தமிழர்களை மொழிரீதியாக இணைப்பது பெரும் கடினம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களை மொழிரீதியாக இணைப்பது பெரும் கடினம்

திமிரும் ஆணவமும்   தலைவிரித்தாடுவதே அடிப்படை

ஏப்ரல் 21வராதிருந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இப்போதைய அரசாங்கமோ வேறெந்த அரசாங்கமுமோ வழிவிட்டிருக்காது 

எமது திமிர் எங்கள் மத்தியில் மட்டுமே. சிங்கள போர் வீரர்கள், சிங்கள அரசியல்வாதிகளின் முன்னிலையில் அந்தத் திமிர் ஓடி ஒளிந்து கொள்கின்றது. அவர்களுக்குத் தலைபணிந்து ஆமாம் சொல்ல வைக்கின்றது.

ஏப்ரல் 21பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் திசைதிருப்பப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லையெனக் கூறுகின்றார், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இப்போதைய அரசாங்கமோ வேறெந்த அரசாங்கங்களோ வழிவிட்டிருக்காது என்கின்றார். தினகரன் வாரமஞ்சரியுடனான நேர்காணலில் எந்தச் சிங்கள அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் தரப்போவதில்லை என்று விரக்தியுடன் பேசுகின்றார். அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு..... 

கேள்வி: தமிழ் மக்கள் பேரவை, கட்சிசார் செயற்பாடுகளை மேற்கொள்ளாதென்று சொல்லப்பட்ட போதும், உங்கள் கட்சியின் முகவராகவே செயற்படுகின்றதென்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியிருக்கின்றாரே?  

பதில்: அது தவறு. கஜேந்திரகுமாரின் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரனின் கட்சி, எமது கட்சி அனைத்தும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளையே பிரதி பலிக்கின்றன. அதனால்த்தான் நான் குறித்த கட்சிகள் மூன்றும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று ஆவலாய் இருக்கின்றேன். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். அது எழுக தமிழ் கூட்டங்களை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. தமிழருக்கான அரசியல் திட்ட வரைவொன்றை தயாரித்து அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் எமது மூன்று கட்சிகளும் அப்போது ஒன்றாய் இயங்கின. எனது கட்சி பின் வந்ததெனினும் அதில் உள்ளவர்கள் வரைவின் தயாரிப்பில் அப்போது பங்கேற்றிருந்தார்கள். எங்கள் மூவரதும் கட்சிகள் நாளைக்கு அடிபட்டுப் போனாலும் தமிழ் மக்கள் பேரவை உயர்ந்து நிற்கும். ஏனெனில் அது மக்கள் இயக்கம். அதனை எவரதும் முகவர் என்று கூறுவது அதைச் சொல்பவரின் புரியாமையை எடுத்துக் காட்டுகின்றது. இணைத் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவியுங்கள் எனது கட்சியின் பிரதிநிதியாக தமிழ் மக்கள் பேரவையில் பங்களிப்பு செய்கிறேன் என்று பல தடவைகள் நான் கூறியிருக்கின்றேன். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறியதும் தம்பி கஜேந்திரகுமாரே!  

கேள்வி: முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஓரிருவர் மீதான குற்றசாட்டுக்களை எதிர்த்து, ஒட்டுமொத்த முஸ்லிம் தலைமைகளும் பதவி விலகி தமது ஒற்றுமையை நிரூபித்துள்ளன. அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில்: தமிழ்த் தலைவர்கள் ஏன் மொழி ரீதியாக, இன ரீதியாக, எமது மக்கள் நலம் கருதி இதுகாறும் இணைந்து செயலாற்ற முன்வரவில்லை என்று சிந்திக்கின்றேன். ஒருவேளை மத ஒற்றுமையானது இன, மொழி, கலாசார ஒருங்கிணைப்புக்கு அப்பாற்பட்டதோ நான் அறியேன். அரசியல் ரீதியாக முஸ்லிம் தலைவர்கள் எதற்காக அவ்வாறு செய்தார்கள் என்பதிலும் பார்க்க மத ஒற்றுமையை முன்வைத்து பதவி துறந்த எமது முஸ்லிம் சகோதரர்களை பாராட்டுகின்றேன். அவர்கள் மற்றைய மக்கள் கூட்டங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகப் பரிணமித்துள்ளார்கள்.  

கேள்வி: அவ்வாறான ஒற்றுமை ஏன் தமிழ் அரசியல் தலைமைகளிடத்தில் சாத்தியப்படவில்லை என்று நினைக்கின்றீர்கள்?  

பதில்: தமிழ் என்பது மொழி. இஸ்லாம் என்பது மதம். மொழி எம்மைப் பிணைத்தாலும் எம்முள் ஒருமித்த சிந்தனை மொழியின் பொருட்டு வளர்வது மிகக் கடினம். ஆனால் மதம் அவ்வாறன்று. அதுவும் மத்திய கிழக்கு மதங்கள் ஒரு நூல், ஒரு இறைவன், நிறுவன ரீதியான மதஸ்தாபனங்கள் என்று தம்மை பிணைத்துக் கொள்ள பொதுவான பல காரணிகளை உள்ளடக்கியுள்ளன. இந்து மதமோ ஒருவனே தேவன் என்ற அடிப்படையை ஏற்றாலும் இந்திய உப கண்டத்தில் மூன்று இலட்சத்துக்கு மேல் தெய்வங்கள் வழிபடப்படுகின்றனர்.  

ஆகவே மதரீதியாகவோ மொழி ரீதியாகவோ தமிழ் மக்களை ஒருங்கிணைப்பது மிகக் கடினம். அத்துடன் இலங்கைத் தமிழர்களிடையே திமிர் அதிகம். தான் என்ற அகந்தை அதிகம். ஒவ்வொருவரும் ஒரு தீவு. ஆகவே அவர்களால் கொள்கை ரீதியாக மட்டுமே ஒருங்கிணைய முடியும். ஆனால் கொள்கை ரீதியாகத் தமிழ் மக்கள் இதுவரை ஒன்று சேர முடியாமல் போனதால்த்தான் ஒற்றுமைக்கு இடமில்லாமல் இருந்து வருகின்றது. ஏன்! தமிழ் மக்கள் பேரவையில் கொள்கை ரீதியாக ஒருங்கிணைந்த மூன்று கட்சிகளைக் கூட ஒன்று சேர விடுகின்றதில்லை எமது திமிரும் சுயநலமும். அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கும் அவர்களின் பல தசாப்த கால சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை வென்றெடுப்பதில் கட்சிகளுக்கு இடையே இருக்கக்கூடிய வேறுபட்ட நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளாவன ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தி உள்ளன.  

ஆனால், ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் நான் குறிப்பிட்ட இந்த தடைகளுக்கு இடம் இருக்கவில்லை என்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடிந்தது.  

தற்போது அது இல்லை. அவை இருந்த காலத்தில் ஒற்றுமை இருந்தது. ஆகவே தான் எம்முள் ஒற்றுமை சாத்தியப்படாது இருக்கின்றது. அத்துடன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எமது திமிர் எங்கள் மத்தியில் மட்டுமே. சிங்கள போர் வீரர்கள், சிங்கள அரசியல்வாதிகளின் முன்னிலையில் அந்தத் திமிர் ஓடி ஒளிந்து கொள்கின்றது. அவர்களுக்குத் தலைபணிந்து ஆமா சொல்ல வைக்கின்றது.  

கேள்வி: தற்போதைய நாட்டு சூழலில் வடக்கு கிழக்கு இணைப்பு, புதிய அரசியலமைப்பினூடாக தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வு என்பனவெல்லாம் திசைதிருப்பப்பட்டு விட்டனவா?  

பதில்: அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால், புதிய அரசியல் அமைப்பு முயற்சிகளில் வடக்கு கிழக்கு இணைப்பை சாத்தியம் இல்லாமல் செய்யும் வகையிலும், பெளத்தத்துக்கு முன்னுரிமை அளித்து ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்துள்ளது என்பதை பல தடைவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன்.  

எந்தச் சிங்கள அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் தரமாட்டா என்பதே எனது கருத்து. ஆகவே ஏப்ரல் 21வராதிருந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இப்போதைய அரசாங்கமோ வேறெந்த அரசாங்கமுமோ வழிவிட்டிருக்காது என்பது எனது கருத்து. தமிழர்களை எழும்ப விடக் கூடாது என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் அரசியல் ஆற்றி வரும் சிங்களத் தலைவர்கள் திடீரென்று அதனை மாற்ற முன்வருவார்களா? அல்லது அவ்வாறு மாற்ற சிங்கள மக்களும் பெளத்த சங்கமும் இடங் கொடுப்பார்களா?   நெருக்குதல் இல்லாமல் எந்த சிங்கள அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது. நெருக்கடிகளையும் நெருக்குதல்களையும் ஏற்படுத்த எமது தமிழ்த் தலைவர்கள் தமது சுயநல அரசாங்க எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்ல முன்வர வேண்டும். சுயநலம் களைந்து கொள்கை ரீதியாக முனைப்புடன் செயல் பட முன்வர வேண்டும்.  

கேள்வி: தற்போதைய சூழலில் தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறானவையாக அமைய வேண்டும்?  

பதில்: மக்கள் நலஞ் சார்ந்த தமிழ்த் தலைமைத்துவம் பரிணமிக்க வேண்டும். சுயநலம் களைந்து, கட்சி நலம் களைந்து மக்கள் நலத்துக்காக உழைக்கக் கூடிய தமிழ்த் தலைமைகள் ஒன்று சேர வேண்டும். மக்கள் நலம் என்று கூறும் போது தூர நோக்குடன் எம் மக்கள் நலனை நோக்குபவர்களையே நான் குறிப்பிடுகின்றேன். அன்றாடத் தேவைகளுக்கு அப்பால் எமது இனத்தின் வருங்காலத்தைப் பற்றி சிந்தனை செய்யும் தமிழ்த் தலைமைகள் உதிக்க வேண்டும். அரசாங்கம் தராது ஆகவே கிடைத்ததைச் சுருட்டிக் கொள்வோம் என்று கூறும் தலைமைகள் மக்கள் நலஞ் சார்ந்தவர்கள் அல்ல.

வாசுகி சிவகுமார்

Comments