பயன்தரும் பல்லினத்துவத்தை புரிந்து கொள்வது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

பயன்தரும் பல்லினத்துவத்தை புரிந்து கொள்வது எப்போது?

உலகில் பொருளாதார வளர்ச்சியையும் நாகரிக வளர்ச்சியையும் அடைந்திருக்கும் அநேகமான நாடுகள் தமது நாட்டின் அரசியலிலிருந்து மதம் மற்றும் இனம் ஆகியவற்றை அப்புறப்படுத்தியே வைத்திருக்கின்றன. சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளின் துரித வளர்ச்சிக்கும் சமூக எழுச்சிக்கும் மதச் சார்பற்ற அந்நாட்டின் அரசியல் கொள்கையே அடிப்படைக் காரணமாகும்.

ஆயினும் அந்த யதார்த்தத்தினை ஏற்க மறுக்கும் இலங்கையானது, நாட்டைப் பிரித்தாளப் பழக்கியது இன்றைக்கு 70ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறிய வெள்ளையர்களே எனும் பெரும் பொய்யை சாட்டாக வைத்துக் கொண்டு இனவாதத்தை அரசியல் கைப்பொம்மையாக கையாண்டு வருவதையே வழக்கத்தில் கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே தமிழ் இனத்துக்கு எதிராக சிங்கள இனத்தோரையும் சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு எதிராக முஸ்லிம் இனத்தோரையும் என மாறி மாறி ஏவிவிடும் மட்டமான அரசியல் அனுகூலத்தைப் பின்பற்றி வருகின்றது. இதனால் சேற்றில் விழுந்தவன் அதிலிருந்து மேட்டிற்கு வருவதற்கு எடுக்கும் முயற்சிகள் மென்மேலும் அவனை சேற்றுக்குள் தள்ளும் நிலையே இன்று நாட்டிற்கு ஏற்பட்டிருக்கின்றது.  

1915ஆம் ஆண்டளவில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவும் அதன் பின்னர் 1958, 1977மற்றும் 83ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் சிங்கள சமூகத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறை வரலாறுகளானது, இந்த நாட்டின் பெளத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் நாகரிகத்தை அசிங்கப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

உள்நாட்டு கலவரங்களாக ஆரம்பித்த தமிழ் மக்களுக்கு எதிரான வன்செயல், சுமார் 27ஆண்டுகளாக ஒட்டுமொத்த நாட்டையும் அழிவுப் பாதையில் இட்டுச் சென்று இறுதியில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களையும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் அழித்து முடித்த அனுபவத்தையாவது பாடமாகக் கொள்ள முயலாத எமது நாட்டு அரசியல் மீண்டும் நாட்டை சிங்கள முஸ்லிம் இன மோதலை நோக்கி இட்டுச்செல்வதற்கான முஸ்தீபுகளையே முன்மொழிந்திருக்கின்றது, என்பதையே நாட்டின் தற்கால நகர்வுகள் எடுத்துணர்த்துகின்றன.  

ஈஸ்டர் தினத்தன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் வடுக்களிலிருந்து இன்னும் மீளாதிருக்கும் இலங்கை சமூகத்தின் இன்றைய அரசியல் நகர்வுகளும் நிலைமையை சீர்செய்வதற்குப் பதிலாக மேலும் மோசமடையச் செய்யும் திசையிலேயே சென்று கொண்டிருக்கின்றன.

மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தத்தின் போது கூட இந்த நாடு அனுபவித்திராத அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கொடுஞ்செயலைக் கண்டு நாடே அதிர்ந்த நிலையில், அவ்வாறான ஒரு கோழைத்தனமான மிலேச்சத் தாக்குதல் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசியல் தலைமைகள் நடந்தேறிய நாசகார செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது நீயா நானா என்ற சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளையே மேடையேற்றி வருகின்றன.  

83ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் 13சிப்பாய்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பழிதீர்க்கும் வகையில் அரச படைகளையும் பொலிஸாரையும் செயலிழக்கச் செய்து சிங்கள காடையர்களைக் கொண்டு பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றுகுவித்து தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை தீக்கிரையாக்கிய ஆடிக் கலவரத்திற்கு வழிவகுத்துக் கொடுத்த அப்போதைய அரச தலைமைத்துவத்தை இப்படியான ஒரு செயலுக்கு ஏன் இடம் கொடுத்தீர்கள் எனத் தட்டிக் கேட்க திராணியற்றிருந்த இலங்கை சமூகம், இன்று இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியை அறியவெனக் கூறி பகிரங்க விசாரணைகளை பாதுகாப்பு தரப்பினருடன் மேற்கொண்டு வருவதுடன், அரச தலைவர் என்ற வகையில் இத்தாக்குதலின் முழுப் பொறுப்பையும் மைத்ரிபால சிறிசேனவின் பக்கம் திருப்புவதற்கே படாதபாடுபடுகின்றனர்.  

83ஆம் ஆண்டில் அன்றைய அரச தலைமை செயற்பட்டதற்கு முற்றிலும் மாறான விதத்தில் செயற்பட்ட தற்போதைய அரச தலைமையானது, தொடர் தற்கொலை தாக்குதலை நடத்தியது இஸ்லாமிய தீவிரவாதிகளே என்பதை அறிந்த மறுகணமே முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிராக ஒரு இனக்கலவரம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகளை இடையறுப்பு செய்வதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் பாதுகாப்பு தரப்பினருக்கு பெற்றுக்கொடுத்தது.

இதனால் தமது சமூகம் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் உயர் மட்ட அரசியல் தலைமையிலிருந்து கிடைக்கப் பெற்றதுடன் அதன் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகமே முன்வந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு உடனடியாகப் பெற்றுக்கொடுத்ததனாலும் அதற்கமைய பாதுகாப்பு தரப்பினர் புத்திசாதுரியமாக செயற்பட்டதனாலுமே ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் இன்னும் பல இடங்களில் பெருமளவு உயிர்சேதங்கள் ஏற்படுவதற்கு இருந்த வாய்ப்புகளை தடுத்து நிறுத்தி தற்கொலை குண்டுதாரிகளை அழிப்பதற்கான வாய்ப்பு அரச படையினருக்கு கிடைத்தது. இது இந்த அழிவின் பின் துரிதமாக செயற்பட்ட அரசியல் தலைமையின் மதிநுட்பத்திற்கு கிடைத்த மக்கள் வெற்றியாகும்.

ஏனெனில் பல மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்ட, இலங்கை தாக்குதலை விட சிறியளவிலான தாக்குதல்களின் பின்னரும் கூட அந்நாடுகள் இயல்பு நிலைமைக்கு திரும்புவதற்கு பெருமளவு கால அவகாசம் தேவைப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் வெகுசீக்கிரமாக நமது நாடு இயல்பு நிலைமைக்கு திரும்பியிருப்பதை விரும்பாத சில அரசியல் நோக்கங்களைக் கொண்ட சக்திகள் நாட்டை சீர்குலைக்க முயல்வதாகவே தெரிகின்றது.  

குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் எதிர்காலத்திலும் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் இலக்குகளுக்கு ஆளாகக்கூடும் என்ற எதிர்வுகூறலை இந்திய புலனாய்வு துறை விடுத்திருக்கும் பின்னணியில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் துரிதமாக செயற்படுவதற்கு பதிலாக அதற்கு முரணான செயற்பாடுகளே ஒன்றன் பின் ஒன்றாக நாளுக்கு நாள் நடந்தேறி வருகின்றன. தாக்குதல் நடத்தியிருப்பது இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருப்பினும் அனைத்து இஸ்லாம் இனத்தவர்களையும் பயங்கரவாதிகளாக நோக்கக்கூடாது என்ற கொள்கை அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட்டுவரும் பின்னணியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல அடிப்படையற்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைகளின் பின்னர் நிரூபிக்கப்பட வேண்டிய, சிங்கள இனப்பெருக்கத்தை முஸ்லிம் இனத்தவர்கள் திட்டமிட்டு தடுப்பதற்கு செயற்பட்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு ஊடகங்களின் வாயிலாக பாரிய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு நிதி உதவிகளை செய்திருக்கின்றார்கள் என்பது போன்ற விசாரணைகள் மூலம் சட்டரீதியாக ஊர்ஜிதப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களை சுமத்துதல் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுடனான கொடுக்கல் வாங்கலை நிறுத்திக் கொள்வதற்கு சிங்கள சமூகத்தை தூண்டும் வகையிலான பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றமை ஆகியன சிங்களம், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களுக்குமிடையிலான வெறுப்பையும் சீர்செய்ய இயலாத பிளவையும் ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும் அதேவேளை, இறுதியில் அது நாட்டின் பொருளதாரத்தை சீர்குலைப்பதற்கே காரணமாக அமையும்.

இந்த உண்மையை அறிந்தும் அறியாததைப் போல் நடக்கும் தீயசக்திகள் தம்மை சிங்கள சமூகத்தின் காவலர்களாக காட்டிக்கொள்ள முயன்ற போதிலும் அப்படியானவர்களே அச்சமூகத்தின் சீரழிவிற்கு வழிவகுக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.  

இதை விடவும் இலங்கை மீது அகற்ற முடியாத பெரும் கறையாக படிந்திருப்பது அண்மையில் அரசாங்கத்தில் பதவி வகித்து வந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவி துறப்பை பகிரங்க கூட்டு முயற்சியாக வெளிப்படுத்தியமையே ஆகும். காரணம் உலகவாழ் முஸ்லிம் இனத்தோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் அல்-ஜசீரா போன்ற ஊடகங்கள் முஸ்லிம் இனத்தவருக்கு சிங்கள இனத்தவர்களால் ஏற்படக்கூடிய பாரிய அழிவை தவிர்க்கும் வகையில் பெளத்த பிக்குமாரின் கடுமையான வற்புறுத்தலின் பேரிலேயே தாம் பதவி விலகுவதாக வெளியிட்ட அறிக்கையானது இலங்கை மீது உலகவாழ் முஸ்லிம் இனத்தவரின் வெறுப்பையே தூண்ட ஏதுவாக அமையும். முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து பதவி துறந்தமை பாரிய சம்பவமாக ஊடகங்கள் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்பட்ட போதிலும் அவ்வாறு பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் இருவாரங்களுக்குள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொண்டார்கள் என்ற விடயம் உலகறிந்ததாக அமையவில்லை. ஆகையால் மீண்டும் பதவியேற்றமை நாட்டுக்கு ஏற்படுத்தும் சாதகத் தன்மையை விட அவர்கள் பதவி விலகிய செய்தி நாட்டுக்கு ஏற்படுத்திய பாதகத்தன்மையே அதிகமாகும். அரசியலை அரசியலாக இருக்கவிடாது அதை சில மதவாதிகள் தமது நோக்கங்களுக்காக பயன்படுத்தியனாலேயே நாட்டுக்கு இவ்வாறான பாதகத்தன்மை ஏற்பட்டிருக்கின்றது.  

நீண்டகால உள்;ர் யுத்தத்திற்கு முகங்கொடுத்ததன் விளைவாக பாரிய பின்னடைவை சந்தித்திருக்கும் இலங்கையின் பொருளாதாரமானது, யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டு கால சமாதான சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கவில்லை. இந்த நிலையில் உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்த பின்னணியில் நாட்டுக்குள் மீண்டுமொரு சிங்கள−முஸ்லிம் இன மோதல் ஏற்படுவதைத் தடுப்பதே சகல குடிமக்களினதும் பொறுப்பாக இருத்தல் வேண்டும். நாட்டு மக்களின் செயற்பாடுகள் இதற்கு எதிர்மறையாக அமையும் பட்சத்தில் அதன் எதிர்விளைவுகளையும் இலங்கை சமூகத்திற்கே சுமக்க நேரிடும். அது இந்த நாட்டை சமூக, பொருளாதார ரீதியில் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளுவதற்கே வழிவகுக்கும்.

ஆகையால் இலங்கைவாழ் குடிமகனின் இனமும் மதமும் எதுவாக இருப்பினும் அவன் உண்மையான தேசப்பற்றாளனாக இருப்பானாயின் நாட்டை சீரழிக்கும் தீயசக்திகளை இனங்கண்டு அவற்றை அப்புறப்படுத்துவதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக அமையும் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக தமது ஒத்துழைப்பை வழங்குவதும் இத்தருணத்தின் கட்டாய தேவையாகும்.

ரவி ரத்னவேல்

Comments