மோடியின் விஜயம் இருநாட்டு உறவுகளின் புதிய அத்தியாயம்... | தினகரன் வாரமஞ்சரி

மோடியின் விஜயம் இருநாட்டு உறவுகளின் புதிய அத்தியாயம்...

தற்கால உலகில் இரு நாட்டு உறவு என்பது பல வகையிலும் முக்கியத்துவம் மிக்கதாகவே அமைகின்றது. அதிலும் குறிப்பாக பலம் படைத்த பிராந்திய வல்லரசு என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கும் இந்தியாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவானது, நமது நாட்டைப் பொறுத்தவரையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. 

வரலாற்று ரீதியில் இராமாயணம் வரை செல்லும் உறவு இருப்பதாக கூறப்படும் இந்த இரு நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வமான தன்மையைப் பேணுதலானது, இந்தியாவிற்கு அதன் உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு புவியியல் ரீதியில் மிகச் சிறந்த அமைவைக் கொண்ட அயல்நாடாக அமைந்திருக்கும் இலங்கையின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்ற அதேசமயம் இந்தியாவுடனான நட்புறவு சிறந்த முறையில் பேணப்படாத காலகட்டங்களில் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பேராபத்துக்களை மீட்டிப் பார்க்கின்ற பொழுது இந்தியாவின் கோபத்தை விட அதன் நேசமே இலங்கைக்கு மிகுந்த பாதுகாப்பைத் தந்திருக்கின்றது என்பது தெரிய வருகின்றது.  

கச்சதீவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் முயற்சி, இலங்கையில் குடியுரிமையை இழந்த பெரும் எண்ணிக்கையிலான மலையகத் தமிழர்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்திய பிரஜைகளாகக் கிடைத்தமை, முப்பது வருடங்களாக நீடித்த உள்ளூர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கை அரசுக்கு கிடைத்த பேராதரவு ஆகியன இந்தியாவுடன் இலங்கை சுமூகமான உறவை பேணிய தருணத்தில் கிடைத்த சாதகமான பலன்களாகும்.  

இந்தியாவுடனான இலங்கையின் உறவு சுமூகமற்ற நிலையில் இருந்த 80களில் இலங்கையில் பிரிவினைவாதத்தை வேரூன்றச் செய்வதற்கு இந்தியாவின் இந்திரா – எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவின் ஆக்கபூர்வமான ஆதரவு கிடைக்கப் பெற்றது. அது இலங்கை நாட்டை மிகுந்த உயிர் மற்றும் பொருட் சேதமிக்க சுமார் மூன்று தசாப்தம் நீடித்த உள்ளூர் யுத்தத்தை நோக்கி இட்டுச்சென்றதுடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதன் வான் மற்றும் கடல் எல்லைகளை அத்துமீறி இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு இந்தியாவை தூண்டியது. 

மறுபுறத்தில் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்கள் மீது அக்கறை செலுத்தாத, இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் இலங்கை அரசு கைகோர்த்துக் கொள்ளும் பட்சத்தில் அது இந்தியாவின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு பாதகமாக அமைவதுடன் இந்தியாவை பொறுமையிழக்கச் செய்கின்றது. குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்காவுடனான மிக நெருக்கமான உறவை இலங்கை நாடும் பட்சத்தில் அது இந்தியாவின் இருப்புக்கு பாதகமாக அமைகின்றது. அந்தவகையில் இந்த இரு நாடுகளினதும் அரசியல் நோக்கங்கள், அபிலாஷைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்காத வகையில் இரு நாட்டு உறவை பேணிப் பாதுகாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகவே அமைகின்றது.  

2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது, இந்த இருநாட்டு உறவின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை இந்த இரு நாடுகளினதும் அரசியல் தலைமைகளுக்கிடையில் அதிலும் குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற மிக நெருக்கமான உறவு எடுத்துக்காட்டுகின்றது.  

இந்த ஆட்சி மாற்றத்தின் பின் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இருநாட்டு உறவின் உச்சகட்ட வெளிப்பாடாகவே இந்திய பிரதமர் மோடியின் மலையகத்திற்கான விஜயம் அமைந்தது. மலையக தொழிலாளர்களின் பூர்வீக தாயகமான இந்தியாவை அம்மக்கள் தமது தாய்நாட்டுக்கு சமமாக நேசித்து வந்தபோதிலும் அந்நாட்டின் தலைவர் ஒருவர் தம்மைக் காண வருவதென்பது பகல் கனவாக இருந்துவந்த பின்னணியில் இந்திய பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவிற்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் மக்களுக்கும் இடையில் இருந்துவரும் உறவானது அரசியலுக்கு அப்பால் சென்ற தொப்புள்கொடி உறவாகும் என்ற உணர்வை தோட்டத் தொழிலாளர் மத்தியில் உருவாக்கியது. 

அந்த உறவை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் மலையக மக்களுக்கான தனி வீட்டுத்திட்டத்திற்கான ஒத்துழைப்பு அமைந்திருக்கின்றது. அத்தோடு இலங்கை மக்கள் மீது இந்தியா கொண்டிருக்கும் கரிசனையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கும் அம்பியுலன்ஸ் சேவை அமைந்திருக்கின்றது.

குறிப்பாக அதன் இலவச சேவையானது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பேராதரவையும் நம்பிக்கையையும் வென்றிருப்பதன் மூலம் இந்த இருநாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது. 

2015ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட்டு வருவதனால் மென்மேலும் பலம் பெற்றுவரும் இந்த இருநாட்டு உறவுகளையும் உலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலேயே இந்திய பிரதமர் மோடியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் கெளரவ விருந்தினராக கலந்து கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று அப்பிரம்மாண்ட விழாவில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இந்திய பிரதமர் மோடி வழங்கிய வாக்குறுதிக்கமையவே இந்திய பிரதமர் மோடியின் இன்றைய இலங்கை விஜயம் இடம்பெறுகின்றது.  

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் உலக நாடுகள் தத்தமது மக்களுக்கு இலங்கையில் சுற்றுப்பிரயாணம் செய்வதை பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியதையடுத்து உலக சுற்றுலா பிரயாணிகளின் இலங்கை வருகை பெருமளவு வீழ்ச்சி கண்டு இலங்கை பொருளாதாரம் இன்று வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.  

இந்தப் பின்னணியில் தற்போதைய இலங்கையின் நிலைமையில் தெற்காசியாவின் வல்லரசாக திகழும் இந்தியாவின் பிரதமரையே எவ்வித அச்சமுமின்றி இலங்கையில் விஜயம் செய்யத்தக்க அளவிற்கு இலங்கையின் பாதுகாப்பு நிலை உறுதி செயயப்பட்டிருக்கின்றது என்பதை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலேயே இந்திய பிரதமரின் இன்றைய இலங்கை விஜயம் அமைகின்றது. இது 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியின் இணை அனுசரணை நாடாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்பு அப்போதைய இலங்கையின் பாதுகாப்பு நிலைமை காரணமாக கைநழுவும் நிலை ஏற்பட்டபோது இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் இணைந்து எமது நாட்டுக்கு விஜயம் செய்து, எமது நாடு உலகக் கிண்ண அனுசரணை நாடாக செயற்பட தகுதி வாய்ந்தது என உலகிற்கு உணர்த்தியதுடன் அப்போட்டியில் உலகக் கிண்ணத்தை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் இலங்கைக்கு கிடைக்கச் செய்தது. இன்றைய மோடியின் இலங்கை விஜயம் 96ஆம் ஆண்டு இலங்கைக்கு நேசக்கரம் நீட்டிய இந்தியாவின் செயற்பாட்டின் மறுவடிவமாகவே அமைந்திருக்கின்றது.  

பண்டைய கால இலங்கை - இந்திய உறவு கலை, இலக்கிய தொடர்புகள் மீது பங்களிப்பைச் செய்யும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தற்காலத்தில் இந்த இருநாட்டு உறவானது அரசியல் மற்றும் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளில் இம் மூன்று நாடுகளும் பூர்வாங்க இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பின்னணியிலேயே இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கூட்டு ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதகத் தன்மைகளை அகற்றி சாதகத் தன்மையை அதிகரித்துக் கொள்வதற்கான உத்திகளைக் கையாள வேண்டியது இலங்கையின் பொறுப்பாகும்.  

தெற்காசியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சியின் கேந்திர நிலையமாக மாறிவரும் இந்தியாவுடனான இருதரப்பு உறவை நமது நாட்டுக்கு உகந்த விதத்தில் அமைத்துக் கொள்ளும் அதேவேளை, நமது நாட்டின் நலன்களை பாதுகாக்கும், நம்மோடு இணைந்து பயணிக்க விரும்பும் நேச நாடுகளின் எதிர்பார்ப்புகளின் சாதக பாதகத் தன்மைகளை சரியாக எடைபோட்டு பயணிக்கத்தக்க வகையில் வெளிநாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டியது நமது நாட்டின் அரசியல் தலைமைகளின் பொறுப்பாகும். 

ரவி ரத்னவேல்

Comments