இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம் பாடம் கற்பிக்கத் தவறும் சமூகமாக நீடிப்பது? | தினகரன் வாரமஞ்சரி

இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம் பாடம் கற்பிக்கத் தவறும் சமூகமாக நீடிப்பது?

தேசிய மட்டத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் பிரதேச மட்டங்களுக்கு அவை செல்லும்போது நீர்த்துப்போய் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் முனை மழுங்கி விடுவதையும்   கண்கூடாகக் காணமுடிகிறது.

பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைத் தெரிவுகள், அடையமுடியாத பொருளாதார இலக்குகளை அடைவதாகக் கருதி அகலக்கால் வைத்தல், அதற்காக வளங்களை ஒதுக்குதல், தெரிவு செய்யப்படும் கொள்கைகளில் தெளிவின்மை, அவற்றை நடைமுறைப்படுத்த முயலும்போது ஏற்படும் அரசியல் கட்சிசார் ஆட்சி மாற்றங்களால் பொருளாதாரக் கொள்கைகளின் தொடர்ச்சியின்மை, பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் காணப்படும் அரசியல் முன்னுரிமைத் தெரிவுகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள், பொருளாதார கொள்கைகள் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் தனிப்பட்ட ரீதியில் சொத்துச் சேர்க்க விழைகின்றமை, சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளின் சாதக மற்றும் பாதக நிலைமைகள், உள்நாட்டில் நிலவிய வன்முறைச் சூழல்கள் மற்றும் மூன்று தசாப்த கால யுத்த சூழல் அதன் பொருட்டு மோதலில் ஈடுபட்ட இருதரப்பும் தமது பொருளாதார, வளங்களைப் பயன்படுத்தியமை, யுத்த சூழலால் உட்கட்டுமான வசதிகளும், மனித வளமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டமை இலங்கை பூராகவும் உருவாகிய நிச்சயமற்ற தன்மையின் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் கடந்த காலங்களில் மிக மோசமாகப் பாதிப்படைந்தது.

சுதந்திரம் பெற்றபோது நிலவிய மிகச் சாதகமான சமூக பொருளாதார  நிலைமைகள் இலங்கைத் தீவை எப்போதோ ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட காரணிகள் அத்தகைய சாத்தியத்தை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இல்லாமல் செய்து விட்டுள்ளன. கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்கற்க மறுக்கும் ஒரு அடம்பிடிக்கும் சமூகமாகவே இலங்கைச் சமூகத்தை பார்க்க வேண்டியுள்ளது.

நாட்டுக்கு என பொதுவான தேசிய பொருளாதாரக் கொள்கைத் திட்டங்கள் எதுவுமின்றி பதவியிலிருக்கும் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளாக அவற்றை  கடைப் பிடிப்பதும் ஆட்சி மாற்றங்களின்போது பொருளாதாரக் கொள்கைகள் அடிக்கடி மாறுவதும் ஒரு முக்கிய சாபக்கேடாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அடிப்படைகள் மாறாத தேசிய கொள்கைகள் அவசியமாகின்றன.

சுதந்திரத்தின் பின்னர் இற்றைவரை நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மேல் மாகாணத்தையும்  அதனை அண்டிய பிரதேசங்களையுமே மையப்படுத்தியதாக இருந்ததேயன்றி தொலைதூர கிராமப் பிரதேசங்களை நோக்கி அபிவிருத்தி நடவடிக்கைகள் போதியளவிற்கு விஸ்தரிக்கப்படவில்லை. மத்திய அரசாங்கம், மாகாண சபைகள், பிரதேச சபைகள் என மூன்று மட்டங்களில் அரசு நிர்வாகம் பரவலாக்கப்பட்டிருந்த போதிலும் கூட பிராந்திய அபிவிருத்தியில் போதிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளான பாதைகள், வங்கி வலையமைப்பு, தொடர்பாடல் வலையமைப்பு, போக்குவரத்து போன்றனவும் பாடசாலைகள் வைத்தியசாலைகள் போன்ற சமூக உட்கட்டுமானங்களும் உரிய தராதரங்களுடன் கிராமப்புறங்களைச் சென்றடையவில்லை.

கிராமப்புற மற்றும் இளைஞர் கூட்டம் நகர்ப்புறங்களுக்கு நகரும் விதமான ஒரு பொருளாதார ஒழுங்குபாடு தோற்றம் பெற்றதேயன்றி கிராமிய மற்றும் தோட்டப் புறங்களிலேயே தொழில் வாய்ப்பு வசதிகளை  விஸ்தரிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. தேசிய மட்டத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் பிரதேச மட்டங்களுக்கு அவைசெல்லும் போது நீர்த்துப்போய் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் முனை மழுங்கி விடுவதையும்   கண்கூடாகக் காணமுடிகிறது.

மூன்று தசாப்தகால யுத்தம் நிலவிய பகுதிகளில் இந்த நிலைமை மோசமாக உள்ளதையும் அவதானிக்க முடிகிறது. தேசிய ரீதியில் வறுமை நிலை குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் ஊடாக காட்டப்படுகிறது. எனினும் வறியவர்களை இலக்குபடுத்திய தேசிய திட்டங்களில் நன்மைகளை மொத்த குடித்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் பயனாளிகளாக அனுபவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

முன்னெல்லாம் வறுமை தொடர்பான ஆய்வுகளுக்காக மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு ஆய்வு நிறுவனங்கள் படையெடுக்கும். வறுமை மிஞ்சிய கிராமங்கள் அங்கே இருந்தமையே அதற்கு காரணம். எனவே தான் இலங்கையின் வறுமை ‘கிராமிய வறுமையாக’ பெயரிடப்பட்டது. ஆனால் இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இப்போது பெருந்தோட்டப் புறங்களிலேயே வறுமை நிலை அதிகம் காணப்படுவதாக அறியமுடிகிறது.  எனவே இப்போது இலங்கையின் வறுமை 'பெருந்தோட்டப்புற' வறுமையாக அடையாளப்படுத்தப்படுகிறது.

கிராமப்புற வறுமை தணிப்பில் யுத்தம் கணிசமான பங்காற்றியுள்ளதை மறுக்க முடியாது. ஏனெனில் கிராமப்புற இளைஞர்களே பெருமளவில் முப்படைகளிலும் இணந்துகொண்டனர். இவர்கள் உழைத்த பணம் அவர்களது குடும்பங்கள் வறுமை நிலையிலிருந்து மீட்சியடைய உதவின. தென்பகுதி இளைஞர்கள் மத்தியில் வேளாண்மை வீழ்ச்சியடைய இது ஒரு முக்கிய பங்காற்றியது என்பதையும் நாம் இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.

யுத்தம் நிலவிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதைக் காட்டும் விடயங்களை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது.

பெருந்தோட்டப்புற வறுமை (Estate Poverty), கிராமிய வறுமை (Rural Poverty)என வறுமை நிலையை இரண்டாகப் பிரிக்கலாம்.

பாதைக் கட்டமைப்புகள், கட்டுமானங்கள் ஓரளவுக்கு முன்னேற்ற மடைந்த போதிலும் தொழில் வாய்ப்புகள் வருமானமீட்டும் விடயங்கள் மற்றும் கல்வி மற்றும் சுகாதார வசதிகளின் மேம்பாடு தொடர்பில் திருப்திப் பட முடியாத ஒரு நிலையே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுற்று சரியாக ஒரு தசாப்தம்  கடந்துள்ள நிலையில் இயல்பு நிலைக்குத் திரும்புவது மிகமிக மந்த கதியிலேயே நடைபெற்று வருகிறது.  இந்தப் பத்து வருடகாலப்பகுதியில் முற்றாக இப்பிரதேசங்களை மாற்றியமைத்திருக்க வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்ட பல முன்னாள் போராளிக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகளின்றி இராணுவத்தின் உதவியில் தங்கிவாழ்வதாக கூறப்படுகிறது. சிவில் சமூகம் இவர்கள் குறித்து என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பது பற்றித்  தெரியவில்லை. நாட்டின் தேசிய திட்டங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்ததா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். மக்களின் வாழ்வாதாரங்கள் முன்னேற்றாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாமல், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை விஸ்தரிக்காமல் – நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் அமைதியான சகவாழ்வையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப முடியாது.

பிச்சைக்காரனின் புண்போல இனரீதியான முரண்பாடுகளை அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியல் இருப்புக்காகவும் தனிப்பட்ட சுய நலன்களுக்காகவும் பயன்படுத்துவதை விடுத்து,  தாம் பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் கூட்டத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக செயற்படவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இந்த நாடு இன்னுமொரு பத்து வருடங்களின் பின்னரும் இதே சகதிக்குள் தான் உழன்று கொண்டிருக்கும்!

கலாநிதி எம். கணேசமூர்த்தி,  

பொருளியல்துறை,  

கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments