ஆலயத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோர் துயர் துடைக்கும் பணியில் திருச்சபை | தினகரன் வாரமஞ்சரி

ஆலயத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோர் துயர் துடைக்கும் பணியில் திருச்சபை

பாதிக்கப்பட்ட சிறுவர்களை கைவிடோம்!  

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு 

இதற்கான கணக்கின் பெயர் : Archbishop of Colombo  

வங்கி : கொமர்ஷல் வங்கி, பொறளை கிளை.  

கணக்கு இலக்கம் : 1190038741  

வங்கிக் கணக்கு : Archbishop of Colombo  

வங்கி : ஹற்றன் நஷனல் வங்கி  

                தலைமையகக் கிளை.  

                வங்கிக் கணக்கு : 003010484963  

இக் கணக்கு இலக்கங்களில் விரும்புவோர் பணம் வைப்பு செய்லாம். அவர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். இந்த நிவாரண நிதியத்தின் பேரால் நிதி வசூல் செய்வதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கோ, ஆலயத்துக்கோ, நிறுவனங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை.   இதே சமயம் வண. லொரன்ஸ் ராமநாயக்கவை சந்தித்து அவருடன் பேசுவதன் மூலமும் எவ்வாறான உதவியை நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கான வழிமுறைகளையும் அவரிடம் அறிந்து கொள்ளலாம்.    

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதைத் தொடர்ந்து கடந்த 13ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக கம்பஹா மற்றும் வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் செறிந்து வாழும் பகுதிகளிலும் ஏற்பட்ட கலவரங்களும் இலங்கையை கடுமையாக பாதித்துள்ளது. இலங்கையை இவ்விரண்டு நிகழ்வுகளும் சமூக, பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்போதுள்ள பிரச்சினை எல்லாம் இந்த வீழ்ச்சி நிலையில் இருந்து இந்நாட்டை மீண்டும் மீட்டு எடுப்பது எப்படி என்பதுதான்.  

மீட்டு எடுப்பது என்பது வெறுமனே கட்டடங்களை மீளமைப்பதும், நஷ்டஈடு வழங்குவதும் அல்ல. உள்ளங்களை மீட்டெடுக்க வேண்டும். சமூக சிந்தனைகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். குறிப்பாக பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி மன, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களை அந்த மன உளைச்சலில் இருந்து மீட்டு, உடல் உபாதைகளில் இருந்து விடுபடச் செய்து சாதாரண குடிமக்களாக மாற்ற வேண்டிய பாரிய பணி உள்ளது.  

இந்தத் தாக்குதலில் எத்தனைபேர் மாண்டனர் என்ற சரியான விவரங்கள் கட்டுவாப்பிட்டியவில் மாத்திரமே கிட்டியிருக்கிறது. மொத்த 113பேர் இறந்துள்ளனர். இவர்களில் 28பேர் சிறுவர் சிறுமியர்.

இத் தாக்குதலில் காயமடைந்த சிறுவர் சிறுமியர் தொகை 65. தாய் அல்லது தந்தை இழந்த நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 23ஆகும். பெற்றோரை இழந்த சிறுவர்களின் தொகை 5.   மட்டக்களப்பு ஸியோன் தேவாலய குண்டு வெடிப்பில் 13சிறுவர் சிறுமியர் இறந்துள்ளனர். இவர்களில் 9பேர் சிறுவர்கள். நான்கு பேர் சிறுமியர். இத் தேவாலயத்தில் காயமடைந்த சிறுவர்கள் தொகை 15. ஒன்பது பேர் சிறுவர்கள். ஆறு சிறுமியர். ஏழு சிறுவர்கள் தமது தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர். இவர்களில் ஐவர் சிறுவர்கள். ஒரு சிறுவன் அனாதையாகியுள்ளான்.  

26ம் திகதி சாய்ந்தமருதுவில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதலில் ஆறு சிறுவர் சிறுமியர் மரணித்துள்ளனர். ஒரு குழந்தை காயமடைந்துள்ளது. அக் குழந்தை தன் தந்தையை இழந்திருக்கிறது. இம் மூன்று இடங்களிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 52சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர் வெளிநாட்டவர்களாகவர். காயமடைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 81. தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் தொகை 30. அனாதையானோர் மொத்தம் தொகை ஆறு. மொத்தமாக 169சிறுவர் சிறுமியர் இத்தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இது இப்படி, இருக்க, கொச்சிக்கடை நிலைமைகள் மோசமானவையாகக் காணப்படுகின்றன. இங்கே மரணித்தவர் தொகை ஐம்பது என்று மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய தாக்குதலில் உடல்கள் சிதறிப் போகவில்லை. மேலும் அங்கு வழிபாட்டுக்கு வந்தவர்களில் மிகப்பெரும்பாலானோர் அக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கணக்கிடுவது எளிதாக இருந்தது. கொழும்பு கொச்சிக்கடையில் நிகழ்ந்த வெடிப்பில் பலர் உடல் சிதறி இறந்துள்ளனர். இதனால் மொத்தமாக எத்தனை நபர்கள் மரணித்துள்ளனர் என்பதை சரியாகக் கணக்கிட்டுக் கூற முடிந்துள்ளது. கர்தினால் அலுவலகத்தில் விசாரித்தபோது, அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்துக்கு பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் வருகை தந்திருந்ததால் ஆளடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக தகவல் தந்தனர்.  

“கொழும்பு பிரேதசாலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அடையாளம் காணப்பட வேண்டும். மேலும் கொச்சிக்கடை பகுதியில் பாதிப்புற்ற நிலையில் உள்ள குடும்பங்களை நாம் அடையாளம் கண்டு அவ் வீடுகளுக்கு சென்று நேரில் பாதிப்புகளை கேட்டறிந்து வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு வகையான சோகக் கதைகளை கேட்க முடிகிறது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள், இறந்தவர் தொகையை நாம் கணக்கெடுத்து வருகிறோம்.” என்கிறார். கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக நடவடிக்கைகள் பிரிவுக்கு பொறுப்பான வண. பிதா லோரன்ஸ் ராமநாயக்க.  

“கட்டுவாபிட்டிய குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களில் ஒருவர் இஸ்லாமியர். மற்றவர் ஒரு பெளத்தர். இவர்கள் தமது நண்பர் குடும்பங்களுடன் அன்றைய தினத்தை குதூகலமாகக் கழிப்பதற்காக வந்தவர்கள். அக் குடும்பத்தவர்களுடன் கோவிலுக்கு வந்தபோதே வெடிப்பில் சிக்கி மரணமானார்கள். கொச்சிக்கடை குண்டு வெடிப்பிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பௌத்தர்கள் மரணமடைந்ததாகத் தெரிகிறது. எனவே இப் பாதிக்கப்பட்டவர்களை மெல்ல மெல்லத்தான் சுகமளிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக நாங்கள் விரிவான திட்டங்களை வகுத்திருக்கிறோம் என்று சொல்லும் இவர்,  

தமது சுகமளிக்கும் செயல் திட்டங்களை நான்காக பிரித்திருக்கிறோம் என்கிறார். “முதலாவது பிரிவு ஆன்மிக ரீதியானது. ஆன்மிக ரீதியான சுகமளிக்கும் பணிகளை நாம் மேற்கொள்கிறோம்.  

“இரண்டாவது உளவியல் ரீதியானது. இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவது உளவியல் ரீதியான சுகப்படுத்தலே. காயமடைந்தவர்களுக்கும், இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு மட்டுமல்ல, எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கும் உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது. தமது உறவினர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலையை எண்ணி அவர்கள் மன வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். 

அவர்களுக்கும் நாம் மனநல சிகிச்சை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவள ஆலோசனைகள், சிகிச்சைகள் என்பனவற்றை வழங்கும் ஆற்றலும் ஆளணியும் எம்மிடமிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் சென்று நாங்கள் உரையாடுகிறோம். அவர்கள் சொல்வதை அமைதியாக செவி மடுக்கிறோம். ஆற்றுப்படுத்துகிறோம். இதை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். ஏனெனில் உடல் காயம் என்பது குணப்படுத்தக் கூடியது. மனக்காயங்களுக்கு வெகு ஜாக்கிரதையாக மருத்திட வேண்டும். சில சமயங்களில் அவர்கள் பழைய மனநிலையை அடைய நீண்டகாலம் எடுக்கலாம்” என்று லோரன்ஸ் அடிகள் எம்மிடம் கூறினார்.  

மூன்றாவது நிலை, பாதிக்கப்பட்டவர்கள் சமூக மயப்படுத்தலாகும்.  

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பல குடும்பங்கள் ஒடுங்கிப் போயுள்ளன. எல்லாம் முடிந்து விட்டது, அவ்வளவுதான் என்ற மனப்பான்மையில் வாழும் குடும்பங்களும் உள்ளன. இக் குடும்பங்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டியது எமது கடமை.  

இக்குடும்பங்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுமானால் அவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதும், கிடைக்கும் மருத்துவ வசதிகளைத் தொடர்ந்து பெற்றுக் கொடுப்பதும், அவர்களுக்கு அவசியமாக தேவைப்படுகின்றவற்றை தேடி விசாரித்து அவற்றைப் பெற்றுத் தருவது, அவர்களது சுயதொழில் அல்லது வருவாய் மார்க்கம் அடைபட்டுப் போயிருக்குமானால் அவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது என்பன இப் பிரிவில் அடங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கான வழிவகைகள் செய்து கொடுப்பதும் எமது கடமை.  

நான்காவது வழிமுறையின் கீழ் சிறுவர் அபிவிருத்தி வருகிறது.  

இதன் கீழ், பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு கல்வி, சுகாதார, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும். சிறுவர்களுக்கு முதலில் அவசியப்படுவது அன்பு. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தற்போது தமது பெற்றோருடன் உள்ளனர். தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் உயிருடன் இருக்கும் பெற்றாருடன் வசித்து வருகிறார்கள். பெற்றோரை இழந்தவர்கள் உறவினர்களுடன் தங்கியிருக்கிறார்கள்.  

இவர்களின் கல்வி முக்கியமானது. எனவே நாம் ஒரு பொது நிதியத்தை ஏற்படுத்தியுள்ளோம்” என்று விரிவாக பேசினார் வண. லோரன்ஸ் ராமநாயக்க அடிகள்.   “எமது நிதியத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடைகள் வருகின்றன. இந் நிதியை வைப்பிலிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இச்சிறுவர்கள் தமது கல்வியைத் தொடர நாம் உதவ உள்ளோம். அவர்கள் எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ அதுவரையும் நாம் அவர்களுக்கு உதவுவோம். அவர்களது கல்விக்கான செலவுகளை நாம் முற்றாக பொறுப்பேற்கிறோம்.  அனாதையான சிறுவர்களை பராமரித்துவரும் குடும்பங்களுக்கும், அவசியமானால், நாம் உதவி செய்ய வேண்டும். பாதிப்புற்றிருக்கும் சிறுவர் சிறுமியரின் முதல் முக்கிய தேவைகளாக நாம் உளவியல் சிகிச்சை/ ஆலோசனைகளையும் மருத்துவ சிகிச்சையையும்தான் கருதுகிறோம். மருத்துவ சிகிச்சையுடன் மருந்துகளையும் பெற்றுத்தர வேண்டியிருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும், கைவிடப்பட்டு விட்டதாகவும், இளக்காரமாகப் பார்க்கப்படுவதாகவும் அவர்கள் நினைத்துவிடக் கூடாது. இது மிக முக்கியம்.   அனாதையான சிறுவர் சிறுமியரை அனாதை விடுதிகளுக்கு அனுப்பாமல் குடும்பச் சூழிலிலேயே வைத்திருக்க நாம் முயல்கிறோம். கல்வியைப்போலவே, உடல் பாதிப்புடைய சிறுவர்களுக்கும் அவர்கள் முற்றிலுமாக தமது உபாதைகளில் இருந்து விடுபடும்வரை அவர்களுக்கு உதவுவோம். சிறுவர்களின் தேவைகள், சேவைகளை ஆற்றுவதற்காக நாம் தனிப் பிரிவொன்றை உருவாக்கியிருக்கிறோம்” என்று அவர் விளக்கமாக எம்முடன் பேசினார்.   நாம் இவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே திருமதி கைலாசபிள்ளை அங்கே வந்தார். அவர் நடத்தும் மனிதநேய டிரஸ்ட் சார்பில் பத்து லட்சம் ரூபாவுக்கான காசோலையை அடிகளிடம் வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உறவுவதற்கான ஒரு நிதியத்தை கொழும்பு பிஷப் ஹவுஸ் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையின் பேரில் ஆரம்பித்துள்ளது.   உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு மற்றும் ஆலய மீளமைப்புக்கான நிவாரண நிதியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அருள் சத்தியநாதன்  

 

Comments