"உலமா சபை எம்முடன் வெளிப்படையாக பேச முன்வர வேண்டும்" | தினகரன் வாரமஞ்சரி

"உலமா சபை எம்முடன் வெளிப்படையாக பேச முன்வர வேண்டும்"

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ராஜகீய பண்டித கலகொட அத்தே ஞானசார தேரர்

சித்தாந்த புரட்சியே இந்நாட்டுக்கு அவசியம்

'இது இஸ்லாமியரின் சித்தாந்தம் தொடர்பான பிரச்சினை. அது எழுந்ததுமே அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முஸ்லிம் மத அமைப்பில் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது'

'பிக்குமார்களினால் செய்ய முடியாதவற்றை அரசியல்வாதிகள் செய்து முடிக்க வேண்டும். அவசியமான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மாற்ற வேண்டும். அராபிய சட்டங்கள் தேவையா இல்லையா என்பது அரசியல்வாதிகளால் கலந்துரையாடப்பட வேண்டும்'  

'மோதல் ஒன்று நிகழ்ந்திருக்குமானால் தாம் வாள்களை வைத்திருந்ததை வஹாப்வாதிகள் நியாயப்படுத்த அது உதவியிருக்கும்' 

கேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலோடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

பதில்: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதி, இன ஒற்றுமைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைமையிலுள்ளது.

கேள்வி : இந்த அடிப்படைவாதத்திற்கு நாட் டின் அனைத்து முஸ்லிம் சமூகமும் பொறுப்புக்கூற வேண்டுமா?

பதில்: இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதம் குறித்து, நாட்டின் எல்லா இடங்களிலும் வாழும் சம்பிரதாய முஸ்லிம் மக்கள் அறியமாட்டார்களென என்னால் உறுதிகூற முடியும். உண்மையில் வஹாப் வாதம், இல்ஹாம் முஸ்லிம் என்றால் என்னவென்று அறியாத மக்களும் உள்ளார்கள். நாமிங்கு வெளிக்கொணரும் விடயங்களால் சிங்கள மக்களைப் போன்று முஸ்லிம் மக்களும் கலவரமடைந்துள்ளார்கள். தேரரே, நீங்கள் சொல்வது என்ன என்று கேட்கிறார்கள். எமது மனதில் இல்லாத நாம் ஒருபோதும் நினைக்காதவைகளையே நீங்கள் கூறுகின்றீர்கள் என்கிறார்கள். சிங்கள சமூகத்தவர்கள் இவை உண்மையா? என்ற சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் வஹாப் வாதம், சலபி வாதம், இல்ஹாம்  முஸ்லிம், அல் சபாப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு சம்பிரதாய முஸ்லிம்கள் எதிரானவர்களென எமக்குத் தெரிகின்றது. அவர்கள் அதற்கு எதிரானவர்கள் என்றாலும் அதனை சமூகத்தின் முன்னால் வந்து தெரிவிப்பதற்கு இந்த வஹாப்வாதி மாபியா இடமளிப்பதில்லை. அதனால் இந்தப்பிரச்சினை மிகவும் சிக்கலாகியுள்ளது.

கேள்வி : ஆனால், இன்று மகாநாயக்க தேரர்கள், முஸ்லிம் மதத் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வந்திருக்கிறார்கள் அல்லவா?

பதில் : ஆனால், இவர்கள் நீங்கள் கூறும் இந்த நல்லிணக்கத்தை உருவாக்க முனைவது யாருடன்? கர்தினால் ஆண்டகையை முத்தமிட எண்ணுகிறேன் என்று கூறுவது யார்? இவர்கள்தான் வஹாப் வாதத்தின் தந்தைகள். அவர்கள்தான் கடந்த காலங்களில் குரைக்கும் நாயை மாமிசம் உண்ணும் நாய்களாக மாற்றி அவிழ்த்துவிட்டவர்கள். தற்போது அதைப்பற்றிக் கேட்டால் ஆம். நாயை நாம் தான் வளர்த்தோம் என்று கூறி கதையை அத்துடன் நிறுத்திவிடுகிறார்கள். நோயுள்ள நாய் கடித்தால் அந்த நாயை வளர்த்தவரிடமிருந்தே தண்டப் பணம் அறவிடப்படும். ஆனால் நாம் என்ன செய்தோம்? இவர்களுடன்தான் இன்று இந்தப் பிரச்சினை பற்றி கதைக்கின்றார்கள். அவ்வாறாயினும் எவ்வாறு நாம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது? இந்த வெறிபிடித்த அடிப்படை வாதம் ஆரம்பித்தது வீட்டில். முதலில் தந்தையும் மகனும் வீட்டில் அடித்துக்கொள்வார்கள். சகோதர சகோதரிகள் அடித்துக்கொள்வார்கள். பக்கத்து வீட்டாருடன் சண்டை செய்வார்கள். அது விரிவடைந்து பள்ளிவாசல்கள் பள்ளிவாசல்களுடன் அடித்துக்கொள்ளும். இவ்வாறுதான் இது ஏற்பட்டது.

கேள்வி: அவ்வாறாயின் தர்கா நகரில் இவ்வாறான நிலையையா நாம் கண்டோம்?

பதில்: தர்கா நகரில் மாத்திரமல்ல; திஹாரியா, பகலதெனிய, மாதம்பை, தொடங்கஸ்லந்த, காலி போன்ற அநேகமான இடங்களில் இந்நிலைமையைக் கண்டோம்.

கேள்வி: நீங்கள் அக்காலப் பகுதியில் இதுதொடர்பாக பொறுப்பான தரப்பினரிடம் அறிவுறுத்தவில்லையா?

பதில்: நாம் இது பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எழுதி அனுப்பினோம். 2014ல் இருவர் இணைந்து சஹ்ரானை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக முன்னாள் அரசின் தலைவருக்கு பாதுகாப்பு செயலாளருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் கூறினோம். இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்கள் அன்று அதுபற்றி கணக்கெடுக்கவில்லை. இன்றுள்ளவர்களும் அவ்வாறுதான். இன்று இதனை காரணமாகக் கொண்டு யாராவது அரசியல் லாபம் தேட எண்ணினால் இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்றால் அதற்கு தேசிய நிகழ்ச்சி நிரலொன்று தேவை.

கேள்வி: நாம் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: முதலில் இந்தப்பிரச்சினையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது அவர்களின் சித்தாந்தம் (Ideology) தொடர்பான பிரச்சினையாகும். இந்தப்பிரச்சினை தோன்றியவுடன் முஸ்லிம் மத அமைப்பில் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எம்மிடமுள்ளது. இன்று இந்நாட்டில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் தொடர்பாக விவாதம் செய்பவர்களுக்கு ஒன்று கூற வேண்டும். பாரிய கலாசாரத்திற்கு உரிமை கோரும் நாம் பௌத்த கலாசாரத்தால் வழிநடத்தப்பட்டவர்கள். நாம் பௌத்த நாகரிகத்தின் மூலம் உருவான சரித்திரபூர்வமான இனமாகும். நாம் கடந்து வந்த பாதை குறித்த சரித்திரபூர்வமான ஆவணங்களும் உள்ளன. அதேபோல் 2500வருடங்களாக நாம் இந்த நாட்டை பாதுகாத்து வருகின்றோம். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கமுடியாது. நாம் ஒரு இனமாக இவ்வளவு தூரம் வந்தோமென்றால் அதற்குக் காரணம் புத்தரின் வார்த்தைகளை பாதுகாத்ததனாலாகும். அதனால் குரானை கற்பித்தலின் மூலம் உருவாக்கப்படும் இந்த அடிப்படைவாதத்தை தோல்வியடையச் செய்ய முடியும். அதுவொன்றும் பெரிய விடயமல்ல.

கேள்வி: அதற்கு முறையான பேச்சுவார்த்தை உருவாக்கப்பட வேண்டுமல்லவா?

பதில் : ஆம். அதற்கு நாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல்கள் உருவாகவேண்டும். ஆனால், அதற்கு இதுவரை இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? இல்லை. இதுபோன்ற நிலைமை 1848ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1815ல் வெள்ளைக்காரர்கள் எம்மை அடிமைப்படுத்தினார்கள். அதற்கெதிராக புரட்சியொன்று ஊவா வெல்லஸ்ஸவில் 1818ஆம் ஆண்டு உருவானது. அன்றும் அந்தப் போரில் இந்நாட்டிற்கு ஏதேனும் செய்யவிரும்பிய சிங்கள இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அதன்பின்னர் இந்த இனம் பலவீனமடைந்தது. அந்தப் பலவீனமடைந்த இனத்தை கிறிஸ்தவர்களாக மாற்ற கோகோல் என்னும் மத குரு திட்டமொன்றை ஆரம்பித்தார். அவர் ஒரு கையில் பைபிளையும் மறு கையில் சகோதரத்துவத்தையும் நீட்டினார். “எம்மை நோக்கி வாருங்கள். கிறிஸ்தவத்தை தழுவுங்கள்” என்று கூறும்போது இந்நாட்டிலுள்ள பிக்குகளால் அமைப்பொன்றை ஏற்படுத்த முடியாமற் போனது. மினஷரி அதிகாரம் நாடு பூராவும் பரவியது. அவ்வேளையில்தான் மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அதற்கெதிராக குரல் கொடுத்தார். இது யுத்தம் செய்து தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினை என அவர் எண்ணினார். இதனை மத ரீதியான சித்தாந்த போராட்டத்தால் மாத்திரமே செய்ய முடியுமென புரிந்துகொண்டார். பைபிளை முதலிலிருந்து முடிவு வரை நன்றாக பாடம் செய்த அவர், ஏனைய பிக்குகளோடு பேசி பாதிரியாரை விவாதத்துக்கு அழைப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார். அதன்பிரகாரம் விவாதங்களை நடத்தி மூடக்கொள்கைகளில் உள்ள தவறுகளை இரத்தம் சிந்தாமல் சுட்டிக்காட்டினார். இன்றும் நாம் இங்கு பேசுவது அவர் இட்ட அடித்தளத்திலிருந்துதான். இன்றும் நாம் அதனையே செய்யவேண்டும்.

கேள்வி: அவ்வாறாயின் அரசியல் ரீதியாக நாம் என்ன செய்யவேண்டும்?

பதில்: பிக்குமார்களால் செய்ய முடியாத சிலவற்றை அரசியல்வாதிகள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு அவசியமான புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மாற்ற வேண்டும். அரேபிய கலாசாரம் இந்நாட்டுக்கு தேவையா? தேவையில்லையா? என அரசியல் தலைவர்களிடையே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், நாம் முன்னர் குறிப்பிட்ட சித்தாந்த கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் 75%பொறுப்பு பிக்குகளான எமக்கேயுள்ளது. குர் ஆன்ன் தொடர்பான பிரச்சினையென்றால் புத்ததர்ம கோட்பாட்டின் படி அதனை நாம் கலந்துரையாடலாம். பௌத்த மத கற்பித்தலின்படி இஸ்லாமிய தர்மம் மூட கொள்கைகொண்டது. அவர்கள் ஸ்தாபன கோட்பாட்டுவாதிகள். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். இதில் மிக முக்கியமானது நிர்மாண கோட்பாட்டு அடிப்படைவாதத்தை நோக்கி கொண்டுசெல்வதா? அல்லது பகுத்தறிவாதத்துடன் யதார்த்தத்துக்கு அண்மித்துச் செல்வதா என நாம் கலந்துரையாட முடியும். இதுவரை ஸ்தாபன கோட்பாட்டுவாத கொள்கைகள் ஊடாக உலகில் எங்கேயும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாம் பௌத்தர்கள் என்ற ரீதியில் எமது மதத்தை பிரசாரம் செய்வதற்கோ பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ ஆயுதங்களை கையிலெடுக்கவில்லை. ஆனால் சஹ்ரான்கள் தற்கொலைதாரிகளாக மாறி இறந்தது குறித்து கவலைப்படுவதில் அர்த்தமில்லை. அது பெரிய அழிவு. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதனை இல்லாது செய்தால் முஸ்லிம் மக்களினதும் பொதுமக்களினதும் நன்மைக்காக அந்த விபத்தை எம்மால் மாற்றமுடியும்.

கேள்வி: ஆனால் எமக்குள் பல அடிப்படைவாத பிரிவுகள் தலைதூக்க முயற்சி செய்வது தெரிகின்றதே.

பதில் : சஹ்ரானின் தற்கொலைத் தாக்குதலுக்கு கெக்கிராவையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் தந்தை பலியா? தங்காலையில் மீன்பிடிக்கும் முஸ்லிம் மீனவர் பலியா? கொழும்பில் மற்றும் நெரிசலான பிரதேசங்களில் நடைபாதை வியாபாரிகள் பலியா? சந்தியில் கடலை விற்கும், வடை விற்கும் போத்தல் பத்திரிகை, இரும்புப் பொருட்களை சேகரிக்கும் மனிதர் பலியா? இவர்களையா நாம் அடிக்கப் போகின்றோம்? தயவுசெய்து அந்தக் குற்றத்தை மட்டும் செய்ய வேண்டாம். நாம் அவர்களுடன் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவோம். இந்த அப்பாவி பிள்ளைகளை மதரசாக்களில் அடைத்துவைத்து கறுப்பு வெள்ளை நீல மண்ணிற அங்கிகளுக்குள் மறைத்து நிக்காப், புர்கா, ஹிஜாப் என்பவற்றால் மூடி வைக்கிறார்கள். இந்நிலைமையை எமது சித்தாந்தத்தால் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நடுநிலையாக சிந்திக்கும் மதத்தலைவர்கள் மற்றும் பிக்குகள் இங்கு தலைமைவகிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கேள்வி: கல்வியின் மூலம் இதற்கு ஏதேனும் தீர்வை வழங்க முடியாதா?

பதில்: உண்மையில் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமென்றால் என்ன? வஹாப் வாதமென்றால் என்ன? சலபி வாதமென்றால் என்ன? அவை எமக்குத் தேவையா? இல்லையா? போன்ற விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்த வேண்டும். இனங்களாக பிரிக்கப்படாத பாடசாலைகள் உருவாகவேண்டும். ஷரியா பாடசாலை, பல்கலைக்கழகங்கள் உருவாவதை தடுக்க வேண்டும். எமக்கு சிறுபராயத்திலிருந்தே நல்ல கல்வி மூலம் இந்த அடிப்படைவாத சித்தாந்தத்தை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.

கேள்வி: ரத்தன தேரரின் நடவடிக்கை முஸ்லிம் அடிப்படைவாதத்தை நோக்கி முஸ்லிம்களை தள்ளும் விதத்தில் உள்ளதாக நீங்கள் கூறியது ஏன்?

பதில்: உண்ணாவிரதம் இருக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், ஏன் குண்டுவெடித்து ஒரு வாரத்துக்குள் அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவில்லை? இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிரச்சினைக்கு உரியதென்றால் அவருக்கு அது தெரிந்திருந்தால் அன்று ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரு மாதமும் இரண்டு வாரங்களும் கடந்த பின்னரா அவர் இதனை செய்யவேண்டும்? தற்போது மறைக்க வேண்டிய அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. நான் இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கிறேன் என எண்ணவேண்டாம். ஆனால், அவர் திடீரென இவ்வாறு அமர்ந்தது ஏன்? என்ற கேள்வி எனக்குள்ளது.

கேள்வி: மறுநாள் நீங்கள் கண்டிக்கு சென்றது சிங்கள பௌத்த சக்தி ரத்தன தேரருடன் இணைந்து விடும் என்ற பயத்தாலா?

