கவர்ச்சியான ஆடைகளில் சேலைக்கே முதலிடம் | தினகரன் வாரமஞ்சரி

கவர்ச்சியான ஆடைகளில் சேலைக்கே முதலிடம்

மனிதன் காடுகளிடையே வாழ்ந்த காலம் மறைந்து ஆடைகளிடையே மறைந்து வாழும் காலம் வந்தது. அவனுக்கு தனது உடலை மறைக்க வேண்டிய தேவை குளிர்மழை வெயில் போன்ற இயற்கையை சமாளிக்கவே தேவைப்பட்டது. அப்போதெல்லாம் அவனது ஆடைகளாக மரவுயும் இலைதழைகளும் இருந்தன. இன்றும் ஆடைகளற்று வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை பல ஆய்வாளர்கள் வெளிக் கொணரத்தான் செய்கிறார்கள்.. 

நாகரீம் வளர்ந்துள்ள எமது சூழலில், ஆடை என்பது ஒவ்வொருவருக்கும் அவரது பெருமையை, பணத்தை, பதவியை எடுத்து விளம்புவதாகவே அமைகிறது. தற்கால நாகரீகத்தையும் புதுப்புது மாதிரிகளையும், ஆடைகளில் புகுத்தி தம்மை நிகரில்லாதவராக காட்டிக் கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் உண்டு குறிப்பாக இளய வயதினர், தமது ஆடைகளில் புகுத்திவரும் மாதிரிகளை சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் என நாமும். இல்லை நாங்கள் கல்லூரி மாணவர்களிடமிருந்துதான் இந்த மாதிரிகளை பெற்றுக் கொள்கிறோம் என்று சினிமா நாடகத்தாயாரிப்பாளர்களும் மாறி மாறி சொல்லிக் கொள்கிறார்கள். 

எது எப்படியோ ஆடை பாதி ஆள்பாதியாகத்தான் உலக மாந்தர் இயங்குகிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய உடைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல காலாசார உடைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எவர் எப்போது என்ன விதமாக ஆடையணிந்து திரிந்தாலும் தமது கலாசார விழாக்களில் தமது கலாசார உடைகளையே அணிந்து கொள்கின்றனர்   தமிழர்களைத்தவிர.  தமிழர்கள் மட்டும்தான் தமது கலாசார விழாக்களில் நடைமுறையிலிருந்து வழமைகளை விடுத்து தாம் சென்று வாழும் நாடுகளின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர். திருமண விழாவில் குர்த்தா அணிந்து சோல் போட்டு வடநாட்டானைப்போல அமரும் மாப்பிளைகள் தமிழர்களில்தான் அதிகமாக காணப்படுகின்றனர். ஒரு முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ, சிங்களவர்களோ, தமது கலாசார உடையை மட்டுமே தமது கலாசார நிகழ்ச்சிகளில் அணிகின்றனர். தனியே வெள்ளையாடைகளே வழிபாட்டுக்கு அணிவதும் சிங்கள மக்களின் வழக்கம். 

அது சரி இன்றைக்கு என்ன ஆடைகளில் பார்வை போகிறது என்று குழப்பமாக உள்ளதா? ஆம். என்னைக் குழப்பித்தான் விட்டது ஒரு செய்தி. அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு சேலை அணிவது கட்டாயமாக் கப்படும் என்ற செய்திதான் அது. 

என்னைப் பொறுத்தவரை மிக கவர்ச்சியான ஆடைகளில் சேலை முதலிடம் வகிக்கிறது. என்றுதான் சொல்வேன். முதுகில் பெருவெளி, இப்போது தோளிலும் ஒரு துண்டு வெட்டப்பட்டு விடுகிறது. சேலையை யாரும் இடுப்பில் அணிவதில்லை. அரையில்தான் அணிகிறார்கள். ஆண்கள் அரைக்கும் கீழேயே காற்சட்டை போடும் வித்தை அறிந்தது போல, இன்னும் பெண்கள் அறியவில்லை. பூசணிப்பழம்போல வயிற்றை மெல்லிய நைலைக்ஸால் மறைப்பதாக பாவனைகாட்டி நடக்கிறார்கள். தென்னிந்தியப் பெண்கள் அப்படியும் மறைப்பதில்லை. கதவு யன்னல்வைத்த ஜாக்கெட்டுகளுக்கு மிக பெறுமதியான தையற்கூலி. 

