற சரித்திரத்திலேயே இலை கஞ்சியை அறிமுகப்படுத்தியவர் வீ.ஜே.மு. லொக்கு பண்டாரவாகும். இன்றும் இலைக்கஞ்சி தயாரிக்காத நாட்களே இல்லை. அதன் சுவையை அதை அருந்தியவர்களே அறிவார்கள். முன்னாள் பிரதமர் டபிள்யூ. தஹநாயக்கவின் சாப்பாடு பாராளுமன்ற உணவு கூடத்தில் விசேடமானது. தஹநாயக்க பச்சை பாகற்காய் கறி. வல்லாரை சுண்டல் என்பவற்றை சிவப்பு அரிசி தவிட்டுடன் கலந்து உண்பார். 

அவர் உணவருந்த வரும்போது அந்த உணவுகளை தயாரித்து வழங்க பணியாளர்கள் முயற்சி செய்வார்கள்.  

சாதாரணமாக பாராளுமன்றத்தில் அறைகளுக்கு சென்று உணவு பரிமாறுவது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சிதலைவர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு மாத்திரமே, ஆனால் தற்போதைய எதிர் க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அன்று பிரதமர், ஜனாதிபதியாக இருந்தபோது அனைவருடனும் சேர்ந்தே உணவு அருந்த விரும்புவார். 

திடீரென வந்து, இருப்பதை சாப்பிட்டுவிட்டு போவார். அவர் தேங்காய் சம்பலை விரும்பி உண்பார். அதனால் அதனை நாம் கட்டாயம் தயாரிப்போம். அதேபோல் கருவாட்டு குழம்பையும் விரும்பி உண்பார். கருவாடு சமைக்காதபோது அவருக்கு பிரத்தியேகமாக சில கருவாட்டு துண்டுகளை பொரித்து கொடுப்போம். ஆனால் அவர் எவ்வித பரபரப்புமின்றி இருப்பதை சாப்பிட்டுவிட்டு செல்வார்.  

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணவின் மீது அதிக அக்கறை கொள்வதில்லை. அவர் விசேட நாட்களில் மாத்திரமே உணவருந்த வருவார். அவ்வாறு வந்தாலும் சிறிய அளவே உணவருந்துவார். பப்பாளி துண்டென்றால் விரும்பி உண்பார். 

மேலும் எலுமிச்சம் பழ சாற்றை விரும்பி அருந்துவார்.  

தற்போதைய ஜனாதிபதியின் உணவில் விசேடமாக எதுவுமில்லை. இருப்பதை சாப்பிடவே அவர் விரும்புவார் என்பது அபேசேகர கூற்று.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பாராளுமன்ற உணவு கூடத்துக்கு அபூர்வமாகவே வருவார். அவரைப்பற்றிய ஞாபகங்கள் குறைவு. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உணவு முறை குறித்து சுவையான ஞாபகங்கள் உண்டு என்கிறார் அபேசேகர. 

மறைக்கப்பட்ட லெவரியா 

“பிரேமதாச பிரதமராக இருந்த காலத்தில் பாராளுமன்ற உணவு கூடத்தில் மரக்கறி சாப்பாட்டை மாத்திரமே உண்பார். எப்போதும் இருப்பதை சாப்பிட்டு விட்டு செல்வார். ஒரு போதும் தனது அறைக்கு உணவை எடுத்து வரும்படி கூறமாட்டார். அவர் உணவு கூட பணியாளர்களுடன் நல்ல ஒரு தொடர்பினை கொண்டிருந்தார். பிரேமதாச பிரதமராக இருந்த வேளையில் அநுர பண்டாரநாயக்க ஒரு முறை ‘லெவரியா விற்ற பையன்’ எனகேலியாக கூறியிருந்தார்.  

அந்த விடயம் நடந்து 5-6மாதங்களின் பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ அறையில் தேநீர் விருந்தொன்று நடைபெற்றது. அதற்கு தேவையான உள்ளூர் மற்றும் இந்திய உணவு வகைகள் பிரதமர் பிரேமதாசவின் வீட்டிலிருந்தே கொண்டு வரப்பட்டன. அந்த உணவை பரிமாறும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டது. அனைத்தும் நன்றாகவே நடந்தன. அன்று பிரதமரின் பிரத்தியேக செயலாளரினால் கொண்டுவரப்பட்ட ஒரு உணவு பரிமாறபடவில்லையென பிரதமரிடம் அவர் கூறி வைத்து விட்டார். “அபேசேகர, நான் இதுவரை உம்மைப் பற்றி கேட்காத கதையொன்றை கேட்டேன். என்ன இது சாப்பாட்டை மறைத்தீர்களாமே” என என்னிடம் கேட்டார். 

“ஆம் சேர் நான் பரிமாறாத ஒரே உணவு லெவரியா” என கூறினேன். நான் அவ்வாறு செய்தது அவரை காப்பாற்றதான் என ஒரு விநாடியில் புரிந்து கொண்டார். 

தலை தப்பியது அம்மையார் புண்ணியத்தில் 

42வருட கால பாராளுமன்ற உணவு கூட பணியில் பதவி பறிபோகவிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. ‘1977பொதுதேர்தலின் பின் உணவு கொடுப்பனவை வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் பெயரை எழுதி பணம் சேகரித்தோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் 155பேரும் 100ரூபா வீதம் எழுதினார்கள். அந்த லிஸ்ட்டுக்கு பணம் சேகரிக்கும் போது சிறிமாவோ அம்மையார் வெளிநாட்டில் இருந்தார். அவர் வந்தவுடன் விடயத்தை கூறி அந்த லிஸ்டை அவரிடம் கொடுத்தேன். எவ்வளவாவது எழுதும்படி கூறினேன். அவர் பைலை வாங்கி பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் 50ரூபாவை எழுதினார். அரச தலைவியாக அவர் ஏனையோரை விட குறைவாக எழுதியது எனக்கு நல்லதல்ல எனத் தோன்றியது. ஆனால் அதை அவரிடம் தெளிவுபடுத்தவும் முடியாது. நாள் அதை அநுர பண்டாரநாயக்கவிடம் கூற அவர் 50ரூபாவை 100ரூபா வாக மாற்றி எழுதினார். அவ்வாறு செய்வது தப்பென்றாலும் அம்மையாரின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட கூடாதென அதை செய்தாலும் அதன் பின் விளைவை நான் அறிந்திருக்கவில்லை. 

அந்த காசு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் சம்பளத்திலிருந்தே கழிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு சம்பள பட்டியல் கிடைத்த பின்னரே அது பற்றி அறியக் கிடைக்கும். 

இரண்டு மாதங்களின் பின்னர் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். நான் 50ரூபாவை 100ரூபாவாக்கிய விடயம் என அறிந்து கொண்டேன். நான் ரொஸ்மிட் பிளேசுக்கு சென்று அநுர பண்டாரநாயக்காவிடம் விடயத்தை கூறினேன். அவர் உடனடியாக அம்மையாரின் அறைக்கு சென்று அம்மா நான் தான் இதை செய்தேன். அந்த மனிதரை பதவி நீக்கம் செய்ய போகின்றார்கள் நீங்கள் உடனடியாக பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் கூறுங்கள்’ எனக் கூறியுள்ளார்.  

என்ன ஆச்சரியம், அம்மையார் குளிர்பானமும் கேக் ஒரு துண்டையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தார். நான் எவ்வாறான எண்ணத்துடன் அதைச் செய்தேன் என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். தன் தலை தப்பியது என அச் சம்பவத்தை நினைவு கூருகிறார் அபேசேகர. 

அன்று பாராளுமன்ற உணவின் ‘டெசட்’டாக தயிரும் பாணியுமே வழங்கப்பட்டது. அதை வழங்க உணவு கூட பணியாளர்கள் எப்போதும் மறப்பதில்லை. 

அலாகார்ட் மற்றும் பிரதான சமையலறையில் இன்றும் சுவையான உணவுகள் சமைக்கப்படுகிறது. அன்றைய பாராளுமன்ற சமையல் கட்டில் பணிபுரிந்தவர்களை விட இன்று அதிகமானோர் அங்கே பணிபுரிகின்றார்கள் என்று கூறும் அபேசேகர, தனக்கு பாராளுமன்ற சமையல் கூடத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு பொன்னானது என்கிறார்.

சுபாசினி ஜயரத்ன  
சிலுமின

தமிழில் 
வீ. ஆர். வயலட்  

Comments