பதில் : அன்று நாம் கண்டியிலிருந்தோம். நாம் அங்கு சென்றோம். நாம் அங்கு செல்லாவிட்டால் இவர்களே கூறுவார்கள், ஞானசார தேரரை கட்டிப்போட்டுள்ளார்கள். வாயை கட்டிவைத்துள்ளார்கள் என்று. வேறு ஏதாவது 'கேம்' ஒன்று பெரியவருடன் இருக்கும். அதனால் தான் செல்லவில்லையென்று சொல்வார்கள். இன்று முஸ்லிம் அமைச்சர்கள் குறித்து சிங்கள சமூகத்தினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இவ்வாறா விடை தேடுவது? அவர் இது தொடர்பாக ஜனாதிபதியுடன், பிரதமருடன் பேசி, அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கலாம். அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவ்வாறான நடவடிக்கைக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அங்கு சேர்ந்த கூட்டத்தை வழிநடத்த ஒருவர் அங்கிருக்கவில்லை. எல்லோரும் அதனை தூண்டுவதற்கே அங்கிருந்தார்கள். அநேகமானோர் அங்கு இனவாத தீயை மூட்டுவதற்கு தயாராகவிருந்தார்கள். எந்தவொரு கூட்டத்திற்கும் ஒழுக்கமிருக்க வேண்டும். அதற்கான நோக்கம் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர் எமக்கு இதுபற்றி அறியத் தந்திருக்கலாம். அவ்வாறென்றால் நாம் கலந்துரையாடி நீங்கள் இந்த பிக்குகள் அமைப்புக்கு தலைமை தாங்குங்கள் என்று கூறி இதனை வழிநடத்தி வெற்றிபெற அனைத்து நடவடிக்கைகளையும் செய்திருப்போம். ஆனால் அவர் திடீரென போய் அமர்ந்துவிட்டார். பொறுப்பான எவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவ்வேளையில்தான் நான் சென்று கூறினேன்,                   

நாளை 12மணி வரையும்தான் காலக்கெடு இல்லாவிட்டால் முழு நாட்டையுமே ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று. ஆனால், இவ்வேளையில் செய்யவேண்டியது. நாட்டு மக்கள் உண்ணாவிரதம் தொடர்பாக ஆர்வம் காட்டுவதைக் குறைத்து சரியான பிரச்சினையை கவனத்தில் கொள்வதாகும். இவ்வாறான செயல்களால் உண்மையான பிரச்சினை மழுங்கடிக்கப்பட்டு விடும். அதனால்தான் நான் அதனை விமர்சனம் செய்தேன்.

கேள்வி: நீங்கள் பிரச்சினைகளிலிருந்து தப்பப்பார்க்கிறீர்கள்....

பதில்: இல்லை. இச் சம்பவத்தைக் கூர்ந்து பார்த்தால் புரியும். நான் அங்கே செல்லும்வேளையில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு தலைமைதாங்க யாருமிருக்கவில்லை. நான் அவ்வேளையில் அங்கு சென்றிருக்காவிட்டால் இன்று இந்நாட்டில் என்ன நிலைமை ஏற்பட்டிருக்குமோ தெரியாது.

கேள்வி: ஆனால், நீங்கள் கூறினீர்களே, ஸ்தம்பிக்கச் செய்வேனென்று?

பதில்: அவ்வாறு கூறாமல் வேறென்ன செய்வது! அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வேளையில் வஹாப் வாதிகளுக்கு மோதலொன்று தேவையாகவிருந்தது. ஏனென்றால், குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர் பள்ளிவாசல்கள், வீடுகள் உட்பட பல வியாபாரத் தலங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. அங்கெல்லாம் கிடைத்ததவை பித்தளைச் சாமான்களல்ல, கிடைத்தவை வாள், கத்தி போன்ற ஆயுதங்கள். முஸ்லிம் சமூகம் இதனால் வெட்கமடைந்தது. ஆகவே, இவ்வேளையில் மோதலொன்று ஏற்பட்டிருந்தால் தாங்கள் வாள்களை வைத்திருப்பதை நியாயப்படுத்த வஹாப் அடிப்படைவாதிகளுக்கு இடம் கிடைத்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் அவர்கள் இதனை நாம் வைத்திருந்தது சிங்கள மக்கள் தாக்கும் போது தப்புவதற்காகவும் சுயபாதுகாப்புக்காகவுமென்றே கூறியிருப்பார்கள். இவ்வேளையில் தேவைப்படுவது முட்டாள்தனமாக தத்தமது திட்டங்களை மேலே கொண்டுவந்து பிறரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆதரவளிப்பதல்ல. கல் எங்கேயிருந்து வருகின்றதென்ற கவனத்துடன் இருக்கவேண்டும். அது சும்மாவாவது வந்து சென்றால் அங்குமிங்கும் அடிக்கத்தொடங்குவார்கள். முழு நாடுமே பாதிப்படையும் வெளிநாட்டு சக்திகளுக்கு நாட்டிற்குள் நுழைய சந்தர்ப்பம் கொடுத்தமாதிரி ஆகிவிடும். நட்டமடைந்த அரசியல்வாதிகளும் சந்தோசப்படுவார்கள். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பன அவசரகாலச் சட்டத்தின் மூலமாக பின்போடப்படுவது கூட நடந்திருக்கும். அதனால், இவை அனைத்தையும்பற்றி புத்தியுடன் சிந்தித்து நாம் இந்த முடிவை எடுத்தோம்.

கேள்வி: நீங்கள் இவ்வேளையில் யாருக்காக ஆஜராகியுள்ளீர்கள்?

பதில் : நான் நாட்டுக்குத் தேவையான தேசிய நிகழ்ச்சி நிரலொன்றை தயாரித்து அதனை வெற்றிபெறச் செய்வதற்காகவே முயன்று வருகிறேன். இது நான் வெற்றிபெறுவதற்காகவல்ல. இந்த பௌத்த சமூகத்தை மீண்டும் ஒன்றாக இணைப்பதே எமது தேவை. அந்தத் தேவையை யாராவது குறுகிய நிகழ்ச்சி நிரலைக்கொண்டுவந்து கொள்ளையடிக்க முனைந்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

கேள்வி: அமுலில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நம்பிக்கை கொள்ள முடியுமா?

பதில் : எனக்கென்றால் தெளிவானதும் ஏகமனதானதுமான திட்டமொன்று உள்ளதாகத் தெரியவில்லை. இப்பிரச்சினை தொடர்பில் அனைவரும் வெளிப்படையாக தொடர்புகொள்ள வேண்டும். உலமா சபை எம்முடன் இது தொடர்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வரவேண்டும். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தற்போது ஒருபுறம் உள்ளார்கள். அதுவும் நல்லது. தற்போது அவர்களால் எம்மோடு வெளிப்படையாக அமர்ந்து பேசமுடியும். ஆனால், அவர்கள் அவ்வாறு பேச முயற்சிப்பதாக எமக்குத் தோன்றவில்லை. யு.என்.பி., ஸ்ரீலங்கா, ஜே.வி.பி. ஆகியோருக்கு முடியுமென்றால் எம்மோடு இதுபற்றிப் பேச அவர்களால் ஏன் முடியாது? உங்களுக்கு எம்முடன் உள்ள பிரச்சினை என்ன? எமக்கு தெரிந்தவற்றை நாம் உங்களுக்கு கூறுகின்றோம். நாம் ஒன்றாக இணைந்து இந்நாட்டு பிள்ளைகளையெண்ணி இந்தப் பிரச்சினையை கலந்துரையாடி தீர்த்துக்கொள்வோம். அவ்வாறு கதைப்பதற்கு இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள்? அந்த நல்ல குணம் ஏன் அவர்களிடம் இல்லை? இவ்வேளையில் நாட்டையும் மக்களையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவும் வெளிப்படையாக இந்தப் பொதுவான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவேண்டியதே முதலில் செய்ய வேண்டியதாகும்.

கேள்வி: இதற்காக நீங்கள் எவ்வாறான திட்டங்களை இந்நாட்டு தலைவர்களுக்கு பரிந்துரைக்கின்றீர்கள்?

பதில்: உடனடியாக விசாரணை ஆணைக்குழுவை அமையுங்கள் என ஜனாதிபதிக்கு பரிந்துரையொன்றை வழங்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களால் முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினை என்ன? முஸ்லிம்களால் சிங்களவர்களுக்குள்ள பிரச்சினை என்ன? இவ்விருவர்களாலும் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினை என்ன? இவ்விடயங்கள் பற்றி கலந்துரையாடி இச் சமூகங்களின் மனதை குளிர வைக்காமல் எம்மால் இந்தப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் எட்ட முடியாது. இந்தப் பிரச்சினைப் பற்றி பேசாமல் புரையோடிப்போக விட்டதால்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சினையை கலந்துரையாட இடமொன்றை தயார் செய்யும்படி நாம் கேட்கிறோம்.

ரஸிக கொட்டுதுரகே  
தமிழில்: வீ.ஆர். வயலட்
(படம் : கயான் புஸ்பிக) 

Comments