மத்ரஸா, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு புதிய சட்டமூலம் விரைவில் | தினகரன் வாரமஞ்சரி

மத்ரஸா, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு புதிய சட்டமூலம் விரைவில்

பிரதமர் தலைமையில் கூடி ஆராய்வு

இலங்கைக்கு ஷரீஆ பல்கலை அவசியமில்லை -பிரதமர்

மத்ரஸா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் புதிய சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் சட்ட  மாஅதிபர் திணைக்களத்துடன் கலந்துரை யாடப்பட்டுள்ளதுடன், அது குறித்த உரிய தீர்மானங்களுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முஸ்லிம் விவகார மற்றும் தபால்துறை அமைச்சர் ஹலீம் மற்றும் சட்ட  மாஅதிபர் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். 

இஸ்லாம் சமயத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக முஸ்லிம் கல்வியியலாளர்களும்

சட்டத்தரணிகளும் இணைந்து தயாரித்த எண்ணக்கரு ஆவணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது. 

சட்ட  மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எண்ணக்கருப் பத்திரம் அரசியலமைப்புடன் உடன்படுகின்றதா? என்பது பற்றி ஆராய்ந்து பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுமாயின் திருத்தப்பட்ட எண்ணக்கருப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.   இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லையெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தியுள்ளார். பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்கள் அனைவருக்காகவும் திறந்த அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments