விழித்திருங்கள் | தினகரன் வாரமஞ்சரி

விழித்திருங்கள்

இன்றைக்கு ஆசிரியர் வேலை தேடும்   
இவர்களிலே அனைவருமே தொண்டரில்லை! 
அன்றைக்கும் சவூதியிலே தொழில் புரிந்த
‘அரி’யவனும் விண்ணப்பம் தந்திருந்தான்!
அதிபர்களில் சிலபேர்கள் உறவோர் தம்மை   
அச்சாவாய் தொண்டரெனப் பதிவு செய்து,   
அதிகாரி மார்களையும் ஏய்க்கும் செய்கை   
அரசாங்கம் நுண்ணாய்வு செய்தல் வேண்டும்! 
சத்தியத்தை மதிப்பவர்கள் சட்டம் பிய்யார்   
“சட்டம்பி” மார்களென அன்றி ருந்தார்!   
உத்தமராய் குருவாக வாழ்ந்தி ருந்தார்
உபாதைகள் புரியாதோர் உபாத்தி யாயர்
ஆசு எனும் குற்றங்கள் இரிந்த பேர்கள்,   
“ஆசிரியர்” மகுடத்தை அலங்க ரித்தார்!   
காசினியில் கணக்கினிலே கவனம் மிக்கார்   
‘கணக்காயர்’ ஆகிநின்று கல்வி தந்தார்! 
பொய்யான தகவல்களை மெய்யாய் ஆக்கிப்   
போகின்றார் நேர்முகப் பரீட்சைக் காக,....   
தொய்வடையும் கல்விநிலை, உண்மையான
தொண்டர்களை இனங்கண்டு பதவிதாரீர்!
வேலிகளே பயிர்தன்னை மேயும் பொல்லா   
வில்லங்கம் வாராமல் விழித்தி ருங்கள்
போலிகளை அசலென்று நியமித்திட்டால்,   
புவியினிலே சத்தியமும் செத்துப் போகும்!   
 
அ. கௌரிதாசன், ஆலங்கேணி கிழக்கு

Comments