அரபு உலகினதும் ஆசியாவினதும் வெற்றியாக அமையும் | தினகரன் வாரமஞ்சரி

அரபு உலகினதும் ஆசியாவினதும் வெற்றியாக அமையும்

2022ம் பிபா உலகக் கிண்ணம்

கட்டார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சவூத் அல் மொஹன்னாதி 

கட்டாரில் 2022இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முழு அரபு உலகுக்கும் மத்திய கிழக்குக்கும் உரித்தானது. 

அத்துடன் உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும். 

கட்டார் உதை பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய உதை பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பிபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கட்டாரின் தலைநகர் டோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கட்டார் உதைபந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் மரபுரிமைக்கான உயர் குழு இல்லத்தில் சவூத் அல் மொஹன்னாதியுடன் நடத்தப்பட்ட நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். 

கட்டார் 2022உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்படும் சகல விளையாட்டரங்குகளும் அரபிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் அனைத்து விளையாட்டரங்குகளும் அடுத்த வருடம் பூர்த்தியாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சில உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகும்போதுகூட அரங்குகளில் கடைசிக் கட்ட வேலைகள் நடைபெற்றபோதிலும் அப்படியான ஒரு நிலை கட்டாரில் ஏற்படாது என்பதை உறுதிசெய்த அவர், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எட்டு விளையாட்டரங்குகளும் தயாராகிவிடும் என்றார்.  

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய உதைபந்தாட்ட கூட்டு சம்மேளன பொதுச் சபைக் கூட்டத்தின்போது உதவித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சவூத் அல் மொஹன்னாதி, பிபா பேரவை உறுப்பினராகவும் தெரிவானார். 

சவூத் அல் மொஹன்னாதியுடனான நேர்காணல் வருமாறு 

கே: சவூதி அரேபியா மற்றும் ஜப்பான் போன்ற பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு இவ் வருடம் ஆசிய கிண்ணத்தை கட்டார் சுவீகரித்தது. ஆசிய கிண்ணப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய கட்டார் அடுத்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளை முன்னின்று நடத்தவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் பற்றி கூறுவீர்களா? 

ப: ஆசிய சம்பியன் என்ற வகையில் 2022பிபா உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடாக கட்டார் எதிர்கொள்ளவுள்ளது. 2022நவம்பர் 21ஆம் திகதி எமது அணி லுசெய்ல் விளையாட்டரங்கில் ஆரம்பப் போட்டியில் விளையாடும்போது அது முழு கட்டாருக்கும் பெருமை அளிப்பதாக அமையும்.  

உலகக் கிண்ணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சரியான வழியில், மதிப்பீட்டு செலவினங்களுக்கு அமைவாக சென்றுகொண்டிருக்கின்றது. பிரேஸில், ரஷ்யா ஆகிய நாடுகள் கடந்த இரண்டு உலகக் கிண்ண அத்தியாயங்களை வெற்றிகரமாக நடத்திய நிலையில், அடுத்த வரவேற்பு நாடு என்ற வகையில் எமது கலாசார விழுமியங்களுக்கு அமைய சிறப்பாக நடத்துவோம். உலகக் கிண்ணப் போட்டிக்கான அரங்குகளில் ஒன்றான கலிபா விளையாட்டரங்கு 2017மே மாதம் திறக்கப்பட்டு அமீர் கிண்ண இறுதிப் போட்டியும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த அரங்கு 40,000ஆசன வசதிகளைக் கொண்டது. 

இரண்டு புதிய விளையாட்டரங்குகள் திறக்கப்படவுள்ளதால் இவ் வருடம் மிக முக்கிய வருடமாக எமக்கு அமையவுள்ளது. கட்டாரின் தென்புற நகரான அல் -வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் 40,000ஆசனங்களைக் கொண்ட அல்- வக்ரா விளையாட்டரங்கு இம் மாதம் திறக்கப்படும். அல் -கோர் சிட்டியில் நிர்மாணிக்கப்படும் 60,000ஆசனங்களைக் கொண்ட அல் -பெட் விளையாட்டரங்கு இவ் வருட இறுதியில் திறக்கப்படும். 

எட்டு அரங்குகளுடன் 32அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். இதற்காக இலங்கையர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லவேண்டும். உலகக் கிண்ணத்துடனான திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கட்டாரின் கனவை நனவாக்கி அதி சிறந்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான எமது முயற்சியில் அவர்களது பங்களிப்பு இருப்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன். 

எமது உதைபந்தாட்டத் திட்டத்தின் பங்காளிகளான தேசிய திட்டத்தில் ஈடுபடுபவர்களும் உரிய இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர். புதிய மெட்ரோ சேவை இவ் வருடம் ஆரம்பமாகும். ஒரு அரங்கிலிருந்து இன்னுமொரு அரங்குக்கு பயணிப்பதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு குறைவான நேரமே தேவைப்படும். எனவே இரசிகர்கள் ஒரே நாளில் இரண்டு போட்டிகளைக் கண்டுகளிக்கக்கூடியதாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணையப்பட்ட வீதி கட்டமைப்புகளும் பூர்த்தி அடையும் தறுவாயை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. 

அதேபோன்று விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் தொடர்வதுடன் 2022இல் வருகை தரவுள்ள பத்து இலட்சம் இரசிகர்களைத் தங்க வைப்பதற்கான ஹோட்டல்களும் திறக்கப்பட்ட வண்ணம் உள்ளன. அடுத்த வருடத்துக்குள் அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்படுவதுடன் தேசிய மட்டத்திலான பரீட்சார்த்த நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றுவோம். 

கே: 2022உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அணிகளின் எண்ணிக்கை 32இலிருந்து 48ஆக அதிகரிக்கலாம் என்ற ஊகம் நிலவுகின்றது. இதனால் இப் போட்டியை கூட்டாக வேற்று நாடொன்றுடன் நடத்த திட்டமிடப்படுவதாகத் தெரிகின்றது. 48அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணப் போட்டிகளை கட்டார் தனித்து நடத்த தயாரா? 

ப: 2022உலகக் கிண்ணப் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிப்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயார். இது குறித்து பிபாவுடனான கலந்துரையாடல் மொஸ்கோவில் ஆரம்பித்ததுடன் கிகாலிவரை பல்வேறு பிபா பொதுச் சபைக் கூட்டங்களிலும் ஆராயப்பட்டது. எமது பிராந்தியத்துக்கும் அதன் மக்களுக்கும் அணுகூலம் தரக்கூடிய பிபா உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த உலகக் கிண்ணம் முழு அரபு உலகுக்கும் மத்திய கிழக்குக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதே எமது இலட்சியமாகும்.  

அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பிபா பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்பார்க்கலாம். அதுவரை கட்டாரில் 32அணிகளுக்கான உலகக் கிண்ணப் பணிகளில் ஈடுபடுவதுடன் அதி உயரிய உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவோம் என்ற உறுதியையும் வழங்குகின்றோம். 

கே: ரஷ்யாவில் நடைபெற்ற 2018உலகக் கிண்ணப் போட்டியே அதி சிறந்தது என பிபா பிரகடனப்படுத்தியது. அதற்கு சமமாகவோ அல்லது அதனை விட சிறப்பாகவோ 2022இல் நடத்துவது கட்டாருக்கு பெருஞ்சவாலாக இருக்கப் போகிறது. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்? 

ப: ரஷ்யா 2018உலகக் கிண்ணப் போட்டியின்போது 200கண்காணிப்பாளர்களை கட்டார் அங்கு அனுப்பியிருந்தது. பிபாவிடமும் ரஷ்யாவிடமும் நிறைய விடயங்களை அறிந்துகொள்ளும்பொருட்டே அவர்களை அனுப்பினோம். பிபா 2022உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு கட்டார் என 2010இல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் பல விடயங்களை நாங்கள் பின்பற்றிவருகின்றோம். எது சரி, எது தவறு என்பதை இனங்கண்டு, 2022உலகக் கிண்ணம் அதி சிறந்ததாக அமைய என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் ஆராய்ந்து 2010முதல் பிரதான போட்டிகளில் பணியாளர்களை அமர்த்தி பரீட்சித்து வருகின்றோம். ஒலிம்பிக் விழா, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, யூரோ சம்பியன்ஷிப், 21வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டி அனைத்துக்கும் எமது அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக அனுப்பி சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம். ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை நான் நேரில் கண்ணுற்றேன் ஆனால் அங்கு ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்கு 3,000கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்தது.. ஆனால் கட்டாரில் அரங்குகளுக்கு இடையில் 70கிலோ மீற்றர் தூரமே உள்ளன. ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்குக்கு ஒரு மணித்தியாலத்துக்குள் பயணித்துவிடலாம். எனவே இரசிகர்களுக்கும் அணிகளுக்கும் போதிய ஓய்வு எடுக்கக்கூடியதாக இருக்கும்.  

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுவதால், கடற்கரை பொழுதுபோக்கு, பாலைவனச் சுற்றுப் பயணம், நீர்நிலை விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் அனைத்திலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு நிலவும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகை தந்து உதைபந்தாட்டத்துடன் களியாட்டங்களிலும் கலந்து மகிழக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அரபு உலகின் விருந்தோம்பல்களை அனுபவிக்கும் அதேவேளை கட்டாரின் சுவையான உணவுகளையும் உண்ணக்கூடியதாக இருக்கும்.  

ஒட்டுமொத்தத்தில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையிலும் அரபு உலகுக்கு பெருமைதரும் வகையிலும் 2022உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளை கட்டார் நடத்தும் என நான் 100வீதம் நம்புகின்றேன். 

கே: உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு நிர்மாணிக்கப்படும் விளையாட்டரங்குகளுக்கான மொத்த செலவீனம் எவ்வளவு?  

ப: சுற்றுப் போட்டிக்கான செலவினம் 23பில்லியன் கட்டார் ரியால் (சுமார் 6.6பில்லியன் அமெரிக்கா டொலர்கள்) என மதிப்பிட்டுள்ளோம். நான் ஏற்கனவே கூறியதுபோன்று எட்டு விளையாட்டு அரங்குகள் நிர்மாணிக்கப்படும். கலிபா விளையாட்டரங்கு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அல் வக்ரா, அல் பேட் என்பன இவ் வருடம் திறக்கப்படும்.  

அல் -ரயான், அல்- துமாமா, ராஸ் அபு அபூத், எட்யூகேஷன் சிட்டி, லுசெய்ல் என்பன மற்றைய ஆறு அரங்குகளாகும். எட்டு அரங்குகளில் ஆறு அரங்குகள் 40,000ஆசனங்களைக் கொண்டவை. அல் பேட் அரங்கில் 60,000ஆசனங்கள் உள்ளன. லுசெய்ல் அரங்குதான் பெரியது. இங்குதான் ஆரம்பப் போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெறும். இந்த அரங்கு 80,000ஆசனங்களைக் கொண்டது. உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான வகையில் ராஸ் அபு விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படுகின்றது. கப்பல் கொள்கலன்கள், அப்புறப்படுத்தக்கூடிய ஆசனங்கள், அலகுகளான கட்டுமான தொகுதிகள் மற்றும் 40,000ஆசனங்களுடன் அமைக்கப்படும் இந்த அரங்கு, உலகக் கிண்ணம் முடிவடைந்ததும் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும்.  

அதன் பகுதிகள், விளையாட்டுத்துறை அல்லது விளையாட்டுத்துறை அல்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். நிலைத்திருப்பதற்கான புதிய கண்டு பிடிப்பாக இதனை கட்டார் அறிமுகப்படுத்துகின்றது.  

எமது விளையாட்டரங்குகள் அனைத்தும் அராபிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டனவாக இருக்கும். இவை முழு உலகையும் கவரும் என்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேர்காணல் :
பரீத் ஏ றகுமான்

Comments