கல்முனை உண்ணாவிரதம் சுழற்சி முறைக்கு மாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை உண்ணாவிரதம் சுழற்சி முறைக்கு மாற்றம்

ஞானசார தேரரின் உறுதிமொழியால் உண்ணாவிரதிகள் நீராகாரம் ஏற்பு

சந்திரசேகரம் ராஜன் தொடர்ந்தும் சாகும் வரை உண்ணாவிரதம்

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி நேற்று (22) ஆறாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம், நண்பகலுக்குப் பின்னர் சுழற்சி முறையிலான போராட்டமாக மாற்றம்பெற்றது. கடந்த 17ஆம் திகதி முதல் கல்முனையில் இடம்பெற்று வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரர் வருகை தந்து வழங்கிய உறுதிமொழியையடுத்து நேற்று தளர்த்தப்பட்டது.

நேற்றுக் காலை 10.30அளவில் முக்கிய தேரர்கள் பலருடன் கல்முனைக்கு வருகை தந்த ஞானசார தேரர், முதலில் கல்முனை வடக்குப் பிரதேச செயலக அலுவலகத்திற்குச் சென்று ஏற்பாட்டாளர்களுடன் மூடிய அறையில் மந்திராலோசனை நடத்தினார்.  

சுமார் ஒரு மணித்தியாலமாக நடந்த கலந்துரையாடலின் பின்னர், ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் உண்ணாவிரத மேடையை ​நோக்கி வந்தனர். அப்போது அவர்களுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர். 

இந்தப் பிரச்சினையை நிச்சயமாக நிறைவேற்றித்தருவேன். மிகவிரைவில் வந்து தரமுயர்த்தப்பட்ட செய்தியைச்சொல்லி 'வடை பலகாரம் ' தந்து உங்களுடன் மகிழ்வேன். எனவே, இவ்வுண்ணாவிரத்தத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று ஞானசார தேரர் கேட்டுக்கொண்டார். அத்தோடு உண்ணாவிரதிகளுக்கு நீராகாரமும் வழங்கினார். ஞானசார தேரரை மதித்து நீராகாரம் அருந்துவதாகத் தெரிவித்த ரண்முத்துகல தேரர், "பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுவிட்டதென்ற செய்தி மிக விரைவில் வரவேண்டும். இல்லையேல் மறுகணம் விஷமருந்துவேன். நாம் எல்லோரும் நண்பர்கள். இங்கே  நாம் ஐந்துபேர் ஆறு நாட்களாக உணவின்றி, தண்ணீரின்றி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். மரணத்தின் தறுவாயிலிருக்கிறோம். 

ஆனால், எமக்கெதிராக முஸ்லிம்கள் சிலர் நன்றாகச்  சாப்பிட்டுவிட்டு, வீட்டில் உறங்கிவிட்டு சத்தியாக்கிரகம் என்று நாடகம் ஆடுகிறார்கள். அவர்கள் மீது எனக்கு ஒரு கோபமுமில்லை. அவர்களுக்கும் இப்படியொரு கஷ்டம் தேவை வந்தால், நான்தான் முதலில் இருப்பேன். எமது உண்ணாவிரதிகள் அனைவருக்கும் பாதுகாப்புத்தரப்பட வேண்டும். என்றார். 

உடனே அவ்விடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் வரவழைக்கப்பட்டு இவ்விடயம் கூறப்பட்டது. அவரும் தாம் பொறுப்பேற்பதாக உறுதியளித்தார்.  

சிவஸ்ரீ. க.கு சச்சிதானந்தசிவ குருக்கள் பேசுகையில்: 

எம்மை மதித்து இங்குவந்த தேரருக்கு நன்றிகள். அவர் கொண்டுவந்த நல்லசெய்தியை மதிக்கிறோம்; நம்புகிறோம். எனவே, தற்காலிகமாக எமது உண்ணாவிரதத்தை சற்று தளர்த்துகிறோம். ஆனாலும்,  எமது இலக்கு எட்டப்படும்வரை இந்த இடத்திலேயே இருந்து வெற்றிகிடைக்கும்வரை போராடுவோம், என்றார். எனினும், சந்திரசேகரம் ராஜன் தாம் தொடர்ந்தும் போராடப்போவதாகத் தெரிவித்து விட்டார். 