அதேசமயம் ஆண்களுக்கு வேட்டிதான் என்ற கட்டளை இல்லை அவர்கள் தேசிய உடையும் அணியலாம். காற்சட்டை சேட்டும் அணியலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுசரி இன்றைய பெண்கள் முன்னைய பெண்களைப்போல அன்ன நடையா நடக்கிறார்கள். இல்லையே. அவர்கள் மிதிவண்டிகளிலோ, உந்துருளிகளிலோ,பேருந்துகளிலோ தமது பயணத்தை செய்கிறார்கள் இவர்களது பயணத்துக்கு வசதியாக அவர்கள் ஆடையணிய முடியாது. பேருந்துகளில் ஆண்பெண் வேறுபாடின்றி அனைவரையும் வருடும் இவர்களது தாவணி மயிர்கற்றைகள், இளைஞர்களை புளகிக்க வைக்கிறது. சாதாரணப் பெண்கள் இப்போது ஆண்களுக்கு நிகராக வசதியான ஆடைகளாக சுடிதார், ஜீன்ஸ் பொட்டம் ஜம்பர் என போட்டுக்கொண்டு மிக லாவகமாக தெருவில் நடப்பதை காண்கிறோம். ஆனால் வேலைக்குப் போகும் பெண்களுக்கு அந்த சுதந்திரம் கிடையாதா?  

வைத்தியசாலையில் பணியாற்றும் ஒரு தாதியோ உதவியாளரோ மருத்துவ தாதியரோ, சேலையில் நடமாட முடியாது என்பதை புரிந்து கொள்ளும் அரச அதிகாரிகளுக்கு ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு புறங்காட்டி கரும்பலகையில் கையை உயர்த்தி எழுதும் போது அவரது முதுகும்,(அது ஒரு பெரு வெளியாக திறந்து கிடக்குமே) உயர்த்திய கையின் கீழ் தெரியும் மார்பின் மறைக்கப்படாத பகுதியும் மாணவர்களை கலக்கிவிடும் என்பதை புரிந்து கொள்ள முடியாதா? இதே போல தட்டச்சு செய்யும் பெண்களின் அருகே வேலை செய்பவர்களுக்கு தனித்தனி தடுப்புகள் இல்லாது போனால். 

ஒரு பெண் சேலை அணியும் போது அதன் மடிப்புக் கலையாதிருக்க அரும்பாடுபட்டு அதை தினசரி அயண் பண்ணிவைத்தாக வேண்டும். மேலும் குறைந்த பட்சம் ஒன்றரை டசின் சட்டைப்பின்களாவது அதில் சொருகப்படவேண்டும் ஆபத்து அவசரம் என்றால் அவரால் ஓடமுடியாது.  

விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திலும் மகளிர் அமைப்பினரின் பிரிவிலும் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டிருந்தது. அடிக்கடி விமானத்தாக்குதல்கள் நடக்கும் காலம். விமான எச்சரிக்கை மணி ஒலித்ததும் ஆண்கள் வேலிகளைக் கடந்து பாய்ந்து விடுவார்கள். பெண்கள் பாவம் தமது சேலையை ஒருகையால் பிடித்தவாறே..வேலிகளுக்கு கீழாகக்கூட நுழையமுடியாமல் தவிப்பார்கள். பிரதான வாசல்வழியாகவே வெளியேறியாக வேண்டும். அப்போதும் இதை சுட்டிக்காட்டி நான் பத்திரிகைகளில் எழுதத்தான் செய்தேன்.  

அது என்னவோ உலகம் அதிலும் குறிப்பாக மூன்றாம் உலகம் பெண்களுக்கு சேலைகட்டிவிடுவதிலேயே ஆர்வமாக இருக்கிறது. ஆனாலும் பெண்கள் இதை எதிர்த்து போராடவோ வார்த்தையாடவோ போவதில்லை காரணம் அவர்களுடைய வீட்டுச் சிறை அப்படிப்பட்டது. வீடுகளில் பெண்கள் தமக்கான ஒரு ஆடையை தேர்வு செய்யும்போது அது அவளுடைய தாய்க்கு முன்னம், தமையன், தந்தை என ஆண்களுடைய திருப்தியை பெற்றாக வேண்டும். அவர்கள்தான் சமுதாயத்தின் எதிர்ப்புகளையோ, வாழ்த்துகளையோ பெற்றாக வேண்டும். கந்தையன்ர மனிசி போற போக்கைப்பார்.

செல்லையன் பெடிச்சிய மேய விட்டிட்டானோ 

எடி அவள் சினிமாக்காறிபோல போறாள், என்பன போன்ற பலவகையான வசவுகளை கேட்டால் ஆண்கள் அது தமக்கானதாகத்தான் கொள்கிறார்கள். அப்போதும் தாய்தான் வசவுகளை சுமக்கிறாள். 

ஒருபிள்ளை நல்ல பெயரை சம்பாதித்தால். 

தம்பிராசாட பொடியன்தான் முதலாவதா வந்தானாம் எனக்கூறும் சமுதாயம், ஒரு மகன் கெட்டவனாகிவிட்டால் அவனது தாயை தாசியாகத் தூற்றி ,  தாயின் நடத்தையையே களங்கப்படுத்துகிறது. இதில் ஆடை அணியும் பழக்கமும் அடக்கம். தாயை சந்தையில பார்த்தால் மேளை வீட்டில பாக்கவேண்டாம் என்பதும் இதில் அடக்கம் பெண்களே எப்போது விழித்துக் கொள்ளப்போகிறீர்கள். நாங்கள் எப்போதும் போகப்பொருளாகவே இருக்கப்பிறந்தவர்களா என்ன!.  

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments