முதலாளித்துவ பொருளாதாரம் சோஷலிச பொருளாதாரமாக மாறியபோது... | தினகரன் வாரமஞ்சரி

முதலாளித்துவ பொருளாதாரம் சோஷலிச பொருளாதாரமாக மாறியபோது...

'இலங்கையின் முதலாவது பிரதமர் சேனாநாயக்காவின் காற்சட்டை மேற்சட்டை, தொப்பி, சப்பாத்து,  சுருட்டுப்பைப், குதிரைச்சவாரி போன்றன அவரை ஒரு கறுப்பு வெள்ளையராகவே  காட்டியது சிங்களமொழியில் சரளமாக உரையாற்றக் கூடிய ஆற்றலின்மை இதனை இன்னும் தெளிவாகக் காட்டியது'

இலங்கை ஆரம்பத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகளை எவ்வாறு தவறவிட்டதென்பதை கடந்த வாரங்களிலே கண்டோம். பிழையான கொள்கைத் தெரிவுகளும், அகலக்கால் வைக்கும் சிந்தனையும் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் மனோபாவமும் இலங்கை என்னும் ஒரு வளம் மிக்க நாட்டை இற்றைவரை முன்னேற்ற விடாமல் கட்டிப் போட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

சுதந்திரம் பெற்றது முதல் இரண்டு பிரதான கட்சிகளே இந்த நாட்டை தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. முதலாளித்துவ சார்புடைய ஐக்கிய தேசியக் கட்சியும், சோசலிச சிந்தனைப் போக்குடைய ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் தனித்தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் காட்டுச் சேர்ந்தோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின.

சுதந்திரத்தின்போது ஐக்கியதேசியக் கட்சியிடம் அதிகாரம்  ஒப்படைக்கப்பட்டபோது  சுதந்திரக் கட்சி என்ற ஒன்று இருக்கவில்லை அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்சிக்குள்ளேயே பலத்த போட்டி இருப்பதால் தான் அங்கே நீடிப்பதில்  பிரயோசனமில்லை என்பதை  உணர்ந்து கொண்ட பண்டாரநாயக்கா,  நரி தந்திரத்துடன் கட்சியிலிருந்து வெளியேறி நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்தை கவரக் கூடிய 'பஞ்ச மகா பலவேகய' என்னும் ஐம்பெரும் சக்திகள் என அவர் கருதிய மகாசங்கத்தினர், உள்ளூர் வைத்தியர்கள், ஆசிரியர்கள்,   விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்கள் ஆகியோரை பிரதிநித்துவப் படுத்துவதாகக் கூறி சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.

அந்தந்த வேளைகளில் ஏற்படும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எதிர்வினையாற்றும் பெரும்பான்மை இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்த உத்தி பெரிதும் கைகொடுத்தது. அரசியல் பலத்தை கைப்பற்ற மக்களின் இன, மத, மொழி மற்றும் பழைமைவாத அடிப்படைகளில் கைவைத்தால் மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவை திரட்டலாம் என்ற விடயம் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆனால், அரசியல் இலாபத்திற்காக மோசமான இந்த அணுகுமுறை ‘பேயைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது போன்றது” என்பதை அந்த ஐந்து மாபெரும் சக்திகளில் முதன்மைச் சக்தியாக அவர் கருதிய அதே பிக்குகளில் ஒருவர் சுட்ட தோட்டா அவரது மார்பைத் துளைத்தபோது நன்கு உணர்ந்து கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

இலங்கையின் பிரித்தானியரிடமிருந்து உள்ளூர்வாசிகளை நோக்கிய ஆட்சி மாற்றம் மிக இலாவகமாக இடம்பெற்றது. பிரித்தானியரால் பயிற்றப்பட்ட ஆங்கில மொழிப்புலமைகொண்ட ஆங்கில கலாசார பாரம்பரியங்களை பின்பற்றும் உயர் குழாத்திலிருந்து உதித்த இலங்கையர்களிடமே அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. வர்த்தக சமூகத்தையும் உயர் அரச பதவிகளில் இருந்தவர்களையும் பிரபுத்துவ குடும்பங்களை சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினராகவும் அவர்கள் இருந்தனர். எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு முதலாளித்துக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே பண்டார நாயக்கவின் ஐந்து மாபெரும் சக்திகளில் வர்த்தக சமூகத்தினரும் உயர்மட்ட நிர்வாகிகளும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