இந்நிலையில், ஏனைய நால்வரும் கல்முனை வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

உண்ணாவிரதத்தில் இருந்துவந்த ஐந்துபேரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தொடர்ந்து சாகும்வரையிலான உண்ணாவிரதம் இருப்பதெனவும் ஏனைய வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்தசிவ குருக்கள், மாநகர சபைஉறுப்பினர் அ.விஜயரெத்தினம், தொழிலதிபர் க.லிங்கெஸ்வரன் ஆகிய நால்வரும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதத்தில் தொடர்ந்து இருப்பதெனவும் முடிவாகியது. 

ஞானசார தேரரின் உறுதிமொழியின்படி மிக மிக விரைவான தீர்வு வரும்வரை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உண்ணாவிரதிகள் தெரிவித்தனர். 

இவர்களுள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மயக்கத்திலிருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவிருந்ததை தேரர்கள் அவதானித்து அவருக்குத் தண்ணீர் வழங்க முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. 

நேற்றைய தினமும் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியிருந்தனர். விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டிருந்ததோடு கல்முனை மாகநரமெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

உண்ணாவிரதமிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய ஞானசார தேரர், காரைதீவிற்கும் சென்று மக்களைச் சந்தித்தார். அவர் உரையாற்றியபோது பலத்த கரகோசத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அங்கு உரையாற்றிய ஞானசார தேரர்,  

"உங்களது தியாகத்தை மதிக்கின்றோம். 30வருடங்கள் தீர்க்கப்படாமல் நீதி கிடைக்காமல் இருந்தமையினால், உயிரை துச்சமென மதித்து உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளீர்கள். இது போராட்டத்தின் இறுதிவடிவம்.   அத்தனை பிரச்சினைக்கும் காரணம் எமது அரசியல்வாதிகள் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.  

 இந்தப்பிரச்சினையால் இரு சமூகங்கள் ஒருவரையொருவர் சந்தேக கண்கொண்டு நோக்கும் நிலை வந்துள்ளது. சமூக ஒற்றுமை சிதைந்துள்ளது.   

ஆகவே, இதற்கு மிகமிக விரைவில் குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்வேன்.  

 ஒரு நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்க முடியும். அப்படியே சலுகைகளும். ஓர் இனத்திற்கு ஒரு சட்டமோ சலுகையோ இருக்கமுடியாது. ஒரே வீதியில் ஒருபக்கம் சொர்க்கமும் மறுபக்கம் நரகமும் இருக்கமுடியாது.  

 இன்றைய பிரச்சினை இப்படியே தீர்க்கப்படாமல் விட்டுவிட்டால், இப்பிரதேசத்தில் பாரிய தமிழ்-, முஸ்லிம் கலவரத்திற்கு வித்திடும். அதனையே அரசியல்வாதிகளும் விரும்புவார்கள். அரசியல்வாதிகளின் இருவேடங்களைக் கலைக்கவேண்டும். எமக்கு அரசியல்நோக்கமோ தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலோ இல்லை. ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலினூடாகவே பயணிக்கிறோம்.  

 எமது தேசிய கீதத்தில் கூறப்பட்டது போன்று இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். அனைவரும் இணைந்தே எந்தப்பிரச்சினையானாலும் தீர்க்கவேண்டும். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையென்றாலும் நான் அங்கு நிற்பேன்" என்றார். 

இதேவேளை, நேற்றையதினம் யாழ். அரசியல் பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர். குறிப்பாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி. வி.தவராசா, முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட குழுவினரும் வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

காரைதீவு குறூப், பாண்டிருப்பு தினகரன், கல்முனை மத்திய தினகரன், மட்டக்களப்பு விசேட நிருபர்கள்

Comments