மாமி ஏன் சுனாமி ஆனாள் | தினகரன் வாரமஞ்சரி

மாமி ஏன் சுனாமி ஆனாள்

வள்ளியம்மாளுக்கு அன்று இருப்புக் கொள்ளவில்லை துள்ளித்திரியும் குமரிபோலானாள்! வாழ்க்கையில் என்றுமே அன்றுபோல் இன்பமாய் இருந்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை! வாயில் வந்ததை எல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தாள்! திடீர் என்று முடிசூட்டிக் கொண்டவர்கள் மாதிரி படீர்படீர்என்று உத்தரவுகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்!

வீட்டுவாசல் முன்னால் நிறைகுடம்... பூரண கும்பத்தோடு வைக்கப்பட்டிருக்கிறது. பன்னீர்செம்பு சந்தனம், குங்குமம், ஊதுபத்தி எல்லாமே உடன் இருந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது! மாவிலை குருந்தோலைத் தோரணங்களால் அலங்காரமிட்டு அழகுபடுத்துகிறது! மங்கள இசைமுழக்கம் கூடியிருப்போர் வாய்மொழிகளையும் அடக்கிக் கொண்டு ஒலிக்கிறது!

அவள் சற்று தூரத்தில் நின்று  உற்றுப்பார்த்துக் கொண்டே நின்றாள்  மகனையும் மருமகளையும் கௌரவிக்கும் திருட்சடங்கை. மகன் முருகானந்தன் சிரிக்கும் ஒவ்வோரு  கணமும் அவள்   உள்ளத்தில் பால்வார்க்கிறது! உடலே சேர்ந்து சிரிக்கிறது! இடைக்கிடைபெண்ணையும் அவள் உள்ளம் அளவெடுக்கிறது! ஜொடிப்பொருத்தம் எப்படி! "மகனுக்கேற்ற நல்லவடிவான பொம்புளையாப் பார்த்துப் புடிச்சுப் போட்டாய்" என்று பார்ப்போர் அபிப்பிராயம் சொன்னாலும் மகன்ர தோற்றத்துக்கு முன்னால இவளால நிக்கேலாது! என்றேபட்டது அவளுக்கு!

இரவு எட்டு மணி ஆகுமுன்னே வரவேற்புக்குரியவர்கள் வந்து போய்விட்டார்கள். நெருங்கிய உறவினர்களாய் நண்பர்களாய் நின்று நடத்தி முடித்தவர்கள்தான் கொஞ்சப் பேர் கெஞ்சலாக ஏதேதோ பேசிக்கொண்டு இங்கொன்றும் அங்கோன்றுமாய் இருந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். இவர்களுக்குத்தான் சடங்கை நடத்தி முடிப்பதில் உடல் அலுப்பு அதிகம் சுப்பிரமணியத்தார் அவர்களைக் கவனித்து, உபசரிப்பதில் கூடுதல்கவனமெடுத்தார்! மற்றவர்கள் அலட்சியப்படுத்தும் முக்கிய கைங்கரியங்களில்த்தான் அவர் அக்கரையாகவிருப்பார்! அவர் சுபாவம் அப்படி! அவர் போன்றவர்களால்தான் பிரச்சினைகள் மனஸ்த்தாவங்கள் ஏற்படாமல் காக்கமுடியும்! வள்ளியம்மாளோ மகனில் குடும்பத்தில் அளவுக்கு மீறி அக்கறை எடுத்து மற்றவர்களில் கவனயீனமாயிருந்து விடுகின்றனர். இந்தக் குணம்சம்தான் பிரச்சினைகளுக்கு காரணம்! பொதுவாக பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான்!

வரவேற்பாளர்கள் ஏற்பாட்டாளர்கள் எல்லாம் மண்டபத்திலும் பந்தலிலும் முடங்கிவிட்டனர். சப்தங்களும் அடங்கிக் கொண்டு வந்தன. இந்தக் காரியங்கள் எல்லாம் நிறைவேற்றிவிட்டு சுப்ரமணியதாரும் மூலையொன்றில் மடங்கி விட்டர்.

வள்ளியம்மாள் மணமக்களுக்கு படுக்கை விரிக்கும் கைங்கரியத்தில் மெத்தக் கரிசனையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்!  மகனுக்காகவே எப்போதோ வாங்கி மடித்து வைத்திருந்த, பூ வேலை செய்தபடுக்கை விரிப்புக்களை எல்லாம் எடுத்து விரித்துமிக நேர்த்தியாக அலங்கரித்தாள். வாசனைத் திரவிங்களால்  ஊதுபத்திகளால் மணம் வீசசெய்தாள்!   மனத்திருப்தி ஏற்படும்மட்டும் ஏதேதோவெல்லாம் செய்து முடித்தாள்!

கொஞ்சம் எட்டநின்று எல்லாம் சரிதானா என்று நோட்டமிட்டாள். அவளுக்கு இலேசாகப் புன்னகை வந்தது நாணத்தோடு! கட்டிலிலே நடக்கப் போவதை நினைத்தாளோ! முதலிரவில் தனக்கு நடந்ததை சிந்தித்தாளோ!

மகனும் மருமகளும் கைகோர்த்தபடி சிரிப்பை சிந்தியபடி கட்டிலறைக்குள் காலடி எடுத்து வைத்தனர்! மெதுவாகப் போனவர்கள், வேகமாக கதவைச் சாத்தி தாழ்ப்பாளிட்டுக் கொண்டனர்! சாத்தும் போது படார் என்ற சத்தம் வள்ளியம்மாளின் இதயக் கதவை சடார் என்றுதாக்கியது! அவள் சமாளிக்க முடியாமல் தடுமாறினாள்! இறுக்கி மூடியகதவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

ஆண்களை ஒரு பார்வையில் ஒரு கதையில் விளங்கிக் கொள்ளலாம் பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது! எந்த நேரத்தில் என்ன அவதாரம் எடுப்பார்கள் என்று எதிர்வு கூறவியலாது!

அவள் தானே இருவரையும் ஒன்று சேர்த்தாள்! படுக்கை விரித்தாள்! இப்போது ஏன் எதையோ பறிகொடுத்தவள் போலானாள்! பெண்மையை ஆராயமுற்பட்டால் பைத்தியம் பிடிக்கும்! என்றாலும் ஆராய முற்படத்தான் வேண்டும்

நேற்றுவரை இதே அறையில் தான் அவளோடு படுத்துறங்கியவன் மகன்! பத்து மாதம் வயிற்றிலே உறங்கியவன்! மார்பு மீதும் மடிமீதும் துயில் கொண்டவன்! உரிமை கொண்டாடியவன்! கணமேனும் பிரியவியலாமல் தவித்துக் கிடந்தவன்! அந்த நிலையாலேயே தாய்க்கு உரிமைச் சொத்தானவன்! தாயின் ஒரு பாகமானவன்! சொத்தாகமட்டுமல்ல மனத்தைப் பித்தாக்கிவிட்டவன்! பத்தாதுக்கு பத்தாவையும் மறக்கச் செய்தவன்!                                         

வள்ளியம்மாவுக்கு ஆரம்பத்தில் இரண்டுபெண்பிள்ளைகள் அடுத்தடுத்துப் பிறந்து குழந்தைப் பராயத்திலேயே மரணமாகி விட்டானர்! நல்லவேளை அதிர்ச்சியால் மாரடைபால் மரணத்தில்நின்று தப்பிப்பிழைத்தாள்! அதன்பிறகு இவன் பிறந்தான் மெத்தக்கவனமாக இவனை வளர்த்தாள் ஈ, எறும்புகூட பட்டுவிடாமல் குளிர் காற்று வெயில் கூடதொட்டுவிடாமல் மிக்க கரிசனையாக பார்த்துக் கொண்டாள்.    

பல வருடங்களின் பின்னே ஒரு பெண் பெற்றாள் அவள் இப்போது சிறுமியாக இருக்கிறாள் என்றாலும் இவளுக்கு முருகானந்தன்தான் தன் ஒரேமகன் என்ற நினைப்பு அவ்வளவு ஈடுபாடு! சிறுமியோடு சுப்பிரமணியத்தார்தான் கொஞ்சிக்குலாவுவார். அவர்தான் படுக்கையில்கூட அவளை விட்டுப்பிரிய மாட்டார்!

 ஆனால் வள்ளியம்மாள் மீசைமுளைத்த பின்னும் மகனோடுதான் படுக்கையை வைத்துக் கொண்டாள்! அவனுக்கும் தாயில்லாமல் துயில் இல்லை என்றநிலை பயின்றுவிட்டது! மகன் கொறட்டை ஒலி கேட்ட பின்புதான் அவளுக்கு நித்திரைவரும், அதுவரைக்கும் புழுக்கமென்றால் சட்டைகளை தளர்த்திவிடுவாள்! விசிறிமட்டையால் விசிறிக் கொள்வாள்! குளிர் என்றால் இறுக்கிப் போர்த்துவிடுவாள்! அடிக்கடி எழுந்து தலையை முகத்தை எல்லாம் வருடிக் கொடுத்திடுவாள்! இந்த அன்பு சேவையை எல்லாம் ஏன்தான் செய்கிறாளோ! அவளுக்கு ஒரு ஆன்மதிருப்தி! இதெல்லாம் செய்தால்த்தான் அவளுக்கும் ஆழ்ந்த தூக்கம்வரும் அவனும் அன்னையின் அனுக்கிரகம் இல்லாமல் நித்திராதேவியை அரவணைக்கமாட்டான்!

சுப்பிரமணியத்தாருக்கு இந்த காட்சிகளைப் பார்க்க சகிக்க இயலவில்லை! இடைக்கிடை பொருமிப்பார்தார்! ‘இப்பவும் இளந்தாரிப் பிள்ளையோட படுக்கவேணுமா! பாக்கிறாக்கள் என்னநினைப்பாங்கள்!’ என்னெண்டாலும் நினைச்சிப் போட்டு போகட்டன்  கலியாணம் முடிச்சாலும் அவன் எனக்குப்புள்ளதான் தாய்புள்ள உறவு விட்டுப் போகாது!’, ‘உங்களோட கதைக்கேலாது... திருத்த ஏலாது’ அவர் எதையும் வாதாடி வற்புறுத்தி பிணக்குப் பண்ணமாட்டார்! அதனால்தான் பிரச்சினை பெரிதாக இல்லாமல் அவர் குடும்பம் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க இன்றுபுதிதாக வந்தசீதேவி தன்னை புறந்தள்ளிவிட்டு மகனின் படுக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால்... இல்லை அவளைப் பொறுத்தவரை அபகரித்துக் கொண்டால் மனப்பாதிப்பு இருக்கத்தானே செய்யும்! தாயை மகனில் நின்று பிரிக்க மருமகள்  முதல் அடி எடுத்து வைத்துவிட்டாள்!

மகனுக்கு எப்படி நித்திரைவரும்! அவளுக்கும் எப்படிவரும்! சூழ்நிலைக்குத்தக்கதாய் திடீரென்று மாறயாரால் முடியும்! அவளுக்குப் புழுங்கியது! ஒருவருக்கும் புழுங்கவில்லை! பிய்ந்த பழைய பாயோன்றைத் தேடி எடுத்து ஒரு மூலையிலே சுருண்டு கொண்டாள். அவள் பரிதாப நிலை யாருக்கும் தெரியவில்லை!

அடுத்தநாள் பகல் முழுவதும் மணமகள் படுக்கையறையைவிட்டு வெளியே வரவில்லை! அறைக்குள் என்ன நடக்கிறது என்று வெளியால் இருப்பவர்களுக்குப் புரிந்தாலும் யாரும் பெரிதாகச்சட்டை செய்யவில்லை! வள்ளியம்மாளுக்கு இருப்புக் கொள்ளவில்லை உள்ளமெல்லாம் அறையுள்ளேதான்!

கொஞ்சுவதும் கெஞ்சுவதும் மிஞ்சுவதும் ஊடலும் கூடலும் ஆடலும் பாடலும் எல்லாம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் மனதுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தன.

அவள் இரசித்தாளாயினும் சகிக்க இயலவில்லை சம்பவங்கள் அளவை மீறிப் போய்க் கொண்டிருப்பதாகவே அவளுக்குப்பட்டது! அடுத்தடுத்த நாட்களிலும் இதே காட்சிகள் தொடர்ந்தது! இடைக்கிடைவெளியேவந்தாலும் சேட்டை சரச சல்லாபங்களும் வெளிப்படையாகின! இவை தாயவளை மேலும் சித்திரவதைக்குள்ளாக்கியது! தங்களை எல்லாம் அலட்சியமாக்கி ஒதுக்கித் தள்ளுவது போலிருந்தது மகனைவிட்டு தன்னை தூரத்தள்ளுமோ என்று ஏங்கியது!

“மரகதம்! நீர் என்ன பொறுப்பில்லாத விளையாட்டுப்பிள்ளையா? இத்தனை நாளாச்சு குசினிப்பக்கம் எட்டியாவது பார்த்தீரா! நானும் வயதாகிவருத்தக்காரியாகப் போயிற்றன் என்னால நெடுக அடுக்களையில் இருந்து பாடுபட ஏலுமா என்ன! இண்டையில இருந்து சமையலுக்கு முழுவேலையும் நீர்தான் செய்யவேணும்!" என்றாள்

மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை விலக்க எடுக்கும் முதல்முயற்சி! “அதுகள் முடிச்சபுதுசுல அப்படித்தானே இருக்குங்கள் அப்பா! இந்தக் காலத்தில ஊர் உலகத்தில அப்படித்தானே இருக்குதுகள்! நாள்பட ஆசை அடங்க அவதானாகவே சமையல் கட்டுக்கு வந்து வந்துடுவா. நீ ஏன் வீணா அவசரப்படுறாய்”! சுப்பிரமணியத்தார் நளினமாகச் கொன்னது அவள் மண்டையில் ஏறியதோ தெரியவில்லை!

அன்று வழமைபோல இருவருக்கும் உணவுபரிமாற சாப்பாட்டு பாத்திரங்களுடன் மேசையடிக்குவந்தாள் அம்மா. மருமகள் முந்திக்கொண்டு வந்து அவற்றை வேண்டிக் கொண்டாள்.

“நீங்க விடுங்கோ மாமி நான் அவருக்கு சாப்பாடு கொடுக்கிறன் இனிநான்தான் இந்வேலை எல்லாம் செய்வன் நீங்க இதில இனி மெனக்கெடத் தேவையில்லை!

மரகதம் கூறிய இந்த வார்த்தைகள் வள்ளியம்மாளுக்கு தன்னை தள்ளி வைக்க மகனை அள்ளி எடுக்க ஆரம்பிக்கும் முயற்சியாகவேபட்டது! மனம் சிறிது பாதித்துதான் விட்டது! எப்படி எல்லாம் மகனுக்கு ஊட்டிவிட்டவள்! சுவையறிந்து பிடிக்காததறிந்து பரிமாறியவள்! குறை சொல்லி மகன் திட்டினாலும் கழுத்தில் விழும் மாலையாக அதை ஏற்றுக் கொண்டவள்! அந்த அனுபவிப்பில் ஒருவித சுகம் கண்டவள்! இன்று பதவி இறக்கியது போல் ஒரு உணர்வு!

“இண்டைக்கு சாப்பாடு ருசியாக் கிடக்கு நீரா சமைச்ச நீர் இந்தக்கறி நீரா ஆக்கினநீர் நல்ல சோக்கா இருக்கு! இனி நீர்தான் சமையும் என்ன!” என்று மகன் சொன்னாது அவள் மனதை மேலும் பாதிப்புறச் செய்தது! மகனே தன்னை புறந்தள்ளி   தூரப்போவகை! மருமகள் சொந்தமாவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முடித்த பின்பு நடந்து முடியும் சம்பங்கள் ஒவ்வொன்றும் அவள் மனதை சிறுகச்சிறுகப் பாதிக்க வைத்துக் கொண்டு வந்ததாயினும் அன்று நடந்த சம்பவம் தான் மிகவும் வேரறுப்பதாக இருந்தது!

அன்று சம்பளதினம் வேலை முடிந்து வந்தவன், சம்பளத் தொகையை அப்படியே மனைவியின் கையில் பெருமையோடு கொடுத்தான்! வள்ளியம்மாள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்! அவளுக்கு நெஞ்சு பற்றி எரிந்தது!

“என்ர பிள்ள உழைக்கத் துவங்கின பிறகு தானே என்ர கழுத்தில காதில மின்னுது நான் நல்லா இருக்கிறன்! இவ்வளவு காலம் உம்மோட வாழ்ந்து நான் என்னத்தக் கண்டண்! நீர் தாறது சாப்பாட்டுக்கே காணாது!” என்று சொல்லி கணவன் மனதை நோகடிச்சவள்!

பிள்ளைகள் உழைக்கத் தொடங்கினால் போதும் புருஷனை ஒருமுலையிலே இருத்தி விடுவார்கள் இந்த பெண்கள் அவர் படிப்படியாக படியிறங்கிப் போகவேண்டியதுதான்!

“நீ என்ன எப்ப பாத்தாலும் என்ர புள்ள என்ர புள்ள எண்டு பிரலாபிக்கிறாய்! நான் ஆரு சித்தப்பனே! நானில்லாமல் உனக்குப் புள்ள வந்ததே! எப்ப இவர் உழைக்க வெளிக்கிட்டவர்! எத்தனை வருஷமா நான் ஒருத்தன் உழைச்சு சோறு போடுறன் எல்லாம் மறந்திற்றியோ” அவரும் சரியாக பதிலடி கொடுப்பார் உறைக்க கதைப்பார்! ஆனால் அவள்   எதையும் காதில் வாங்கிக் கொள்பவளாக இல்லை! சந்தர்பம்வரும் போதெல்லாம் தான் கதைத்ததையே திருப்பத்திரும்ப கதைப்பதில் விறைப்பாக இருப்பாள்!

ஆனால், இனி இப்படி எல்லாம் கதைக்க ஏலுமா என்ன செருப்படி வேண்டியது போலிருந்தது! இனிக் கணவன் வரும்படியைநம்பி கொஞ்சம் அடங்கிப்போக வேண்டியது தான். நிலைப் பாடு அடங்கிப் போவதாயிருந்தாலும் மனப்பாடு நெருடிக் கொண்டே இருந்தது! அவள் சீற்றம் மருமகள் பக்கம் அவளையும் அறியாமல் சிறிது சீறிக் கொண்டிருந்தது!

எல்லாவற்றையும்விட சம்பளப் பணத்தை அப்படியே கொண்டு போய் நேற்று வந்தவளிடம் கொடுத்ததுதான் அவள் மனதை மிகவும் பாதித்து விட்டது! இப்படித்தானே உலகத்தில் நடக்கிறது என்பதெல்லாம் அவள் மனதை சமாதானம் செய்யப் போதாது! முற்றாகவே தன் மகன் தன்னை விட்டுபறிபோவதுபோல் உணர்ந்தாள்! சகல பிரச்சினைகளுக்கும் பொருளாதாரப் பிரச்சினைதான் காரணம் என்று கொம்மினிசவாதிகள் சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை!

அன்று வெள்ளிக்கிழமை வள்ளியம்மாள் முருகன் கோவிலுக்குப் போவது வழமை. மருமகளும் உடன் வருகின்றேன் என்றாள். வள்ளியம்மாள் வெளிக்கிட்டு அரை மனிக்கு மேலாவிட்டது! மருமகள் அலங்காரம் முடிந்து அறையை விட்டு இன்னும் வெளியாலே வரவே இல்லை! வள்ளியம்மாளுக்கு கொள்ளிக்கட்டையால் சுட்டது போல் சினம் சினமாய் பற்றி எரிந்து கொண்டிருந்தது! சறுபுறு புறுபுறு என்று வாய்க்கு வந்ததை எல்லாம் புலம்பிக் கொண்டே இருந்தாள்!

“மரகதம்! நான் வெளிக்கிட்டு காலும் உளையுது! என்ன செய்யுறாய் அறைக்க தனிய நிண்டு!” பொறுமையிழந்து கத்தினாள்! மருமகள் வெளியே வந்து, “கொஞ்சம் பொறுங்கோ பவுடர் போட்டுற்றுவாறன். ஏன் இதுக்கெல்லம் கத்துறீங்கள்” அவளும் கொஞ்சம் சூடாகத்தான் கேட்டாள்!

இவள் கொதித்தெழுந்தாள்! அலங்கார யோடனைகளை பார்க்கமேலும் பற்றி எரிந்தது! “நீ என்ன சாமிகும்பிடப் போறியோ ஆள்பிடிக்கப் போறியோ!” கேட்டே விட்டாள் பொல்லுக் கட்டையால் அடித்தது போல! நாவால் ஒரு ஆளை எத்தனைதரம் வேண்டுமானாலும் கொல்லலாம்! ஆரால்கேடு நாவால்கேடு! “நீங்க என்ன ஜென்மங்கள்! வாயில வந்ததெல்லாம் இப்படியா பேசுவது! நாங்களும் மானம் மரியாதையான குடும்பத்தில இருந்து வந்த நாங்கள்தான் கண்டவன் பின்னாலயும் திரிஞ்ச ஆக்களில்ல!”, “ஓமடி ஓமடி உங்கட நாத்தங்கள் எல்லாம் எனக்குத் தெரியும், உன்ர கொம்மாவுக்கு எத்தின மாப்பிள்ளமார் எண்டும் தெரியும்!” மரகதம் அலறிக் கத்தினாள்! உணர்ச்சி மேலீட்டால் அவளால் பேசவே முடியவில்லை! அழுது குழறுவதைவிட வேறோன்றும் செய்யத் தோன்றவில்லை! ஆடை அலங்காரங்களை எல்லாம் கலைத்தெறிந்தாள்! விசும்பிவிசும்பி அழுது கொண்டே இருந்தாள்!

சுப்பிரமணித்தார் அப்போது தான் அடிவளவுக்குள் அலுவலாக இருந்நு வந்தார். “என்னப்பா நம்ம வீட்டிலயும் மாமியாரு மருமகள் சண்டை துவங்கிற்றுதோ! “நானென்னப்பா கொன்ன நான் கோவிலுக்குப் போக கெதியா வெளிக்கிடச் சொன்னநான் இதுக்குப் போய் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுறாளே!” “உன்ர வாய்கூடாதப்பா நீ என்ன மாதிரி குத்தல் கதை போட்டிருப்பாய் எண்டு எனக்குத் தெரியாதே! மனுஷர புண்படுத்தாம கதைக்க உனக்குத் தெரியாது!”, “அவருக்கு என்னில் புழபிடிக்கத்தான் தெரியும் பொஞ்சாதியோட ஒற்றுமையாக இருக்கத்தெரியாது...” அவள் ஆத்திரம் கணவன் மீது திரும்பி வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டே இருந்தாள்! வழமைபோல அவர் இரண்டொரு கதையோடு வாயை மூடிக் கொண்டு அப்பால் போனார்.

அன்றையப் பிரச்சினை அத்தோடு விட்டபாடு இல்லை! தொட்டுத் தொட்டு தொட்டதெற்கெல்லாம் தொட்டிழுத்து தொண்டைக் கிழியக் கத்திசண்டமாருதம் பண்ணிக் கொண்டிருந்தாள்   மாமி! “உனக்கு குசினிக்க வேலையில்லையோடி மேக்கப் போட்டுக் கொண்டு படலைக்க வந்து நிண்டு கொண்டு போறவன் வாறவன் எல்லாம் பார்த்துக் கொண்டு நிக்கிறியோ! என்ன பழக்கமடி!" மாமியார் வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டினாள்!” மருமகள் “பட்டிக்காட்டு மோட்டுஜென்மங்கள் இவங்களோட சீவிக்க ஏலாது!’ என்று முணுமுணுத்து திட்டினாள்! “ உங்களோட இருந்து சீவிக்க ஏலாது நான் அவரையும் கூட்டிக் கொண்டு வேறவீட்ட போகப்போறன்!" இந்தக் கதையோடு வள்ளியம்மாள் துள்ளிஎழுவதை நிறுத்தி கொஞ்சம் அடங்கிப் போனாள்! மகன் அப்படியே கைவிட்டுப் போவதை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்!

சில நாட்கள் சென்றிருக்கும் “மரகதம் மரகதம்" மரகதம் வீடு இது தானோ! என்று கூவிக்கொண்டு ஒரு வாலிபன் ‘கிட்’ பேக்கோடு படலையத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்! குரல் கேட்டு வள்ளியம்மாள் தான் முன்னே வந்து கூர்ந்து பார்த்தாள்! வந்து கொண்டிருப்பவன் மிக எடுப்பாக இருந்தான்! யௌவன வாலிபன்! அவன் மகன் மனைவி பெயரைச் சொல்லிக் கொண்டு அட்டோலிக்கமாக வந்தது மாமிக்கு மனக்கிலேசத்தை மூட்டியது! வாவேன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அப்பால் போனாள்! போனவள் மனம் சும்மா இருக்குமோ! கதவை சாத்தி உள்ளே போனவள், மெதுவாக யன்னலை நீக்கி நோட்டமிடலானாள்! மோப்பம் பிடிக்கும் நாய்துப்பறிய முயல்கிறது! அவன் மகனைவிட அழகன் போலிருக்கிறது! நவநாகரீகமானவன்! வெளிநாட்டுக் காரன் என்பது வெளியாலே தெரிந்தது! அவள் மனம் பொறாமையால் பொங்கி வழிந்தது!

சிரித்த முகத்தோடு மரகதம் வந்து அவனை வரவேற்றாள்! “வாருங்க ரமேஸ்! ஆள் அடையாளம் காண்பதேகஸ்ரம்! எப்படி மாறிப் போயிற்றீங்க வெளிநாட்டுக் காரன்தான் எண்டு அப்படியே தெரியுது! ஆள் வெள்ளக்காரன்தான்!

“எப்படி வீட்டக்கண்டு பிடிச்சீங்க!” என்று சொல்லி இருக்கச் சொல்லி உபசரித்தாள். “இவர் என்னோட கூடப் படிச்சவர்! சொந்தக்காரன் மாதிரி வீட்டு வந்து புழுங்கியவர், வெளிநாடு போய் அஞ்சு வருஷத்துக்குப் பிறகு இப்பதான் இங்கே வந்திருக்கிறார், ஆளே மாறிப்போனார்!” மாமி கேட்டாளோ இல்லையோ மாமிக்காகத்தான் இந்த வார்த்தைகள்!

அவள் அவன் முன்னால் இருந்து சிரித்து சிரித்துக் கதைத்தாள்! அவனும் சிரித்த முகத்தோடுதான் இருந்தான்! பள்ளி வாழ்க்கை, கடந்த காலக்கதைகளை சொல்லிச் சொல்லியே பகிடியாகச் சிரித்தார்கள்! பழைய மாணவர்கள் படிப்பித்த ஆசிரியர்கள் எல்லோரும் வந்து போனார்கள். பெரிதாகச் சேர்ந்து சிரித்தார்கள். இடைக்கிடை இரகசியக் குரலில் குசுகுசுப்பாகவும் பேசி மகிழ்ந்தார்கள்! இந்தப் பெரிய சிரிப்பும் இரகசியப் பேச்சும்தான் மாமிக்கு மேலும் எரிச்சலை மூட்டியது!

மாமியின் மனக்கடலில் பாரியபிளவு! சுனாமி உருவாகியது! ரமேஸ் போகும் போது அழகான பெட்டியை நீட்டினான் அத்தனையும் இனிப்புச் சாக்கிலேட்வகைகள்! வெளிநாட்டு சரக்கு! அவள் அப்படியே மாமிமுன் நீட்டினாள். அவள் முகத்தை நீட்டிக் கொண்டு அப்பால் போனாள்!

மாலையானதும் முருகானந்தம் வந்தான். இதற்காகத் தானே தாயும் காத்திருந்தாள்! வந்ததும் வராததுமாக தனியே அவனையழைத்து குசினிப்பக்கமாக வைத்து ஏதேதோவெல்லாம் ஓதினாள்! “இங்கே பார் உள்ர பொஞ்சாதியிர போக்கு எனக்கு கட்டோட பிடிக்க இல்ல! நல்லா மேக்கப் போட்டுக் கொண்டு படலையில நிண்டு கொண்டு போறவாறவங்கள எல்லாம் பாக்கிறதும் சிரிக்கிறதும் இது என்ன பழக்கம்! இண்டைக்கு ஒருவன் வந்தான்! வெளிநாட்டுக் காரனாம்! அவன்ர உடுப்பும் எடுப்பும் பொம்புள புடிக்க எண்டே வந்தவன் போல இருக்கும்! அவனோட இவ எப்படி சிரிச்சி கதைச்சி சல்லாபிச்சி... சீ... எங்கேயோ கிடந்தவள கொண்டு வந்து உத்தரிக்க வேணும் போல இருக்கு! உன்ர பெண்டிலக் கண்டிச்சுவை! கவனமாயிரு!” அவள் அறிவுரை கூறினாளா, ஆலகால விஷத்தையே கலந்தாளா! அன்று இரவு, கெஞ்சலும் கொஞ்சலுமாக இருந்து வந்த அறை, வாக்குவாதமும் அதட்டலும் உறுக்கலுமாயானது! அழுகை யொலியும் ஏதேதோ வெல்லாம் நொருங்தும் சத்தங்களும் கேட்கலாயிற்று!

இனி இந்த வீட்டில் இதுதான் நிரந்தரமாகிவிடும்!

இன்பக் கடல் சுனாமியாக மாறிவிடும்!

Comments