ஆரம்பத்தில் ஆட்சி புரிந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எலவே இருந்த ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரக் கட்டமைப்பையும் நலன்புரி விடயங்களையும் அவ்வாறே தொடர்ச்சியாக நகர்த்திச் செல்லும் போக்குடன் இயங்கியது. பிரித்தானியர் ஆட்சிக்கும் புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்கும் கொள்கைகளுக்கும் இடையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் ஏதுவும் ஏற்படவில்லை.  எனவே தான் நகைச்சுவையாக இலங்கையின் ஆட்சியதிகாரம் “வெள்ளைக்கார வெள்ளையர்களிடமிருந்து கறுப்பு வெள்ளைக் காரன்களை” நோக்கிச் சென்றதாகக் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் சேனாநாயக்காவின் காற்சட்டை மேற்சட்டை, தொப்பி, சப்பாத்து, சுருட்டுப்பைப், குதிரைச்சவாரி போன்றன அவரை ஒரு கறுப்பு வெள்ளையராகவே காட்டியது சிங்களமொழியில் சரளமாக உரையாற்றக் கூடிய ஆற்றலின்மை இதனை இன்னும் தெளிவாகக் காட்டியது.

மறுபுறம் பண்டாரநாயக்கா பிரித்தானியாவில் கல்விகற்ற சட்டவாதி. வெள்ளைத் தேசிய உடை (உண்மையில் இலங்கை சமூகத்தில் தேசிய உடை எது என்பதில் சர்ச்சை உண்டு.  இலங்கையிலும்  உண்டு – சிலர்  அவ்வுடை கோவணம் தான் என்கின்றனர்)  வட்ட வடிவக்கண்ணாடி, கைத்தடி என்று உள்ளூர் பிரபுவாக தன்னைத் தோற்றப்படுத்திக் கொண்டாலும் பொருத்தமும் இல்லாத வகையில் கையிலே சுருட்டுப் புகைக்கும் பைப்பை பழக்கதோஷத்தால் தவிர்க்க முடியவில்ல.  பக்கா லோக்கலாகக் காட்டி தன்னை  உள்ளூர் இலங்கையர்களின் கதாநாயகனாக நிலை நிறுத்துவதில் வெற்றி கண்ட அவருக்கு சிங்கள மொழியில் சரளமாக உரையாடுவது முடியாத காரியமாகவே இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியில் தேனிலவுக்காலம் ஓரிரண்டு வருடங்களிலேயே முடிந்து போனது. தளம்பும் ஏற்றுமதிப் பயிர்களின் விலைகள் மற்றும் உலக சந்தையில் அதிகரித்த உணவுப்பொருள் விலைகள் இலங்கையின் கஜானாவில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக உள்ளூர் விவசாயத்தை பிரித்தானியராட்சியின் போது கவனிப்பாரற்றுப் போக பிரதான உணவாகிய அரசி மற்றும் முக்கிய உணவுப்பொருள்கள் யாவும் இறக்குமதி செய்யப்படவேண்டியதாயிற்று. அத்துடன் அரசாங்கத்தின் இலவச அல்லது சலுகை விலையிலான உணவு மானியத்திட்டம் இலங்கை மக்கள் அனைவரையும் உள்ளடக்கும் வண்ணம் அமுலாக்கப்பட்டு வந்தது. எனவே உணவுப் பொருள் இறக்குமதி ஒரு பெருஞ்சுமையாக மாறியது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அப்போதைய நிதி அமைச்சர் ஜே.ஆர்.  ஜயவர்த்தன 1956ல் ஒரு கொத்து கூப்பன் அரிசியின் விலையை 25சதத்திலிருந்து 75சதமாக அதிகரிக்க முன்மொழிவொன்றை சமர்ப்பித்தார். மக்கள் வீதிக்கு இறங்கி ஹர்த்தால் நடத்தி குழப்பம் விளைவித்து அதனை முடக்கின. தொழிற்சங்கங்கள் இதன் பின்னணியில் வலுவாகச் செயற்பட்டன.

எனவே உர மானியத்தை குறைப்பதோ நிறுத்துவதோ அரசியல் ரீதியா ஆபத்து என்பதை அப்போதைய அரசாங்கம் நன்கு உணர்ந்து கொண்டது. இந்நிலையிலேயே பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் நிகழ 1956ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

மேற்குலக சார்புடைய முதலாளித்துவ வாத ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து நாட்டை மீட்டு சுதேசிகளின் தேசிய உரிமைகளின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும் நாட்டின் ஐம்பெரும் சக்திகளின் வாக்குப்பலத்தை பெற்றுத் தருமாறு விடுத்த பண்டாரநாயக்காவின் கோரிக்கை வெற்றியும் பெற்றது.

1956ல் பதவியேற்ற அரசாங்கத்தின் காலத்திலேயே இலங்கைப் பொருளாதாரத்தில் பிரதான மாற்றங்கள் ஏற்பட்டன. முதலாவதாக திட்டமிடல் பொறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இலங்கையின் திட்டமிடல் நிபுணர் குழுவொன்று பிரபல திட்டமிடலாளரும் நன்கறியப்பட்ட இலங்கையருமான காமினி கொரயாவின் தலைமையில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றி கற்றுவர ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டது.

அத்தோடு மேற்குலகில் நன்கு அறியப்பட்ட பொருளியல் அறிஞர்கள் பலரும் – ஜே.ஆர். ஹிக்ஸ், உர்சுலா ஹிக்ஸ் நிக்கலஸ் கல்டோர், ஜேன் ரொபின்ஸன் போன்றோர்   இலங்கைக்கு ஆலோசனை வழங்க வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனைகளையும் சமர்ப்பித்தனர். அவற்றில் எவையெல்லாம் எத்தனை தூரம் ஏற்றுக் கொள்ளப்பட்டன  என்பதெல்லாம் கேள்விக்குறியே.

இந்தியா சென்ற திட்டமிடலாளர்கள் மீண்டு வந்து இலங்கைக்கு ஒரு பத்தாண்டுத் திட்டத்தை தயாரித்தனர். கவனிக்கலாம் இந்தியாவின்    ஐந்தாண்டுத் திட்டம் இலங்கை அதைவிட மேலே சென்று 10ஆண்டு திட்டம் தயாரித்தது.

பத்து ஆண்டு காலப்பகுதிக்கு ஒரு திட்டத்தை வகுப்பது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியம்? எவ்வாறாயினும் அப்பத்தாண்டு திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்கள் பிழையெனக் கூறமுடியாது. ஆனால் அந்தத்திட்டம் ஒரே ஒரு வருடம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் பண்டாரநாயக்கவின் படுகொலையைத் தொடர்ந்து காற்றுப் போன பலூனாக சூம்பிப்போனது. அரசியல் மாற்றங்களாலும், வெடிப்புகளாலும் முதலாவதாக பலியாவது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளே என நொந்து போய் குறிப்பிட்டார் திட்டமிடல் நிபுணர் காமினி கொரயா.

நாட்டின் ஏற்றுமதி இறக்கு பொருளாதாரத்தை திறந்த பொருளாதார நிலையிலிருந்து மூடப்பட்ட பொருளாதாரமாக இந்த அரசாங்கமே மாற்றியது. இறக்குமதிப் பொருட்களுக்காக உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து செயற்படும் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில் அபிவிருத்தி உபாயம் இக் காலப்பகுதியிலேயே அமுல் செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தொடரும்

கலாநிதி எம். கணேசமூர்த்தி,  

பொருளியல்துறை,  

கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments