தம்பி கல்யாணம் | தினகரன் வாரமஞ்சரி

தம்பி கல்யாணம்

அம்மாவின் தலைமுடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்திருப்பதில் அதிசயப்பட ஒன்றும் இல்லை. மூன்றாவது மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி இரண்டே மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் நாளை கல்யாணத்திற்கான வேலை. அலைச்சலில் உம்மா இன்னும் கூடுதல் வயதானவள் போல் இருந்தாள்.  

பந்தல் கால் நாட்டுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் வாப்பா.  

அவரைப் போல முன் கோபக்காரர் அவரேதான். அந்த கோபக்கார வாப்பாவோடு வாழ்ந்துதான் ஐந்து பிள்ளைகளுக்குத் தாய் ஆகியிருந்தாள் உம்மா.  

பந்தல் கால்களை வேறு யாரையும் நட விடமாட்டார். அவரே நட்டு, ஒரு கண்ணை மூடி மறு கண்ணால் கால்களை நேர் பார்த்து.  

“உம்மாட புடவையள பாத்து எடுத்துட்டு வா" என்று சத்தம் மட்டும் வைத்தார். புடவைகளை யார் கொண்டு வரப்போகிறார்? எப்படியும் இந்த வேலையையும் உம்மாதான் செய்வாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  

நடு இரவில் கூட எழுந்து தனியே வெளியே போனாலும் போவாள் ஆனால், வாப்பாவின் கட்டளைக்கு வெளியே போகமாட்டாள் உம்மா.  

புடவை என்றதும்தான் ஞாபகம் வந்தது. அவர் உம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுத்ததை நான் கண்டதேயில்லை. கொழும்பில் புடவைக் கடையில் வேலை செய்யும் மாமாதான் லீவில் வரும் ஒவ்வொரு தடவையும் ஒரு புடவையும் மற்றும் சில தாவணித் துண்டுகளும் கொண்டுவந்து கொடுத்ததுதான் நல்ல ஞாபகம்.  

பந்தலின் கூரை இழுப்பதற்கு உம்மாவிடம் இருக்கும் புடவை மட்டும் போதாது. மூத்தம்மா, சின்னம்மா, இவர்களின் புடவைகளுடன் பக்கத்து வீடுகளிலும் பழைய புடவைகளையெல்லாம் வாங்கிச் சேகரித்து வந்து பந்தல் நடுவே இருக்கும் பெரிய கால் அருகில் குவித்துவிட்டாள் உம்மா.  

வாசலில் பார்க்கும் இடமெல்லாம் கடற்கரை மணல் கொட்டிக் கலைத்து விடப்பட்டிருந்தது. கடற்கரை மணல் என்பது மனதுக்கு இதம் தரும் நதி அல்லவா. நீச்சல் தெரியாவிட்டாலும் மிதந்து கொண்டிருக்கலாம். யாரையும் மூழ்கடிக்காது என்பதை நன்றாக தெரிந்தவர்களைப் போல் வந்திருக்கும் குடும்பத்திலுள்ளவர்களின் பிள்ளைகள் பதினொரு பேரும் மணலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இது வாப்பாவுக்கு ஒரு போதும் பிடிக்காது. அவருடைய கரகரத்த குரலில் கண்டித்து சத்தமாக ஏசி அடிக்கடி அவர்களை விரட்டுகின்ற வேலையையும் செய்துகொள்கிறார்.  

பந்தல் கால் அருகில் கிடக்கும் புடவை ஒன்றின் மேல் மழை தண்ணீர் இல்லாமல் பூத்திருந்தன சில ரோஜாப் பூக்கள். அது தன்னை யாரும் பறிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது.   

“ஏய் இஞ்ச வா எங்க சும்மா பதுங்கித் திரியிர” என்று கையில் பனை ஓலை விசிறிகளுடன் மணலில் கிடந்த கயிற்று முடிகளைக் கடந்து சென்ற உம்மாவைப் பார்த்துக் கேட்டார் வாப்பா. அவர் ஒரு நாளாச்சும் அன்பாக நல்ல வார்த்தையால் பேசியதை என் காதுகள் கேட்டதே இல்லை.  

இந்த கடும் சொற்களை ஐந்து பிள்ளைகளும் தலை தூக்கும் வரை கேட்டுப் பழகியதால் என்னவோ எந்த சலனமும் இல்லாமல் நின்று வாப்பாவைத் திரும்பிப் பார்த்து,  

“நான் பதுங்கித் திரியிறன் நீங்க வந்து கண்டு பிடியுங்கோ” என்று தமாஸாக சொன்னதற்கு வாப்பா உம்மாவிடம் நெருங்கி வந்து, வழமையாக நச்சென்று முகத்தில்தான் துப்புவார் ஏனோ மகனுடைய கல்யாண வீடு என்று நினைத்திருக்கலாம் நிலத்தில் நச்சென்று வேகமாக துப்பினார். அவர் கோபத்தைக் காட்டும் மிக சிறப்பான முறை இதுதான்.  

ஒரு வினாடி கண்களை மூடி திடுக்கிட்டு தலை அசைந்ததும், முகமும் வெளுத்து நின்றாள் உம்மா.  

அடுத்து வந்த வினாடியில் அவர் முன்னே நின்ற இடத்துக்கு சைபரை போட்டு விட்டுச் சென்றாள் உம்மா. சேவலும், ஒரு பெட்டைக் கோழியும் சண்டைக்குத் தயாராகிப் பிரிந்த காட்சியை இலேசாக நினைக்கிறது மனம்.  

பகல் உணவு மளமளவென தயாராகிறது. பீங்கானோடு பீங்கான் அடித்துக் கொள்ளும் சத்தம் ஒரு ஆதாரம்.  

வளவு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் யாரும் காண மூலையில் மூன்று நாய்கள் மாட்டு எலும்பொன்றுடன் சண்டையிடுகின்றன. அதில் ஒரு நாய் இன்னொரு நாயிடம் தன் அகோரப் பற்களைக் காட்டி சிரிப்பதுபோல் இருக்கிறது. ஆனால் நாய்கள் முறைப்படி சிரித்தால் நன்றாக ஒரு புகைப்படத்தை எடுத்திருப்பேன்.  

மாட்டு இறைச்சியை வெட்டிக் கழுவும் சின்ன வாப்பாவின் சட்டை அணியாத உடலில் இருந்து வியர்வை வெளியேறி வடிந்து கொண்டிருப்பதைக் கண்ட சின்னம்மா விரைவாய்ச் சென்று தன் புடவைத் தலைப்பால் அவர் முதுகுப்புறத்தையும், நெஞ்சுப் பக்கம் மற்றும் வயிறு வரை துடைத்துவிட்டாள். அப்போது அவளுக்கும் கமுக்காடு வியர்த்திருக்கிறது என்பதை கண்டுகொண்டார். ஒன்றும் பேசவில்லை.  

கணவன் மீது அதீத அன்பாக இருப்பவள் என் இளைய சின்னம்மா.  

சில காகங்களும் ஓய்வில்லாமல் சிறிய தென்னை மர ஓலைகளில் தங்கி நின்றபடியும் கத்துகின்றன.  

குசினிக்குள்ளிருந்து வரும் ஏலக்காய் வாசம், கிணற்றடியில் நிற்கும் சிறு இளநீர் மரத்தில் பெரிய கறிவேப்பிலைக் கட்டொன்றை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார் ஊரிலே பெயர் போன சமையல்காரர். தின்ணையின் ஒரு மூலையில் துலாவிக் கிடக்கும் தக்காளிப் பழங்களை வெட்டிக் கொண்டிருக்கும் பெரியம்மா தூக்கலாய் ஒரு டீ கேட்ட வாய்க்கு இன்னும் டீ வராத சிறிய கோபத்தில் இருக்கும் முகத்தை போலியாக சிரிக்க வைக்கிறாள்.  

வெங்காயம், பச்சை மிளகாய் என்று சிறிது சிறிதாக வெட்டப்பட்ட மரக்கறி வகைகள் ஒரு பக்கம்.  

புரியாணிச் சோறுதான் சமைக்க ஆயத்தங்கள் நடக்கின்றன என்பதை கமகமவென வரும் வாசனையை வைத்து சிலர் குசினிப்பக்கமே வராமல் தங்கள் அலங்கார மேக்கப் கலையாமல் கதிரையில் இருந்து கொண்டு கண்டுபிடிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் குடும்பத்தில் கொஞ்சம் வசதிக்காரர்கள் என்பதை சொல்லத் தேவையில்லைதானே.  

எப்படியும் பகல் சாப்பாடு பகல் பன்னிரெண்டு மணிக்குத் தயாராகிவிடும் என்ற நம்பிக்கையில் வயிற்றைக் காயப்போட்டுக் கொண்டு கதையளந்து கதையளந்து பொண்ணுக்கு கொடுக்கும் சீர் சாமான்களை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டிருக்கும் நெருங்கிய சொந்தக்கார பெண்கள். மாப்பிள்ளையை கிண்டலடிக்க தேடிக் கொண்டிருக்கும் மச்சிமார்களின் புது ஆடை வாசனையோடு வீடே சிரிக்கின்றது.  

வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த தம்பி ரோட்டுப்பக்க மதில் ஓரமாக நிற்கும் பிளாட் மாமர நிழலை நோக்கி விரைகிறான். தம்பியின் முகம் வெய்யில் பட்ட வாழை இலைபோல் வாடியிருந்தது.  

மரத்தின் கீழ் கிடந்த அந்த ஒற்றை நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டான். காய்த்துத் தொங்கும் மாங்காய்களுக்கு வலைவீசி காவல் போட்டிருந்தார் வாப்பா. அவர் கடலுக்கு கொண்டு போகும் வலைகளில் நான்கு வருடங்களுக்கு முன் கண்கள் கிழிந்த அந்த வலைக்கு ப்ளாட் மாங்காய்கள்தான் மீன்களாகின. அணில் ஒன்று தந்திரமாக உள்ளே நுழைந்திருக்க வேண்டும். நல்ல குண்டுப் பெண்ணின் பொங்கிய கன்னம் போலிருக்கும் ஒரு மாங்காயில் வாய் வைத்து ஆறுதலாக கொறித்துச் சாப்பிடுகின்றது. அணில் மாங்காயைக் கொறிக்கும்போது சிறுசிறு துண்டுகள் தவறி தலையில் விழுவதையும் உணராத தம்பி சற்றுமுன்தான் ஊமையாய் ஆனவன் போல் கதிரையில் முதுகை இலேசாக சாய்த்துக் கொண்டான்.  

இதுவரை கல்யாணவீட்டை வீடியோ கால் மூலம் எனக்கு காட்டி மகிழ்வித்த தங்கச்சியிடம்,  

“மொபைல தம்பிக்கிட்ட கொஞ்சம் கொண்டுபோய்க் கொடு காக்கா கதைக்கனுமென்டு சொல்லு” என்றேன்.  

அவளும் அப்படியே செய்துவிட்டு திரும்பும் போது மகன் குளோன் போத்தலை கீழே போட்டு உடைத்து விட்டதாக வந்த அலறல் சத்தத்திற்குப் பின்னால் ஓட்டம் பிடித்தாள்.  

“தம்பி அஸ்ஸலாமு அலைக்கும். என்ன ஜோசனையோட இருக்க... என்ன பிரச்சினை சொல்லு” என்றேன்.  

“இல்ல நாளைக்கு கல்யாணம் நடக்குமா? சந்தேகமா இருக்கு அதான்...” என்று இழுத்தான் தம்பி.  

“இங்க பாரு தம்பி இது விளையாடுற நேரமில்ல நேரா விசியத்த சொல்லு” என்றேன்.  

“வாப்பா கேட்ட சீதனக் காசில நாலு லெட்சத்தி இருபதாயிரம் குறையுதாமென்டு பொண்ணு வீட்டுல இருந்து கடைசி மச்சினன் எனக்கு மட்டும் கால் பண்ணிச் சொன்னான். இப்பதான் சொன்னான். எனக்கு என்ன செய்றதென்டு தெரியல...” என்றான் தம்பி.  

“டே... தம்பி கவலய விடு இப்பவே உன்ற எக்கவுண்டுக்கு காசு போடுறன் பின்னேரம் போய் எடுத்து பொண்ணுட வாப்பாக்கிட்ட கொடு இந்த விசியத்த யாருக்கும் சொல்லாம, தெரியாம பாத்துக்கோ சரியா...?” என்று மூச்சுப் படித்து பேசிவிட்டேன். ஐந்து வினாடி அமைதிக்குப் பின்,  

“இப்புடி முப்பது லட்சம் சீதனம் வாங்கித்தான் எனக்கு கல்யாணம் பண்ணிவப்பாங்க என்டு தெரிஞ்சிருந்தா எஞ்சினியரிங் படிச்சிருக்கவே மாட்டன்” என்று வருந்தினான் தம்பி.  

“நீ படிச்சது ஒன்னும் குத்தமில்ல வாப்பாட கொள்கையில தான்டா குத்தமிருக்கு சரி விடு... அவரும் இப்பதான ஒரு கல்யாணத்த தடபுடலா பண்ணி பாக்கிராரு ஒன்னப்போல நான், இளய காக்கா யாருக்கும் படிப்பு வரல, வாப்பாக்கிட்ட கேட்டு கல்யாணமும் பண்ணிக்கல எங்கட இஸ்டத்துக்கு பண்ணிக்கிட்டம். அதுலயும் கல்யாணத்த வாப்பா ஒரு ஓரமா நின்னு பாத்துட்டுப் போற மனிசனாத்தான் இருந்தாரு இல்லயா சொல்லு. ஆனா இப்ப எவ்வளவு திமிராவும், சந்தோசமாவும் பந்தல் போட்டு முடிச்சிருக்காரு பாத்தாயா? இது உனக்கு வாச்ச அதிர்ஸ்டம்” என்று ஆறுதலாக நாலு வார்த்தை பேசி முடித்தேன்.  

போன உயிரு திரும்பி வந்ததுபோல பாவனையில் மீண்டும் கொஞ்சம் கதிரையில் சாய்ந்துகொண்டான்.  

இப்போது என் கண்ணுக்குள் தம்பியின் கல்யாண வீடு தெளிவாகத் தெரிகிறது.  

சந்தோசம் சீறிப் பாய வீட்டுக்குள் ஓடிப்போய் தங்கச்சி, மச்சான், மாமி என்று வந்திருக்கும் சொந்தக்காரர்களிடம் என்னைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டான். என்னைப் பற்றிய ஒரு நல்ல விசயத்தை பேசி கேட்காத வீட்டின் காதுகள் வெடித்துப்போய்விடும் போலிருந்தது.  

பெண் வீட்டிலிருந்து இரண்டு வேன் நிறைய பெண்கள் வந்து இறங்கியதும்தான் தம்பிக்கு மருதாணி போடும் படலம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஞாபகம் வந்தது. பெண் வீட்டாருக்கு சிறந்த வரவேற்பு நடக்கத் தொடங்கியது.  

இதற்கிடையில் என் மனைவிக்கு கால் பண்ணி கல்யாண வீட்டிற்கு இப்பவே வரும்படி கெஞ்சுகிறான் தம்பி.  

பொண்டாட்டியோட சேர்ந்து தம்பியின் கல்யாணத்திற்குச் செல்லும் கொடுப்பனவு இல்லையே என்ற அடக்க இயலாக் கவலையில் கணவனின் புகைப்படம் ஒன்றைப் பார்த்து மனதால் பேசி அழுதுவிட்டு புகைப்படத்தை தலையணைக்கு கீழே வைத்து விட்டு இரு கண்களையும் மீறி வரும் கண்ணீரை துடைத்து விடாமல் சுதந்திரமாய் ஓட விட்டபடி தனியே தன் அறையில் படுத்திருக்ககும் என் மனைவி தம்பியின் கெஞ்சலுக்கு பதிலே சொல்லாமல் தொலைபேசியை காதில் வைத்த வண்ணம் பித்துப் பிடித்தவள்போல் கிடந்தாள்.  

பின்னர்,  

“என்ன மன்னிக்கனும் இப்ப என்னால வர முடியாது நாளைக்கி பின்னேரம்தான் வருவன்” என்று சொல்லி பட்டென பேச்சை முடித்துவிட்டாள். பதின்மூன்று வருடங்களுக்கு முன் வாப்பா பேசிய ஒரு வார்த்தை.  

மனதை நோகடிக்கும் வார்த்தைக்கு மரணமில்லை. உம்மம்மா வெளியேறிச் சென்று தன் மகன் வீட்டில் தஞ்சமடைந்து இன்றுதான் அதுவும் தம்பியே காலடிக்குப் போய் காலில் விழுந்து மன்னிக்கச் சொல்லி மன்றாடி கல்யாணத்திற்கு வரும்படி அழைத்திருக்கிறான். அழாத குறை ஒன்றுதான்.  

சில மணித்தியாலங்களுக்கு முன்வந்து சேர்ந்த உம்மாம்மா புதிய நாட்டிற்கு விமானம் மூலம் வந்து இறங்கியவள் போல் கொஞ்சம் பதட்டத்துடன் இருக்கும் முகத்தோடுதான் இன்னும் இருக்கிறாள். அருகில் வெற்றிலைத் தட்டு. நிறைய வெற்றிலைக் கொழுந்து. பார்த்தால் கடிக்க வேண்டும்போல் இருக்கும் பளபளப்புடன். ஒரு கொழுந்தைக் கிழித்து சிறிது சுண்ணாம்பு தடவத் தொடங்கிவிட்டாள் உம்மாம்மா.  

இரவெல்லாம் கண் விழித்து ஜன்னல் கம்பிகளுக்கு பெயின்டு பூசிய நித்திரை மயக்கம் தீர உறங்கிவிட்டு படுத்த பாயிலே திரும்பவும் புரண்டு புரண்டு படுப்பதும், கமுகாடு வீசும் வியர்வை நாற்றத்தை தடவி முகர்ந்து பார்த்து அந்த அறைக்குள் இருக்கும் வாழைப் பழங்களில் ஓரிரு பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு கிடக்கும் கடைசித் தம்பி.  

பகல் உணவு பறிமாற்றம் தொடங்கிவிட்டது. ஆண்கள் பந்தலிலும், பெண்கள் வீட்டிற்குள்ளும் கூடி அமர்ந்து சாப்பிடத் தொடங்கி விட்டார்கள். பக்கத்து வீடுகளுக்கெல்லாம் புரியாணி பார்சல் பார்சலாக அனுப்பப்பட்டது. தம்பி தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்து நான்கு பேருக்கு ஒரு சஹான் விகிதம் சாப்பிட ஆரம்பித்திருக்கும் தம்பியின் மனதில் நான் நிழலாக ஆடிக் கொண்டிருந்தேன். முன்பு என்னை உதாசீனப்படுத்திய வார்த்தைகளையெல்லாம் மனதால் வாந்தி எடுக்க முடியுமா என முயற்சித்தவன் போல மெதுமெதுவாக சாப்பிட்டான்.  

நண்பர்கள் “மாப்புள்ளக்கி கல்யாணம் என்றதும் பயம், வெட்கம் எல்லாம் ஒன்னா வந்து வாய கட்டிப்போட்டோ” என்று கிண்டலாக பேசி சிரித்தார்கள். நீங்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் உங்களிடம் சொல்லாத ஒன்று மனதில் தேங்கி இருக்கத்தான் செய்கிறது என்று தம்பியின் உதடு சொல்வதை அவன் நண்பர்கள் உணரமாட்டார்கள்.  

மாட்டு இறைச்சியுடன் சண்டை இட்டுக்கொண்டு கொஞ்சம் கதவுக்கு மறைவாக இருந்து பெரிய உம்மா சாப்பிடுகிறாள். நல்ல பசியாக இருக்கு இல்லையென்றால் இப்படி கல்யாணச் சாப்பாடு கிடைப்பது அரிது என்று எண்ணியிருக்கலாம்.  

மூக்கு நுனியில் பூத்திருக்கும் வியர்வைப் பூக்களை புடவைத் தலைப்பினால் பறித்தபடி சாப்பிடுகிறாள்.  

ருசித்துச் சாப்பிட்ட எலும்புகளை பீங்கானுக்கு வெளியில் போட்டு பனை ஓலைத் தட்டு ஒன்றினால் மூடிவிட்டிருந்தாள். யாரும் கண்டால் கண்பட்டு விடுமருமளவுக்கு எலும்புகள் குவிந்து கிடந்தன.  

புரியாணிச் சோற்றுக்கு மேல் நல்ல பார்வையான கொஞ்சம் இறைச்சிக் கறியும் எல்லோருக்கும் பறிமாறப்பட்டது. உம்மாம்மா எங்கே என்று பார்த்தால் அதோ தெரிகிறாள் தனக்கே சொந்தமான, போர் வீரனைப்போல் முட்டிக் கொண்டிருக்கும் சுவரின் மூலையில் அமைதியாக, வெற்றிலை போட்டு சிவந்த வாயைக் கழுவி படிக்கத்திற்குள் துப்பி முடித்து, புரியாணிக்கு நோகாமல் மெல்லமெல்ல பிசைந்து அளவாக இறைச்சியையும் கடித்துச் சுவைத்து சாப்பிடத் தொடங்கிவிட்டாள்.  

வாப்பா தன் சம்மந்தக்காரரோடு சபையில் இருந்து சாப்பிடுவதை பூனைக்குப் பயந்து ஒளிந்துகொண்டு எட்டிப் பார்க்கும் எலியைப்போல பார்த்துவிட்டு திரும்புகிறாள் உம்மா.  

யாரோ ஒரு குமருடைய கைலேஞ்சி தவறி, கதவுச் சிலையின் அணைப்போடு கிடக்கிறது. அதில் இருந்துதான் இந்த வெளிநாட்டுக் குளோன் வாசனை வருகிறது என்று நினைக்கிறேன்.  

வீட்டுக்குள் நுழைந்தால் வெளியே வர மனம் இடங்கொடுப்பதாக இல்லை. அவ்வளவு குமர் பெண்கள். தேவதைகள் போன்று உலாவுகின்றனர். தூண்டில் போடாமலே துடிக்கும் மச்சிமார்களின் கண்கள்.  

உறங்கிக் கொண்டிருக்கும் தம்பியின் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றித்தான் எழுப்பவேண்டிப் போச்சு. வாடிய செடி தண்ணீர் பட்டவுடன் நிமிர்ந்துவிடுவது போல் தம்பி எழுந்திருப்பதை நின்று பார்த்துவிட்டுத்தான் போவேன் என்ற பிடிவாதம் உள்ளவள் போல், தம்பி எழும்பியதும் அவன் கையைப் பிடித்து இழுத்து குளியலறைக்குள் தள்ளி “குளிக்காம வந்தா உனக்கு சோறு இல்ல” என்று மிரட்டிவிட்டுச் சென்றாள் உம்மா.  

எப்படியோ இந்ந கல்யாணத்து புரியாணிச் சாப்பாட்டு, தடபுடல்கள் எல்லாம் முடிவதற்கு மாலை நான்கு மணியாகி விட்டது. ஐந்து மணிக்குப் பிறகுதான் உறவுக்காரர்கள் ஒருவர் ஒருவராக தெளிந்து, மேலே வந்து மிதக்கும் இலைகள் போன்று கண்களில் தென்படத் தொடங்கினார்கள்.  

உம்மாம்மா, பெரியயும்மா, சின்னம்மா, பிள்ளைகள், மச்சான், உம்மாப்பா மௌத்தாகி கன காலம் ஆச்சு. வாப்பாவின் குடும்ப உறவுகள் கொஞ்சம் தள்ளித்தான் இருக்கிறார்கள். நாளைய விசேசத்தில்தான் அவர்கள் வந்து கலந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.  

இப்படி சில இரத்த உறவுகளுடன் ஒவ்வொன்றாக மின் விளக்கை எரியவிட்டுக் கொண்டிருக்கும் தங்கை அன்றுதான் வீட்டின் மொத்த விளக்குகளையும் மூலை முடுக்கெல்லாம் எரிய விடுகிறாள்.  

யார்? மனதிடம் என்ன கேட்டாரோ இந்த நேரம். சுவர் மணிக்கூட்டிற்குப் பின்னால் மறைந்திருந்த பல்லி “ச்..ச்..ச்..” என்று பதில் சொல்லியது.   

“மாப்பிள்ளைய காவின் எழுத பள்ளிக்கு கூட்டின்டு போக தயார் படுத்துங்க. பொண்ணுட வீட்டாக்கள் வெளிக்கிட்டாங்களாம்”  

என்று சொல்லிக்கொண்டு நடக்கும்போது உம்மாவின் கண்களுக்குள் நீர் நடக்க முடியாமல் தள்ளாடியது.  

காவின் எழுதிவிட்டு மகன் வீட்டுக்கு வரும்வரை கண்ணீர் தள்ளாடிய கண்களுடன் இருந்தாள் உம்மா.  

எப்போதும் போல இருக்கும் இரவா இது? எப்போதும் போல இந்த இரவு விடியுமா? வீட்டில் கூடிக் கதைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்கள் கதைகளை எப்போது முடிக்கப்போகிறார்கள். எதுவும் தெரியாத சிறுபிள்ளைகள் உறங்கி விட்டார்கள். எல்லாம் தெரிந்த பெரியவர்கள் இன்னும் தூங்கவில்லை. நேரம் ஆக ஆக படிப்படியாக தூக்கத்தைத் தொடர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் உம்மாம்மாவின் அருகில் இருந்து கொண்டு கதை கேட்கும் சிலரும், தம்பியும் அதாவது மாப்பிள்ளை இன்னும் தூங்கவில்லை.  

வாப்பாவுக்கு சொல்லவே தேவையில்லை. அவர் அதிகம் விழித்திருக்க மாட்டார். அவர் உடல் அதற்கு வளைந்து கொடுப்பதுமில்லை. சற்று நேரம் கழித்து தம்பியும் அதான் மாப்பிள்ளை. தன் அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்து கொண்டு தூக்கம் வராமல் எதையெல்லாமோ கற்பனை செய்து கொண்டு தன் கைபேசியை அடிக்கடி எடுத்து வருங்கால மனைவியின் நிழற்படத்தைப் பார்ப்பதும், மீண்டும் கைபேசியை மேசை மீது வைப்பதுமாக இருந்தான். சாமமாகியும் உறங்காமல் வெற்றிலைத் தட்டை இழுக்கும் சத்தம், பாக்குவெட்டி திண்ணையில் விழும் சத்தம் கேட்கிறது. உம்மாம்மா இன்னும் தூங்கலியா? என்று தன்னோடு கேட்டுக் கொண்டு வலதுபக்கமாக சரிந்து கண்களை மூடிய தம்பி தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்து விட்டது.  

கட்டிலில் இருந்த படியே அவன் வீடெங்கும் பரவும் சாம்புராணி வாசத்தினை மூக்கின் விரல்களால் பிடித்து இழுத்து நுகர்ந்து கொண்டு அறையைவிட்டு வெளியே நடக்கிறான்.  

உம்மாம்மாவின் தலைமாட்டில்தான் அந்த சாம்புராணி எரிந்து புகையைச் சிந்திக் கொண்டிருக்கிறது.  

கண்களுக்கு ஒரு காட்சியும் தென்படாத அளவு புகை மண்டலமாய் இருக்கும் பாதையில் கால்களை எடுத்து வைத்தவன் போன்று வாழ்வைத் தொடங்க முடியாமல், வாழ்வை முடித்துக் கிடக்கும் உம்மாம்மாவின் உடலை விறைத்துப் பார்க்கிறான்.

அகமது ஃபைசல், 
பொத்துவில் 

 

Comments