தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாவிட்டால் பதவி துறப்பேன் | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாவிட்டால் பதவி துறப்பேன்

எந்தவொரு கட்சியும் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை

இவ் வருடத்துக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை முதலில் நடத்த முடியாது போனால் தான் பதவி துறந்து வீட்டுக்குப் போகதீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அரசியல் கட்சிகளின் தலைமைகள் ஒத்துழைக்கத் தவறினால் இதைவிட மாற்று வழியொன்று தனக்குத் தெரியவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

வரவுள்ள தேர்தல்கள் தொடர்பாக கேட்டபோதே தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்களைவிட ஏனைய தேர்தல்கள் விடயத்திலேயே ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசும், அரசியல் கட்சிகளும் அக்கறைகாட்டுவது போன்று அர்த்தப்படும் வகையில் பேசி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கருத்துக்கள் கூட அவ்வாறான அர்த்தம் கொண்டதாகவே காணமுடிகிறது. ஆனால், ஜனநாயக ரீதியில் பார்க்கின்ற போது பதவிக்காலம் நிறைவுற்ற நிலையில் எட்டு மாகாணசபைகள் உள்ளன.

ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் முடிவடையவுள்ளது. இவ்வாறான நிலையில், அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை அடுத்த சில மாதங்களுக்குள் நடத்தியாக வேண்டும். ஆனால், எந்தவொரு கட்சியும் அதில் அக்கறை காட்டுவதாக இல்லை. இவர்கள் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பாராளுமன்றம் இதுவிடயத்தில் சரியான முடிவுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார். 

பழைய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் திருத்த யோசனையை முன்வைத்து அங்கீகரித்துக்கொள்ள வேண்டும். இன்றேல் புதிய முறையில் நடத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணயத்தை விரைவுபடுத்தி நிறைவேற்ற வேண்டும். இதில், பழைய முறையைக் கொண்டு வருவது இலகுவான காரியமாகும். 

இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக இருந்தால் கூட அதற்கு முன்னர் 25நாட்கள் கால அவகாசம் தந்தால் மாகாணசபை தேர்தலை நடத்தி முடிக்க முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார். 

மாகாணசபைத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் இந்த வருட இறுதிக்குள் கிட்டிய இரண்டு தினங்களுக்குள் நடத்தி முடிக்கலாமெனவும் அவர் கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 7ஆம் திகதிக்குமிடையில் ஒரு தினத்தில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னரான ஒரு தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அவகாசம் தரப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி, பிரதமர் இருவரிடமும் எடுத்துரைத்துள்ளேன். மாகாண சபைகளுக்கான தேர்தலை தள்ளிப்போடுவதால் பெரும் சிக்கல் நிலை தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந் நிலையில், நாளை மறுதினம் 11ஆம் திகதி முக்கியமான கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெறவிருப்பதாகவும் அதன் போது தேர்தல்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படவிருப்பதாகவும், அக் கூட்டத்துக்குத் தானும் அழைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

எம்.ஏ.எம். நிலாம்

Comments