தலை தூக்கியுள்ள பேரினவாதத்துக்கு பதிலடியே முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் | தினகரன் வாரமஞ்சரி

தலை தூக்கியுள்ள பேரினவாதத்துக்கு பதிலடியே முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல்

தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னரான வெளிப்பாடுகள்  தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை வேறுதளத்துக்கு தள்ளியுள்ளது என்கிறார் சிறிதரன் எம்.பி. 

“இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்தும் அந்த அதிர்ச்சியிலிருந்தும் மீண்டெழ நீண்ட நாட்களாகலாம். தாக்குதல்கள் காரணமாக இலங்கை அதன் இயல்பு நிலையையும் இழந்துள்ளது. ஆகவே, அதிலிருந்து மீண்டெழுவதற்கான பொறிமுறையை கையாள வேண்டும். 

முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்தால் பொருளாதார தடையை விதிக்கக் கூடுமென சர்வதேச ஒத்துழைப்புக்கான முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை சுதாரித்துக்கொண்டு கூர்மையாக அரசாங்கம் செயற்பட வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத்தூக்கியுள்ள சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைவர்கள் எமது பதவியை இராஜனாமா செய்தமை நல்ல விடயமாகும். அவர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால் இலங்கை அரசியலில் இன்னமும் அதிர்வலைகள் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எச்சரிக்கை விடுத்தார்”. 

“தினகரன் வாரமஞ்சரிக்கு” அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  

அவரது முழுமையான செவ்வி கீழ்வருமாறு, 

கேள்வி :- பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கை முகங்கொடுத்துள்ள சவால்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பார்க்கின்றது? 

பதில் :- பயங்கரவாதம் என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை. தீவிரவாதம் என்ற சொல்லை பாவிக்கவே விரும்புகின்றோம். கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்டதை ஒரு தீவிரவாதத் தாக்குதலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இத்தாக்குதல்கள் காரணமாக இலங்கை அதன் இயல்பு நிலையை இழந்துள்ளது. நாட்டின் செயற்பாடுகளும், இயல்பு நிலையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இராணுவம், பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு என அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

தீவிரவாதத் தாக்குதல்கள் காரணமாக இலங்கை இழந்துள்ள அதன் இயல்பு நிலையை மீளக் கட்டமைக்க நீண்டகாலமாகலாம். தீவிரவாதத் தாக்குதல் எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. அதிலிருந்து சுதாரித்துக்கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும். இன்னமும் தீவிரவாதத் தாக்குதல்களின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீள வில்லை என்றே கூறமுடியும். 

கேள்வி :- சில முஸ்லிம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் அரசாங்கத்தில் வகித்த பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இது எவ்வாறான சமிஞ்சையை வெளிப்படுத்துகிறது? 

பதில் :- முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகியமை நல்ல விடயம். நாட்டில் சிங்களப் பௌத்த தேசியவாதம் தலைத்தூக்கியுள்ளது. அதன் ஒருகட்டமாகத்தான் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். சிங்களப் பௌத்த பேரினவாதமானது மகாவம்ச சிந்தனைகளின் தோற்றத்தையே வெளிப்படுத்துகிறது. 

சிங்கள பேரினவாதம் தலைத்தூக்கியுள்ளதால் தமிழ் பேசும் மக்கள் தமது வலுவை இழந்துள்ளனர். பேரினவாதம் தலைத்தூக்கியுள்ளதை சிங்கள மக்கள் அவர்களுக்கான உந்து சக்தியாக பார்க்கின்றனர். ஆனால், தமிழ் மக்களும், முஸ்லிம்களும் அதனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர். 

முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் நாடுகளின் எச்சரிக்கை அரசாங்கத்திற்கும் கடும் எச்சரிக்கையாக மாறியுள்ளது. பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பிலும் அந்நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. நாடு அதலபாதாளத்துக்குள் செல்லும் அபாய எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் வகித்த பதவியை மாத்திரமே இராஜினாமா செய்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்தால் இலங்கை அரசியலில் பாரிய அதிர்வலைகள் ஏற்படக் கூடும். 

கேள்வி :- ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னரான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எவ்வாறு உருமாறியுள்ளது? 

பதில் :- சிங்களப் பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியால் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை வேறு நிலையில் கொண்டுசெல்ல தூண்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்ததின்போது இடம்பெற்ற இனவழிப்பை மூடிமறைக்க முடியாது. பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசாங்கம் விலக முடியாது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திவருகின்றனர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் அரசாங்கம் விடைகொடுக்க வேண்டும். 

என்றாலும், தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னர் இலங்கைமீது சர்வதேச நாடுகளுக்கு ஓர் அனுதாப நிலை ஏற்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி இடம்பெற்ற மனிதப் படுகொலைகளை மறைக்க முடியாது. அரசியல் கைதிகள், காணாமல்போனோர் உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் மறக்கப்பட்டுள்ளன. 

நாமும் ஒரே தந்திரோபாய முறையில் பயணிக்காது உரிமை போராட்டத்துக்கான பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. பல கட்சித் தலைவர்களுடனும், மதத் தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்திவருகின்றோம். நிர்ப்பந்தமான காலகட்டத்தில் மாற்று பொறிமுறையை கையாள வேண்டிய காலகட்டத்தில் தமிழ் தலைமைகளாக பயணிக்கின்றோம். 

கேள்வி :- முஸ்லிம் சமூகத்திற்குப் பிரச்சினை என்றவுடன் அச்சமூகத்தின் அனைத்துத் தலைவர்களும் கூட்டாக பதவியை இராஜினாமா செய்து தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லையென சிலர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? 

பதில் :- இவர்களுக்கு முன்னரே ஒற்று மையில் சிறந்தவர்களாக தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டுள்ள வரலாறுகள் அதிகமுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட அதன் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் 1979ஆம் ஆண்டு தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே இராஜினாமா செய்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். முஸ்லிம் தலைவர் அமைச்சுப் பதவிகளை மாத்திரமே இராஜினாமா செய்துள்ளனர். பாராளுமன்றப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை. பதவிகளை தூக்கியெறிந்த முன்னுதாரணங்களை தமிழர்களே பல தசாப்தங்களுக்கு முன்னர் காட்டியுள்ளனர். 

தியாகி திலீபன் 12நாட்கள் உண்ணாவிரமிருந்தும், அன்னை பூபதி 2கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடியும் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று படுகொலைச் செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை, குமார் பொன்னம்பலம் போன்றோர் ஜனநாயக வழியில் தமது ஒற்றுமையை காட்டியுள்ளனர்.

 தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்ததைவிட இந்தவிடயம் பெரிய விடயமல்ல. 

கேள்வி :- இந்திய பிரதமர் இன்று (ஞாயிறு) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மோடியிடம் எதனை வலியுறுத்தவுள்ளது? 

பதில் :- ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா இருந்துள்ளது. 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தில் ஈழத்தமிழர்கள் சார்பில் இந்தியாதான் கையெழுத்திட்டிருந்தது. தமிழர்களுக்கு சமஸ்டி அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த கடப்பாடு அவர்களுக்கு உள்ளது. இணைந்த வடக்கு,கிழக்கில் மீள பெறமுடியாத அதிகாரத்தை தமிழிர்களுக்கு பெற்றுக்கொடுக்க இந்தியா தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை நாங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். 

கேள்வி :- இதற்கு முன்னரும் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அதிகாரப் பகிர்வு, வடக்கு,கிழக்கு இணைப்புத் தொடர்பில் வலியுறுத்தியுள்ளீர்கள். அது சாத்தியமானதா? இந்தியாவின் நிலைப்பாடு அதில் எவ்வாறு உள்ளது? 

பதில் :- வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம். அது தமிழர்களின் பூர்வீக மண். இந்தியா ஒரு இறைமையுள்ள நாடு. இங்கே சிங்கள பௌத்த தேசியவாதத்தை எதிர்த்து அதனால் செயற்பட முடியாது. என்றாலும், கூர்மையான அணுகுமுறைகள் மூலம் இணைந்த வடக்கு, கிழக்கில் மீள பெற முடியாத அதிகாரத்தை இந்தியா தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். 

கேள்வி :- அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எவ்வாறான நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுக்கும்? 

பதில் :- அந்த விடயம் தொடர்பில் நாங்கள் இன்னமும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. அடுத்தவாரம் பாராளுமன்றம் கூடும்போது கூடி உரிய தீர்மானத்தை எடுப்போம் என்றார்.    

நேர்காணல்
சுப்பிரமணியம் நிசாந்தன்

Comments